மாதவிடாய் வறுமை : கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் சுகாதாரம் !!
நாட்டில் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலினால் ஒவ்வொருவரினதும் இயல்பு வாழ்க்கையில் பாரியளவிலான விகாரங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம், சுகாதாரம் தொடர்பில் கடுமையான சவால்கள் நிலவுகின்ற இந்தத் தருணத்தில் 2021 இற்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் பெண்களின் ஆரோக்கிய துவாய்களுக்கு புதிதாக CESS என்ற 15 சதவீத வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் ‘மாதவிடாய் வறுமை’ (Menses Poverty) பற்றிய விடயம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் அடிப்படை சுகாதாரம் பேணலுக்கான அத்தியவசிய விடயங்களை அவர்கள் பெற முடியாமல் இருப்பது ‘மாதவிடாய் வறுமை’. 52 சதவீதம் பெண்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் பெண்களுக்கு மாதாந்தம் தேவைப்படுகின்ற அடிப்படை சுகாதார பொருளின் விலை பற்றி அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. பெண்களின் அடிப்படை சுகாதாரம் பற்றிய அரசின் கரிசனையின்மையே இந்த வரி அறவீடு என இதனை எதிர்க்கும் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றார்கள்.
பாராளுமன்றத்தில் கூட பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் இந்த புதிய வரிக்கு எதிராக தமது குரலை பதிவு செய்துள்ளனர். இது மக்களின் அரைபகுதியினருக்கம் அதிகமாக உள்ளவர்களின் பிரச்சினை. அனைவரும் குரல் கொடுக்கவேண்டிய பிரச்சினை. ரோஹினி கவிரத்னஇ ஹரினி அமரசூரிய மற்றும்; டியானா கமகே ஆகிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு தமது குரலை பதிவு செய்;தவர்கள் ஆவர்.
பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றிய ஹரினி அமரசூரிய உரையை முடித்ததன் பின்னர் பாராளுமன்ற ஓய்வறையில் உள்ள ஆரோக்கிய துவாய்களை அப்புறப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற இடத்தை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குறித்த புகைப்படத்துடன் “பாராளுமன்றத்தில் கூட ஆரோக்கிய துவாய்களை அப்புறப்படுத்தும் செயற்பாட்டை ஒழுங்காக செய்துகொள்ள முடியாத நிலையில், நாடு முழுவதிலுமுள்ள பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று எனது உரையில் தெரிவித்திருந்தேன். அதே நேரம் பாராளுமன்றத்தில் இருக்கும் எங்களைப் போலவே மாதவிடாய் வறுமையை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுக்கு பொறுப்பு கூறுபவர்களாக அரசாங்கம் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
மாதவிடாய் வறுமை என்பது ஆரோக்கிய துவாய்களுடன் மாத்திரம் வரையறுக்க முடியாத ஒரு பிரச்சினை என்பதை ஹரினி சுட்டிக்காட்டினார். “பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் வேலைக்குச் செல்வதில்லை. பல பாடசாலைகளில் நீர் இல்லை, கழிவறை இல்லை. இது ஆரோக்கிய துவாய்களுடன் மாத்திரம் வரையறுக்கும் பிரச்சினை இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
2018 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் சனத்தொகை 21.67 மில்லியன் ஆகும். இவர்களுல் 52 வீதமானவர்கள் பெண்கள் ஆவர். இலங்கையில் ஏறத்தாழ 12 மில்லியன் வரையான பெண்கள் மற்றும் சிறுமிகள் மாதவிடாய் பருவத்தில் உள்ளவர்கள். இவர்களுள் 70 வீதமான பெண்கள் ‘மாதவிடாய் வறுமையை’ சந்திப்பதாக கடந்தகால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தினால் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையில் 25.1 வீதமான பாடசாலைகளில் போதுமானளவு கழிப்பறை வசதிகள் இல்லை என்ற விடயம் அம்பலமானது. பாடசாலை மாணவிகளின் வரவு வீழ்ச்சியில் இது நேரடியாக பங்களிப்பு செலுத்துகின்றது. பாடசாலையில் இடம்பெறும் கல்வி, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்கள் சிரமப்படுவதைக் காட்டிலும் வராமல் இருப்பதையே சிறந்த தெரிவாக கருதுகின்றார்கள். பெண்களின் சுகாதார பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதன் விளைவாகவே பெண்கள் மற்றும் சிறுமிகள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படுகின்றார்கள். இது தவிர மேலும் பல காரணங்கள் இருந்தாலும் இதுவே பிரதானமானதும் அடிப்படையுமான காரணமுமாக இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் முடிவெடுக்கும் விடயங்களில் 95 சதவீதம் ஆண்களே பங்குபற்றுகின்றார்கள். 1945 இல் அறிமுகம் செய்யப்பட்ட இலவசக்கல்வி கொள்கையில் முறையான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்விமுறை இருக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழல் ஆண்கள் மத்தியில் ‘மாதவிடாய் வறுமை’ தொடர்பாக போதுமானளவு சிந்திக்கும் ஆற்றல் இல்லாத நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது.
2018 செப்டம்பர் வரை இறக்குமதி செய்யப்பட்ட ஆரோக்கிய துவாய்களுக்கான வரி 100 சதவீதத்தை விட (101.2%) அதிகமாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்பின் பின்னர் அப்போதைய நிதியமைச்சர் 30 சதவீத இறக்குமதி வரியை இரத்து செய்தார். 2018 இல் அரச சார்பற்ற நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் நாட்டில் 30 சதவீதமான பெண்களே ஆரோக்கிய துவாய்களை பயன்படுத்தும் வசதி வாய்ப்பை பெறுகின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மீதமுள்ள 70 வீதமான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆரோக்கிய துவாய்களின் அதிக விலை காரணமாக துணிகளை பயன்படுத்தும் நிலைக்கே தள்ளப்படுகின்றார்கள்.
பெண்களின் சுகாதாரத்திற்கு சவாலை ஏற்படுத்தும் இந்த செயல் குறித்து வைத்தியர் எம்.என்.எம். தில்ஸான்; (M.N.M. Thilshan) அவர்களிடம் நாங்கள் வினவியபோது, “மாதவிடாய் காலத்தில் சுத்தமாயிருப்பது மிக அவசியமானது. ஏனெனில் அது ஒரு பெண்ணின் உடல் நலத்திற்கு மட்டுமல்ல, உளநலத்திற்கும் தேவையானது. மாதவிடாய் சுத்தம் என்பது தரமானதும் ஆரோக்கியமானதுமான துவாய்களை பாவிப்பதிலேயே தங்கியுள்ளது. சுத்தமான துவாய்களுக்கு பதிலாக, துணிகளைப் பாவிப்பதானது பல சுகாதார பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
- துணிகள் இரத்தத்தை உறிஞ்சு வைக்கும் தன்மை அற்றவை. எனவே இரத்தம் துணியில் தேங்கி, கிருமிகள் உருவாகும். இது சிறுநீர் வழி மற்றும் யோனி வழியில் கிருமிகளை உட்செல்லச் செய்து சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும்.
- துணிகளினூடாக கசியும் இரத்தம், அவர்களின் உடைகளில் படுவதனால், அது வெளித் தெரியும். இது அப்பெண்ணை மனோரீதியாக தாக்கத்திற்குள்ளாக்கும். அத்தோடு அவர்களின் செயற்றிறனையும் குறைக்கும்.
- சுத்தமான துவாய்கள் இலகுவாக மாற்றப்படக்கூடியது. எனினும் துணிகளை மாற்றுவது கடினமானது. எனவே சுத்தமான துவாய்களை பாவிப்பது பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமானது” என தெரிவித்தார்.
ஆரோக்கிய துவாய்களை கொள்வனவு செய்ய முடியாத பெண்களுக்கு ஏற்படப்போகும் சுகாதாரப்பிரச்சினைகளை நாம் அறிந்தோம்.
ஆரோக்கிய துவாய்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்கொட்லாந்து இருக்கிறது. உள்நாட்டு யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், தீவிரவாத தாக்குதல்கள், ஊழல் போன்ற விடயங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை காலங்காலமாக வெகுவாக பாதித்திருக்கின்ற நிலையில் ஆரோக்கிய துவாய்களை இலவசமாக வழங்குவது பற்றி அரசாங்கம் சிந்திக்குமா என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் துவாய்களுக்கான அதிகளவான வரியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது மாத்திரமே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.