மலையகத் தோட்டச் சமூகம் அரசுக்கு அந்நியமானதா?
ஜீவா சதாசிவம்
இலங்கையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது தேயிலைத் தொழிற்துறை. இது பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் ‘பிராண்ட்’ ஆகி இருக்கையில் அந்த தேயிலை உற்பத்தியின் பின்னால் உள்ள அந்தத் தொழிற்துறை சார்ந்த மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் அதற்கு மாறான விதத்தில் ‘பிராண்ட்’ பண்ணப்பட்டுள்ளது . இதனை வெளிச்சம் போட்டு காட்டிய சம்பவமாக டயகம தேயிலைத் தோட்ட சிறுமியான ஹிசாலினியின் மரணம் நடந்தேறியுள்ளது.
இது ஒரு சிறுமியின் விடயம் சார்ந்த பிரச்சினை எனக் கொண்டாலும், ஒட்டு மொத்த மலையக சமூகம் சார்ந்த பிரச்சினையாக இன்று பலராலும், பல கோணங்களிலும் பார்க்கும் விடயமாக பரிணமித்திருப்பது இதனாலேயாகும்.
இவ்வாறான சம்பவங்கள் பரவாலாக சகல சமூகங்களிலும் இடம்பெறுகின்றதும் மலையகத்தில் நிகழ்கின்ற போது அதன் தாக்கம் வேறாக உணரப்படுகிறது. மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் நிலவும் வறுமை நிலைமையே – அதாவது வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப வருமானம் இல்லாமையே இதற்கு பிரதான காரணியாக உள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்துறை
இலங்கைக்கு கடந்த 200 வருடங்களாக தேயிலைத் தொழிற்துறையின் ஊடாக அந்நிய செலாவணியாக அதிகளவு வருமானத்தை பெற்றுக்கொடுத்தன் மூலம் நாடு பல விதமான நன்மையைப் பெற்றுக் கொண்டுள்ளது. நாட்டின் போக்குவரத்து, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திக்கு தேயிலை ஏற்றுமதியின் பங்களிப்பு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், அதற்காக உழைத்துக் கொடுத்த மக்களின் வாழ்வாதார நிலைமை வறுமையாகவே இருக்கின்றது.
இந்த முரண் நிலைமையை புரிந்து கொள்வதற்கு அந்த தொழிலாளர் சமூகம் மீது இலங்கை அரசு எந்தளவு தூரம் அக்கறை காட்டியுள்ளது என்பதனை அவதானிக்க வேண்டியுள்ளது.
பெருந்தோட்ட நிர்வாகக் கட்டமைப்பு என்பது பொருளாதார ரீதியாக இலங்கை அரச இயந்திரத்துடன் தொடர்புபட்டிருக்கும் அளவுக்கு அதன் பின்னால் உள்ள உழைப்பாளர் சமூகப் பொறுப்பு விடயத்தை வரலாற்றுக் காலந்தொட்டே இலங்கை அரசு ‘கைகழுவி’ வந்துள்ளது. இந்த மக்களை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்வதில் இலங்கை அரசுக்கு இருந்து வரும் தயக்கம், அவர்களை அந்நியர்களாக பார்க்கும் தன்மை கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று.
1931 இல் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்ட போது இந்த மக்களில் ஒரு பகுதியினருக்கு வாக்குரிமை கிடைத்த போதும், இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திற்குள் (கம்சபா ) முறைமைக்குள் இவர்கள் உள்வாங்கப்படவில்லை. அவர்கள் ‘தோட்டம்’ என்ற தனி ஒரு சமூகம் துறையாக (நகரம் , கிராமம் என்ற வகுதிகளுக்கு அப்பால்) வைக்கப்பட்டனர்.
இந்த ‘தோட்டம’ எனும் பொருளாதாரம் சார்ந்த தொழிற்றுறை பகுதியே சமூக நிர்வாக அலகாகவும் பேணப்பட்டது. இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்கும் நிலை இருந்தது. உதாரணம் பிறப்புச் சான்றிதழ் கூட தோட்ட அதிகாரியினால் வழங்கப்படும் ஒரு அட்டை (Card) மூலமே உறுதி செய்யப்பட்டது.
