வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுக்கத்தக்க மனநிலையைத் தொடருதல்

நெவில் உதித வீரசிங்க

2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடியுவடையும் வரை, சிங்கள சமூகத்தில் சிங்கள தீவிரவாத குழுக்களால் உருவாக்கப்பட்ட, அந்நியர்கள்; அல்லது  எதிரிகளாகவிருந்தோர் தமிழ் மக்களாவர். யுத்தம் முடிவடைந்தவுடன், சிங்கள தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட அந்நியர்களென அவர்கள் அழைக்கப்பட்டமையையும் தொடர முடியாது போனது. 2009 ஆம் ஆண்டில்  போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கள தீவிரவாதிகள் ஒரு புதிய அந்நியனை அல்லது எதிரியை உருவாக்கத் தொடங்கினர். யுத்தத்திற்குப் பின்னர், சிங்கள பௌத்தத் தீவிரவாதிகள் முஸ்லிம் மக்களை அந்நியர்களாக மாற்றுவதை நாம் அவதானிக்கலாம். 2012 ஆம் ஆண்டு  முதல், பொது பலசேனா போன்ற சிங்கள பௌத்தத் தீவிரவாதக் குழுக்கள் சமூக ஊடக அரங்குகளிலும், சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்புணர்வை பரப்புவதற்கு ஆரம்பித்தன (BBC,2014). இலங்கையின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள இனப் பதற்றங்கள் தொடர்பாக அண்மைய வரலாற்றில் மூன்று இலட்சம் முக்கிய திருப்புமுனைகளை நாம் அடையாளம் காண முடியும். அளுத்கம பகுதியில் 2014 ஜூன் 15 ஆம் திகதியன்று  குறிப்பிடத்தக்க முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. 2018 ஆம் ஆண்டில் கண்டியின் திகன  பகுதியில் நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களும், 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நடந்த முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்களும் இந்த முக்கிய திருப்புமுனைகளாக அடையாளம் காணப்படலாம். 

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடத்தை மற்றும் ரிஷாத் பதியுதீன் மற்றும் பலரைத் தொடர்புபடுத்தி அடிக்கடி முன்கொண்டு வரப்படும்  நிகழ்வுகள் மூலம் இதுவரை உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புடைய வகையில் சமூகத்தில் நிலவும் முஸ்லிம்-விரோத மனநிலை சிலவற்றில் பராமரிக்கப்படுவதை நாம் அவதானிக்க முடியும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய முஸ்லிம்-விரோத வெறுப்பு சித்தாந்தத்தை, பல சந்தர்ப்பங்களில் சில பிரதான ஊடகங்கள் அறிக்கையிடும் தன்மைக்கேற்ப எவ்வாறு   அவற்றை நடாத்தி வெறுப்புணர்வு தொடர்ந்தும் பராமரிக்கப்படும் முறை தொடர்பாக பல நிகழ்வுகள் மூலம் சுட்டிக்காட்டுவதற்கு நான் விரும்புகின்றேன்.  

அமைச்சர் சாமல் ராஜபக்ஷ வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனுடன் கைகுலுக்கும் புகைப்படமொன்றைப் பிரசுரித்து திவயின பத்திரிகையில் 2020 ஒக்டோபர் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட செய்தியின் தலைப்பு “நாட்டை உலுக்கிய,  உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரின் விடுதலை மற்றும் வவுனியாக் கைகுலுக்கல்”; என்றிருந்தது. 

2020 ஒக்டோபர் 8 ஆம் திகதி ஒளிபரப்பாகிய அத தெரண இரவுச் செய்தியில்  “சஹ்ரானுக்கு பதியுதீனின் சகோதரர் செய்த உதவி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. இருப்பினும், செய்தி ஒளிபரப்பில்,  முன்னாள் இராணுவ தளபதி இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டது. இருப்பினும், பதியுதீனின் சகோதரர் சஹ்ரானுக்கு உதவினார் என்பது சட்டத்தின் முன்  இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் 2020 ஏப்ரல் மாதம் வெளியிட்ட செய்தி வெளியீட்டில், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தாமிருப்பதாகப் பல அரசியல்வாதிகள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தனக்கு எதிராக இனவெறிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. எவ்வாறாயினும், இறுதியில் தான் தாக்குதல் அல்லது வேறு எந்த பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பது விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் பொலிஸ் மா அதிபர் கூட பாராளுமன்றச் செயலாளருக்கு அறிவித்திருந்தார். தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக குற்றச்சாட்டுக்கள் தற்போது  தனது சகோதரனை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன (TSM WEB DESK) என அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார். 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவரெனும் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக அவரது தந்தை மற்றும் சகோதரன் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ்கோபஸ் மனுக்கள் இரண்டும் வாபஸ் பெறப்பட்டதாக 2020 மே மாதம் 28 ஆம் திகதிய அருண பத்திரிகையில் “ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2020 மே 19 ஆம் திகதிய திவயின மற்றும்  மே 19 ஆம் திகதிய லங்கதீப மற்றும் மே 23 ஆம் திகதி திவயின உள்ளிட்ட செய்தித்தாள்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  சார்பாக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.  ஹேபியஸ்கோபஸ் மனுக்கள் திரும்பப் பெறப்படக் காரணம் அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையாகும்  என்று பிரேரணை கூறுகிறது. இருப்பினும், அருண பத்திரிகையின் அறிக்கையில் அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை. அதுபோன்றே, அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஹேபியஸ்கோபஸ் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் அருண செய்தி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. (ETHICS EYE)

2020 டிசம்பர் மாதத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த குருணாகல் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர்  திரு. ஜெயலத் பெண்களை கருத்தடைச் சத்திர சிகிச்சை செய்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்ட குருணாகல் மருத்துவமனையின் வைத்தியர்  ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான தமக்குக் கிடைத்த புலனாய்வுப் பிரிவுத் தகவல்களின்படி அவருக்குத் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிலிருந்து  நிதி  கிடைத்ததாகக் கூறினார். இருப்பினும், 2019 மே மாதம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட வைத்தியர்  ஷாபிக்கெதிராக எந்த சாட்சியும் இல்லை என்று குற்றப் புலனாய்வு பிரிவு  நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது (BBC, 2019).

மேலே கலந்துரையாடப்பட்ட  பல்வேறு சம்பவங்கள் மூலம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய முஸ்லிம்-விரோத மனப்பான்மையானது,  பல்வேறு ஊடகங்களாலும்; ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் மூலமும் சமூகத்தில் எவ்வாறு தொடர்ந்தும் பராமரிக்கப்படுகிறது என்பதை நாம் அவதானிக்க முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts