விளையாட்டும் கலையும் இன, மத, மொழிகளுக்கு இடையிலான பாலம்!
கலவர்ஷ்னி கனகரட்னம்
மொழி ரீதியாக பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான இது போன்ற விடயங்களில் அவர்களை ஒன்றுகூடவைத்து இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியும். அதிபர்களின் அனுமதியுடன் கராத்தேயை மாதம் ஒருமுறையேனும் பயிற்றுவிப்பது சிறந்தது.
நல்லிணக்கம் என்ற விடயம் எமது நாட்டில் இன்று பிரதான பிரச்சினையாக நோக்கப்படுகின்றது. இதனை பாடசாலை பருவத்திலேய ஏற்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பாக கலைகளின் ஊடாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றார் கராத்தே கலையை கற்பிக்கும் ஆசிரியர் சிகான் அன்டோ டினேஸ். கட்டுமரனுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வி இது.
த கட்டுமரன்: கராத்தே என்றாலே, அது ஒரு ‘தற்காப்பு கலை’ என்ற ரீதியில் பெண்கள் தான் நினைவில் வருவார்கள். அந்த வகையில் இலங்கைப்பெண்கள் தமது கலாசாரம் கடந்து ஆர்வம் காட்டுகிறார்களா?
ஆம், பெண்கள் இதனை ஆர்வத்துடன் கற்கின்றனர். எந்த இன வேறுபாடுகளும் இல்லை. அந்தவகையில் 2015ஆம் ஆண்டு பால்நிலை வன்முறைக்கு எதிரான ஒரு நிகழ்ச்சித் திட்டம் முதற்தடவையாக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நடைபெற்றது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றபோது கலாசாரம் கடந்து ஏராளமான முஸ்லிம் பெண்களும் சிங்கள பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்ற பயிற்சியிலும் தமிழ் பெண்களுடன் முஸ்லிம் மற்றும் சிங்கள பெண்களும் பங்கெடுத்திருந்தனர். பெண்கள் தமது தற்காப்பு கருதி முன்னெடுக்கவேண்டிய விடயங்கள், கடினமான சூழ்நிலைகளில் தம்மை உடனடியாக பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கவேண்டிய விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்கினோம். ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளின் முன்னேற்பாடுகளில் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ 500 பெண்கள் இப்பயிற்சித்திட்டத்தில் பங்கெடுத்தனர். மூவின பெண்களையும் ஒன்றிணைந்த ஒரு வேலைத்திட்டமாகவே இப்பயிற்சிநெறி காணப்பட்டது. இது ஒரு நல்லிணக்க முயற்சிகளில் ஒன்று என்றும் கூறலாம்.
த கட்டுமரன்: கராத்தே மூலம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணுகிறீர்கள்?
இதை ஒரு விளையாட்டாக நாம் எடுக்கலாம். பல்வேறு தொண்டர் நிறுவனங்கள் இவ்விடயத்தில் தற்போது கவனஞ்செலுத்தி வருகின்றன. அவை மாணவர்களுக்கு ஆரம்ப பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வரவேண்டும். கிராமப்புறங்களில் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, சிறுவர் சிறுமிகளுக்கு பயிற்சி வழங்கலாம். இதன் மூலம் ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மக்கள் என்ற ரீதியில் அனைவரும் இதற்காக ஒன்றிணைவர். மொழி ரீதியாக பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் பொதுவான இது போன்ற விடயங்களில் அவர்களை ஒன்றுகூடவைத்து இணக்கப் பாட்டை ஏற்படுத்த முடியும். அதிபர்களின் அனுமதியுடன் கராத்தேயை மாதம் ஒருமுறையேனும் பயிற்றுவிப்பது சிறந்தது. அதன் பின்னர் மொழிகடந்து பாடசாலைகளுக்கு இடையே போட்டிகளை வைத்து ஒற்றுமையை பலப்படுத்தலாம். உண்மையில் இன, மத, மொழிகளுக்கு இடையிலான பாலமாக விளையாட்டும் கலையும் அமையும் என்பது என் நம்பிக்கை. அதன் ஒரு அம்சமே கராத்தே.
த கட்டுமரன்: இவ்விடயத்தை நாடளாவிய ரீதியில் கொண்டுசெல்ல நீங்கள் ஏதேனும் திட்டங்களை வகுத்துள்ளீர்களா?
நுவரெலியாவில் அமைந்துள்ள காமினி திஸாநாயக்க பவுண்டேசன் என்ற அமைப்:பு காணப்படுகின்றது. அந்த அமைப்பு வறுமையான இளைஞர் யுவதிகளுக்கு கல்வியையும் கலையையும் வழங்குகின்றது.
கராத்தே கலையை கற்பிக்கும் ஆசிரியர் சிகான் அன்டோ டினேஸ்.
கடந்த வருடம் தங்களுடைய பாடவிதானங்களுடன் கராத்தேயையும் அதில் சேர்ப்பதற்கு எமது கலையகத்துடன் தொடர்புகொண்டார்கள். நாங்களும் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தோம். அதனடிப்படையில் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. காமினி திசாநாயக்க பவுண்டேசன் என்றதும் சிங்கள மாணவர்களே அங்கு அதிகமாக இருப்பார்கள் என நினைத்திருந்தேன். எனினும், மூவின மாணவர்களும் சரியான அளவில் உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆண் பெண் என்ற வேறுபாடும் அங்கு காணப்படவில்லை. சரிசமமாக நடத்தப்படுகின்றார்கள். சிறந்த சமத்துவத்தை நான் அந்த அமைப்பில் பார்த்தேன். நான் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழ் பிள்ளைகளுக்கு கற்பிக்கக்கூடிய சிங்கள ஆசிரியர்களும் உள்ளனர். அவர்களுடைய கருப்பொருளில் நல்லிணக்கம் என்ற விடயமும் காணப்படுகின்றது. அந்தவகையில் அவர்கள் என்னையும் உள்வாங்கினர். தற்போது மூவின மாணவர்களும் அங்கு கராத்தே உள்ளிட்ட பாடவிதானங்களை கற்கின்றனர்.
த கட்டுமரன்: இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை நல்லிணக்கம் சார்ந்து முன்னெடுத்தாலும் நாட்டில் அதனை ஏற்படுத்துவது கடினமாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள்?
பிழையாக புரிந்துணர்வே இதற்கு காரணம். உதாரணமாக ஒரு சிறிய அலகான குடும்பத்தினுள் பல சமயங்களில் நல்லலுறவை, நல்லுணர்வை ஏற்படுத்த முடிவதில்லை. ஏதோ ஒரு புள்ளியில் புரிந்துணர்வுடன் இணையவேண்டும். இப்படியிருக்கையில் ஒரு நாடு, ஒரு தேசம் என்று நோக்கும்போது அங்கு பல்லின, மொழி, சமயம் சார்ந்தவர்கள் காணப்படுகினற்னர். இவ்வளவு மக்கள் மத்தியில் புரிந்துணர்வு என்பது சரியாக விதைக்கப்படவேண்டும். அதிகாரப் போட்டியில் சிலர் புரிந்துணர்வை விதைப்பதற்கு பதிலாக குரோதங்களையும், விரோதங்களையம் விதைத்ததன் பலன்தான் நாம் இன்று காண்பது. இதற்காக சிலர் அஹிம்சை வழியில் போராட சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். சிலர் அமைதியாகவே இருந்துவிடடு போய்விடுகின்றனர். இப்படி பல வகையினர் உள்ளனர். எனினும், சரியான வழியை ஒவ்வாருவரும் கையாள்வது அவசியம். அது பிற மொழி, மதம், இனம் சார்ந்த மக்களை பாதிக்காத வகையில் இருப்பதுதானது இங்கு அவசியம்.
த கட்டுமரன்: பல்லின மக்களிடையே வேலை செய்யும் நீங்கள் இதனால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டீர்களா?
என்னிடம் கற்கும் மூவின மாணவர்களும் கராத்தே பயில்கின்றனர். அவர்களிடையே ஒற்றுமை உள்ளது. ஆனால் வெளியில் இருப்பவர்கள் இனவாத நோக்கில் என்னை விமர்சனம் செய்வர். சிலர் இனவிரோதி என்றும் சிலர் இனவாதி என்றும் கூறுவர். இங்குள்ளவர்களை குழப்பிவிடுவதே அவர்களின் வேலை. இன்று எமது நாட்டில் கட்டியெழுப்ப பாடுபடும் நல்லிணக்கத்தை உடைத்துவிடுவதே இவர்களது வேலை. மொழி, இனம் என எதுவாக இருந்தாலும் அது ஒரு தேசத்திற்குள்தான் அடங்குகிறது. நாங்கள் தேசத்தின் மீது பற்றுள்ளவர்களாக இருந்தால் மொழி, இனம் என வேறுபட மாட்டோம். என்னுடைய கராத்தே மேலங்கியில் தேசிய கொடியை வைத்துள்ளேன். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தக் கொடியை அடையாளப்படுத்துகின்றேன். அதற்கும் சிலர் தமிழின துரோகி என்றனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான் இலங்கை கொடியை வைத்திருக்காமல் வேறு எந்த கொடியை வைத்திருப்பது? நாம் வாழும் தேசத்தின் மீது பற்றாக இருப்பது துரோகம் கிடையாது. அது இல்லாததுதான் இங்கு பிரச்சினை. தேசத்தின் மீது பற்று வைத்திருந்தால் அங்கு வாழும் இனம், மதம் என எதிலும் வேறுபாடு இருக்காது.
த கட்டுமரன்: தேசத்தின் மீது பற்று வைப்பதற்கு முதலில் எமக்கு சமஉரிமை வேண்டும். எமக்கான உரிமைகளையும் தேவைகளையும் கேட்பது பிழை என்கிறீர்களா?
நான் அப்படி சொல்ல வரவில்லை. அதனை சரியான முறையில், சரியான நேரத்தில், சரியான தருணத்தில் எமக்கென இருக்கும் பிரதிநிதிகளின் அழுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்வது அவசியம். அதற்காக தமிழர்கள் ஒன்றுபடுவது அவசியம். அவர்களிடையே பிரதேசவாதம் தலைதூக்கியுள்ளது. முதலில் தமிழர்களிடையே நல்லிணக்கம் குறைந்துவருவதை நாம் அகற்றவேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒன்றுமையே பலம். அந்த பலத்துடன் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறமுடியும். அதே நேரம் நல்லிணக்கம் என்ற விடயத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளுதல் அவசியம். ஒரு கலைஞனாக நான் சொல்லக்கூடிய விடயம் அதுதான். புரிந்துணர்வும், தேசத்தின் மீதான அன்பும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.
This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.