கம்சபா (கிராம சபை முறைமையில்) உள்வாங்கப்படாத இந்த தோட்ட சமூகத்தின் சமூக நிர்வாகம், உட்கட்டமைப்பு வசதிகளை தோட்ட நிர்வாகமே வழங்க வேண்டிய முறைமையே இருந்தது. இதனாலேயே பிரதேச சபைச் சட்டத்திலேயே தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாது எனும் ஏற்பாடு உருவானது.
இவ்வாறு தோட்ட நிர்வாகத்தினால் கையாளப்பட வேண்டிய விடயங்களாக தோட்டப் பாடசாலை, தோட்ட வைத்தியசாலை, தோட்டப்பாதை, தோட்டத் தபால் என இலங்கை தேசிய நிர்வாக பொறிமுறைக்கு உள்வாங்கப்படாத ஒரு சமூக நிர்வாக முறைமையே அங்கு பேணப்பட்டு வந்தது/ வருகிறது.
குடியுரிமைப்பறிப்பின் பின்னர்…
இந்த தோட்டங்கள் 1972 ஆம் ஆண்டு பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து இலங்கை அரசால் பொறுப்பேற்ற போதும் கூட, பொருளாதார பக்கத்தை அரசின் பக்கமாக இழுத்துக்கொண்ட அளவுக்கு சமூக நிர்வாக பக்கத்தை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சமூகத்தை வைத்துப் பராமரிக்கும் எண்ணத்தை விட இவர்களை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்ளாது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் எண்ணத்தையே கொண்டிருந்தது.
1948 இல் குடியுரிமைப் பறிப்பு, 1949 வாக்குரிமைப் பறிப்பு, 1954, 1964, 1974 ஆகிய ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் இவர்களை திருப்பி இந்தியாவுக்கு அனுப்புவதன் ஏற்பாடாகவே நடந்தன. எனவே இந்த மக்களுக்கு இலங்கையில் வாழ்க்கை வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணம் இலங்கை அரசுக்கு எழவில்லை.
எனினும் 1970 களின் பிற்கூறுகள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புதல் எனும் எண்ணத்தில் மாற்றத்தை உருவாக்க நேர்ந்தது. அதற்கு காரணம் வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்த மக்கள் இந்தியா நோக்கி திரும்பிச் சென்று கொண்டிருந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இந்த மக்களும் இந்தியா திரும்புவதை விடுத்து வடக்கு நோக்கி சென்று குடியேறும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். கணிசமான அளவினர் வன்னியல் குடியேறத் தொடங்கினர். 1977, 1981, 1983 இனக்கலவரங்களில் இவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் இதற்கு உரம் சேர்த்தது.
இந்தப் பின்னணியிலேயே 1986க்குப்பின் 1988, 2003 காலப்பகுதியில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஊடாக இவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது.
குடியுரிமை வழங்கப்பட்ட பின்னர்…
குடியுரிமை வழங்கப்பட்டாலும் இந்த மலையகத் தோட்ட சமூக நிர்வாகத்தை இலங்கை அரசு தனது அரசு இயந்திரப் பொறிமுறையில் உள்ளவாங்காது தோட்ட நிர்வாக முறைமையிலேயே
வைத்தது/ பகுதி அளவில் வைத்து இருக்கிறது.
1972இல் அரச கூட்டுத்தாபனங்களின் ஊடாக தோட்டங்களை நிர்வகித்த அதே நேரம் அந்த கூட்டுத்தாபனங்களின் சேம நலப்பிரிவின் கீழ் தான் சமூக நிர்வாகம் பார்க்கப்பட்டது. அரச பொது நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. 1992 ஆம் ஆண்டு மீண்டும் தனியார் மயமாக்கப்பட்ட போது ‘ட்ரஸ்ட’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு சமூக நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டது. அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இன்றுவரை இந்த ‘ட்ரஸ்ட்’ நடைமுறையில் உள்ளது.
