கீர்த்திகா மகாலிங்கம்

இலங்கை பொதுசன முன்னணி சார்பில் 52.25சதவீத வாக்குகளை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று நவம்பர் 18ஆம் திகதியோடு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. வெகு விமர்சையாக எண்ணிலடங்காத வாக்குறுதிகளை மக்கள் செவிகளுக்கு விருந்தாக்கிய இந்த அரசாங்கம் மேடையேறி ஒரு வருடம் மிக வேகமாகவே நகர்ந்து விட்டது.

நாட்டை ஆட்சி செய்த நல்லாட்சி அரசாங்கத்தின் தூரநோக்கற்றதும் வினைத்திறனற்றதுமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முழு பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாகவும் “நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை” எனும் நோக்கில் தமது கடமைகளை திறம்பட மேற்கொள்ள இருப்பதாகவும் பல திடமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தவகையில் கோத்;தாபயவின் ஆட்சி தொடங்கிய காலமானது கொரோனாவின் தாக்கத்துடனேயே ஆரம்பமானது. கொரோனாவுடனான அவரது ஆட்சிக்காலத்தில், கொரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்திருந்த வேளையில் ஜனாதிபதி மக்களை பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ள வேண்டாம் என அறிக்கை விடுத்திருந்தார். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக வாக்களித்திருந்த அவரின் அதிரடியான தீர்மானங்கள் வெளிப்பார்வைக்கு மிகவும்  வினைத்திறனாக இருப்பது போல் அமைந்திருந்தாலும் அதன் ஆழங்களில் சென்று பார்க்கும் பொழுது யார் உண்மையில் பொறுப்பற்றவர்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றது.

ஜனவரி 27ஆம் திகதி இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியாக சீன நாட்டைச்சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் பதிவாகியிருந்தார். ஒரு மாதகால சிகிச்சையில் அவர் குணமாக்கப்பட்டதை பிரபல்யப்படுத்திய அளவு கொரோனாவின் எதிர்கால தாக்கம் குறித்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது அரசின் முதலாவது பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது.

மார்ச் 11 ஆம் திகதி இலங்கையின் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து  மார்ச் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டு,  மே மாதம் 11ஆம் திகதி பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கட்டம் கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரானவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என உலக ஸ்தாபனம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில்  ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் சமூகப்பரவல் இல்லை எனக் கூறி மக்களின் பாதுகாப்பை அவர்களின் கைகளுக்கே பொறுப்பளித்திருந்ததைத்தவிர அரசினால் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது இன்றுவரை மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

  • ஆய்வக தரப்படுத்தல் (lab standardization)
  • ஆய்வக அறிக்கையின் நம்பகத்தன்மை (The reliability of the laboratory report)
  • சமூக மட்டத்திலான எழுந்தமானமாக மேற்கொள்ளப்படும் மாதிரி PCR பரிசோதனை (random sample PCR test) 
  • நாளொன்றுக்கு செய்யப்படும் PCR  பரிசோதனைகளின் உயர்ந்த எண்ணிக்கை
  • PCR முடிவுகள் வெளியாக எடுக்கும் காலம்

போன்றவை தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் சுகாதார துறைக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் மத்தியில் காணப்பட்ட பொழுதிலும், அரசு அதனைப் பொருட்படுத்தாது வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று இருப்பதாக உறுதியளித்தது. அத்தோடு மிக வேகமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.  

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற வேண்டிய க.பொ.த உயர்தரப்பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவை பிற்போடப்பட்டது. இவை  பொறுப்பான செயல் என எண்ணத்தோன்றினாலும்,

  • நாடாளமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்களை முன்னெடுத்தமை
  • நாடாளுமன்ற தேர்தலை நடாத்தியமை
  • 20ஆவது சீர்த்திருத்தை நிறைவேற்றியமை

ஆகியன நிர்வாகத்துறையில் சிறந்த முடிவுகளாக இருந்தபோதிலும் மக்களின் பாதுகாப்பை பொறுத்தவரை அது கேள்விக்குள்ளான ஒரு விடயமாகவே உள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் கொரோனா தொற்று என்ற சொல் தலைப்புச்செய்திகளில் பயன்டுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் விரல் விரட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன. அரச தரப்பிலும், மக்கள் தரப்பிலும் இயல்பான ஒரு வாழ்க்கையே இலங்கையில் நிலவத்தொடங்கியது.

அக்டோபர் 3ஆம் திகதி கம்பஹா மினுவாங்கொடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 39 வயதான பெண் ஒருவர் கொரோன தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கந்தகாடு மத்தியநிலைய கொத்தணி, கடற்படை கொத்தணிக்கு மேலதிகமாக, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணியும் உருவாகத்தொடங்கியது. இக்கொத்தணியின் மூலம் தொடர்பில் அரசு தரப்பை குற்றம் சாட்டி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தபோது அரசு அது தொடர்பில் எவ்வித தெளிவான அறிக்கையையும் வழங்காதது மீண்டும் அரசின் பொறுப்பற்ற தன்மை குறித்து கேள்வியெழுப்புகிறது.

மினுவாங்கொடை கொத்தணியின் பரவல் சமூக பரவலாக வியாபித்திருந்தாலும், பேலியகொட மீன் சநதையில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் திகதியன்றே கம்பஹா மாவட்டம் முழுவதற்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய பகுதியின் மிக சிறிய சமூக அலகை முடக்குவதன் மூலமாக பாரியளவிலான பரவலை தடுக்க முடியும் என்பதை பலதரப்பட்டவர்களும் அழுத்தமாகத் தெரிவித்தனர். எனினும் ஊரடங்கு தொடர்பான அரசின் தீர்மானங்கள் தன்னிச்சையான போக்கிலேயே காணப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் அக்டோபர்  26ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை அமுலில் இருப்பதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குசட்டமானது வாரக்கணக்கில் அமுலில் இருக்கிறது.  வெறும் 3 நாட்கள் ஊரடங்கிற்கு மாத்திரம் ஆயத்தமாகியிருந்த மக்கள் சுமார் ஒன்றரை மாதமாக வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அளுத்மாவத்தை, கொட்டஹேன, மோதர உட்பட கொழும்பின் சில பிரதேசங்களும் மறு அறிவித்தலின்றி இன்றுவரை முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரசதேசங்களில் வசிப்பவர்கள் பலர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சொந்த இடங்களுக்கும் செல்ல முடியாமல், தமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் சிறைப்பட்டுள்ளார்கள். அவர்களின் நிலையை வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அரசின் அதிகார ஆசனங்களில் அமர்ந்திருக்கும் எவரும் கண்டுகொள்ளவில்லை என்பது நிதர்சனம்.

கொரோனாவின் முதலாவது அலையின் போது பருப்பும், மீன் ரின்னும் விலை குறைக்கப்பட்டிருந்தபோதிலும், இம்முறை அதற்கு மாறாக பொருட்களின் விலை வானை எட்டியுள்ளது.

“1000 ரூபாயுடன் கடைக்கு போனால் 1/= பொலித்தீன் பொதியளவு பொருட்கள் தான் வாங்க முடிகிறது.” 

“5 பேர் இருக்கும் குடும்பத்திற்கு ஒரு வார உணவின் செலவிற்கே 5000/=ரீ போதாமல் இருக்கிறது.”

“மகளுக்கு பால் மா வாங்குவதற்கே 1000/= தேவைப்படுகிறது.”

இது போன்ற குரல்கள் மக்கள் செய்திகளில் அன்றாடம் கேட்க முடிகிறது. கொழும்பு, கம்பஹா போன்ற முடக்கத்திற்குள்ளான பகுதிகளில் வாழும் ஒருவராக நீங்கள் இருந்தால் இதனை உணர்ந்திருக்கக்கூடும்.

இந்த நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000ஃஸ்ரீ ரூபாவை மாத்திரம் வழங்கி தொடர்ந்தும் மக்களை வீடுகளில் முடங்கிக்கிடக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு நிலையான தீர்வுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது யதார்த்தத்தின் தாக்கம் புரியாத அல்லது அதனை கண்டுகொள்ள விரும்பாத அரசின் செயற்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

மக்கள் மத்தியில் கொரோனாவின் பயத்தை மிஞ்சிய நிலையில் வறுமையின் பயம் மேலோங்கி காணப்படுகிறது. அதற்காக அழுத்மாவத்தை மக்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். அதிகாரமுள்ள தரப்பினர் முறையான செயற்பாடுகளை மேற்கொள்ளாதவிடத்தில் மக்கள் எதிர்ப்பதை பொறுப்பற்ற தன்மை என குற்றஞ்சாட்டுவது சிந்திக்க வைக்கிறது.

இந்நிலையியல் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் முழுப்பொறுப்பையும் ஒருதரப்பினரை மீது சுமத்துவது நியாயமற்ற செயல் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொரோனாவின் ஆரம்ப நாட்களிலிருந்தே சுட்டிக்காட்டியிருந்தது.

  • அரச துறையினர்
  • சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் 
  • ஊடகத்துறையினர்
  • நாட்டின் பொதுமக்கள்

ஆகிய நான்கு தரப்பில் இருப்பவர்களும் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.எவ்வாறாயினும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அரசிற்கே உண்டு. அம்முடிவுகள் சரியானதாயின் அவற்றை ஆதரிப்பதே மற்றைய மூன்று மட்டத்தினரதும் கடமையாகின்றது.  நாட்டின் நன்மைக்காக மக்கள் அரசோடு இணைந்து செயற்பட வேண்டும். அந்தக்கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. எனினும் அரசின் தீர்மானங்கள் மக்களுக்கு தெளிவையும், நம்பிக்கையையும் தராத பட்சத்திலும், மக்கள் வெறும் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் தருணங்களிலும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என அவர்களை குற்றஞ்சாட்டுவது நியாயமாகுமா??

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts