முக்கியமானது

மனித உரிமை மீறல்கள்: அதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்களுக்கு எதிரானவை!

இசட்.ஏ. ரஹுமன்
ஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றுகிறார்கள்.
‘நாட்டில் நிறைவேற்றதிகாரமும், பாதுகாப்புத்துறையும,நீதித்துறையும் சரியான முறையில் செயற்படுமாயின் இன நல்லிணக்கம் சிறந்த முறையில் காணப்பட வாய்ப்புண்டு.’ என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸத்தீன் லத்தீப்.
இலங்கையின் 30 வருட யுத்தம் முடிவுற்று 10 வருட கால நிம்மதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்பட்டதில் சுமார் 250 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் சுமார் 500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவரும், தற்போது ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளராக கடமை புரியும் மனித உரிமைகள் மற்றும் ஐனநாயக முதுமானியுமான இஸ்ஸத்தீன் லத்தீப்புடனான ‘தகட்டுமரத்தின’ சந்திப்பு.

த கட்டுமரன்: இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதச் செயற்பாட்டின் பின் இலங்கையில் மனித உரிமையின் நிலை எவ்வாறு உள்ளது?
இஸ்ஸத்தீன் லத்தீப்: ஏப்ரல் 21இல் நடந்த தாக்குதலானது முழுக்க முழுக்க மனிதத் தன்மைக்கு எதிரானதாகும். ஆதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், இச்செயற்பாட்டினை வைத்துக் கொண்டு சிலர் ஒரு குறித்த சமூகத்தின் மனித உரிமைகளைப் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை காண முடிகிறது. அதாவது முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு சிலர் செய்த ஈனச்செயலுக்காக இலங்கையின் முழு முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து சொல்லாலும், செயற்பாடுகளினாலும் சில இனவாதிகள் முஸ்லிம் மக்களை தாக்குகின்றனர். இது மிகவும் பாரதூரமான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்களின் ஆடை, கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற அனைத்திலும் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது. இது முற்றாக மனித உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இதனால் இன்ற இலங்கையில் மனித உரிமை நிலையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.

த கட்டுமரன் : இலங்கையில் இதற்கு முன்னரும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களில் பல இருந்துள்ளன. இப்போது, முஸ்லீம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இஸ்ஸத்தீன் லத்தீப்: 30 வருட யுத்த காலத்தில் இன பேதமின்றி அனைவரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டாலும் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்களின் மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமையும் பாதிக்கப்பட்டன. அதாவது அவர்களின் வாழும் உரிமை, பொருளாதார உரிமை, கல்விக்கான உரிமைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 1983.07.24 ஆம் திகதி இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளால் 09 இரானுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காக கொழும்பில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் சில பெரும்பான்மை அடிப்படைவாதிகளால் கொல்லபட்டனர், சொத்துதக்கள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இன்று முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்றனர். அன்று விடுதலைப்புலிகளை வைத்து தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றனர். இன்று சஹ்றானை வைத்து முஸ்லிம் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்கின்றனர். ஆனாலும் இன்று முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை வித்தியாசமானதாகும். ஏனெனில் இனவாதிகள் இனங்களுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஏனைய சமூகத்தவர்கள், முஸ்லிம்களின் அனைத்து செயற்பாடுகளிலும் சந்தேகம் கொள்கின்றனர். இன்று எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது, தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களின் நடவடிக்கைகள் மீது பாரிய சந்தேகம் கொள்கின்றனர் உதாரணமாக,தமிழ் பிரதேசங்களில் பல வருடங்களாக தும்பு மிட்டாய் விற்பனை செய்து வந்த ஒரு முஸ்லிம் வியாபாரியிடம் தும்பு மிட்டாய் வாங்கிய ஒரு தமிழ் யுவதி மீண்டும் அதனை திரும்பிக் கொடுத்துள்ளார். ஏன் என அவ்வியாபாரி கேட்டதற்கு உங்கள் மிட்டாயில் கருக்கலைப்பு மருந்து போடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் எனக் கூறியுள்ளார். இதே போன்று தயிர் வியாபாரம் செய்பவருக்கும் இதே நிலைதான். முஸ்லிம் உணவு வியாபாரிகளுக்கு மட்டுமன்றி முஸ்லிம் உடை வியாபாரிகளுக்கும் இவ்வாறான நிலைதான் ஏற்பட்டுள்ளது. அதாவது பெண்களின் உள்ளாடைகளில் கருக்கலைப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் வியாபாரிகளிடம் இருந்து உடைகள் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளனர். இது மட்டுமன்றி ஒரு பௌத்த திருமணத்திற்கான உணவை ஒரு முஸ்லிம் சமைத்தார் என்பதற்காக அங்கு வந்திருந்த பலர் அவ்விருந்தினை உண்ணாமல் சென்றுள்ளனர். இவ்வாறு ஒரு சமூகத்தின் மீது சந்தேகமும் எதிர்ப்புணர்வும் வலுத்துள்ளது. நல்லிணக்க வாழ்வுக்கு பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ளது. இவை அந்த சமூகத்தின் மனித உரிமைகளையும் வெகுவாக பாதிக்கிறது.