வீடமைப்பு முறை இலங்கையில் வேறு எந்த சமூகத்துக்கும் இல்லாத ஒரு முறைமை. அந்த 10×20 அறைகளுக்கு வெளியே அவர்கள் தம்மை விஸ்தரித்துக் கொள்ள காணி உரித்து இல்லை. 1980 க்குப் பிறகே தோட்டப் பாடசாலைகள் என்ற முறைமை அரசாங்க இலவச கல்வி முறைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இன்றும் அவை இதய சுத்தியோடு அமுல்படுத்தப்படவில்லை. இன்றும் கூட ‘தோட்ட சுகாதார முறைமை’ என்ற தனியார் கம்பனிகளின் முன்னெடுப்பிலேயே அது முன்கொண்டு செல்லப்படுகிறது.
‘தோட்டப் பாதை’ என அழைக்கப்படும் பாதைகள் பாதைகளுக்கு பொறுப்புக் கூறும் அரச நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பிரதேச சபைகளுக்கு கீழாக கூட அவை பிரகடனம் செய்யப்படவில்லை. 1997 க்குப் பின்னரே கிராம சேவகர் பிரிவுகள் இவர்களுக்கு உருவாக்கப்பட்டாலும் அவை ஏனைய பகுதி பிரதேச செயலகங்களைவிட பெரிதானதாக ஒரு அதிகாரியினால் சேவை வழங்க முடியாத ஒன்றாக உள்ளது.
வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர்
இவர்களது வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் கடந்த நாற்பது ஆண்டு காலமாக இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் வந்தாலும் இவர்கள் தமக்கு வழங்கப்படும் அமைச்சுப் பதவிகளைக் கொண்டு இங்கே மாற்றங்களைச் செய்ய முயற்சித்தார்களே அன்றி, முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. அதனால் ஆங்காங்கே சிற்சில மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததே தவிர இந்த சமூகத்தின் நூற்றாண்டு கால பின்னடைவை இவர்களால் சரி செய்ய முடியாது போயுள்ளது.
இவ்வாறு அரசு நிர்வாகத்தில் தெளிவாக விலக்கி வைக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தானாக முண்டியடித்து முன்னேறும் சமூகமாக கல்வித்துறையில், கலை இலக்கியத் துறையிலும் தன்னை தேசிய மட்டத்தில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளமைக்கு தனிமனித ஆளுமைகளே காரணமாகும்.
அத்தகைய ஆளுமை குறைந்த அறிவு மட்டம் குறைந்த நிலையில் உள்ளோர் தாம் முன்னேறுவதற்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளோ , வேறு மார்க்கங்களோ அரசினால் வழங்கப்படாத போது இவ்வாறு முறைசாரத தொழில் துறையில் இறங்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்படுகின்றனர்.
தேயிலையைப் பறித்து ஏற்றுமதிக்கு துணை நின்றவர்கள் இன்று தங்களையே வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக ஏற்றமதி செய்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேயிலையை ஏற்றமதிச் சந்தைக்கு தலைநகருக்கு பொதி செய்து அனுப்பியவர்கள் தமது பிள்ளைகளை தலைநகர் வீட்டு வேலைக்காக அனுப்ப நேர்ந்துள்ளது.
எனவே இதுபோன்ற சமூக அவலம் நிகழ்ந்த பின்னர் அதனை அரசியல் நோக்கத்தோடு எடுத்துக் கையாள்வதில் காட்டும் அக்கறையை அந்த மக்களை அந்தியர்களாக தொடர்ந்தும் பார்க்காமல் இலங்கையர்களாக அவர்களை உள்வாங்கிக்கொண்டு அவர்களிடம் பெற்றுக் கொண்ட / கொள்ளும் உழைப்பிற்கு ஏற்ற சன்மானத்தைக் கொடுக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைக்காணி உரிமை முதல் உட்கட்டமைப்பு வசதிகள் வரைப் பெற்றுக் கொடுக்கவும் அரசு முன்வருதல் வேண்டும்.
அத்தகைய முறைமை உருவாக்கத்திற்கான அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய அரசியல் தலைமையை அந்த சமூகம் வேண்டி நிற்கிறது. அதுவரை இன்னும் இன்னும் ஹிசாலினிகளின் உருவாவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.