வாழ்வதா இல்லையா, சர்வதேச நோய்த் தொற்றின் போது வாழ்க்கையில் நெருக்கடி.
ஒரு தனிநபர் – உத்தரவின்றி வெளியே போகமுடியாமல் வீட்டிற்குள்ளே அடைபட்டு கிடக்கிறார். உணவும் அத்தியாவசிய தேவைகளும் அவருக்கு வழங்கப்படுகின்றன (இந்த நபர் அதிர்ஷ்டசாலி என்று ஊகித்துக்கொள்வோம்), இந்த நபரின் சகல செயற்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது. இது ஜோர்ஜ் ஓர்வெலின் “1984” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமான “த சர்கள்” (The Circle) என்பதை ஒத்திருந்தாலும், உண்மை அதுவல்ல. கோவிட் 19 தொற்றின் காரணமாக ஏறத்தாழ அரைவாசிக்கும் மேற்பட்ட உலக சனத்தொகைக்கு இது நாளாந்த வாழ்வின் யதார்த்தமாக காணப்படுகிறது.
21ம் நுற்றாண்டின் “கொள்ளை நோய்” ஆரம்பித்ததில் இருந்து, வாழ்க்கையில் 360 பாகை திருப்பம் ஏற்பட்டு, நாம் சிந்தியாமல், நாளாந்தம் ஈடுபடும் நடவடிக்கைகள் இன்று எமக்கு பாரமாகத் தோன்றுகிறது. ஒருநாளும் இல்லாமல் மூச்செடுப்பதை பற்றியும் கைகளை கழுவுவதைப்பற்றியும் நாளாந்தம் குளிப்பதைப்பற்றியும் உலகத்தார் அதிகமான கவனத்தை செலுத்துகிறார்கள். இந்த நாளாந்த செயற்பாடுகள் இப்போது உயிர்வாழ்வதற்கான செயல்முறைகளின் ஒரு பகுதியாகிவிட்டன. நாம் வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்கிறோம். வெளியே செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது, அப்படி வெளியே சென்றாலும், கட்டுப்பாடுகளின் மத்தியிலேயே செல்கிறோம்.
உலகளாவிய முறையில் மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலை என்பவற்றின் விகிதம் அதிகரித்துள்ளது. நாம் எமது அன்றாட வாழ்வின் இயல்பான நிலைக்கு திரும்ப ஏங்கிக் கொண்டிருக்கும் விலங்குகளைப் போல இருக்கிறோம். ஆனால் நாம் இயல்பான வாழ்க்கை என்று வரையறுக்கும் செயல்கள் இப்போது “புதிய யதார்த்தம்” ஒன்றினால் நிர்வகிக்கப்படுகிறது. மாறாக இது யதார்த்தமாகவே தென்படவில்லை. இப்படியான வாழ்க்கை அர்த்தமுள்ளதா என்று அடிக்கடி மக்கள் எண்ணுகின்றனர். கடந்த காலங்களில் வாழ்க்கை என்பது வெறுமனே உயிர்வாழ்வதல்ல. ஒரு கலக்கமான முறையில், இந்த சர்வதேச தொற்று, சமத்துவத்தன்மையை உருவாக்கும் அதே சமயம் ஒரு சமத்துவமின்மையின் வெளிப்பாடான உணர்வையும் உருவாக்கியுள்ளது. எமது வருமானம் என்னவாக இருந்தாலும், எல்லோரும் முகக் கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் இடைவெளியில் தூரத்தை பேண வேண்டும், தம்முடன் தொடர்புடைய யாரேனும் நோய்க்குரிய அறிகுறிகளைக் கொண்டிருந்தால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சிறந்த உடல்நலம் கொண்டிருந்தாலும், தும்மலும், தடிமனும் கவனத்திற்கு எடுக்கப்படும். உள்நாட்டைப் பொறுத்தவரை, இலங்கையில் இறந்தவர்களின் இறுதிக் கடன்களைப்பற்றிய தீவிரமான விவாதம் நடைபெறுகிறது. ஏனெனில், இலங்கையில் விதிக்கப்பட்ட கோவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகள், கலாசார முறையில் இறுதிக்கடன்கள் என்னவாக இருந்தாலும், இறந்தவர்களை தகனம் செய்யவேண்டும் என்று நிச்சயிக்கின்றது. இங்கு, வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு தராதரங்களின்றி, எல்லோரும் சமமாக நடத்தப்படுகின்றனர் என்று தென்பட்டாலும், கோவிட் 19 ஆனது சகலருக்கும் பொதுவான நிரந்தரமற்ற வாழ்வை எடுத்துக்காட்டும் அதேசமயம் நாம் எல்லோரும் எவ்வளவு வித்தியாசமான வாழ்விடங்களில் இருந்து வருகிறோம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
இந்த சமூக தராதரங்கள் உலகளாவிய விதத்தில் பலமாக செயற்படுத்தப்பட்டாலும், இந்த சர்வதேச தொற்று ஒரு குரூரமான விதத்தில், எம்மில் ஒரு சாராரை அதிர்ஷ்டவசமாக தனிச்சலுகை உடையவர்களாகவும், மற்றொரு சாராரை துரதிர்ஷ்டவசமாக சலுகை அற்றவர்களாகவும் மாற்றியுள்ளது. இணையத்தள வசதிகளையும் நிலையான மின்சார வழங்கல்களையும், ஏற்ற கருவிகளையும் கொண்டவர்களுக்கு மின்னியல் கல்வி இலகுவாக இருக்கும் அதேவேளையில் இவ்வசதிகள் இல்லாதவர்கள் தமது கல்வியை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என்று எண்ணி மௌனத்தில் ஆழ்ந்து போகின்றனர். பல ஆண்டுகளாக இரவிரவாக படித்த படிப்பிற்கும் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் இடையே ஒரு கருவி முட்டுக்கட்டையாக அமர்ந்திருக்கிறது. அரசாங்க ஊழியர்கள்களின் நிரந்தர ஊதியத்திற்கான காசோலை அவர்களது வங்கியில் செலுத்தப்படும் அதேவேளையில் நாள் சம்பளத்திற்கு வேலைசெய்யும் தொழிலாளி பட்டினியால் வாடும் தன் குடும்பத்தைப் பார்த்து, வாழ்வதா இல்லையா என்று எண்ணுகின்றான்-ள். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளோடு முடக்கப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு முறைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வாழ்க்கை எப்போதும் இல்லாத நெருக்கடியாகிவிட்டது.
இது குரூரமாகத் தென்பட்டாலும், நாம் ஒருநாள் இந்த முகக் கவசத்தின் பின்னால் இருந்து வெளியே வரும் வரை, இக்காலத்தில் வாழும் தனிநபரின் வாழ்வின் நெருக்கடி தொடரும். அதுவரை நாம் வாழ்வதா இல்லையா என சிந்தித்துக் கொண்டிருப்போம்.