யாழ். மக்களின் பாரம்பரியத்துடன் இணைந்துள்ள மாட்டுவண்டிச் சவாரி
சுதர்ஷினி முத்துலிங்கம்
வழமையாய் நகரும் நாட்களிற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஒரு சிறு மாற்றீடு, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவிற்குப் பின்னர் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த வேளையில் ஒரு அழைப்பு. “வட்டுக்கோட்டையில் மாட்டு வண்டிச் சவாரி நடக்குதாம் போய்ப் பார்ப்போமா” என்று. சரி பார்த்து விட்டுத் தான் வருவோமே என்று கிளம்பி விட்டோம்.
யாழ்ப்பாணத்தின் தமிழர் வீரம் சொல்வதென்றால் வண்டி வண்டியாக அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் மாட்டு வண்டிச் சவாரியும் கூட தமிழரின் ஒருவித வீர விளையாட்டுத் தான். 80களின் நடுப்பகுதியில் விவசாயமே அன்றைய அடிப்படையாயிருந்தமையினால், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீடுகளில் மாட்டு வண்டிகள் இருந்தன.
மாட்டு வண்டி என்பது, கயிற்றினால் மாடுகள் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியை ஓட்டுபவர் முன்னால் அமர்ந்திருப்பார். பின்பக்கத்தில் பொருட்களை ஏற்றிக் கொள்வர். மாட்டு வண்டிப் பயணத்தில், ஓட்டுபவர் களைப்புத் தெரியாமலிருக்க மாட்டுடன் கதைத்துக் கொண்டிருப்பார். மாடு திசை மாறிப் போகாமலிருக்க கையில் ஒரு சிறு தடியைக் கொண்டு அதன் முதுகில் தட்டி விடுவார்.
மாட்டு வண்டில் பயணத்திற்கு இன்றைய பென்ஸ் கார்கள் கூட ஈடாக முடியாது. அனுபவித்துப் பார்த்தால் தான் அதன் ஆத்மார்த்தம் விளங்கும்.
மதிய நேர வெயில் சுள்ளென சுட, மோட்டார் சைக்கிள் முடுக்கியை வேகமாக்குகின்றேன். இரண்டு மணிக்கு ஆரம்பமாகுமென நண்பி கூறியிருந்தாள் ஆனால் நேரமோ 2.10 ஆகியது.
நாம் போய்க் கொண்டே இருக்கின்றோம். எனக்கு அராலி வட்டுக்கோட்டை வீதிகள் அவ்வளவாகத் தெரியாது. இன்னும் கொஞ்ச தூரம் தான் என்று சொல்லிச் சொல்லி நண்பி எங்களை கூட்டிச் சென்றாள். .
குன்றும் குழியுமென அந்த வீதியும் மோசம் தான். அந்த வீதியால் பயணிப்பதே பெரிய சவாலாகத்தான் இருந்தது. பாரவூர்திகளின் பின்னால் மெது மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றோம்.
இந்த வழியினூடாக தான் செல்ல வேண்டும் என்று இடது புறத்தில் ஒரு சிறிய ஒற்றையடிப் பாதையை நண்பி காண்பித்தாள். பாதையின் இரண்டு பக்கமும் ஈச்சங் கன்றுகள், சிறு சிறு பற்றைக் காடுகள், கண்ணிற்கெட்டிய தூரத்தில் பெரிய தரவை வெளியொன்று.
சனக் கூட்டம் கூடியிருந்தது. அங்கு தான் மாட்டு வண்டிச்சவாரி நடந்து கொண்டிருக்கின்றது. மாட்டு வண்டி ஓடும் சத்தமும், அதை ஓட்டுபவர்களின் கத்தலும், பார்வையாளரின் கொந்தளிப்புமென ஒரு பரவசக் கோலம் பூண்டிருந்தது அந்த இடம்.
ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே போகின்றோம். ஐஸ்கிறீம் வான்களும், காரம் சுண்டல் கடைகளும், மோட்டார் வண்டியில் சுற்றிச் சுற்றிச் கடலை வடை விற்பவரும் அங்கே நிற்கின்றனர்.
ஆரவாரமாகப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் போட்டிகளிற்கெல்லாம் நடுவர் ஒருவரும் இருந்தார். அவர் வெள்ளைக் கொடியை அசைத்தவுடன் அவை ஓட ஆரம்பிக்கும். அத்தோடு போட்டியை சீராக நடாத்த இன்னொருவரும் சிறிய கம்புடன் நின்றிருந்தார்.
நான்கு நான்கு மாடுகளாகப் பிரித்துப் பிரித்துப் போட்டி நடாத்தப்பட்டது. ஆனால் அது ஏனெனத் தெரியவில்லை. மாட்டு வண்டிச் சவாரி பற்றி முழுமையாய் அறிந்த யாரேனும் இருந்தால் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டறியலாம் என்றெண்ணிணேன்.
நான் விசாரித்த சிலர் இதுபற்றி முழுமையாக தெரியாதென்றனர். எதுவுமே தெரிந்து கொள்ளாமல் திரும்பப் போகின்றேனே என சிறு வருத்தம் என்னுள்.
வீடு கிளம்ப ஆயத்தமான வேளையில் ஒருவர் என்னருகே ஓடி வந்து, “தங்கச்சி அந்தக் கயித்துக்கு பக்கத்தில ஒரு ஐயா இருக்கிறார் அவரிட்ட போய்க் கேட்டா இதை பற்றிச் சொல்லுவார் போங்கோ” என்று கைகாட்டி விட்டார்.
அவரிற்கு எப்படியும் 70வயதிற்கு மேலிருக்கும். வயதானாலும் அவருடைய பேச்சும், ஸ்டைலும் மிகவும் கம்பீரமாகத் தான் இருந்தது. “இந்த சவாரி பற்றி எங்களுக்கு சொல்லுவிங்களா” என்று கேட்க, உடனே சம்மதித்து விட்டார். பச்சைப் புல்வெளியில் கூடவே நானும் அமர்ந்து கதை கேட்கத் தொடங்கினேன்.
“நான் சின்னத்தம்பி மகேந்திரம், அளவெட்டில இருக்கிறன். 1970ம் ஆண்டு வண்டில்ல ஏறினான். எங்கட அப்பாட்ட முந்தி மாட்டு வண்டி இருந்தது. அதால எனக்கு சின்ன வயசில இருந்தே மாட்டு வண்டில்ல சரியான விருப்பம். முதன் முதல்ல மான்பாஞ்சான்வெளில தான் மாட்டு வண்டி சவாரி ஓடத் தொடங்கினான், ஆனா அதில நான் வின் பண்ணேல்ல” என அவர் தொடர்ந்து கொண்டே சென்றார்.
“இந்த இடம் வட்டுக்கோட்டை கொத்துத் தரவை, விவசாயம் செய்யிறவையும் மாட்டுவண்டி சவாரிக்கற ஆட்களும் சேர்ந்து தான் இங்க மாட்டுவண்டிச் சவாரிய நடத்தினம். கண்டபடி யாரும் சவாரி நடத்த ஏலாது. அதுக்காக நடைமுறைகள் இருக்கு. சவாரி சங்கத்தில இல்லையெண்டா விவசாயக்கந்தோர்ல இல்லையெண்டா கிராமசேவையாளரிட்ட, காசு கட்டி பதிஞ்சு தான் சவாரிய நடத்தலாம். இதில பங்குபற்றுற ஆட்கள் நுழைவுக் கட்டணமா ஆயிரம் ரூபா கட்ட வேணும்” என சுவாரசியமாகத் தொடர்ந்தார்.
பெரியசெங்காரி, சின்னச்செங்காரி, வடக்கன் மாடுகள் என பலவகை இன மாடுகள் இருக்கின்றன. மாடு வளர்ப்பென்பது அவ்வளவு சுலபமானதல்ல, அதிலும் சவாரி மாடுகளைப் பராமரிக்க தனிப்பலமே வேண்டும். நெல்லு, அறுகம்புல்லு போன்ற தீவனங்கள் தான் முன்னைய காலத்தில் மாடுகளிற்கு உண்ணக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது மாஸ் தான் வைக்கின்றார்கள். அறுகம்புல்லிற்கும் நெல்லிற்கும் தான் மாடுகள் விரைந்து ஓடும். சவாரிக்கு மாடுகளைத் தயார் செய்ய வேண்டுமெனின் அதற்குப் பலவகையான விடயங்களைச் செய்ய வேண்டும். மாட்டைக் குளிக்க வைத்து விட்டு அதனை நன்றாகத் துணியால் துவட்டி விட வேண்டும். வாரத்தில் ஒரு நாளேனும் அதிகளவான தூரம் (5km/6km) மாட்டை விரட்ட வேண்டும். அத்துடன் கடலில் நீந்தச் செய்யவும் வேண்டும்.
மாடுகளின் பலம் தான் சவாரியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதனால் மாட்டின் மீதான கரிசனை என்பது அவ்வளவு முக்கியம் என விவரித்தார் மகேந்திரம் ஐயா.
பல பிரிவுகளாய் ஏன் போட்டிகள் நடைபெறுகின்றன என அப்போது தெரிந்து கொண்டேன். சிறு கன்றுகள் அல்லது பல் உடைக்காத கன்றுகள் (இரண்டு மாத கன்றுகள்) ‘உ’ என்ற குழுவில் அடங்குமாம், மற்றையவை வளர்ந்த, பெரிய மாடுகள் வரிசைக்குள் அடக்கப்பட்டு பிரித்துப் பிரித்துப் போட்டிகள் நடாத்தப்படும். மற்றும் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மாடுகளும் இதில் கலந்து கொள்ள முடியும்.
வீரவிளையாட்டுக்கள் என்கின்ற போது அதில் விபத்துக்கள் ஏற்படுவது வழமையே. அதுபோன்று இந்த மாட்டுவண்டிச் சவாரியிலும் கூட, பக்கச்சாவி கழன்று, ஒரு மாடு மற்றொரு மாட்டுடன் மோதுகின்ற போது விபத்துக்கள் ஏற்படும். கைகாலில் காயங்கள் உண்டாகுவதுடன், எப்போதாவது ஒரு சில இறப்புக்கள் கூட எற்படும்.
பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் நன்கொடை கொடுப்பவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு நிதி திரட்டப்படாதவிடத்து போட்டியில் பங்குபற்றுபவர்களிடமிருந்து பெறப்படும் நுழைவுக் கட்டணத்திலிருந்து பரிசுகளை வாங்குவர். வெற்றிக்கு உகந்த பரிசும், பாராட்டும் கூட இங்கு குறைவின்றிக் கொடுக்கப்படுகின்றது.
‘ஐயா உங்களப் பற்றியும் பிள்ளையளுக்கு சொல்லுங்கோவன்’ என ஒருவர் கூற, தனது ஆட்காட்டி விரலால் நெற்றியில் தட்டிக் கொண்டு, உதட்டோரம் தவழ்ந்த புன்னகையுடன், “1970 ஆம் ஆண்டு மான்பாஞ்சான்வெளில, மாதகல் விவசாயச்சங்கம் நடத்தின மாட்டுவண்டிச் சவாரில மாட்டில ஏறத் தொடங்கினன். 40 வருசத்துக்கும் மேல இண்டைக்கும் மாட்டுவண்டிச் சவாரில பங்குபற்றுறன். ஏனக்கு இதில இருக்கிற விருப்பமும் என்ர மாடுகளின்ர பலமும் தான் இதுக்கெல்லாம் காரணம்.
யாழ்ப்பாண மாடுகள் வன்னி, மன்னார் எண்டு போய் ஓடுறதும், அந்த மாடுகள் இஞ்ச வந்து ஓடுறதும் வழக்கமாயிருந்தது. அச்சுவேலி, நீர்வேலி, மான்பாஞ்சான்வெளி, வட்டுக்கோட்டை, கீரிமலை கருகம்பளை, வட்டக்கச்சி, விசுவமடு, பூநகரி எண்டு கன இடங்களில முதலிடம் கிடைச்சது. நிறைய பரிசுகளும் கிடைச்சது, இண்டைக்கும் எல்லாம் வீட்டில கிடக்குது.
இப்ப எப்பவாவது இருந்திட்டு தான் என்ர மாடுகள ஓட விடுறனான், வயசாகிப் போச்செல்லோ’ என்று என்னைப் பார்த்து சிரித்தார்.
நாங்கள் விடைபெற வேண்டிய நேரமும் வந்துவிட்டது. உங்களை சந்திக்க இன்னொரு நாள் வருகின்றேன் என அவரிடமிருந்து விடைபெற்று, வண்டியையும் அது ஓடும் வேகத்தையும் பிரமிப்புடன் பார்த்தபடி. அந்த தரைவை வீதியால் வீட்டிற்கு திரும்புகிறேன்.
காலமாற்றம் புதிய விடயங்களை – நவீன விளையாட்டுக்களைக் கொண்டுவந்திருந்தாலும், யாழ்ப்பாணத்துக்கேயுரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகவுள்ள மாட்டுவண்டிச் சவாரி யாழ். மக்களுடைய வாழ்வுடன், அவர்களுடடைய பண்பாட்டுடன் இணைந்தது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் அது ஒரு அம்சம். அதனை அவர்கள் இன்னும் பேணிப் பாதுகாப்பதுடன், பெருந்தொகையான மக்கள் அதனைப் பார்வையிடுவதற்காக போட்டிபோட்டுக்கொண்டிருப்பதையும் காண முடிகின்றது. தமது பாரம்பரிய பண்பாட்டுடன் இணைந்த அவர்களுடைய வாழ்க்கையை இது வெளிப்படுத்துகின்றது.
බරකරත්ත දැක්කීම හා බැඳුණු මිනිසුන්ගේ සම්ප්රදාය සමඟ යාපනය
Jaffna. Traditions Combined In A Bullock Cart Ride