மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் ‘வருமான சமத்துவமின்மை’!
மொஹமட் பைறூஸ்
2021 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளை ‘சமத்துவம்’ என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் அதிகரித்துள்ள சமத்துவமின்மை இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்தத் தொனிப் பொருள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆனாலும் மனித உரிமைகள் என்ற எண்ணக் கரு மிகச் சரியாக உலக நாடுகளில் நடைமுறையாகிறதா என்றால் அதற்கான விடை கவலை தருவதாகும்.
உலகம் முழுவதும் அனைத்து மனித உரிமைகளும், அனைத்து மக்களாலும், எல்லா நாடுகளிலும், எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்கப்படுகின்ற சூழ்நிலை நிலவுகின்ற பொழுதுதான் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான ஒரு சூழல் பிறக்கும். ஆனால் அவ்வாறான ஒரு நிலை இன்னும் வரவில்லை. உலகெங்கிலும் ஏதோ ஒரு மூலையில் இந்தக் கணத்தில் கூட மனித உரிமைகள் ஏதோ ஒரு வகையில் மீறப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மனித உரிமை மீறல்களால் ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுக்க கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வருமான சமத்துவமின்மை
உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி, ஆயுத மோதல்கள், பொது சுகாதார அவசர நிலைகள், உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் என்பன மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இவற்றுக்கு மத்தியில்தான் வருமான சமத்துவமின்மை வசதிபடைத்தவர்களுக்கும் ஏழைகளுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிசலாக்கியுள்ளது.
உலக சமத்துவமின்மை அறிக்கை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான லுகாஸ் சான்செல் தலைமையில் அண்மையில் “உலக சமத்துவமின்மை அறிக்கை” வெளியிடப்பட்டது. இதன் கண்டறிதல்களின்படி 2021ஆம் ஆண்டில், உலக அளவில் முதல் 10 சதவீதத்தினர் 52 வீதம் வருமானத்தையும், 40 சதவீத நடுத்தர மக்கள் 39.5 வீத வருமானத்தையும், மீதமுள்ள 50 சதவீத மக்கள் வெறும் 8.5 வீத வருமானத்தையும் ஈட்டுகின்றனர். இது வருமானமீட்டும் திறன் அடிப்படையில் கணக்கிடப்படுள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த சொத்து மற்றும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், முன்னணி 10 சதவீத பணம் படைத்த மக்கள் 76 வீத வளத்தையும், 40 சதவீத நடுத்தர மக்கள் 22 வீத வளத்தையும், மீதமுள்ள 50 வீத மக்கள் வெறும் 2 வீத வளத்தையும் வைத்துள்ளனர்.
1945 அல்லது 1950 முதல் 1980 வரையான காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் சமத்துவமின்மை குறைந்து வந்தது. ஆனால் 1990களிலிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது. அதிலும் சமீபத்தைய கொவிட் 19 உலகளாவிய பரவலைத் தொடர்ந்து இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுடனான சமத்துவமின்மை மேலும் விரிசலடைந்துள்ளது.
ஆய்வை நடத்திய உலக சமத்துவமின்மை -2022 அறிக்கையின் முதன்மை ஆசிரியரான லூகாஸ் சான்சல், “கோவிட் நெருக்கடி செல்வந்தர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது. “இருப்பினும், பணக்கார நாடுகளில், அரசாங்கத்தின் தலையீடு வறுமையின் அதிகரிப்பைத் தடுத்துள்ளது, ஏழை நாடுகளில் இது நடக்கவில்லை. இது வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சமூக அரசுகள் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் நிதி உலகமயமாக்கல் நடந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஏற்ற தாழ்வுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் உச்சத்தில் இருந்ததைப் போலவே இன்றும் அவர்கள் உச்சத்தில் உள்ளனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கமைய, நமது அயல்நாடான இந்தியாவிலும் வருமான சமத்துவமின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் 0.1 சதவீத மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு வருமானம் குறைவாக உள்ள 50 சதவீதத் தினரை விட அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பொருளாதார சமத்துவமின்மையை இந்தியா முழுவதும் தற்போது காண முடிகிறது. அதாவது 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு வருமான சமத்துவமின்மை அதிகமாகியிருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட உலக சமத்துவமின்மை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த சமத்துவமின்மை சீராக அதிகரிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியாவில் சமத்துமின்மை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகள், சீனாவில் சமத்துவமின்மை இருந்தாலும் அது குறைந்த வேகத்தில்தான் அதிகரித்துள்ளது.
பணக்காரர்கள் தொடர்ந்தும் பெரும் பணக்காரர்களாக முன்னேறிக் கொண்டு செல்வதும் ஏழைகள் தொடர்ந்தும் பரம ஏழைகளாக மாறிக் கொண்டு செல்வதும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் தீவிர விளைவேயன்றி வேறில்லை எனலாம்.