சமூகம்

வீடே உலகம்! பெண்களுடாக நிரூபிக்கிறது கொரோனா!?

பாநூ கார்த்திகேசு

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘பெண்களுக்கு வீடே உலகம்  ஆண்களுக்கு உலகமே வீடு”. இந்தக் கொரோனா காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அதில் இந்த வீடு, என்பது முக்கியமானது. உலகமே வீடாக சுற்றிக்கொண்டிருந்த ஆண்கள் எல்லோரும் ‘ஊரடங்கு சட்டம், வீட்டில் இருங்கள், பயணத்தடை,” என்பனவற்றால் வீட்டில் தங்குவதற்கு சாத்தியம் ஏற்பட்டது. அதுவும் ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள் யாருமே வீட்டில் தன் குடும்பத்துடன் தனித்திருந்திருக்க மாட்டார்கள். இப்போது வாரக் கணக்காக, மாதக்கணக்காக வீட்டில் இருக்க வேண்டியுள்ளது. பெண்களுக்கான ‘வீடே உலகம்’ இப்போது ஆண்களுக்கானதாகவும் மாறிவிட்டது.

இங்கு இன்னொரு விடயமும் நடந்துள்ளது. புதிய தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி உலகத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. வீட்டில் நிகழ்நிலையில் பாடசாலை, பயிற்சி வகுப்புகள், பல்கலைக்கழக விரிவுரைகள்,கருத்தரங்குகள் என கல்விசார் நடவடிக்கைகள், பயிலரங்குகள், அலுவலக வேலைகள், உத்தியோகபூர்வ சந்திப்புகள், நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு, கொண்டாட்டங்கள் என உலகம் வீட்டுக்குள் வந்துவிட்டது. ‘வீடே உலகம்’ என தீர்க்தரிசனத்துடன்தான் சொல்லப்பட்டதோ என ஐயுறும் அளவிற்கு எல்லாமே வீட்டுக்குள் இருந்தபடி செய்யமுடிகிறது. 

இங்கு தான் அன்றாடம் உழைத்து உண்பவர்கள் அதிலும் உடல் உழைப்பை நம்பி வாழ்ந்தவர்களுக்கு நிகழ்நிலையும், வீட்டில் இருத்தலும் பெரும் சவாலாகியுள்ளது. 

‘எனது கணவர் சந்தையில் கோழி இறைச்சிக் கடை வைத்திருந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு; ஊரடங்கு, பயணத்தடை என வருகின்றபோது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு நஷ்டமாகிவிட்டது. எங்களுக்கு 6 பிள்ளைகள். கணவர் இருதய நோயாளி. அவரது மருந்துச் செலவு மற்றும் குழந்தைகளின் உணவு மற்றும் இதர செலவீனங்கள் எப்படி சமாளிப்பது?? எனக்கு தெரிந்து சமையல். வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தேன். பெரிய அளவில் இல்லாமல்; ஒரு நாளைக்கு பத்து பதினைந்து சாப்பாட்டு பார்சல் விற்க முடிகிறது. கிட்டத்தட்ட சுமார் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையில் இலாபம் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும். நேரம், உடல் உழைப்பு, பொருட்களின் விலை எனப் பார்க்கும்போது போதாதுதான். இருந்தாலும் அன்றாடம் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஓரளவில் கடன்களைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு இது உதவுகிறது. இந்த முறை பெருநாளைக்குப் பெரியளவிலான ஓடர்கள் வரும் என எதிர்பார்த்தேன். ஆனாலும் அவ்வளவு பெரிய ஒடர்கள் எதுவும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே ஒரு நான்கு ஐந்து சஹான்கள் ஓடர் தந்தனர்.” என்கிறார் சிலாபம் சவறணையில் வசிக்கும் 40 வயது பாத்திமா நஹ{ஹா. 

காலை வேலைக்குபோய் மாலை உழைப்புடன் வீடு வரும் கணவன் எந்த வருமானமும் இல்லாமல் வீட்டில் இருக்கும் நிலை உருவாகியுள்ள இந்த சூழலில் பெண்கள்தான் பல்வேறு வழிகளிலும் வருமானத்தை ஈட்டும் வழிவகைகளை உருவாக்கியுள்ளார்கள். இங்கே சிலாபப்பகுதியில் பலரது வீடுகளின் முன் புதிய உணவுக்கடைகள் , மரக்கறி மீன் கடைகள் முளைத்துள்ளன. வீட்டுத்தோட்டம், வீட்டுக் கைத்தொழில்கள் மீள்உயிர் கொள்கின்றன.

‘எனது கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். எங்களூக்கு நான்கு பிள்ளைகள். கொரோனாவின் பின்னர் கணவருக்குக்கிடைக்கும் வருமானமானது மிகவும் குறைந்து விட்டது. ஊரடங்கு பயணத்தடைகளில் வருமானமே இல்லை. அதனால் வீட்டோடு மரக்கறி, மீன், இறைச்சி, இறால் வகைகளை வைத்து விற்கின்ற ஒரு சிறிய கடையொன்றை ஆரம்பித்துள்ளோம்.” என்கிறார் அலுத்வத்தையைச் சேர்ந்த 44 வயதான சங்கீதா பெரேரா. 

இந்த கடையில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1000 ருபாய் வரையில் கிடைப்பதாகவும் அந்த வருமானத்தைக் கொண்டு ஓரளவிற்கு அன்றாட செலவீனங்களைக் சமாளிக்க கூடியதாக உள்ளதாகவும் கூறுகிறார். வெளியில் போக கூடியநேரத்தில் கணவர் மரக்கறி, மீன், இறைச்சி, இறால் வாங்கிக்கொடுக்கிறார். அதனை சுத்தம் செய்து விற்பது சங்கீதாதான். சில நேரங்களில் சங்கீதாவின் அம்மாவும் வந்து உதவுகிறார். 

“கொரோனா காலத்தில் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல விரும்பாத, முடியாத அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், இந்த வழியால் போகின்றவர்கள் என்னிடம் வந்து வாங்கிச் செல்கின்றார்கள்.” என்கிறார் சங்கீதா பெரேரா.  

சங்கீதா திருமணத்திற்கு முன்னர் இதே இடத்தில் ஒரு தொலைத்தொடர்பு நிலையத்தை நடத்தி வந்தவர். திருமணமாகி குழந்தைகள் கிடைத்ததும் கடை நடத்துவதை நிறுத்திவிட்டு குடும்பத்தை மட்டும் கவனித்துவந்தவர். 

‘சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வியாபாரம் செய்வதற்கென இறங்கியுள்ளேன். இப்போது குழந்தைகளும் அவர்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தருகின்றார்கள். ஏதோ இந்த காலகட்டத்தை சமாளிக்க செய்கிறேன். ஆனால் இந்த காலம் நீடித்தால் எம்மால் தாக்கு பிடிக்க முடியாது. நிரந்தரமாக வருமானத்திற்கு என்ன செய்வதென்று யோசிக்க வேண்டியுள்ளது” என்கிறார்

ஆம், ஒரு இடைக்கால சமாளிப்பாகவே பெண்கள் தொழில்களில் இறங்கியுள்ளனர். இலங்கை முழுவதும் அன்றாட வருமானத்தில் வாழ்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு  இடையிடையில் 5000 கொடுத்தாலும் அது இவ்வாறானவர்களைச் சென்றடைகிறதா? அவர்களுக்கு போதுமானதா? என்பதெல்லாம் கேள்விகளே!

இவ்வாறு அன்றாடம் உழைத்து வாழும் குடும்பங்களின் இக்கட்டை பெண்கள் சமாளித்துவருகிறார்கள். அதே நேரம் உலக நாடெங்கும் இந்த வருமானப் பிரச்சினை உள்ளது. கொரோனா உலகையே ஆட்டிப் படைக்கிறது. வெளிநாடுகளிலும் நிலைமை சுமூகமாக இருந்தால்தான் நம்நாட்டிலும் பல பெண்கள் துன்பப்படாமல் வாழமுடியும் என்ற நிலைதான் உள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு வருமானப் பிரச்சினை இருப்பதால் சங்குதட்டானைச் சேர்ந்த 70 வயதான ரஞ்சிதமலர் நவரத்தினராஜா ஒரு தொழிலை தொடங்கி செய்துவருகிறார்.  

‘எனது கணவர் ஒரு மெக்கானிக். எனக்கு பிள்ளைகள் 4. அவர்களில் 3பேர் வெளிநாட்டில். அவர்கள் திருமணம் முடித்துவிட்டார்கள். நான் தற்போது எனது இளைய மகனுடன் வசித்து வருகின்றேன். தற்போதைய கொரோனா சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டில் இருக்கின்ற பிள்ளைகளால் பணம் அனுப்புவதில் சிக்கல் உள்ளது. அங்கும் அவர்களுக்கு வேலைக் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது குடும்பங்களையும் பார்த்துக் கொண்டு எங்களையும் பார்ப்பதில் சிரமப்படுகிறார்கள். அதனால் பக்கத்தில் இருக்கின்ற சில சில்லறைக்கடைகளுக்கு பருத்தித்துறை வடை, பக்கோடா என்பவற்றைச் செய்து கொடுக்கின்றேன். சிலருக்கு மூன்று வேளைக்கான உணவினையும் சமைத்துக் கொடுக்கின்றேன். பெரியளவிளான ஓடர்கள் இல்லை. என்றாலும் அன்றாடம் சீவியத்தைக் கொண்டு நடத்துவதற்கும், எனக்கும் என்னுடைய கணவனுக்குமான மருந்து செலவீனங்களையும் சமாளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த முறை புத்தாண்டுக்கு ஓரளவு பலகாரங்களூக்கான ஓடர் கிடைத்தது. அதனால் ஓரளவு பணமும் எங்களுக்குக் கிடைத்தது. ஏதோ கடன் இல்லாமல் வாழுறம்” என்கிறார் ரஞ்சிதமலர்.

இதேபோல் கணவனை இழந்த இரு பிள்ளைகளின் தாயான அலுத்வத்தையைச் சேர்ந்த 57வயது லலிதா அக்னஸ் பேர்னான்டஸ் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆடைகள் தைக்க தொடங்கியுள்ளார்.

‘எனது மகள் திருமணம் முடித்துவிட்டார். எனக்கு ஒரு மகன். அவரும் அவரது மனைவியும் ரஷ்யாவில் இருக்கிறார்கள். அவர்கள்தான் எனக்கான செலவுகளைக் கவனித்துவந்தார்கள். இப்ப கொரோனாவினால் அவருக்கே வெளிநாட்டில் வேலையில்லாமல் போய்விட்டதாம். அவர்கள் அங்கு வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நானும் அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது. அதனால் மீண்டும் தைக்க தொடங்கினன். என்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் இல்லாது இருக்க வேணும். என் பிள்ளைகளுக்கு இந்த வயதான காலத்தில் நான் செய்யக் கூடிய ஒரே உதவி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தற்போது, எனக்கு வாராத்திற்கு கிட்டத்தட்ட ஒரு 1500 ருபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரையில் கிடைக்கின்றது. அது போதும் தனி மனிஷியாக கரன்ட் பில், தண்ணீர் பில் என்பவற்றைக் கட்டிக் கொண்டு, எனது செலவீனங்கள் மற்றும் மருந்து செலவீனத்தையும் பார்த்துக் கொண்டு எனது வாழ்க்கையைக் கொண்டு போறன்.” என்கிறார் லலிதா. 

இதே நிலைதான் 27வயதில் விதவையாகி மகனை கல்விக்கென ஜப்பான் அனுப்பிய 47 வயதான ஆர்.டீ. நில்மினிக்கும். 

‘யப்பானில் படித்துக்கொண்டு வேலை செய்கிறார் என் மகன். இந்த கொரோனாவால் வேலை இல்லை. இந்த நிலையில் அவரைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. என் மகனை வளர்க்க முன்பு நான் செய்து வந்த தொழில் எள்ளுப்பாகு செய்தல். 5வருசத்திற்கு பிறகு மீண்டும் ஆரம்பித்துவிட்டேன்.” என்கிறார் ஆர். டி. நில்மினி. ஆரம்பகாலங்களில் வாரமொன்றிற்கு 7000ரூபாய் கிடைத்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக வாரமொன்றிற்கு 3000 ரூபாயே கிடைக்கின்றது. இந்தப் பணத்தைக் கொண்டு நானும் எனது மாமியாரும் வாழ்ந்து வருகின்றோம். தற்போதைய சிக்கலான நிலையைக் சமாளிப்பதற்கு எனக்கு தெரிந்த ஒரு வேலை இது. சந்தோசமாக செய்து வருகிறேன். ” என்கிறர் நில்மினி. 

பெண்கள் எப்போதும் உயிர்ப்பித்துக்கொண்டிருப்பவர்கள். உயிர்களை மட்டுமல்ல வாழ்வை, மகிழ்வை. ‘உலகமே வீடு’ என சுற்றி திரிந்த ஆண்களை இந்தக் கொரோனா காலம் முடமாக்கியுள்ளதோ என ஐயுறவேண்டியுள்ளது. வீடே உலகம் என இருந்த பெண்கள் வீட்டுக்குள்தான் உலகம் உள்ளது என நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள்! கொரோனாவும்தான் நிரூபித்துள்ளது.!

නිවස ඔබේ ලෝකයයි !! කොරෝනා එය තහවුරු කරයි !?

Corona Has Proven That Home Is Your World

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts