மாகாண சபைகள், கோவிட் -19 பெருந்தொற்றுநோய் மற்றும் மக்கள்
சி. ஜே. அமரதுங்க
கொவிட் -19 பெருந்தொற்றை இலங்கை எதிர்கொண்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதனை எழுதும் நேரத்தில், நாடு கடுமையான நெருக்கடியில் உள்ளது. இதற்கிடையில், தொடர்ச்சியான முடக்கங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. நாளாந்த கூலிகள் அவர்களின் வருவாய் வழிகள் தடுக்கப்பட்ட நிலையிலிருக்கின்றனர்.
மறுபுறம், மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் பிற தேவைகளை விநியோகிப்பதும் ஒரு பிரச்சினையாகிவிட்டது. இருப்பினும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களைப் பற்றி பேசியிருந்தாலும், அவை அடிப்படை மட்டத்தில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லை. வசதிப்படுத்தல் முயற்சிகளில் எந்த முறைப்படுத்தல்களும் இல்லை. நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நிலைமை இதுதான்.
கொவிட் -19 நோயாளிகளின் சிகிச்சை முறைமை கூட கைவிடப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஊடகங்கள் மூலம் அரசாங்கம் கூறுவது அடிப்படை மட்டத்தில் நடப்பதில்லை. கொவிட் -19 நோயாளிகளை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்வது கூட சரியாக நடப்பதில்லை. இதனை உறுதிப்படுத்திய பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகங்களிடம் பொது சுகாதார பரிசோதகர்களை நோயாளிகளை அழைத்துச் செல்லுமாறு கேட்கக்கூடாது என்றும் அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.
கொவிட் -19 நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு பொது அல்லது தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவதும் ஆபத்தானது. அதனை அம்புலன்ஸ் சேவையினூடாக மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில், அம்புலன்ஸ் சேவைகள் அதைச் சிறப்பாகச் செய்தன, ஆனால் பின்னர் அவற்றின் சேவையைப் பெறுவது ஒரு பிரச்சினையாக மாறியது. சில அம்புலன்ஸ் சேவைகள் மருத்துவமனைகள் தங்கள் நோயாளிகளை ஏற்கவில்லை என்று முறைப்பாடு தெரிவிக்கின்றன. அரசாங்கம் அதை மறுத்தாலும், அது தான் அடிப்படை மட்டத்தில் உள்ள உண்மையாகும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆரம்பத்தில் இருந்த போதிலும், தற்போது அது சரியாக செயற்படவில்லை. அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இந்த குழப்பத்தை தடுப்பூசி செயற்பாட்டிலும் காணலாம். எந்த திட்டமும் இல்லாத இடத்தில், சில அரசியல்வாதிகள் தலையிட்டனர். சில இடங்களில், அவர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உத்தரவுகளை வழங்கி பிரச்சினைகளை ஏற்படுத்தினர்.
இவற்றையெல்லாம் கண்ட மக்கள், பெருந்தொற்றைக் கையாளும் முழு செயன்முறையும் குழப்பமாக மாறியுள்ளதாகக் கூறுகிறார்கள். அரசாங்கம் என்ன சொன்னாலும் அதுதான் உண்மையாகும்.
இந்த திட்டத்தை உள்ளூர் மட்டத்தில் வழிநடத்துவதற்கு அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைத்துவம் இல்லை. சில அரசியல்வாதிகள் எந்தவொரு அதிகாரமும் பொறுப்பும் இல்லாமல் இந்த திட்டத்தில் நுழைந்துள்ளனர். அவர்கள் செய்வதெல்லாம் அவர்களின் பிரச்சாரங்களை செயற்படுத்துவதும், அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு சாதகமாக இருப்பதும் தான். அவை தான் விடயங்களை மேலும் மோசமாக்குகின்றன.
இந்த நெருக்கடியில், கிராம அளவிலான நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு பொறிமுறையாக மாகாண சபைகளின் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்படுகிறது. சில பகுதிகளில் உள்ளவர்கள் இப்போது இதைப் பற்றி பேசுகிறார்கள். ‘இந்த மனிதர்’ ஆட்சியில் இருந்திருந்தால் தங்களுக்கும் இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் அல்லது மாகாண சபைகளில் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி பேசுகிறார்கள்.
அந்த நபர்களில் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் சில குறிப்பிட்ட திட்டங்களையும் மேற்கொள்கிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு இப்போது முறையான அதிகாரம் இல்லை.
மாகாண சபை அமைப்பு இந்த நாட்டில் ஒரு மோதல் சூழ்நிலையில் தொடங்கியது. இது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளின் விளைவாகும். அதாவது, இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகும்.
இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987 இல் உருவாக்கப்பட்டது. எனவே, ஆரம்பத்தில் இருந்தே அதற்கு எதிர்ப்பு இருந்தது. 1988-89 எழுச்சியின் முக்கிய முழக்கங்களில் ஒன்று மாகாண சபை முறையை ஒழிப்பதாகும்.
எவ்வாறாயினும், காலப்போக்கில், இந்த அமைப்பு பொதுமக்களாகிய நமது அரசியல் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாறியதுடன் பல அரசியல்வாதிகள் அதன் பங்கை அங்கீகரித்தனர். பெர்டி திசாநாயக்க போன்ற சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளை விட்டுவிட்டு மாகாண சபைக்குச் சென்றனர், ஏனெனில் இந்த பதவிகள் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதுடன் அவர்களுக்கு சேவை செய்யவும் உதவியது. இன்றும் கூட, பல அரசியல்வாதிகள் மாகாண சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முயற்சிக்கிறார்கள், அது அவர்களுக்கு பெரும் சலுகைகளை அளிப்பதால் அல்ல, ஆனால் அங்கு பணியாற்றுவதால், அவர்கள் மக்களிடையே நல்ல அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பதாலாகும்.
மாகாண சபைகளால் செய்யப்படும் மற்றும் செய்யப்படாத பணிகளைப் பற்றி அதிகமாக கூறலாம். எனினும், இது அதற்கான நேரம் அல்ல. கொவிட் -19 பெருந்தொற்றின் போது மாகாண சபைகள் வழங்கக்கூடிய ஆதரவை பற்றி இங்கு கலந்துரையாடுகின்றோம்.
மாகாண சபைகள் தற்போது செயற்படவில்லை. இதற்கு மேலோட்டமான காரணம் மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த முடிவுசெய்திருப்பதாகும். இருப்பினும், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் உட்பட இதற்கு வேறு காரணங்களும் உள்ளன. மாகாண சபைகளை ஒழிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றொரு சூழ்ச்சியாகும். மொத்தத்தில், மாகாண மற்றும் கிராம மட்டங்களில் கொவிட் -19 பெருந்தொற்றை வினைத்திறனாக நிர்வகிக்கப் பயன்படும் ஒரு முக்கியமான பொறிமுறை செயலற்றதாகிவிட்டது. இந்த சிவில் நிர்வாக பொறிமுறையின் முறிவு காரணமாக, அரசாங்கம் சிவில் விவகாரங்களில் தொடர்பில்லாத தரப்பினரை ஈடுபடுத்த வேண்டியிருந்தது.
மாகாண சபை இல்லாவிட்டாலும், ஆளுநர் ஏற்கனவே அந்த பணிச்சுமையை கையாளுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். இருப்பினும், ஆளுநரால் மாகாண சபையின் அன்றாட நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது. ஆளுநரால் பணிகளுக்கான அரசியல் தலைமையை வழங்க இயலாது. இந்த கொவிட் -19 நெருக்கடியில் அது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது.
மாகாண சபைக்கு உத்தியோகபூர்வ அதிகாரமும் மாகாணத்தின் அரச பொறிமுறையை இயக்குவதற்கான திறமையும் உள்ளது. இந்த அவசரகாலத்தின் போது முதலமைச்சரும் மாகாண சபையும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் வழிநடத்த முடியும். அடிப்படை மட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதலும் அவர்களுக்கு உண்டு.
மற்றைய மிக முக்கியமான விடயம், அவர்கள் மாகாண மக்களுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவாகும். மக்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றிய புரிதல் அவர்களுக்கு உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாடு ஒரு உலகளாவிய பெருந்தொற்றை எதிர்கொள்ளும் இந்த முக்கியமான நேரத்தில் மாகாண சபை அமைப்பு செயலற்ற நிலையில் இருக்கின்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இருந்து, துன்பத்திலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது வரை மாகாண சபைகளால் கொவிட் -19 பெருந்தொற்றை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்தியிருக்க முடியும். அரசியல் ரீதியாக பயனளிக்கக்கூடிய முழக்கங்களை விட நெருக்கடி முகாமைத்துவத்தில் ஒரு அடிப்படை மட்டத்தில் பரவலாக்கப்பட்ட நிறுவன அமைப்பு முக்கியமானது என்பதை இந்த தேவைப்படும் தருணம் வலியுறுத்துகிறது.எனவே, இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தி பேண வேண்டியதன் அவசியத்தை இந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.
Provincial Councils, The Covid-19 Pandemic And The People
පළාත් සභා කොවිඩ් වසංගතය සහ ජනතාව