யாழ். குடாநாட்டின் தரைக்கீழ் நீரின் எதிர்காலம்!
ஆர்.ராம்
உலகில் மூன்று சதவீதமான நீரே நன்னீராக உள்ளது. அவற்றுள் இரண்டு சதவீத நீர் உறைபனியாக உள்ளது. எஞ்சிய ஒரு சதவீத நீரே பாவனைக்குரியதாக உள்ளது. அதிலுமொரு பகுதி விரயமாகுகின்ற மழை நீராகவும் நீர் பெறமுடியா பகுதிகளாகவும் இருப்பதால் 0.08 சதவீதமே பயன்படும் நீர் மூலமாகின்றன.
உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்துவது விவசாயத்துறையாகும். அத்துறை, 85 சதவீதமான நீரை உள்ளெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அமைப்பின் கணிப்பின்படி உலகில் 783 மில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீரின்றி வாழ்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையின் தேசிய நீர்ப்பாவனையில் 65 சதவீதமானது விவசாயத்துக்கும் 35 சதவீதமானது சமூகத் தேவைக்கும் பயன்படக்கூடிய வகையில் புதிய தொழில்திறனை அதிகரித்து நீர்ப்பாசன வினைத்திறனையும் விளைதிறனையும் அதிகரிக் வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனிதவாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருவது தரைக்கீழ் நீர்வளம். வடமாகாணத்தின் மொத்த குடித்தொகையில் 70 சதவீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.
இவ்வாறான அரியவளத்தினை யாழ்ப்பாணக் குடாநாடு கொண்டிருந்தாலும் அடுத்துவரும் காலத்தில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் சூழல் ஏற்படுவதற்கான நிலைமைகள் அதிகரித்துச் செல்வதாக வாண்மையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“வடக்கு மாகாணத்தினுடைய குறிப்பாக, யாழ்.குடாநாட்டினுடைய தரைக்கீழ் நீரும் சரி, தரை மேற்பரப்பு நீரும் சரி அண்மைய காலநிலை மாற்றத்தின் விளைவாக அதனுடைய தரம் பாதிப்பு என்பதற்கு அப்பால் அவற்றின் அளவுகள் குறைவடைவது கவலைக்குரிய விடயமாகும்” என்று யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிடுகின்றார்.
“ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி, அதிக அளவான வெப்பநிலை, அதிக அளவிலான ஆவியாக்க செயற்பாட்டின் விளைவாக தரை மேற்பரப்பு நீர்நிலைகளும், தரைக்கீழ் நீரும் அதிக அளவு ஆவியாகச் செல்வதன் காரணமாகவும், மக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் காரணமாகவும், நீரின் அளவும் தரமும் குறைவடைந்து வருகின்றது” என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அதேநேரம், தற்போதைய நிலையில், “நீருக்கான கேள்வி அதிகரித்திருக்கின்ற அதேசமயம், நீரினுடைய மீள் நிரப்பும் செயற்பாடுகள் குறைவான அளவிலேயே, காணப்படுவதன் காரணமாக நீர்ப்பற்றாக்குறை என்கின்றதொரு மிகப்பெரிய நெருக்கடியை வடமாகாணம் எதிர்நோக்குகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது” என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
“கரையோரக் கிணறுகள், தீவுப்பகுதிக் கிணறுகள் பலவும் ஏற்கனவே உவர் நீரைக் கொண்டவையாக உருவாகிவிட்டன. யாழ்ப்பாணக் கழிப்பிடங்கள் நீரடைப்பு மலசல கூடங்களாக மாறிவிட்டன. அதனால் கிணறுகளுக்கருகே மலக்குழிகள் அமைந்து வருகின்றன. நகர்ப்புறங்களில் இது அதிகமாக உளளது. அத்துடன் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளாலும் கிணற்று நீர் மாசடைந்து வருவது அண்மைக் காலங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் உதாரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.
குறிப்பாக “மே தொடக்கம் ஒக்டோபர் வரையான காலப்பகுதிகளில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் நீர் பற்றாக்குறையை மிக கணிசமாக எதிர்கொண்டு வருகின்றன. ஆண்டுதோறும் மே மாதம் ஆரம்பிக்கின்ற தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலம் தொடக்கம், செப்டெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதி வரை வடக்கு மாகாணம் மிக குறைவான அளவு மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. இதனால் தரைக்கீழ்நீரும் சரி, தரைமேற்பரப்பு நீரும் சரி அவற்றினுடைய மீள நிரப்பும் அளவை மிகக் குறைவாகவே கொண்டிருக்கின்றன” என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவிக்கிறார்.
அண்மைக்காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் உவர்நீராதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீவிரமடைந்திருப்பது, அபாயகரமானதொரு நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை முறையாக எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்கீழ் நீர்வளம், பாவனை, முகாமைத்துவம், அபிவிருத்தி பற்றி பல நுண்ணாய்வுகள் செய்யப்படல் வேண்டும்.
“1965 இல் யாழில் அமைக்கப்பட்ட நீர்வள சபை, வடபகுதி தரைக் கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்று வரை அவை முறையாக வெளியிடப்படவில்லை” என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சமூகவியற்றுறை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவிக்கிறார்.
“யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் வளம் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமில்லாதவாறு உடனடியாகச் சிந்திக்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது” என்று அவர் தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது, வாண்மையாளர்கள், யாழ் குடாவின் நீரேரிகளின் (வல்லை – நாவற்குழி பகுதியில் சுண்டிக்குளம் பகுதியில்) கடல் நீர் உட்புகுதலைத் தடுத்தல், குடாநாட்டின் நீரேரியை ஆழப்படுத்தல் மற்றும் மழைநீரினைத் தேங்கக்கூடிய தரைத்தன்மையினை ஏற்படுத்தல், குடாநாட்டின் நீரேரியிலும், தரையிலும் மழைநீரைத் தேக்கி வைத்தல், மக்களுக்குத் தேவையான நீரை விநியோகிக்க பொதுவான நீர் விநியோகம் மேற்கொள்ளல், நிலக்கீழ் நீர் மாசடைதலைத் தடுத்தலும், பொதுவான கழிவகற்றல் பொறிமுறைகளை மேற்கொள்ளல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
நீண்டகாலமாக தொடர்முயற்சி
வட மாகாணத்தின் நீர்வளத்தினை சிறப்பாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டின் நன்னீர் வளத்தினைப் பாதுகாத்தல் தொடர்பான விடயம் அண்மைக்காலத்தில் தீவிரமடைந்திருந்தாலும், இந்தச் சிந்தனை ஏறத்தாள 350 ஆண்டுகளுக்கு முன்பு ஒல்லாந்த ஆட்சியாளர் காலத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது.
ஒல்லாந்த தளபதி கென்றில் வான்றீடில் (ஊயிவயin ர்நனெசடைந எயn சுநநனடந) கடல்வெள்ளத்தடுப்பு அணைகளை தொண்டைமானாறு மற்றும் நாவற்குழி நீரேரிகளில் அமைப்பதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நன்னீர்வளத்தைப் பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையினை முன்வைத்தார்.
1879 இல் வடமாகாண அரச அதிபர் ட்வைன்ஹாம் அணைகட்டுவதற்கு முயற்சித்தபோது 1883இல் இந்தோனேசியாவில் ஹரக்கட்டோ எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கடல்கோளினால் யாழ்.குடாநாட்டில் கடல் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அரச அதிபர் கடலை அணையிடும் திட்டத்தைக் கைவிட்டார்.
1916 இல் வடமாகாண அரச அதிபர் ஹொரஸ்பேர்க்கால் பருத்தித்துறை சாவகச்சேரி வீதிக்கு குறுக்காக வடமராட்சிக்கு அணையினை அமைத்து வடமராட்சியின் நன்னீரைக் காக்க முடிந்தது. ஆனால் நிதி போதாமையினால் இத்திட்டம் 4 ஆண்டுகளில் செயலற்றுப்போனது.
1930–1940 ஆம் ஆண்டுகளில் வடமாகாணப் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் வெப்பினால் தொண்டமானாற்றிலும் அரியாலையிலும் தடுப்பு அணைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2ஆம் உலக யுத்த சூழ்நிலையினால் இது பிற்போடப்பட்டு 1947 இல் தொடங்கப்பட்டு 1953 இல் நிறைவு பெற்றது. இவை மரத்தினால் செய்யப்பட்ட அணைத்தடுப்பு என்பதனால் சேதமடைந்து கடல்நீர் உட்புகுந்து செயலிழந்தது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆனையிறவு நீரேரி, தொண்டைமானாறு நீரேரி, உப்பாறு நீரேரி (நாவற்குழி) ஆகியவற்றினை நன்னீர் நிலைகளாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் பரிசீலனைக்கு முன்னெடுக்கப்பட்டன. இவற்றின் தொடர்ச்சியாக 1930களில் தேசிய அரசுப்பேரவை உறுப்பினராக இருந்த பாலசிங்கம் உவர்நீரேரிகளை நன்னீராக்க வேண்டியதன் அவசியத்தினை முன்மொழிந்தார்.
1950 இல் நீர்ப்பாசனப் பொறியியலாளராக இருந்த ஆறுமுகம் யாழ்ப்பாணத்திற்கான நீர்வள அபிவிருத்தித்திட்டம் ஒன்றை முன்மொழிந்தார். இத்திட்டம் ‘ஆறுமுகம் திட்டம்’ எனவும் ‘யாழ்ப்பாணத்;திற்கான ஆற்றுத் திட்டம்’ எனவும் பிற்காலத்தில் குறிப்பிடப்பட்டது.
ஆறுமுகத்தின் திட்டத்தின்படி வட மாகாணத்தின் பெருநிலப்பரப்பில் உருவாகி வடக்கு நோக்கி ஓடும் கனகராயன் ஆற்;றை ஒத்த கண்டி வீதிக்குக் கிழக்காக புதுக்குடியிருப்பு வரை பாயும் ஆறுகளின் நீரை ஆனையிறவு நீரேரிக்குள் சேர்ப்பதன் மூலம் ஆனையிறவு நீரேரியினை நன்னீர் ஏரியாக மாற்றுதல் என்ற விடயம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் அத்திட்டம் தற்போது வரையில் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.
77 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள ஆனையிறவு நீரேரியின் திட்டம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், வன்னிப் பெருநிலத்தில் இருந்து 940 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பருவகாலத்தில் பொழியும் மழைநீர் கனகராயன் ஊடாகவும், ஏனைய சிறு நீரோடைகள் மூலமும் பாய்ந்து ஆனையிறவு ஏரியினுள் சேர்ந்து கிழக்குப் பக்கமாக சுண்டிக்குளம் ஊடாகவும், மேற்குப் பக்கமாக ஆனையிறவு ஊடாகவும் கடலினுள் சென்றது. இவற்றைத் தடுப்பணை மூலம் தடுப்பதால் பெருமளவு நன்னீரை ஆனையிறவு ஏரியில் தேக்கலாம்.
ஆனையிறவு வீதி அமைப்புப் பாதை மேற்குக் கரையில் கடல்நீர் ஆனையிறவு ஏரியினுள் செல்வதனைத் தடுக்கின்றது. சுண்டிக்குளத்தில் கட்டப்பட்ட தடுப்பணையும், மேலதிக நீர் வெளியேற்றும் பொறிமுறையும், பாதிக்கப்பட்டமையால் தற்போது கடல்நீர் உட்புகுகின்றது.
இது மீளக் கட்டியமைக்கப்படல் வேண்டும். கடல்நீர் தடுப்பு அணைகள் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படுவதனால் கடல்நீர் வரட்சிக் காலத்தில் தரையினுள் செல்வதைத் தடுக்கலாம். இதனால் ஆனையிறவு ஏரியில் நன்னீரைப் பேண முடியும்.
அத்துடன், ஆனையிறவு நன்னீர் ஏரியை முள்ளியான் கால்வாய் மூலம் வடமராட்சியின் தென்பகுதியுடன் இணைக்கும் செயற்றிட்டமும் முழுமையடையாது உள்ளது. இதனை முழுமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
தொண்டைமானாறு, உப்பாறு
ஆழியவளைப் பிரதேசத்தில் மாரிகாலத்தில் பொழியும் மழைநீர் மருதங்கேணி, செம்பியன்பற்று, நாகர் கோவில், அம்பன், குடத்தனை வழியாகப் பாய்ந்தோடி பருத்தித்துறை, கொடிகாமம் வீதியை இடைமறித்த பாலம் வழியாக ஓடி மான்டான் வல்லை ஊடாகக் கடலில் கலக்கின்றது.
இதில் கடலில் கலக்கும் ஓடையானது தொண்டைமான் என்னும் தமிழ் மன்னனால் வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் மீன்பிடி வள்ளங்கள் பெரும் கடற்காற்றுக்கு அடிபட்டுச் செல்லாது இருப்பதற்காக வெட்டப்பட்ட நீரோடையாகும். இதனையே தொண்டைமானாறு என்றனர். தற்போதைய பௌதீக முன்னேற்றத்தில் இக்கடல் வழிப்பாதையை மூடுவதனாலேயே மழைநீரைப் பேண முடியும்.
அதேநேரம், வண்ணாத்திப்பாலம் ஊடாகப் பாய்ந்து புத்தூர், நீர்வேலி, கோப்பாய் வழியாக ஓடி கைதடி கோப்பாய் பாலத்தின் ஊடாகச் சென்று கைதடி, நாவற்குழிப் பகுதியில் கடலுடன் கலக்கின்றது. செம்மணிக்கூடாகச் செல்லும் இதனை உப்பாறு என்று அழைப்பர்.
இந்நிலையில், தொண்டைமானாறு தடுப்பணையையும் நாவற்குழி தடுப்பணையையும் சீர்படுத்த வேண்டி உள்ளது. இவற்றிற்கும் இரட்டை அடுக்கு தடுப்பணைகள் அவசியம். உப்பாற்று நீரேரியையும், வடமராட்சி நீர் ஏரியையும் இணைப்பதன் மூலம் ஆனையிறவு முதல் அரியாலை வரை பாரிய நன்னீர் 170 சதுர கிலோமீற்றர் பரப்பளவு உள்ள நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.
அதுமட்டுமன்றி, குடா நாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள்செலவு இன்றி நன்னீரேரியாக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. உதாரணமாகக் கூறுவதாயின், மண்டைதீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ். நகரத்தின் தென்மேற்கு பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறான நன்னீர்த் திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமானவிளை நிலங்களாக மாற்ற முடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்.குடாநாட்டுக்கு வரப்பிரசாதமாக அமையும்.