யாழ் முஸ்லிம்களின் கல்வி நிலை
எம்.எஸ்.எம். மும்தாஸ்
“வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்று சொல்லிய காலம் நீங்கி இன்றைய சூழ்நிலையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய முன்னேற்றத்தினால் கல்வியை தொடர ஒவ்வொரு நபருக்கும் இலகுவானதாக உள்ளது.
ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வியாகும். ஒருவர் பெறுகின்ற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழியமைக்கும்.
உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கல்வியின் பயன் கற்றவர்களை உயர்த்தும் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் கல்வியானது கடந்த நூற்றாண்டுகளையும் விட தற்காலத்தில் அதிகரித்துக் கொண்டு வருவது பெருமிதமாகவேயுள்ளது. பாடசாலைகளில் கல்வியைக் கற்று வரும் முஸ்லிம் மாணவர்கள் பல விதமான சாதனைகளையும் படைத்து, முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையை மென்மேலும் உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். கா.பொ.த சாதாரண தர பரீட்சை, கா.பொ.த உயர்தர பரீட்சை ஆகிய பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்விக் கல்லூரிகளிலும், பல்கலைக் கூடங்களிலும் தங்களது கால்தடம் பதிக்கின்றனர்.
அந்தவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி ஆராய்வதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றிய அதன் கால கட்டத்தினை ஆராயும் போது. மூன்றாக எடுத்து நோக்கலாம். 1965 இற்கு முன், 1965 இற்கும் 1990 இற்கும் இடையிலான கால் நூற்றாண்டுகள், 1990 இற்கு பின் அதாவது, இடம் பெயர்வுக்குப் பின் கால் நூற்றாண்டுகள் என்ற அடிப்படையில் நோக்குவோம்.
1960 இற்கு முன் ஆரம்பக் கல்வியைக் கற்பதற்கு யாழ். வண் – மேற்கு முஸ்லிம் கலவன் பாடசாலை, மஸ்ற உத்தீன் முஸ்லிம் கலவன் பாடசாலை, முஹமதியா முஸ்லிம் பாடசாலை என்ற மூன்று பாடசாலைகள் மட்டுமே யாழ் நகரில் காணப்பட்டன. 5 ஆந் தரம் கற்ற பின் உயர் கல்வியை தொடர முஸ்லிம் பாடசாலைகள் காணப்படவில்லை. இதனால், அவர்கள் தமிழ்ப் பாடசாலைகளிலேயே கல்வியை தொடர வேண்டியேற்பட்டது. சில கல்லூரிகளுக்கு அனுமதி பெறவும் கஷ்டமாக இருந்தது. கலாசார வேறுபாடு, இஸ்லாம் பாடம் கற்பிக்காமை, பெண் பிள்ளைகளுக்கான சீருடை, இஸ்லாமிய பண்பாட்டுக்கு ஒத்துவராமை, போன்ற பல காரணங்களினால் பெற்றோர்கள் பிள்ளைகளை இடைநடுவில் விலக்கிக் கொண்டதோடு, பெண் பிள்ளைகளை தமது சுற்றாடலிலிருந்து வெளியே அனுப்பத் தயங்கினர். இதனால் ஆண் பிள்ளைகளே உயர் கல்வியைத் தொடர முடிந்தது.
அன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணச் சமூக முஸ்லிம் மக்களிடையே பொருளாதார, வசதி படைத்தவர்களின் பிள்ளைகளே உயர் கல்வியைக் கற்றார்கள். ஒரு சில வசதியையுடைய பெற்றோர்கள் வேண்டிய நன்கொடைகளை அளித்து பிரபலமான பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டனர். பிள்ளைகளை வாடகைக்கு வாகனங்களில் அனுப்பினர். வசதி குன்றிய பெற்றோர்களுடைய பிள்ளைகளின் நிலையானது இடைக் கல்வியுடன் தொழிலுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உயர்தரம் கற்றுத்தேறி பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறவோ, வேறு உயர் தொழில் துறைகளைக் கற்கவோ முடியவில்லை. வசதியுடைய பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பட்டப்படிப்பிற்காக இந்தியாவிற்கும், மேலைத்தேய நாடுகளுக்கும் அனுப்பினர். வேறு சிலர் தம் பிள்ளைகளை கொழும்பு சட்டக் கல்லூரிக்கு அனுப்பி, சட்டத்தரணிகளாக்கினர். அக்காலத்தில் காணப்பட்ட பட்டதாரிகளில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பட்டம் பெற்றவர்களாகவே இருந்தனர்.
1960 இல் பெண்களுக்காக முஸ்லிம் மகளிர் கல்லூரியான, கதீஜா மகா வித்தியாலயமும், அதன் பின்னர் ஆண்களுக்காக, ஒஸ்மானியா கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டமையானது யாழ் முஸ்லிம் பிள்ளைகள் தம் சுற்றாடலிலேயே உயர் தரக் கல்வியைத் தொடர வழிசமைத்து வைத்தது. எனினும், உயர் தரத்தில் விஞ்ஞானப் பாடத்துறையில் பௌதீக, மனித வளப் பற்றாக்குறைகள் காணப்பட்டதால் வேறு பாடசாலைகளிற்கு சென்றே உயர் தரத்தில் விஞ்ஞானப் பாடங்களை கற்க வேண்டி ஏற்பட்டது. நாளடைவில் மாற்றங்கள் ஏற்பட்டு க.பொ. சாதாரண தர, உயர் தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றனர். எனினும், பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் நிலை குறைவாகவே காணப்பட்டது. பிற்பட்ட காலங்களில் ஒரு சில மாணவர்கள் கலை, வர்த்தகத் துறைகளில் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர். உயர் தரத்தில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள் வெளிவாரியாகப் பட்டப்படிப்பை முடித்து கலைத்துறையில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர்.
இவ்விடயம் குறித்து அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒருவரான ஆ.யு. பைசர் அவர்களின் கருத்து: “யாழ் முஸ்லிம்களின் மத்தியில் இரு கல்விக் கண்களாக இவ்விரு பாடசாலைகள் காணப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் இருந்தே முஸ்லிம்களின் கல்வி ஊற்றாக இவ்விரு பாடசாலைகளும் திகழ்ந்திருக்கின்றன. இதற்காக அரசியல்வாதிகள், சமூக சேவையாளர்கள் அரும்பாடுபட்டு இப்பாடசாலைகளை உருவாக்கி திறந்து வைத்தார்கள். அதனடிப்படையில் இவ்விரு பாடசாலைகளிலும் கல்வி கற்று பல கல்விமான்கள், அறிஞர்கள், அதிபர்கள் இலங்கையில் பல பாகங்களிலும் சேவையாற்றிக் கொண்டு வருகின்றனர். பல துறை சார்ந்த நிபுணர்களும் உருவாகி வெளிநாடுகளிலும் வாழ்கின்ற சகோதரர்களும் இவ்விரு பாடசாலைகளிலும் வெளிவந்த பழைய மாணவர்கள் இப்பாடசாலைகளுக்கும், ஊருக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற நன்றியுணர்வோடு இருந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இன்றும் இப்பாடசாலைகள் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது”
யாழ் முஸ்லிம்களின் கல்லூரிகள் அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் 1990 இல் வட பகுதி முஸ்லிம்கள் பல விதமாக வெளியேற்றப்பட்டனர். நாட்டின் பல பகுதியில் பிரிந்து சென்று அகதி முகாம்களில் வாழும் நிலையேற்பட்டது. பெரும்பாலானவர்கள் புத்தளம் அகதி முகாம்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். இன்னும் சிலர் கொழும்பு, நீர் கொழும்பு, பாணந்துறை, அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினர். தம் பிள்ளைகளையும் அந்தந்த பகுதியிலுள்ள பாடசாலைகளிலேயே கல்வி கற்க வழியமைத்துக் கொடுத்தனர்.
நகர்ப்புறங்களில் குடியேறிய மக்கள் தம் பிள்ளைகளை வசதி படைத்த பாடசாலைகளில் சேர்த்தனர். இவ்வாறான மாணவர்களுக்கு ஆங்கில மொழி தேர்ச்சிக்கான வழியேற்றப்பட்டது. உயர்தர வகுப்புக்களில் கற்க வேண்டிய மாணவர்கள் பலர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும், ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியிலும், பெண் பிள்ளைகள் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், பாத்திமா மகளிர் மகா வித்தியாலயத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அப்போதிருந்த அதிபர் ஜனாப் யு.ஆ. சமீம் அவர்களின் உதவியுடன் பல மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டது. அதே போன்று பிற மாவட்டங்களில் வாழ்ந்த மாணவர்களும் அந்தந்த பாடசாலைகளில் சேர்ந்து கற்றனர். பெற்றோரும் பிள்ளைகளும் தம் க~;ட நிலையில் இருந்து மீள்வதற்கு கல்வியொன்றே துணைகொடுக்கும் என்பதை உணர்ந்து அதில் கூடிய அக்கறை செலுத்தினர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும், கா.பொ.த (சாதாரண தர), (உயர்தர) பரீட்சையிலும் வட பகுதி மாணவர்களே பல பாடசாலைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகினர்.
பொறியியல், மருத்துவம், வர்த்தகம், முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய துறைகளில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறந்த பெறுபேறுகளை அடைந்தனர். இதன் பயனாக கடந்த கால் நூற்றாண்டுகளில் பல பொறியியலாளரும், வைத்தியர்களும், கணக்காளர்களும், வர்த்தக முகாமைத்துவ பட்டதாரிகளும், மென்பொருள் அபிவிருத்தியாளர்களும் எமது சமூகத்தின் மத்தியில் உருவாகினர். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு மாணவர் விசா பெற்றுச் சென்று அங்குள்ள பல்;கலைக்கழகங்களில் கற்று பல துறைகளிலும் தொழிலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒருவரான என்.ஆர். ரிஸ்வியிடம் இது தொடர்பாகக் கேட்டபோது அவர் கூறியதாவது:
“யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்களது சொந்த இடத்தை விட்டு வெளியில் சென்று வாழ்ந்தனர். இலங்கையின் புத்தளம், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மாவனல்லை ஆகிய பல விதமான இடங்களை தங்களது இருப்புக்களாகத் தெரிவு செய்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் அகதி முகாம்களிலும், நலன்புரிச் சங்கங்களிலும் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் உண்பதற்கும், உறங்குவதற்கும் க~;டமான நிலையில் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கவில்லை. இருந்தாலும், நியாயமானோர் கல்வியை வளர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.”
எல்லாச் சமூகங்களுக்கும் பொதுவானதொன்றாகவே கல்வி எனும் ஆயுதம் காணப்படுகின்றது. கல்வி இல்லாத சமூகம் துடுப்பில்லாத படகு போன்றே இருக்கும். கல்வியெனும் பொக்கிஷம் ஒவ்வொரு சமுதாயத்தையும் நிலைபெறச் செய்கின்றது. அந்தவகையில் 1990 இற்குப் பின் யாழ்ப்பாண முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலையானது 1990 இற்கு முன் இருந்ததை விட வளர்ச்சியடைந்திருப்பதை உணர முடிகிறது.
ஆகவே, இன்றைய சூழலில் கல்விதான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். மழை எப்படி தரிசு நிலங்களை உயிர்ப்புள்ளதாக ஆக்குகின்றதோ, அது போன்று தான் கல்வியும் மனதையும், இதயத்தையும் உயிர்ப்புள்ளதாக ஆக்குகின்றது.