Uncategorized

வருமானமா? வாக்களிப்பா? விளிம்பு நிலையில் வாழும் தெலுக்கு மக்களின் பரிதாபம்

ஆர்.ராம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னதாக நின்றுகொண்டிருந்தபோது நான்கு பெண் யாசகர்கள் நடமாடிக்கொண்டிருந்ததையும் அவர்கள் தருமம் அளிக்கக் கூடியவர்களை மையப்படுத்தி யாசகம் கோரும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமைiயும் அவதானிக்க முடிந்தது.

வழக்கமாக, யாசகம் கோருபவர்களை விடவும் அவர்ளின் உரையாடல்களும், செயற்பாடுகளும் வித்தியாசமாக காணப்பட்டன.  விசேடமாக அவர்களின் மொழிநடையில் கூட பாரிய வித்தியாசமொன்றை உணர முடிந்தது. இந்த அவதானங்கள் அவர்கள் யார் என்பது தொடர்பில் அறிவதற்கான ஆர்வத்தை தூண்டியது.

அந்த வித்தியாசம் அவர்களிடத்தில் உரையாடலொன்றைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது. அதனடிப்படையில், அவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், யாசகம் எடுப்பதற்காக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை தருவதாகவும் கூறினார்கள்.

தாங்கள் யாசகம் எடுப்பது தமது அடுத்த பரம்பரையினரின் கல்விக்காகவே என்பதை அவர்கள் ஆணித்தனமாக கூறினார்கள். தங்களது பிள்ளைகள் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகளில் கல்வி கற்பதாகவும் அவர்கள் தாங்கள் யாசகம் பெறுவதை அறிந்து விடக்கூடாது என்பதற்காகவே வருகை யாழ்ப்பாணம் போன்ற தொலைதூரங்களுக்குச் செல்வதாகவும் குறிப்பிட்டார்கள்.

தங்களுக்கு தமிழ் மொழி பரிச்சியமாக இருக்கின்றபோதும் தாங்களது பிள்ளைகளுக்கு வவுனியா தமிழ் பாடசாலைகளில் உரியவாறான ஒதுக்கீடுகள் வழங்கப்படாது புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் ஆதங்கத்தினை வெளியிட்டார்கள்.

இவ்வாறு தமது வறுமை குறித்தும், சமூகத்தின் பல்வேறு தருணங்களில் தமக்கு நிகழும் பாரபட்சங்கள் குறித்து பல்வேறு ஆதங்கங்களை வெளியிட்டவர்கள், தாங்கள் வவுனியாவை அண்மித்துள்ள சிறிய கிராமம் ஒன்றில் வாழும் தெலுங்கு வம்சாவளியினராக இருப்பதாகவும், தாம் ஏழாவது தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் தான் அவர்கள் வசிக்கும் கிராமத்துக்கு விஜயம் செய்யும் சூழல் ஏற்பட்டது. அவர்களது பகுதி வவுனியா மாவட்ட நிருவாகப்பிரிவுக்குள் காணப்படும் நொச்சிக்குளம் கிராமமாகும். இலங்கையின் ஏனைய கிராமங்களிலிருந்து அந்தக் கிராமம் வேறுபட்டதாக காணப்பட்டது. 

அந்தக் கிராமத்தில் அதிகமாக தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கையில் ஆங்காங்கே தெலுங்கு மக்களின் வழித்தோன்றல்கள் இருந்தாலும் தெலுங்கு மக்கள் அதிகமாகவுள்ள ஒரே கிராமம் இதுதான். 

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் தரவுகளின்படி, இக்கிராமமானது வவுனியா மாவட்ட செயலகத்தின் நிருவாகத்துக்கு உட்பட்ட ஈரப்பெரியகுளம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளதுமாக உள்ளது. 

இக்கிராமத்தில் 86 குடும்பங்கள் வசித்து வருவதுடன், இங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 156ஆகவுள்ளது. தற்போது தேர்தல்கள் காலம், தேர்தல்களில் தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவது பற்றிய விடயத்தில் அவர்களுக்க அதிகமான ஈடுபாட்டைக் காண முடிந்திருக்கவில்லை.

தேர்தல்கள் பற்றிய புரிதலும் அவர்களுக்கு இல்லை. ஆர்வமும் இல்லை. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு நகர்வதில் தான் அதிகமான ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்களுடனான உரையாடல்களின் போது அப்பட்டமாகத் தெரிகிறது. அதனை அவர்கள் மிகவும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தும் நிலைமைகளும் உள்ளன.

அடிப்படைத் தேவைகளே 

பிரதான கோரிக்கைகள்

1985ஆம் ஆண்டு நொச்சிக்குளம், தெலுங்கு கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் கடந்த 2012ஆம் ஆண்டு நொச்சிக்குளம் கிராமத்திற்கு திரும்பினர். எனினும் அவர்கள் தற்போது வரையில் அன்றாட வசதிகள் இன்றியே இருக்கின்றார்கள். உள்நாட்டில் வழங்கப்பட்ட எந்தவொரு வீட்டுத்திட்டங்களுக்குள்ளும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றார்கள்.

நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தயானி என்ற குடும்பப் பெண் குறிப்பிடுகையில்;,  நாங்கள் இன்னும் தகரக் கூரையுடன் கூடிய குடிசைகளில் வாழ்கிறோம். நாங்கள் 12 ஆண்டுகளாக  வசிக்கிறோம். இந்த அரசிடமிருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்களது பிரச்சினைகளை பார்க்க யாருமில்லை. இந்த அரசும் எங்களுக்கு உதவி செய்தால் நல்லது.

இப்போது நாம் சாத்திரம் கூறி பணத்தைத் தேடி சாப்பிட்டு விலை வீடுகளைக் கட்டி வாழ முடியாது. எனவே வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஒரு குழந்தைக்கு தனியாக பாடசாலைக்குச் செல்ல முடியாது. பாடசாலைக்குச் செல்லும் பாதையில் ஏறக்குறைய இரண்டு மைல் காடாக உள்ளது. அதனால்தான் எங்களைப் பற்றி யோசித்து எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விஜய் தெரிவிக்கையில், வீடுகளை கட்டுவதற்கு 750,000 ரூபாவை வழங்குவதாக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சஜித் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. அந்தப் பணத்தில் ஐந்து லோட் கற்கள் கட்டப்பட்டுள்ளன. எங்களுக்கு மிகுதி கிடைக்கவில்லை. நாங்கள் இப்போது ஒரு குடிசையில் இருக்கிறோம். நாங்கள் உண்மையில் ஆதரவற்றவர்கள். நான் ஊனமுற்றவன். ஒரு வேலையும் செய்ய முடியாது. யாரிடமாவது எதையாவது கேட்டு வாழ்கிறேன். இந்த வீட்டின் மிகுதியைக் கட்ட நீங்கள் எங்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும்’ என்றும் அவர் கூறினார்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நாள்தோறும் தங்களின் வருமானத்தினை தேடுபவர்களாகவே உள்ளனர். பஸ் வண்டிகளில் புத்தககள் மற்றும் இதரபொருட்களை விற்று வருமானம் ஈட்டுதல், கூலி வேலைகளுக்குச் செல்லுதல், பாம்பு, குரங்கு உள்ளிட்டவற்றை வைத்து வீதிக் கேளிக்கைகளை முன்னெடுத்து வருமானத்தை ஈட்டுதல் உள்ளிட்ட செயற்பாடுகளையே அதிகமாக முன்னெடுக்கின்றார்கள். இதனைவிடவும், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக யாசகம் எடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள்.

இவர்களில் அடுத்த சந்ததியினர் கல்வியில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருக்கின்றார்கள். தமிழ் மொழியில் அதிகமாக உரையாடினாலும் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்கு வவுனியாமாவட்ட தமிழ் பாடசாலைகள் இடமளிக்காமையால் அநுராதபுரத்தினைச் சேர்ந்த பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளில் பங்கேற்றுள்ளனர். 

இதனால் இவர்களின் அடுத்த தலைமுறையினர் சிங்கள மொழியில் சரளமாக உரையாடக்கூடியவர்களாக மாறிக்கொண்டு வருவது மட்டுமன்றி, கற்தெய்வங்களை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இம்மக்களின் அடுத்த சந்ததியினர் பௌத்த சமயத்தையும் பின்பற்றும் நிலைமையும் மேலோங்கி வருகின்றது.

இவ்வாறு அவர்கள் ஒரு குறுகிய சூழலுக்குள் தமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அண்மைய தேர்தல்களில் இவர்களின் விடயங்கள் வாக்குச் சேகரிக்கச் செல்வபர்களின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்பட்டதா என்பது குறித்தும் அவர்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்தும் அவதானம் செலுத்த முயன்றபோது துரதிஷ்டமான பிரதிபலிப்புக்களே வெளிப்பட்டன.

இக்கிராம சபைத் தலைவராக இருக்கும் முனியாண்டிகே சுரங்காவிடம் தேர்தல்கள் குறித்தம் வாக்குக்கோரி வந்தவர்களிடத்திலான அணுகுமுறை குறித்து கேட்டபோது,  ‘எம்மில் பெரும்பாலானோர் வாக்களிக்க போவதில்லை. நாங்கள் வாக்களித்தோம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. வாக்கு கேட்பவர்களுக்கு எங்களின் பிரச்சினைகள் தெரியாது. அந்த ஆட்கள் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. எனவே நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? கடந்த தேர்தல்களில் எமது நாளாந்த வேலையையும் அதன் ஊடாக கிடைக்கும் வருமானத்தையும் தியாகம் செய்து வாக்களிக்க விரும்பவில்லை. ஒரு நாள் வேலையை இழந்து வருமானத்தினை இழந்து நாங்கள் வாக்களிப்பதால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது?’ என்று தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்தார்.

அத்துடன், ‘நம் வேலைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்களிக்க வேண்டும் என்றால், அதைப் பற்றி சிந்திக்கலாம். அதுமட்டுமின்றி, எங்களது அனைத்து மக்களையும் ஒருநாளில் கிராமத்தில் இருந்து வாக்களிப்பில் பங்கேற்கச் செய்வது மிகவும் கடினமானது. அவர்கள் தங்களது வருமானத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடுவார்கள். அவர்களை தொடர்பு கொள்வதே கடினமானதாக இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி தமது சமூகத்தின் அண்மைய காலத்தில் சட்ட ரீதியாக முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் அவர் எடுத்துக் கூறித் தயங்கவில்லை. அதனடிப்படையில் அவர், ‘தற்போதைய உள்நாட்டுச் சட்டங்களின்படி எமது மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவதில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள். எமது வாழ்க்கை கலாசாரப்படி பாம்பு, மலைப்பாம்பு போன்ற விலங்குகள் ஊடாகவே வருமானத்தை பெற வேண்டியுள்ளது, ஆனால் வனவிலங்குச் சட்டம் இந்த விலங்குகள் வைத்திருப்பதற்கு தடைகளை விதிப்பதாக இருக்கிறது. மேலும், சிலர் தங்கள் வாழ்வாதாரமாக இருந்தாலும் கூட நெரிசலான இடங்களில் அவற்றைக் காட்சிப்படுத்தப்படுவதை எதிர்க்கின்றனர்.’ என்றும் கூறினார்.

வாக்களிப்பில்

ஆர்வமின்மை

கிராமத் தலைவரின் கருத்துக்களால் இவ்வாறிருக்கiயில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடியபோது அவர்கள் தங்களின் வருமானத்துக்கான தேடல்களை நாட்டின்ப பல பாகங்களில் மேற்கொள்வதாக கூறினார்கள். இதனால் வாக்கெடுப்பு தினத்துக்காக மட்டும் அதிகளவு செலவு செய்து தமது சொந்தக் கிராமத்துக்கு வருகை தருவதற்கு விரும்பிவில்லை என்றும் கூறினார்கள்.

குறிப்பாக, தண்ணகே ஆனவத்து என்பவர்,  இரண்டு பெரிய நாகப்பாம்புகளையும் ஒரு மலைப்பாம்புகளையும் எங்களிடம் சுட்டிக்காட்டி, அவை தங்கள் வாழ்க்கைக்கான வருமானத்தைச் சம்பாதிக்கும் செல்லப்பிராணிகள் என்று கூறினார். பாம்புகளும் அவற்றின் வாழ்க்கையும் இணைக்கப்பட்டுள்ள விதத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

அத்துடன் அவர், ‘எமது வாக்குகளை வழங்குவதற்காக நாம் பதிவு செய்கிறோம். ஆனால் எங்களுக்க வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதேநேரம் தேர்தல் காலத்தில் மட்டும் ஒருசில அரசியல்வாதிகள் இங்கு வருகின்றார்கள். அவர்கள் எங்களின் பிரச்சினைகளை கேட்பார்கள். வாக்குகளை வழங்குகங்கள் அனைத்தையும் செய்போம் என்பார்கள். பின்னர் அவர்களை காண முடியாதுள்ளது. நாம் வாக்களிப்பதற்கு செல்வதற்கு யாராவது வாகன ஏற்பாட்டைச் செய்தால் நாம் வாக்களிக்கச் செல்வோம். அல்லது இல்லை. இந்த ஆண்டு வாக்களிப்போம் என்று உறுதியாக கூற முடியாது. கடந்த தேர்தலில் எங்களில் பலர் வாக்களிக்கவில்லை. எமது வாக்கு வீண் போவது பற்றிய பிரச்சினை இல்லை. ஆனால் எமக்கு குறித்த தினம் வருமானம் இல்லையென்றால் என்ன செய்வது. எமது வயிற்றைப் பாதுகாக்கும் அதேநேரம் எமக்காக வாழும் இந்த விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். எனவே வாக்குக் கேட்பவர்களுக்கு இதுபற்றி தெரியாது. எனவே அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை’ என்றும் தனது ஆதங்கத்தை கூறி முடித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் இந்த மக்களின் வாக்களிப்பில் பங்கேற்பதற்கான நிலைமைகள் பற்றி கேட்டபோது, குறித்த மக்களின் வாக்களிப்புக்கான வசதியளிப்புக் குறித்து கேட்டபோது, அவர்கள் வருடத்தின் பெரும்பகுதி வாழும் தபுத்தேகம போன்ற பிரதேசங்களில்  வாக்களிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அதேபோன்று இம்மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய இடங்களிலும் வாக்களிக்கும் சூழல் தயார் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையின் விளிம்புநிலை மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியுள்ளோம். அதில் காணப்படுகின்ற குறைபாடுகளை மையப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடரும்’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

குறித்த தெலுங்கு மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுகின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ வாக்களிக்கும் ஆர்வமின்மை பற்றிய புரிதல் இல்லாத நிலைமை நீண்டு கொண்டு தான் உள்ளது.

அண்மையில் இரண்டு தேர்தல்கள் நிறைவுக்கு வந்துவிட்டன. அடுத்து இரண்டு தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டள்ளது. இந்த நாட்டில் பிரஜைகள் சமத்துவடம் பற்றி பேசும் அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. சமூக நீதிபற்றிய கவனத்தை கொள்கின்ற தரப்பாகவும் ஆட்சியாளர்ர்கள் உள்ளார்கள். ஆகவே அவர்கள் இந்த வியடததினை கவனத்தில் கொள்வார்களா என்பது தான் இப்போதிருக்கின்ற கேள்வியாக உள்ளது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts