கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மஹர சம்பவத்திற்கு பின்னரான நிலை: சமூகத்தை பாதுகாக்கும் வகையிலான அறிக்கையிடல்

விஹங்க பெரேரா

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 11 கைதிகள், சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வாரத்தின் பின்னர் அவர்களது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டனர்.  முன்னதாக, சிறை வளாகத்தில் பரவிய கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் திறனற்ற செயற்பாட்டை எதிர்த்து நவம்பர் 30ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தணிப்பதற்காக அதிக கைதிகள் உள்ள மஹர சிறை வளாகத்திற்கு சிறப்புப் படைகள் வரவழைக்கப்பட்டன. அதன் பின்னர் வெளிவந்த தகவல்களின்படி, தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னர் சிறை வளாகத்தின் ஒரு பகுதி தீப்பிடித்தது. கைதிகளுக்கு இடையிலான சண்டையின் காட்சிகள் சில நாட்களின் பின்னர் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வன்முறையின் முதல் நாளில் பரப்பப்பட்ட விடயங்களுக்கு மாறாக கைதிகள் நிராயுதபாணிகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை வேறு விதத்தில் கூறுவதானால், மஹரவில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 கைதிகள் பாதுகாப்பின்றி காணப்பட்டுள்ளனர் என சில முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமைதியின்மை ஏற்பட்டபோது நெறிமுறையைப் பின்பற்றத் தவறிய சிறை அதிகாரிகளின் அலட்சியம் குறித்து கொழும்பு டெலிகிராப் டிசம்பர் 3ஆம் திகதி அறிக்கையிட்டது. கொழும்பு டெலிகிராப் தெரிவித்ததன் அடிப்படையில், பின்னர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள், நெறிமுறையை நிலைநாட்ட விரும்பாத அதிகாரிகளின் குரல்களை வெளிப்படுத்துகின்றன. நிலைமை கைமீறி சென்றபோது சிறப்புப் படைகள் வரவழைக்கப்பட்டன. காயங்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 120 இற்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்தது 26 துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டின. மஹர சிறை வன்முறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி டிசம்பர் முதல் வாரத்தில் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது. இலங்கையில் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றும் அதன் திறனைவிட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அப்போது சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அவர்களில் பலர் அபராதம்  செலுத்தத் தவறியமைக்காக தண்டனை அனுபவிப்பவர்கள் என்றும் ஒப்புக்கொண்டார். இந்த எண்ணிக்கை 20,000க்கும் அதிகமாக உள்ளது. இது மொத்த குற்றவாளிகளில் 70 வீதமாகும். சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி அறிக்கையிட்டுள்ள கிரவுண்ட் வீவ்ஸ் இணையத்தளம், சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 78-82 வீதமானோர் விளக்கமறியல் கைதிகள் என்றும் அவர்கள் வெறும் சந்தேகநபர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

மஹர சிறையில் வன்முறை வெடித்தபோது, சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செய்தி உருவாக்குநர்கள் இரண்டு வழிகளில் பொதுமக்கள் இதில் குறைந்தளவு கவனத்தை செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். முதலாவதாக, குறித்த கைதிகள் விரும்பத்தகாதவர்கள் என்றும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதைப் போலவும் செய்திகள் பரப்பப்பட்டன. இரண்டாவதாக, சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழலை மூடிமறைக்க, சதி முயற்சியாக இந்த அமைதியின்மை தூண்டப்பட்டது போன்ற செய்திகள் பரப்பப்பட்டன. தீப்பிடித்த கட்டிடங்களில் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் கொண்ட நிர்வாகத் தொகுதி அமைந்திருந்தது. டிசம்பர் 6ஆம் திகதி திவயின பத்திரிகைக்கு எழுதிய சமன் கமகே, இந்த வன்முறை ஒரு விடயத்தை மூடிமறைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அதற்கு முந்தைய வாரம் வரை மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை இந்த வன்முறைக்குள் கொலைசெய்ய திட்டிமிட்டிருக்கலாம் என்றும் எழுதியிருந்தார். அபேசேகரவிற்கு ஏதேனும் ஒரு விதத்தில் தீங்கு விளைவித்திருந்தால், அது அரசாங்கத்திற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய அரசியல் கோஷமாக ஆகியிருக்குமென்றும் கமகே சூசகமாக குறிப்பிட்டிருந்தார். கமகேயின் வார்த்தைகளில் (எனது மொழிபெயர்ப்பில்): “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச மட்டத்தில் ஒரு பிரதிவாதியாக மாற்றி அவரை மரண தண்டனைக்கு இட்டுச்செல்ல யாரும் திட்டமிட்டார்களா?” கேளிக்கைகளுக்கு மேலதிகமாக இத்தகைய தொலைநோக்கு கருத்துக்கள் உருவாகின்றன. “சர்வதேச மட்டத்தில் பிரதிவாதி” (ஜாதியந்தர வித்திகருவெக்) மற்றும் “மரண தண்டனைக்கு (இலங்கை ஜனாதிபதி) கொண்டுசெல்கின்றது” (தங்கெடியட ரெகென யேம) போன்ற கருத்துகளின் நகைச்சுவையான தன்மையை ஒருவர் குறிப்பிடுகின்றார்.

புதிதாக வருவோர் அல்லது இளையோர் தேசத்தைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளை  தூண்டி ஈர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களிடம் இராஜதந்திர அல்லது சட்டரீதியான அணுகுமுறைகள் இல்லை.

இந்த கோட்பாடுகளில் சில முற்றிலும் யூகிக்கக்கூடியவை என்றாலும், மற்றவர்கள் கட்டமைக்க விரும்பும் விபரிப்புக்கு ஏற்ப பொருந்தக்கூடிய தகவல்களை கட்டம் கட்டமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் இதுபோன்ற யூகிக்கக்கூடிய புனைகதைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இந்த நிருபர்கள் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை: குறிப்பாக வேகமாக பரவும் வைரஸ் தொற்று நேரத்தில் சிறைச்சாலை அமைப்பினுள் காணப்பட்ட மோசமான நிலைமைகள். சுவாரஸ்யமாக, சில பிரதான ஊடக அறிக்கையிடல்கள், சிறைகளில் ஆபத்தான கொவிட் தொற்று காணப்படுகின்றது என்ற புள்ளிவிபரத்தை ஒப்புக்கொள்கின்றன. ஆனால் அவை அப்படியே வெளியிடப்படுகின்றன: அதாவது ஒரு அறிக்கையை முழுமையாக்கும் ஒரு வழியாக காணப்பட்டது. நோயாளிகளின் அதிகரிப்பு விபரம் என்ன, குறைந்தபட்ச வசதிகளையும் பாரபட்சத்துடன் பகிர்ந்தளிக்கின்றமை அல்லது அதிகாரிகளின் அலட்சியப்போக்கு பற்றி பெரும்பாலும் விமர்சன ரீதியான ஈடுபாடு அல்லது கேள்வி கேட்பது இல்லை. மாறாக, சில புதிய ஊடகங்கள்  மோசமான சிங்கள சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் கைதிகளை சமூகத்தின் வேறொரு வர்க்கமாக காட்டியும் சிறைச்சாலை மீது இறையாண்மை அதிகாரம் கொண்ட நபர்களுக்கு சார்பாக கதைத்தும் கைதிகள் மத்தியில் காழ்ப்புணர்வை தூண்டுவதாக செயற்படுகின்றன. 

சில அரசியல்வாதிகளின் பயனற்ற உரைகளை எந்த வகையிலும் மதிப்பிட முடியாது, வாக்காளர்களை குருடர்களாக நினைத்து அவர்கள் செயற்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் அவை குறித்து சிந்திக்காமல், விமர்சனப் பற்றின்றி செயற்படுகின்றமை சமூக முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும். இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், ஊடகங்கள் மலிவான அரசியல் தந்திரங்களுடன் இணங்கிச்செல்கின்றன. ஒருவேளை இது கருத்தியல் காரணங்களுக்காக அமையலாம். ஆனால், நீண்டகால பயணத்திற்கு இது ஆபத்தாக அமையலாம். ஆனால், நிச்சயமாக, மனிதநேயம் எப்போதுமே ஒரு இனமாக அரசியல் ரீதியாக இருப்பதால், செய்தி வழங்குநருக்கும் நிறுவன ரீதியான அரசியல் உள்ளது. இது சி.என்.என், பிபிசி, அல் ஜசீரா அல்லது எமது கொழும்பு ஊடகங்களில் ஒன்றாக இருந்தாலும், நிறுவனங்கள் அதன் நாடிநரம்புகளில் அரசியல் விசுவாசத்தைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றிலிருந்து வெளிவந்து செயற்படும் சமூக அமைப்புகள், குடிமை இடங்கள் மற்றும் உரிமைகள் தொடர்பாக செயற்படுவோரை சமூகத்தின் அத்திவாரங்களாக அங்கீகரிக்க வேண்டும். ஊடகங்கள் எப்போதுமே ஒரு நாட்டின் நான்காவது தூண் என்ற வகையில், அதன் பாரம்பரிய தன்மைக்கேற்ப செயற்பட வேண்டும். அத்தோடு, சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.  அரசியலால் வழிநடத்தப்படுவதை விட சமூக நலன் சார்ந்த எண்ணத்துடன் பொறுப்பாக செயற்படும்போது, பத்திரிகைகள் அதற்கே உரித்தான நிலையில் இருக்கின்றன.

ஒரு கொந்தளிப்பான ஆண்டின் விளிம்பில் ஒருபுறம் நாம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தை எதிர்கொள்கிறோம். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்புகளால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை குறைந்த இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மேலும் வெளிநாட்டு இருப்புக்களைப் பயன்படுத்த வேண்டிய உண்மையான ஆபத்தை நாடு எதிர்கொண்டுள்ளது. அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதற்கான பாதை ஐயத்திற்கிடமானது. ஆனால் செயற்பாடுகளில் நிலையான அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. பிரீமியர் லீக் கிரிக்கெட்டை பார்ப்பது மற்றும் அதில் வேரூன்றுவது நிம்மதியை அளிப்பதாக கருதும் எமது நாட்டு மக்கள் கோடரி விழும் வரை காத்திருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் மலிவான பொழுதுபோக்குகளை வழங்கும் நேரம் இதுவல்ல. பக்கச்சார்பின்றி சமூகத்திற்காக செயற்படுவது அவசியம். முக்கியமான செய்திகளை ஒருவர் எவ்வாறு வடிவமைக்க வேண்டுமென மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒருவரின் குறுகிய அரசியல் நிலைமைக்கு அப்பாற்சென்று, ஆனால் சமூகம், சமூக அமைப்புகள் மற்றும் மனிதகுலத்தை நிர்வகிக்கும் உரிமைகளின் நலனுக்காக செயற்பட வேண்டும்.

சமமான அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்கூறல் அவசியம். ஒரு விடயத்தை நிருபர் மிகைப்படுத்தும் அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தும்போது நடைமுறை செயற்பாடுகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். எமக்கு தெரிந்த கலாச்சாரத்தின்படி மன்னிப்புக் கோருவதை குறைந்தளவு தெரியும் வகையிலான அச்சுப்பதிப்பில் அச்சிடுவதே நடைமுறையாக காணப்பட்டது. எனினும், நடைமுறையில் எதுவும் சொல்லாமல் முன்னேறிச் செல்லும் நிலையே காணப்படுகின்றது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts