போலி செய்திகளானது புதிய விடயம் அல்ல. ஊடகவியலில் இது பழைய விடயமாக அமைவதோடு இந்த பூமியில் பேசப்படுகின்ற முதலாவது பொய்யின் வெளிப்பாடாக அமைவதும் போலி செய்திகளாகும். முதலாவதாக புணையப்படுகின்ற பொய்யானது முதலாவது அப்பாவி முட்டாளை ஏமாற்றுவதற்காக வெளிப்படுத்தப்படுவதானது தத்துவ வாதிகள் மற்றும் கல்விமான்களுக்கும் கவலை தருவதாக இருக்கின்றது.

எவ்வாறாக இருந்தாலும் ஊடகவியலில் அதன் வாசகர்களிடையில் போலி செய்திகளுக்கு கிராக்கி இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் அச்சு ஊடகத்தறையில் பிரதான பத்திரிகைகள் இத்தகைய போலி செய்திகளை அல்லது ஆதாரமற்ற செய்திகளை கட்டுக்கதைகளாக தமது ஊடகம் வாயிலாக பரப்புவதை  மொத்தமான பணியாக மேற்கொண்டு வந்தன. இதற்கு சிறந்த உதாரணமாக நியுயோர்க் “சன்” பத்திரிகை “பெரிய சந்திரன் ஹொக்ஸ்” என்ற ஒரு கதையை 1835 ஆம் ஆண்டு பரப்பியது. அந்த செய்தி குறித்த பத்திரிகையை இலாபகரமானதாக மாற்றியமைக்க காரணமாக அமைந்தது.

ஊடகவியலில் தொழில் தகைமையின் வளர்ச்சி, ஒழுக்கநெறிக்கோவை பயன்பாடு மற்றும் ஊடக மறுசீரமைப்பு என்பன அவசியமானதாக இருந்து வருவதோடு அச்சு ஊடகமானது பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஆதாரமற்ற மற்றும் பரிசீலனை செய்யப்படாததுமான தகவல்களை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

பொதுவான ஊடக மற்றும் சமூக ஊடக வலைப் பின்னல்களுக்கு ஊடாக இவ்வாறான போலி செய்திகள் ஊடுறுவி வருகின்றன. ஒருபுறம் அதிக பட்ச கல்வி அறிவு மட்டம் உயர்வாக காணப்படுகின்ற சூழ்நிலையில் இது நிகழ்கின்ற அதே நேரம் மறுபுறம் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். மறுபுறமாக குறுகிய நல நோக்கங்களை அடைவதற்காக மோசமான வழிகளை கடைபிடிக்கும் ஊடக நிறுவனங்களிடம் இருந்து வாசகர்களை பாதுகாப்பதற்கான போதுமான தொழில்நுட்பத்தின் குறைபாடு காணப்படுகின்றது.  இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஊடக சட்டங்கள் மட்டுமல்லாது அரசியல் மற்றும் இனவாத நோக்கங்களை அடைவதற்காக ஊடக தொழில்துறையை பயன்படுத்தும் கீழ் மட்ட ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியுமான சட்டங்களையும் பலப்படுத்த வேண்டும்.

குறுகிய இலாப நோக்கிலும் இனவாத, மதவாத மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாக வைத்து பொய்யான செய்திகள் தகவல்களை புணைந்து பரப்புவதன் மூலம் சமூகத்திலும் நாட்டிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் இன அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பாதகமாக செயற்படும்  அடிமட்ட நிலை ஊடகங்களுக்கு எதிராக சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் சிவில் சமூகங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் எதிர் பிரசார செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

யார் காவல் நாய் வேலையை பொறுப்பேற்பது? சிறந்த வழிமுறையாக அமைவது ஊடகவியலாளர்கள் தாமாகவே முன்வந்து அவர்களுக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர் நடவடிக்கை எடுப்பதாகும். இலங்கையில் ஊடக அராஜக நிலையை ஏற்படுத்தி வந்த அவதூறு சட்டத்தை ஒழிப்பதற்காக ஊடக மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தனர். அவ்வாறே தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காகவும் அதே போன்று பத்திரிகைகளுக்கு எதிராக செய்யப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து தீர்வுகளை வழங்குவதற்காக பொறிமுறையை ஏற்படுத்தவும் இதே தரப்பினரும் ஒத்துழைத்தனர்.

சிவில் சமூகம் மற்றும் ஊடக தரப்பினர் இணைந்ததாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி மூலாதாரத்தை அடிப்படையாக கொண்ட உண்மையானதும் பரீட்சிக்கப்பட்டதுமான செய்திகள் தகவல்களை சரியான நம்பத்தகுமான முறையில் வழங்கும் ஊடகங்களை கண்காணித்து புள்ளிகளை வழங்கி வருடாந்த அடிப்படையில் அவர்களை விருதுகளை வழங்கி கௌரவித்து ஊக்கமளிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே போலி ஊடகவியலை ஒழிப்பதற்கான மாற்று வழிமுறை எனலாம்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts