யானை Vs மனிதன் உயிர் வேலி சிறந்த உபாயம்!
ஆர் சுரேந்திரன்
‘நாலுமாதமா இந்த மரத்தில இருக்கிற பரணிலதான் வாழ்க்கை. எங்கட பயிர் யானையிற்ற இருந்து பாதுகாக்கதான் இப்பிடி செய்றம்.” என்று கூறுகிறார் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள நாற்பதாம் வட்டைக்கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சந்திரு. ஒரு வருடத்தில் இரண்டு போக நெற்செய்கையில் ஈடுபடும் இந்த கிராம மக்கள் பயிரை யானையிடம் இருந்து பாதுகாக்க படாத பாடுபடுகிறார்கள். அனேகமாக இரவில் வரும் யானைகளை தீமூட்டுதல், யானைவெடி போடல், உரத்த சத்தமிடல் என தமக்கு தெரிந்த வழிகளில் அச்சுறுத்தி துரத்துகிறார்கள். ஆனாலும், இடையிடையே அது மனிதர்களையும் கொன்றுள்ளது.
இதேபோல் இந்த வருட ஏப்ரல் மாதத்தில் காட்டுயானைகள் மகியங்கனை நகர்பகுதியில் அலைந்து திரிந்ததை அனைத்து ஊடகங்களும் ஒலிபரப்பின. காட்டு யானைகளால் நகருக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாகவே மகியங்கனை விவசாய கிராம மக்கள் யானையால் பெருந்துன்பங்களை எதிர்கொண்டவர்களாகதான் உள்ளனர்.
‘எனது கிராமம் மகியங்கனையில் ஒறுபதியாவ, இங்க நாங்க விளைவிச்ச நெல்லை இந்த கொரோனாவால விக்கமுடியல அத பாதுகாக்கிறதே பெரிய பிரச்சினை. இரவில யானை வந்தா தென்னை மட்டைகளை போட்டு கொழுத்தி சத்தம் போட்டு கலைப்பம். இங்க ஒரு யானை இருக்கு அதுக்கு ரோச் லைற் அடிச்சா அந்த வெளிச்சம் வாற திசையை நோக்கி வரும். அதனால இரவில ரோச் பாவிக்கவும் பயம்.” என்கிறார் சந்தமாலி.
இவ்வாறு இலங்கையில் யானைகளின் பிரசன்னம் மக்களை நிம்மதியாக வாழ விடவில்லை. தமது நாளாந்த கடமைகளுக்காக வெளியில் சென்று வருதே பயம் என மட்டக்களப்பில் இருப்பவரும் மகியங்கனையில் இருப்பவரும் கூறுகின்றனர். இதேபோல் அண்மைக்காலமாக அனுராதபுரம், பொலநறுவை, மாவட்டங்களிலும் அதிகளவான யானை தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த வருட(2021) மார்ச் மாதத்தில் கிளிநொச்சி கந்தபுரம் மணியங்குளம் கிராமத்துள் புகுந்த யானைகள் அங்கிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சிதைத்து முறித்துவிட்டுச்சென்றுள்ளதாக செய்திகள் வந்தன.
இவ்வாறு யானைகள் வருகின்றபோது மக்கள் பல்வேறு உத்திகளைப் பாவித்து யானைகளை விரட்டுகின்றனர். அதிசக்திவாய்ந்த மின் வேலிகளை அமைப்பது. கட்டுத்துவக்கு மற்றும் துப்பாக்கியால் சுடுவது, ஹக்க படாஸ்( hakkapatas) எனும் யானையின் வாய்க்குள் வெடிக்கும் வெடிபொருள் கலந்த உணவுகளை பொறிகளாக வைப்பது என யானைகளைப் பாதிக்கும் பல்வேறு முறைகளையும் பயன்படுத்துகின்றனர். கடந்த வருடம் (2020) டிசம்பர் மாதம் கிளிநொச்சி கல்மடுப் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்தது. இதனால் சட்டவிரோதமான முறையில் மின்சாரவேலி அமைத்த குற்றச்சாட்டின்பேரில் ஒரு விவசாயி கைதுசெய்யப்பட்டு 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் கூறின.
இந்த நிலையில் குழியுள் விழுந்த யானை, காயம் பட்ட யானை என அதைக்காப்பாற்ற இந்த மக்கள் ஒன்றுகூடி வன இலாகாவும் இணைந்து செயலாற்றுவதையும் நாம் ஊடகங்களுடாக காண்கிறோம்.
இவ்வாறு எமது நாட்டில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான மோதலானது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது மேலும் உக்கிரமடைந்து வருவதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதை இனத்துவ ரீதியாக பார்க்கும் தன்மையும் இருந்தது. போர் காலங்களுக்கு முன்னர் கிளிநொச்சிப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்ததில்லை என்றும், அது திட்டமிடப்பட்டு தமிழர் பிரதேசங்களில் கொண்டுவந்து விடப்பட்டது என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் உலாவின. ஆனாலும் இன்று இன மத வேறுபாடின்றி இலங்கைவாழ் மக்கள் அனைவருக்குமான பொதுப்பிரச்சினை இது.
ஏன் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான சண்டை ஆரம்பித்தது?
மற்றைய வன விலங்குகளின் வாழ்வியல் முறைகளை போல் இல்லை யானைகளின் வாழ்வியல். யானைகள் ஒரு இடத்திலேயே தங்கி வாழ்வது இல்லை. அவை தமக்கென வசிப்பிடங்களையோ அரண்களையோ அமைப்பது கிடையாது. மாறாக அவை காலத்துக்குகாலம் இடம்பெயர்ந்துகொண்டே தமது வாழ்க்கை வட்டத்தினை அமைத்துக்கொள்கின்றன.
காலத்துக்குக்காலம் இடம்பெயர்ந்து வாழும் யானைக்கூட்டங்கள் காலநிலை மாற்றம் மற்றும் வரட்சி போன்ற இயற்கை காரணங்களால் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றன. (Migration) அவை இடம்பெயர்ந்து செல்வதற்காக பாதைகளை தெரிவு செய்து வைத்துக்கொண்டு (Mental Route Maps). வருடத்தில் சில மாதங்கள் ஒரு வனப்பகுதியிலும் சில மாதங்கள் இன்னொரு பகுதி என்று சென்று தமது உணவு மற்றும் இனப்பெருக்க தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றன. இவ்வாறு பயணிக்கும் யானைக்கூட்டங்கள் சில காலங்களுக்குப் பின்னர் அதே பாதையால் திரும்புகின்றபொழுது அங்கு நெடுஞ்சாலைகள், குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பதும் இந்த யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்படுவதற்கு காரணியாக அமைகின்றன. அதேபோல் யானைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ப நிலங்களின் அளவு பெருப்பிக்கப்படுவதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ் வருட தொடக்கத்திலிருந்து(2021) இன்றுவரை(மே மாதம்) மட்டும் 44 பேர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். அதேபோல மனிதனால் 100 ற்கும் அதிகமான யானைகளும் கொல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலும் அனுராதபுரம், பொலநறுவை மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுள்ளன.
‘இந்த தாக்குதல்களும் இறப்புகளும் வனபகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளிலேயே இடம்பெற்றுள்ளன. காடுகளை அழித்து குடியிருப்புகளை ஏற்படுத்துவதும் இந்த குடியேற்றங்களில் வாழும் அப்பாவி மக்கள் யானைகள் மற்றும் ஏனைய விலங்குகளினால் தாக்கப்பட்டு கொல்லப்படுவதும் நடக்கின்றது. இந்த குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் சில அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதையும் நாம் காண்கிறோம்” என சூழலியல் ஆர்வலரான ஹேமந்த விதானகே குறிப்பிடுகிறார். (- சண்டே டைம்ஸ். மே 2) மேலும் அவர் குறிப்பிடுகையில் மெனராகலை மாவட்டத்தில் 1980 இல் இருந்து 60,000 – 80,000 ஹெக்டெயர் வனப்பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றங்களும் சேனைப் பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் இருப்பிடங்களையும் பயிற்ச்செய்கைகளையும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக அங்கு மின் வேலிகளை அமைத்துள்ளனர் இதனால் கல்ஓய, யால, குமண, உடவலவ மற்றும் லுணுகம்வேஹர தேசிய வன பகுதிகளுக்கு நகரும் யானை கூட்டங்களுக்கு அவைகள் இடம்பெயர்ந்து செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால். இந்த யானைக் கூட்டங்கள் வேறு பாதையில் செல்லமுற்பட்டு கிராமங்களுக்குள் நுழைகின்றன. இதனால் அங்கு தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சோமரத்ன விதானபதிராண குறிப்பிடுகையில்
இவ்வருட முற்பகுதியிலிருந்து இன்றுவரை 117 யானைகள் இறந்துள்ளன அதில் 107 யானைகளின் இறப்புக்கு மனிதனே காரணமாக இருந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.
2019 ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கையில் 405 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் உலகளாவிய ரீதியில் பார்கின்றபோது யானைகளைக் கொல்வதில் இலங்கைக்கு முதலாவது இடம் கிடைத்துள்ளது. அதே நேரம் 2019 இல் யானை மக்களை கொன்றதில் இலங்கைக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.
‘நாம் யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் தற்போதுள்ள கொவிட் – 19 முடக்கல் நிலை காரணமாக இந்த செயற்பாடுகள் மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என வன பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சோமரத்ன விதானபதிராண கூறுகிறார்.
மனிதர்களையும், யானைகளையும் பாதுகாக்க செயற்படுத்தும் திட்டங்களாக:
1. யானைகளின் இடம்பெயர்வுகளை கருத்தில் கொண்டு நிரந்தர பாதுகாப்பு மின் வேலிகளை அமைத்தல் (1500 கி.மீ) வரை
2. வனஇலாகா அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது : கிராமங்களுக்கு வரும் காட்டு யானைகளை வேறு திசைகளுக்கு மாற்ற அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி சேவைக்கு அமர்த்துவது
3. தேசிய வனப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது
4. குடியிருப்பின் எல்லை பகுதிகளில் முட்செடிகளை வளர்த்தல் மற்றும் தேனி – தேன் செய்கைகளை உருவாக்குதல்.
• (யானைகள் பொதுவாக முட்செடிகள் மற்றும் தேனீக்களுக்கு பயப்படுகின்றமை இங்கு குறிப்பிடலாம்)
இந்த நான்கு விடயங்களிலும் நிரந்தர பாதுகாப்பு மின் வேலிகளை அமைப்பது ஒன்றே உடனடி பாதுகாப்பு முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனையே அப்பகுதிகளில் வாழும் மக்களும் பொதுவாக விரும்புகின்றனர்.
‘எங்கள் கிராமங்களில் தனிப்பட்ட ரீதியில் எமது வீட்டு மின்சாரத்தில் இருந்து மின்வேலி அமைப்பது என்பது முடியாத காரியம். எமது வீட்டு பாவனைக்கான மின்சாரத்திற்கே எமக்கு செலவழிக்க முடியாதுள்ள நிலையில் இதை நினைத்து பார்க்க முடியாது. சிலர் சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரத்தை வேலிகளுக்கு பாவிக்கின்றனர்.” என்கிறார் மகியங்கனையை சேர்ந்த சந்தமாலி
மட்டக்களப்பில் உள்ள கணபதிப்பிள்ளை சந்திரு கூறுகையில் ‘மின்சார வேலியை போட்டாலும் சில யானைகள் சரியாக கம்பத்திற்கு நேராக போய் அந்த கம்பத்தை கீழே சாய்த்துவிட்டு கடந்து வந்துவிடுகினறன. அவ்வளவு மூளைசாலிகளாக உள்ளன யானைகள்” என்கிறார்.
இலங்கையில் யானைகள் இயல்பாக வாழக்கூடிய நிலங்கள் அவற்றின் இனப்பெருக்க விகிதாசாரத்திற்கு ஏற்ப அதிகரிக்க முடியாத நிலையுள்ளது. அதே நேரம் பயிர்செய்கையை ஜீவனோபாயமாகக் கொண்டிருப்பவர்கள் புதிய நிலங்களைத்தேடி நகர்வதும் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதும் அந்த மக்களின் வாழ்க்கை முறை. இந்த நிலையில் இதற்கான தீர்வை பல வழிகளில் சிந்திக்கவேண்டியுள்ளது.
2019 இல் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், வனத்துறையினர், யானைகளை மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி குறித்த காட்டுப்பகுதிக்குள் அவற்றை திசைதிருப்பும் செயற்பாடுகளை செய்திருந்தாலும் அது இலங்கையில் வெற்றியளிக்கவில்லை என்றே குறிப்பிடுகிறது. இந்த ஆய்வில் முக்கியமான 3 விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.
1. இலங்கையின் 59.9% வீதமான பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது.
2. யானைகள் நடமாடும் பகுதிகளில் ஏறத்தாள 70 வீதமானவற்றில் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
3. முக்கியமாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியில்தான் அதிகமான யானைகள் வாழ்கின்றன.
(http://www.pulse.lk/everythingelse/sri-lankas-first-data-based-elephant-distribution-map/)
எனவே இந்த ஆய்வு, யானைகள் தமிழ் சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி காட்டை அண்டிய பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகத்தான் உள்ளது. அதே நேரம் அருகிவரும் உயிரினம் என்ற அச்சத்தில் உள்ள யானைகளைப் பாதுகாக்கவேண்டிய தேவையும் உண்டு. அபிவிருத்தி, பயிர்ச்செய்கை என்பதன் அடிப்படையில் நிலப்பாவனை அதிகரித்து செல்லும்போது யானைக்கும் மனிதனுக்கும் பிரச்சினையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே மக்களையும் விவசாயத்தையும் பாதுகாத்து யானைகளையும் பாதுகாப்பது எப்படி? என்பதுபற்றி அதிக ஆய்வுகள் இடம்பெறகின்றன.
ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் யானைகள் வந்தால் யானைகளால் வெளிப்படுத்தும் சத்தத்தை உணர் கருவிகளை பயன்படுத்தி (Voice absorb sensors) குறுஞ்செய்திகளாக மாற்றி கிராமவாசிகளின் கைதொலைபேசிகளுக்கு அனுப்பி அவர்களை யானைகளை விரட்ட முன்கூட்டியே தயாராகும் நிலைக்கு கொண்டுவரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த செய்வது. என இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் அறிமுகம் செய்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மிகச் சிறப்பான விடயமாக சொல்லப்படுவது பனை மரம் நடுதல். இது பற்றி சூழலியலாளர் ‘அம்ரிதா அயென்’ இவர் ஏ.எம்.றியாஸ் அகமட். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தில், உயிரியல் துறையில் விலங்கியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் அவர் குறிப்பிடுகையில் அதனை ‘பனை உயிர் வேலி’ என்கிறார். “யானைகள் மனிதர்களின் குடியிருப்பு, பயிர் நிலங்களுக்குள் வருவதைத் தடுப்பதற்கு மின்சாரவேலி, அகழி தோண்டுதல், முள்மரங்கள் வளர்த்தல்,நாய்களை எல்லைக்காவலுக்கு வளர்த்தல், தேனீவளர்த்தல்,போன்ற முறைகள் இருந்தாலும் இவை வினைத்திறன் மிக்கனவாக இல்லை. பனை உயிர்வேலி அமைத்தல் (palmyra Bio- encing) சிக்கலாக இருந்தாலும் இதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக இருப்பதால் இதை தேர்வு செய்யலாம்.இது ஒரு மலிவான விலங்கு நேய நிலைபேறான முறை என்கிறார். பனைக்கு அதிக நீர் தேவைப்படாது. இலகுவில் முளைக்கும். இதனை நான்கு நிரைகளில் ‘சிக்செக்காக விதைத்து வளர்ப்பது பயன்தரும். மரங்களுக்க இடையில் 5 அடிகள் இடைவெளியிட்டும் நிரைகளுக்கு இடையில் 8 அடி இடைவெளியிட்டும் நடும்போது வேலி பலமாக இருக்கும் என அவரது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(https://m.facebook.com/story.php?story_fbid=3892569104144375&id=100001739708214)
இது ஒரு நீண்டகால திட்டமாக இருந்தாலும் மக்களுக்கும் யானைக்கும் பாதுகாப்பானது. பனைகள் 4,5 வருடங்களில் 6 அடிவரை வளரும் பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்தரவல்லன. நட்டு 10 வருடங்களில் பயன்தரும் அளவிற்கு பனைகள் வளர்ந்துவிடும். இந்த விடயத்தை கடந்த காலங்களில் பலரும் பேசினாலும் மட்டக்களப்பு வவுனியா போன்ற மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் பனை நடுகையையும் முன்னெடுத்தனர். ஆனால் மக்கள் அதை தொடரவேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே இந்த முறையானது பயன் தரும்.
BIO FENCES: The Best Strategy For The Human-Elephant Conflict
සිංහල,මුස්ලිම් දෙමල ජනයාට සාමය අහිමි කළ වන අලි ප්රහාර