த கட்டுமரன்: இவ்வாறான நிலையில் தங்களது பிராந்திய காரியாலயத்திற்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வாறான? எத்தனை முறைப்பாடுகள் கிடைத்துள்ளன? அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன?
இஸ்ஸத்தீன் லத்தீப்: பெரும்பாலான அரச நிறுவனங்கள், பாடசாலைகள் ஏனைய நிறுவனங்களில் பணிபுரியம், அந்நிறுவனங்களுக்கு சேவை பெறச் செல்லும் முஸ்லிம் பெண்களின் ஆடை சம்பந்தமான கட்டுப்பாடுகள் மனித உரிமை மீறலை ஏற்படுதுவதாக 700 எழுத்து மூல முறைப்பாடுகளும் பிழையான கைதுகள் சம்பந்தமாக 05 எழுத்து மூல முறைப்பாடுகளும் அதிகாமான வாய்மொழி முறைப்பாடுகளும் (நேரடி தொலைபேசி) கிடைத்துள்ளன.
இவற்றுக்கான நடவடிக்கைகளை எமது சக்திக்கு உட்பட்டவகையில் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றோம். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடலாம். இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களின் வீடுகள் முறையற்ற விதத்தில் இராணுவத்தால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, கிடைத்த முறைப்பாட்டையடுத்து படைத்தரப்பின் உயர் அதிகாரிகளிடம் கதைத்து சோதனை இடும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ் பேசக்கூடிய உத்தியோகத்தர் ஒருவரையும் இணைக்க நடவடிக்கை எடுத்தோம். அதே போன்று 2019.06.16 ஆம் திகதி பொசன் வைபவத்துக்காக இராணுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்களின் தலைவர்களுக்கான கலந்துறையாடலில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதாவது இராணுவத்தினர் பொசன் அலங்கார தோரணங்ளை முஸ்லிம் பகுதிகளில் அமைக்குமாறு கட்டாயப்படுத்துவதாக முஸ்லிம்கள் முறையிட்டனர். இது விடயமாக எமது ஆணைக்குழு உடனடியாக செயற்பட்டு கட்டாயப்படுத்த முடியாது. விரும்பியவர்கள் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி இன நல்லினக்கத்துக்காக பொசன் தோரணங்கள் அமைக்கப்பட்டன. முஸ்லீம்கள் அதில் பங்காற்றினர். விஷேடமாக கல்முனை மாநகரசபை இதனை சிறப்பாக செயற்படுத்தியது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸத்தீன் லத்தீப்.

மேலும் எமது பிராந்தியத்தில் தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அணியும் ஹபாயா (அரசால் தடைசெய்யப்படாத) சம்பந்தமாக சிறுகுழுவினரால் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டபோது அது விடயமாக கிடைத்த முறைப்பாட்டிக்கு அமைவாக இரு தரப்பினர்களிடமும் பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தினோம்.
முஸ்லிம்களின் கைதுகள் சம்பந்தமாக கிடைத்த முறைப்படுகளை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டவர் எந்தப்பொலிஸ் நிலையத்தின் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்? தற்போது எங்கு உள்ளார்? போன்ற தகவல்களை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

த கட்டுமரன்: கிடைத்துள்ள முறைப்பாடுகளில் மனிதஉரிமை மீறல்களில் அதிகம் சம்மந்தப்பட்ட தரப்பினராக யாராக இருந்தனர்?
இஸ்ஸத்தீன் லத்தீப்: சில முறைப்பாடுகள் அடிப்படை வாதிகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டதாக காணப்பட்டாலும் அதிகமான முறைப்பாடுகள் அரச நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட மீறல்கள் சம்மந்தமானவையாகவே காணப்படுகின்றன. உதாரணமாக, சில தமிழ் பிரதேச சபைகளும், சில சிங்கள பிரதேச சபைகளும் அவர்களின் பிரதேச எல்லைக்குள் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதை தடைசெய்ததற்கு எதிரான முறைப்பாடுகளைக் குறிப்பிடலாம். இது ஒரு இனத்தின் பொருளாதார உரிமையை பறிக்கும் செயற்பாடாகும். இதே போன்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவர்களினால் 2019.05.31 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆடை சம்பந்தமான சுற்றுநிரூபமாகும். அது அரச அலுவலகங்களில் கடமை புரியும் முஸ்லிம் பெண்களின் கலாச்சார உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இவை மட்டுமன்றி சில பாடசாலைகள், சில வைத்தியசாலைகளிலும் பெண்களின் ஆடை சம்பந்தமான பிரச்சினை எழுப்பப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கலாசார ஆடையுடன் வந்த பொதுமக்களுக்கு அரச நிறுவனங்களில் சேவை பெறமுடியாது போனது. உண்மையில் அரசின் வர்த்தமான அறிவித்தலின் படி பெண்கள் முகத்தை மூடக்கூடாது என்றே கூறப்பட்டுள்ளது. மாறாக பர்தா அணியக் கூடாது எனக் கூறவில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் பர்தாவும் அணியக் கூடாது என்று தனிப்பட்ட முடிவை பல நிறுவனங்கள் எடுத்திருந்தமையை அந்த நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடாக முன்வைக்கப்பட்டது.

த கட்டுமரன்: எமது நாட்டில் பல்லின சமூகம் வாழ்கின்றது. அனைவரும் இணைந்தே வாழவேண்டிய சூழல் உருவாக்கப்படவேண்டும். இன்றுள்ள நிலையில் சமூக நல்லிணக்கததை ஏற்படுத்துவதிலுள்ள சவால்கள் எவை என கருதுகின்றீர்கள்?
இஸ்ஸத்தீன் லத்தீப்: ஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பங்காற்றுகிறார்கள். இதை எதிர்கொள்வது மிகக்கடினமாக உள்ளது.
அடுத்த மிகப்பெரிய சவால், சமூக வளைத்தலங்களும் சில ஊடகங்களாகும். இவை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று சிறு பிரச்சினைகளைக் கூட பெருப்பித்துக்காட்டி ஊடக தர்மத்தை மண்தோண்டி புதைத்துள்ளன. ஊடகங்கள் மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றுள்ளதால் அவர்களின் பொய்களைக்கூட உண்மையென நம்பி மக்கள் முரண்பட்டுக் கொள்கின்றனர்.

த கட்டுமரன்: இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் (Emergency Regulation) அமுலிலுள்ள நிலையில் மனித உரிமைகள் கேள்விக்குறியாகும். இது பற்றி தங்களின் அவதானம் எவ்வாறு உள்ளது?
இஸ்ஸத்தீன் லத்தீப்: உண்மையில் இலங்கையில் மட்டுமல்ல எந்த நாட்டில் அவசர காலச் சட்டம் அமுலில் இருந்தாலும் அது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவே செய்யும் இருந்த போதிலும் தேசிய பாதுகாப்புக் கருதி இச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் அது நீதியான முறையில் நடை பெற்றால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதனை வைத்துக்கொண்டு அனாவசியமான கைதுகள், நீதியற்ற கைதுகள் இடம்பெறுகின்றபோது மனித உரிமை கேள்விக்குறியாகிறது. இந்த அவசரகாலச்சட்டம் குறிப்பாக ஒரு சமூகத்தை குறிவைத்து அமுல்படுத்தப்பட்டது போன்றே அதன் செயற்பாடுகள் அமைகின்றன. இச்சட்டம் நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமுலாகவில்லை. அதாவது நீதியான முறையில் காணப்படவில்லை. இலங்கையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்த வேளையில் தான் முஸ்லிம் பிரதேசங்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள், மத்ரஸாக்கள், வீடுகள் தாக்கப்பட்டன, மீனுவாங்கொடையில் ஒரு நபரும் மரணமானார்.


த கட்டுமரன்: இவ்வளவு சவால்களுக்கம் மத்தியில் எதிர் காலத்தில் மீண்டும் நல்லிணகத்தை ஏற்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கருதுகின்றீர்கள்?இஸ்ஸத்தீன் லத்தீப்: நாட்டில் வாழும் அனைத்து இனத்தவரும் இன்னும் ஒரு இனத்தில் தங்கி வாழ்பவர்கள். இதனால் ஒரு இனம் பாதிப்படையும்போது மற்றைய இனங்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைவர். இதற்கு சிறந்த உதாரணம் 30 வருட கால யுத்தம். அது முடிவுற்ற 10 வருடங்களில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் மீண்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு பின்வரும் நடவடிக்கைகள் நாட்டின் அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளவேண்டும்.
நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாம் இலங்கையர் என்ற உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மதகுருமாரும் சொல், செயலில் தமது மதங்களைப் பின்பற்றுபவர்களாகவும் ஏனைய மதங்களை மதிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். கல்வியாளர்களும் உண்மையான விடயங்களை மக்களுக்க வழங்க வேண்டும். அரசியல் வாதிகள் தமது இருப்பை தக்கவைப்பதற்காக நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்காது உண்மையாக நடந்து கொள்ளவேண்டும். செல்வந்தர்கள் வர்த்தக போட்டிக்காக தமது இனத்தை தூண்டி மற்ற இனத்தவர்களின் வியாபார ஸ்தானங்களை நாசம் செய்தல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருத்தல். ஊடகங்கள் ஊடாக தர்மத்துடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும். வன் பேச்சுகளுக்கு எதிராக அரசு பாராபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
 This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts