சமூகம்

விடையற்ற கேள்விகளுடன் சிறுவர்கள் மடிகிறார்கள்! ஏன்??

ஷபீர் முகமட்

கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா நிலைமை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் உலகெங்கும் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.   இலங்கையில் ஜுலை மாதத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் இன் வீட்டிலே பணிசெய்த சிறுமியின் மரணத்துடன் சேர்த்து மொத்தமாக நான்கு பாரிய சம்பவங்கள் பெரிதும் பேசப்பட்டன. 

  1. நாவலப்பிட்டிய சேர்ந்த 13 வயது சிறுமிருவர் தனது ஏழு வயது முதல் தந்தை உட்பட பலரினாலும் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்
  2. 15 வயது சிறுமி ஒருவரை இணையவழியில் விற்பனை  செய்த சம்பவம்
  3. 12,14 வயதான பிள்ளைகள் தந்தையால் வன்புணர்வுக்கு உட்பட்டு கர்ப்பமாகிய சம்பவம்.
  4. பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் தீக்கரையான 16 வயது சிறுமி

மேலே குறிப்பிட்ட நான்கு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்ப்புபடுகின்ற ஒரே இடம் அவர்களுடைய வயது, அதாவது இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகள். 18 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர் என்பது உலகளாவியரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று.

எமது நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் 16 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். 16 வயதுக்குட்பட்டடோரை வேலைக்கு அமர்த்த முடியாது. மேலும் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் பணிபுரிகின்ற சிறுவர் உரிமை ஊக்குவிப்பு அதிகாரி தமது கட்டுப்பாட்டிற்குள் உள்ள பிரதேசத்தில் காணப்படுகின்ற குடும்பங்களை பின் தொடர்ந்து குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இதற்காகவே அரசாங்கம் அவர்களுக்கு சம்பளம் வழங்குகின்றது.  

அதேவேளை சிறுவர் உரிமைகளில் உறுப்புரை 3, பிள்ளைகள் தொடர்பான சகல செயற்பாடுகளும் முடிவுகளும் அவர்களின் சிறந்த நலன்களைக் கருத்திற் கொண்டே மேற் கொள்ளுதல் வேண்டும். என்கிறது,

உறுப்புரை 12 – 

ஒவ்வொரு பிள்ளையும் தன்கருத்தை வெளியிடுவதற்கும் தன்னைப்

பாதிக்கக் கூடிய எந்த விடயம் அல்லது நடைமுறை பற்றி தன் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும் உரிமையுடையதாகும். அத்துடன் வளர்ந்தோரால் அது கருத்திற் கொள்ளப்படுவதற்கும் உரிமை உடையதாகும்.

என்கிறது. ( https://noolaham.net/project/31/3080/3080.pdf)

அத்துடன் ஒவ்வொரு உறுப்புரைகளின் முடிவிலும் அரசாங்கம் இதை உறுதி செய்தல் வேண்டும், என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோருக்கும் வளர்ந்தோருக்கும் சிறுவர்களின் உரிமைகைள மதிக்கும் கடப்பாடும் உண்டு. இந்த நிலையில் இந்தச் சிறுமிகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடந்தேறியுள்ளன.  

பாதுகாக்க வேண்டிய தந்தையே குற்றம் புரிந்தால் தந்தையை தண்டனைக்குள்ளாக்குவது என்பது பாரிய சவால் மிக்கது. இதை அறிந்தே அவர்கள் குற்றம் புரிகிறார்களா? வறுமையைக் காரணம் காட்டி பாதுகாக்கவேண்டிய பிள்ளைகளை வீட்டை விட்டு அறியாத இடங்களுக்கு அனுப்பும் பெற்றோரும் பிள்ளைகளின் உரிமைகளை மீறுபவர்களே. சிறுவர்களானவர்கள் தமக்கு என்ன நடக்கிறது? என்று முன்கூட்டியே அறியமுடியாதவர்கள், எதிர்ப்பை காட்ட அழுகையை, சிலசமயங்களில் கோபத்தை மட்டுமே ஆயுதமாகக் கொண்டவர்கள். அவர்களின் கோபம் யாரையும் எதிர்த்து தாக்கும் பலம் கொண்டதல்ல. இவையனைத்தும் உணரப்பட்டுதான் அவர்கள் மீது வன்முறைகள் புரியப்படுகின்றன.

15 வயது 11 மாதமாக இருக்கும்போது டயகம பகுதியைச் சேர்ந்த இஷாலினி என்ற சிறுமி ரிசாட் பதியுதீனுடைய வீட்டில் எப்படி வேலைக்கு அமர்த்தப்பட்டார்? அவ்வாறு அமர்த்தப்பட்டவர் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார். மரணம் சம்பவித்துள்ளது. சிறுவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை உள்ளவர்கள். அந்த உரிமையை வளர்ந்தோர் மதித்திருக்கவேண்டும். ரிசாட் பதியுதீன், சமூகத்தின் உயர் மட்ட உறுப்பினர் என்ற ரீதியிலும் அரசின் பங்காளியாக இயங்கியவர்  என்ற ரீதியிலும்  சிறுவர் உரிமைகளை மீறியது ஏன்? இலங்கையின் வறுமையை ஒழிக்க வேண்டும், என கூறிக்கொண்டு மக்களின் வாக்கு மூலம் ஆட்சிக்கு வருபவர்களே பாடசாலை செல்ல வேண்டிய கஷ்டமான குடும்பங்களின் பிள்ளைகளை வீட்டு வேலைக்காக அமர்த்துவது எந்த விதத்தில் நியாயம்? இவை எல்லாம் அனைத்து மக்களும் எழுப்பும் விடையற்ற கேள்விகள்.

இது இவ்வாறிருக்க, இந்த சம்பவம் நடந்த  இரு வாரங்களுக்கு முன்னர் இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக 15 வயதான சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 35 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுள் கந்தளாய் பிரதேச சபையின் உப தலைவர் ஒருவர், கடற்படையின் சிறப்பு வைத்திய நிபுணர், போலீஸ் விளையாட்டு பிரிவின் காவல்துறை துணை ஆய்வாளர், இரத்மலானையை சேர்ந்த முன்னாள் வங்கி முகாமையாளர் ஒருவர், கப்பல் கேப்டனொருவர், கண்டி பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகரொருவர், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரியொருவர் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற பிக்கு ஒருவரையும் கைதுசெய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இவர்கள் சமூகத்தின் சாதாரண பிரஜைகளா? 

அதிகாரமும், பாலியல் வக்கிரங்களும் சிறுவர்களை பலிக்கடாவாக்குவதில் முன்நிற்பது ஏன்? எதிர்க்கமுடியாத வாயற்ற ஜீவன்களாக சிறுவர்கள் இருப்பதும், குற்றம் செய்ததில் இருந்து தப்பிப்பது இலகுவானது என்பதும் முக்கிய விடயங்களாகியுள்ளன,

சமூக ஊடக ஆர்வலரான ஷான்யா ஹேரத் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான இணையத்தளங்களில் இணையவழி பாலியல் தொழில்  ஊக்குவிக்கபடுவதாகவும் இப்போதே இதனை நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை  இது தோற்றுவிக்கும் எனவும் தனது முகநூல் பகுதியில் பதிவு ஒன்றினை எழுதியிருந்தார். அதன்பின் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TRC) பலமுறை தனிப்பட்ட முறையிலும் எழுத்துமூலம் முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் உரிய அதிகாரிகள் அதுபற்றி கரிசனை கொள்ளவில்லை எனவும் தனது முகநூல் பகுதியில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்தார். 

15 வயது சிறுமியின் சம்பவத்தின் பின்னர் குறித்த இணையத்தளம்  முடக்கப்பட்ட போதிலும் 12 வருடங்களாக அந்த இணையத்தளம் எவ்வித தடைகளும் இன்றி இயங்கிவந்துள்ளது.  எனினும் இதே போல் இயங்கிவருகின்ற இன்னும் பல இணையத்தளங்கள் இன்னுமும் செயற்பட்டுக் கொண்டே இருப்பதாகக் கூறுகின்றனர். இதில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

சிறுவர்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கை பற்றி பார்த்தபோது,  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரன “2019ம் ஆண்டில் 8558 சம்பவங்களும் 2020ல் 8165 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலும் 4740 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே இது எந்த வித அதிகரிப்பையும் காட்டவில்லை” என்று கூறியிருப்பது வியப்பைத்தருகிறது.

அப்பாவிச் சிறுவர்கள் மீதான கொடூர வன்முறைகளை இல்லாமல் செய்யவேண்டிய பகுப்பாய்வுகள் எண்ணிக்கை கணக்கு வைத்து கூடியது, குறைந்தது? என விளக்குவது நியாயமா? அப்படிப்பார்த்தாலும்  வியாபார நிறுவனங்களில் கூட பகுப்பாய்வுகள் மேற்கொள்வது குறைந்தபட்சம் ஐந்து வருட கொடுக்கல் வாங்கல்களை வைத்தே ஆகும். அவ்வாறு இருக்க சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி கடந்த இரண்டு வருட கணக்குகள் முடிவுகள் நோக்கி போவதற்கு போதுமானவையா?

2010 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிகழ்ந்த சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கைகளை நோக்கும்போது ஒருபோதும் திருப்தி அடைய முடியாது. இதுபற்றி அவரிடம் வினவிய வேளையில், உலகிலே சிறுவர் துஷ்பிரயோகங்கள் இல்லாத எந்தவொரு நாடும் இல்லை. அந்த அடிப்படையில் நோக்கும்போது இலங்கை ஒரு நல்ல இடத்திலேயே உள்ளது எனக் கூறினார். எனினும் The Economist அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி இலங்கையானது சர்வதேச ரீதியில் குழந்தைகளுக்கான சிறந்த சூழல் உள்ள நாடுகளின் தர வரிசையில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. 

மேலும் இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமி 2013ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மீகஹதன்ன போலீஸில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள். எனவே இதுபற்றி கடந்த (20) ஆம் திகதி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது ,குறித்த சிறுமி பற்றி அவ்வாறான ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அது இந்த சம்பவத்துடன் எவ்விதத்திலும் தொடர்புபடுவதில்லை என தெரிவித்திருந்தார். பாதிப்புக்குள்ளான சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சரியான ஏற்பாடுகளை ஏன் உருவாக்கமுடிவதில்லை? இவற்றுக்கு நிரந்தரமான எந்தவித தீர்வொன்றினையும் வழங்குவதற்கு எந்த அமைப்புகளும் முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனாலும் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பொறுப்பு தொடர்பாக 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல், அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொள்கையொன்றை தயாரிக்கும் நோக்கில் 1998 இன் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 1999 ஆம் ஆண்டின் போது ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அவ்வாண்டு முதல் 20 வருட காலம் கடந்ததன் பின்னர் அந்த  கொள்கைக்காக பணிப்பாளர் சபை அங்கீகாரம் பெறப்பட்டிருந்த போதிலும் இந்த அறிக்கை வெளியிடப்படும் திகதி வரையிலும் அந்த கொள்கையை ஆக்கபூர்வமானதாக அமுல்படுத்துவதற்கு அதிகாரசபை தவறியிருந்தது. மேலும் கடந்த 08 வருட காலத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 79,259 ஆக இருந்ததுடன் அந்த முறைப்பாடுகளில் 42,073 ஐ தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதிருந்ததுடன் அது கிடைத்த முறைப்பாடுகளில் 53 சதவீதமாக உள்ளது.

சிறுவர்களை வன்முறைகளில் இருந்து பாதுகாத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யவேண்டுமனால் மக்கள் அனைவரும் சிறுவர் உரிமைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை மதிக்கவும் கைக்கொள்ளவும் முன்வரவேண்டும். அரசு செய்யும் என எதிர்பார்த்து, இருப்பதையும் இழப்பதை விட ஒவ்வொருவரும் 18வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைகள் பற்றி கவனம் எடுக்கவேண்டும். சிறுவர்களை அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் கண்டால் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் பாதுகாவலர்களிடம் ஒப்படையுங்கள். முடியாவிட்டால் சிறுவர் அதிகார சபைக்காவது அறிவியுங்கள். இது அனைவருக்குமான பொறுப்பும் கடமையுமாகும்.

Crimes Without Addresses: The State Of Abused Children And Child Rights In Sri Lanka

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts