மூத்த பிரஜைகளுக்கு தனியான வைத்தியசாலை அமைக்கப்படுமா?
ந.மதியழகன்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20வீதம் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிற்கு என இந்த நாட்டில் ஒரு தனியான வைத்தியசாலை இல்லை. எனவே அதனை முதன் முதலாக வடக்கில் ஆரம்பிக்க வேண்டும் என ஓர் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. மூத்த பிரஜைகளுக்கான உடனடித்தேவையாகவும் அது உள்ளது.
இன்று இலங்கை மக்களாலும் அரசினாலும் அதிகம் செலவு செய்யும் துறையாக சுகாதாரத் துறையே உள்ளது. வடக்கு மாகாண சபைக்கு வரும் நிதியலும் 50 வீதம் சுகாதாரத் துறைக்கே செலவிடப்படுகின்றது. இன்று இலங்கையில் வாழும் 2 கோடி மக்களிற்காக நாடு பூராகவும் மத்திய அரசின் கீழ் 49 வைத்தியசாலைகளும், மாகாண அரசுகளின் கீழ் ஆயிரத்து 54 வைத்தியசாலைகளும் என மொத்தம் 1,103 வைத்தியசாலைகள் உண்டு.
இவற்றில் சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை, காசநோய், புற்றுநோய், கண் எனப் பலதரப்பட்ட வைத்தியசாலைகளிறகும் அப்பால் தனியார் வைத்தியசாலைகளும் நூற்றுக் கணக்கில் உண்டு.
20 வீதமானோருக்கு ஒரு வீதம்கூட இல்லை.
இவ்வாறெல்லாம் நாடு பூராகவும் அரச, தனியார் வைத்தியசாலைகள் உள்ளபோதும் இரண்டு தரப்புமே மறந்த விடயமாக இருப்பது முதியோர் வைத்தியசாலை. ஏனெனில் இலங்கையில் இன்று சுமார் 37 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் முதியவர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையின் எப் பாகத்திலும் ஒரு முதியோர் வைத்தியசாலை கிடையாது என்பது பலரின் குறையாகவே உள்ளது.
எந்த வகையான நோயானாலும் முதியவர்களும் சாதாரண வைத்தியசாலைக்கே சென்று அங்கே சகல நோயாளர்களுடனேயே அமர்ந்திருந்து வைத்தியர் வரை செல்வதே ஓர் பெரும் சுமையாகவுள்ளது. இதனைவிட விடுதியில் அனுமதிக்கப்பட்டாள் முதியவர்கள் என்பதற்காகவே தாம் புறம் ஒதுக்கப்படுவதாக அவர்களுக்கு ஓர் மன அழுத்தம் உண்டு. இதனால் அனைவருமே முதியவர்களாக இருப்பின் அந்த மன நிலையில் மாற்றம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
அனைத்து வகையிலும் ஒதுக்கப்படும் முதியவர்கள்.
வைத்தியசாலைகள், பொது இடங்கள், பேரூந்துகளில் முதியவர்களிற்கு முன்னுரிமை அளிக்கும் பழக்கமும் செயல்பாடும் எம் மத்தியில் இருந்தது. ஆனால் பல இடங்களில் தற்போது இளையவர்களை கண்டு முதியவர்கள் ஒதுங்க அதனை இளையவர்களும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இதற்கும் அப்பால் அரசினால் தற்போதுவரை முதியோருக்கான உதவித் தொகை 250 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. அந்தப் பணத்நை பெற்றுவர பயணச் செலவே பல இடங்களில் இந்த தொகை செலவு ஏற்படும். இதனால் அந்த தொகை கானாது என்ற கருத்தையும் முதியவர்கள் தெரிவிக்கின்றனர். சிலருக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.
இலங்கையில் இன்று 2 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதற்கு 1,103 அரச வைத்தியசாலைகள் இருக்கும் அதேநேரம் மூவாயிரம் வரையான வைத்திய நிபுணர்களும் 20 ஆயிரம் வைத்தியர்களும் நாட்டில் உள்ளபோதிலும் ஒரு வைத்தியசாலையில் சுமார் 20 வைத்தியர்களுடன் முதியோருக்கான விசேட வைத்தியசாலையாக ஸ்தாபிப்பதில் அரசிற்கு நெருக்கடி ஏதும் இருக்க மாட்டாது.
முதியோருக்கு என ஓர் தனியான வைத்தியசாலை ஏன் வேண்டும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துனை வேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையிடம் தொடர்பு கொண்டு அவரது கருத்தை கேட்டபோது,
“இலங்கையில் ஐந்தில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே உள்ளனர். முதியவர்களில் சிறு தொகையினரே ஓய்வூதியம் பெறுகின்றனர். ஏனையோரில் அதிகமானோர் வாழ்வாதாரம், வைத்தியம், சுகாதார செலவுகளுக்காக பெரும் நெருக்கடியினையே சந்திக்கின்றனர். இன்று உள்ள சமூக மாற்றத்தினால் முதியவர்கள் பராமரிப்பும் கேள்விக் குறியாக உள்ளது. இதனால் உடனடியாக தனியான வைத்தியசாலை அமைய வேண்டும். அதுவரை வைத்தியசாலைகளில் ஓர் தனியான முதியோர் விடுதியேனும் அமைக்க வேண்டும். உழைத்து களைத்து சொத்தை சீதணம் வழங்கி விட்டு இருப்பதற்கும் இடமின்றி அலையும் முதியவர்களும் உண்டு.
தொழிலிற்காக பிள்ளைகள் வேறிடம் சென்றால் வாழ்விடத்தில் தனித்த நெருக்கடி, இதனால் மன விரத்திக்குச் செல்லும் முதியவர்களும் உண்டு இவற்றினை தனிப்பதற்காக முதியவர்கள் தொடர்பில் அரசு வெள்ளை அறிக்கை தயார் செய்து வெளியிட வேண்டும்” என அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல இல்லங்கள், சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டவரும் முதியோர் இல்லம் ஒன்றை நடாத்திவருபவருமான ஆர்.திருமுறுகனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
“இலங்கையில் முதியவர்களிற்கு என தனியான வைத்தியசாலை வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று. இருப்பினும் அது இதுவரை கை கூடவில்லை. மொத்த சனத்தொகையில் முதியோர் தொகை அதிகரித்துச் செல்லும் நிலமையும், பிள்ளைகள் கணவன் மனைவியாக பணிக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளது. இதனால் முதியவர்கள் தனித்த அவலத்திற்கு உள்ளாகின்றனர். உலகம் முழுவதும் முதியோரை கவனிக்க வேண்டும் எனக் கூறினாலும் இலங்கையில் அந்த நிலமை போதாது.
வெளிநாடுகளில் அரச செலவில் வீடுகளிற்கு தாதியர்கள், வைத்தியர்கள் சென்று இலவச சிகிச்சை வழங்குகின்றனர். இதற்காகவே நாம் கோருகின்றோம் குறைந்த பட்சம் தனியான மருத்துவமனையை ஏனும் உருவாக்க வேண்டும்” என்றார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போதிய இடவசதியுடைய தீவகப் பிரதேசத்தில் இவ்வாறான வைத்தியசாலை ஒன்று வருவதனை அந்த மக்களும் வரவேற்பர். ஏனெனில் அண்மையில் மன்டைதீவு வைத்தியசாலையில் இடம்பெற்ற ஓர் கலந்துரையாடலில் சுகாதாரத் துறையினர் அப் பகுதியில் ஓர் மருத்துவக் கழிவு எரியூட்டி ஒன்றை சுகாதார முறைப்படி அமைக்க ஆலோசித்தபோது அவர்கள் தமது மன குமுறலைக் கொட்டத் தவறவில்லை.
அதாவது குடாநாட்டிற்கு 3 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இடத்தை மாநகரத்தின் உப நகரமாக மாற்றுவதற்கு முயற்சிக்காது விட்டாலும் மாநகரத்தின் கழிவு அகற்றும் பகுதியாக மன்டைதீவுப் பகுதியை மாற்றாதீர்கள் என பகிரங்கமாகவே தெரிவித்தனர். இவ்வாறான கருத்து உருப் பெறுவதனை தடுப்பதற்கான வழி வகையாகவும் முதியோர் வைத்மியசாலை போன்ற திட்டங்கள் உதவும்.
The Compelling Issue Of Hospitals For Sri Lanka’s Elderly
ශ්රී ලංකාවේ වැඩිහිටියන් සඳහා රෝහල් පිළිබඳ අවශ්යතාවය