வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்புப் பேச்சைஎதிர்கொள்வோம்!

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் வெறுப்புப் பேச்சு மீதான மூலோபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டமானது, வெறுப்புப் பேச்சு என்றால் என்ன என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது.

“ஒரு நபர் அல்லது குழு ஒன்றினைக் குறிப்பிட்டு, அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில் அமைந்த இழிவான அல்லது பாகுபாடுமிக்க மொழியில் மேற்கொள்ளப்படும் பேச்சு, எழுத்து அல்லது நடத்தை வடிவில் அமைந்த எந்த ஒரு தொடர்பாடலும் வெறுப்புப் பேச்சு எனப்படும்”

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சானது, பல நாடுகளில் அமைதியின்மைக்கும் விரிசல்களுக்கும் வித்திட்டுள்ளது. இது ஜனநாயக பெறுமானங்களுக்கும் சமூக ஸ்திரத்தன்மைக்கும் சமாதானத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இதனையடுத்து பல அபிவிருத்தியடைந்த நாடுகள் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்டங்களை இயற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ். ஜேர்மனி, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான சட்டங்கள் அமுலில் உள்ளன.

எனினும் இணையத்தளம் வழியான வெறுப்புப் பேச்சை கண்காணித்துக் கட்டுப்படுத்துவதானது பல நாடுகளுக்கும் இன்னமும் சவாலான காரியமாகவே உள்ளது. இதற்குக் காரணம் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் கருத்துச் சுதந்திரத்தினையும் வெறுப்புப் பேச்சினையும் வேறுபடுத்துவதில் கொண்டுள்ள சிக்கலான விதிமுறைகளேயாகும். இருந்தபோதிலும் அண்மைக்காலமாக மேற்படி சமூக வலைத்தளங்கள் வெறுப்புப் பேச்சு விடயத்தில் இறுக்கமான போக்குகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையில் வெறுப்புப் பேச்சு

வெறுப்புப் பேச்சின் விளைவுகளை நேரடியாக சந்தித்த நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களிடையே முரண்பாடுகள் தோற்றம் பெறுவதில் சமூக வலைத்தளங்கள் வழியான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகம் பங்களித்துள்ளன. 2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் இன ரீதியான வன்முறைகள் தோற்றம் பெற சமூக வலைத்தளங்களும் அதன் வழியே பரப்பப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களுமே காரணமாக அமைந்தன. இதனையடுத்து அரசாங்கம் பேஸ்புக், வட்ஸ் அப் மற்றும் வைபர் போன்ற சமூக வலைத்தளங்களை ஒரு வார காலத்திற்கு முற்றாக முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கையின் உள்ளூர் மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் ஊடாகவே வெறுப்புப் பேச்சுக்கள் பகிரப்படுவதால் அதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது தமக்கு சவாலாக உள்ளதாக பேஸ் புக் நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும் தற்போது உள்ளூர்மொழிகளில் பகிரப்படும் பதிவுகளையும் நீக்குவதற்கான வேலைத்திட்டங்களை பேஸ் புக் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய கடந்த தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் திணைக்களத்தினால் முறையிடப்பட்ட பல பதிவுகள் பேஸ் புக் நிறுவனத்தினால் அகற்றப்பட்டமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.

சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் இலங்கையின் பிரதான ஊடகங்களும் சில சமயங்களில் வெறுப்புப் பேச்சுக்கு துணைபோகின்றமை கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, “மத நம்பிக்கைகள், சமய பின்பற்றுதல்கள், பேச்சு மொழி, இனம், பழக்க வழக்கங்கள், குலம் கோத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கை மக்களிடையே வெறுப்பூட்டும் வகையிலான பிரசார நடவடிக்கைகளை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசாரம் செய்தல் அல்லது பிரசுரிப்பதனை தவிர்க்க வேண்டும்”  என அதில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துரதிஷ்டவசமாக  இலங்கையில் இதுவரை வெறுப்புப் பேச்சை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. ஏற்கனவே சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் இருந்தபோதிலும் அவை உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என்பது பெருங்குறைபாடாகும்.

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கென இலங்கையில் உள்ள சட்டங்கள் எவை?

  1. கருத்துச் சுதந்திரத்திற்கு அரசியலமைப்பில் உள்ள கடப்பாடுகள்

– பிரிவு 15 (2) : இன மற்றும் மத நல்லிணக்கத்தின் நலன்கள் அல்லது பாராளுமன்ற சலுகை, நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றம் செய்யத் தூண்டுதல்

– பிரிவு 15(7) : தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் அல்லது ஒழுக்கத்தின் பாதுகாப்பு, பிறரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல் மற்றும் மதிப்பளித்தல் அல்லது ஜனநாயக சமூகம் ஒன்றின் பொது நலனுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

  1. 2007 ஆம் ஆண்டின் ஐ.சி.சி.பி.ஆர்.சட்டம், பிரிவு 3(1) : எந்தவொரு நபரும் போருக்கு ஆதரவாகவோ அல்லது பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பினை ஆதரிக்கவோ கூடாது.
  2. 1883 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தண்டனைச் சட்டக் கோவை
  3. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டம்
  4. 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டம்

 

இலங்கையில் தவறாக பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம்

இலங்கையைப் பொறுத்தவரை ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பெரும்பாலானோர் மீது இச் சட்டமானது தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

மஹியங்கனையில் தர்மச்சக்கர வடிவிலான ஆடையை அணிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டமை, புனைகதை ஒன்றில் பௌத்த பிக்குகள் குறித்து எழுதியமைக்காக சிங்கள நாவலாசிரியர் ஷக்திக்க ஷத்குமார கைது செய்யப்பட்டமை, சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராஸிக் அவரது பேஸ் புக் பதிவொன்றுக்காக கைது செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இலங்கையில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டமைக்கு உதாரணங்களாகும்.

இந் நிலையில் 2019.08.29 திகதியிட்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித்தில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் மேற்படி சட்டத்தைப் பிரயோகிப்பதற்கான விரிவான வழிகாட்டல்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துச் சுதந்திரம் Vs வெறுப்புப் பேச்சு

கருத்துச் சுதந்திரமானது சர்வதேச சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றாகும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் (UDHR) 19 ஆவது உறுப்புரை மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை ஆகிய (ICCPR)  ஆகியன கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகின்றன.

இருந்தபோதிலும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஒரு வரையறை உள்ளது என்பதையும் சர்வதேச சமூகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. தேசியம், இனம் மற்றும் மதம் சார்ந்து வெறுப்பைத் தூண்டுகின்ற பேச்சுக்களையும் வன்முறைக்கும் துன்புறுத்தல்களுக்கும் இட்டுச் செல்கின்ற கருத்துக்களையும் கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் அனுமதிக்க முடியாது என்பதில் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. அந்த வகையில், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவமளிக்கின்ற அதேவேளை வெறுப்புப் பேச்சினை முன்வைக்கின்ற, அதன் மூலம் வன்முறைகளைத் தூண்டுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, மனிதர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கங்களின் கடப்பாடாகும்.

வெறுப்புப் பேச்சை அடையாளம் காண்பது எப்படி?

இதற்காக நீங்கள் பின்வரும் கேள்விகளை எழுப்ப முடியும்.

  1. குறித்த பதிவின் உள்ளடக்கம் தனிநபர், குழு, இனம், மதம், சாதி, பாலினம், மாற்றுத்திறனாளிகள் என எவரையேனும் இலக்கு வைத்ததாக அமைந்துள்ளதா?
  2. உள்ளடக்கம் எதிர்மறையான போக்கைக் கொண்டுள்ளதா?
  3. வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதா?
  4. ஒழுக்க விதிகளுக்கு முரணானதாக உள்ளதா?
  5. அதனை பதிவிட்ட சமூக வலைத்தள கணக்கு அல்லது பக்கம் பிரபல்யமானதா?
  6. குறித்த பதிவு அதிகம் பகிரப்பட்டுள்ளதா? அப்படியானால் எத்தனை பகிர்வுகள், விருப்பங்கள் கிடைத்துள்ளன? அதன் கீழான கருத்தாடல்களை அவதானிக்க முடியுமா?
  7. இது தேசிய அல்லது உள்ளூர் மட்டங்களில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கத்தக்கதா?
  8. இப் பதிவை சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமா?
  9. இந்தப் பதிவை நீக்குமாறு சமூக வலைத்தள நிர்வாகிகளுக்கு புகாரளிக்க வேண்டுமா?

வெறுப்புப் பேச்சை தடுப்பதும் எதிர்கொள்வதும் எப்படி?

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்கின்ற போதிலும், வெறுப்புப் பேச்சை ஆதரிக்காதிருப்பதும் வன்முறைகளைத் தூண்ட துணைபோகாதிருப்பதும் சமூகத்தின் அங்கத்தவர்கள் அனைவரதும் கடமையாகும்.

வெறுப்புப் பேச்சுக்கு பதிலளிக்க சமூகத்தின் சகல துறையினரதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் என வெறுப்புப் பேச்சுக்கு எதிரான வழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சர்வதேச உரையாடலுக்கான நிலையம் (KAICIID) குறிப்படுகிறது. மத தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைவதன் மூலமே வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்தும் பயணத்தில் வெற்றி பெற முடியும் என்றும் இந் நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

அந்த வகையில் வெறுப்புப் பேச்சை எதிர்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளை சர்வதேச உரையாடலுக்கான நிலையம் முன்வைக்கிறது.

  1. வெறுப்புப் பேச்சு தொடர்பில் சமூகத்தை அறிவூட்டுதல் அல்லது பயிற்சியளித்தல். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றயலில் உள்ளவர்களுக்கு இதன் பாரதூரத்தை உணர்த்த முடியும்.
  2. வதந்திகள் மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பும் சமூக ஊடக பதிவுகள் தொடர்பில் புகாரளித்தல்.
  3. சமாதானம் மற்றும் சகிப்புத்தன்மை பற்றிப் பேசும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிடுதல் மற்றும் பகிர்தல்.
  4. வெறுப்புப் பேச்சினால் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு ஆதரவளிப்பதுடன் வெறுப்பூட்டும் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் வழங்குதல்
  5. வெறுப்புப் பேச்சுக்களுக்கு துணைபோகாதிருப்பது குறித்தும் முரண்பாடுகளுடன் தொடர்புடைய செய்திகளை அறிக்கையிடும்போது ஒழுக்கவிதிகளை கடைப்பிடிக்குமாறும் ஊடகவியலாளர்களை அறிவூட்டுதல்
  6. வெறுப்புப் பேச்சுக்களையும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளையும் கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான தேசிய மற்றும் உள்ளுர் மட்டத்திலான குழுக்களை ஸ்தாபித்தல்.

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts