மனிதர்களின் கடப்பாடு விலங்குகளை அழிப்பதா? பாதுகாப்பதா?
ஹயா அர்வா
உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சார்ந்த வன விலங்குகளும் மிக இன்றியமையாதவை. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே மனித இனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்தான் உலக அளவில் சுமார் 27,150 வன விலங்குகள் அழிவின் விளிம்பிலும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில், நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 40 சதவீதமும், பாலூட்டிகள் 25 சதவீதமும், தாவரங்கள் 34 சதவீதமும், பறவைகள் 14 சதவீதமும், சுறா உள்ளிட்ட மீன் இனங்கள் 31 சதவீதமும், பவளப் பாறைகள் 33 சதவீதமும் அழிவின் விளிம்பில் உள்ளன. இது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள மொத்த வன விலங்குகளின் எண்ணிக்கையில் 27 சதவீதமாகவுள்ளது.
எதிர்வரும் சுமார் 50 வருட காலத்தில் பெரும் நாடுகளிலுள்ள மனிதர்கள் அனைவரும் அழிந்து ஒரு சில சின்னஞ்சிறிய நாடுகளில் மட்டுமே மனிதர்கள் பிழைத்திருக்கும் நிலை வந்தால் எப்படியான ஒரு பதற்றமும், பீதியும் மனிதர்களுக்கு ஏற்படும்? ஆனால், எந்த ஒரு பதற்றமும், பீதியும் இல்லாமல் அதுதான் நமது துணை இனங்களான மிருகங்களுக்குக் கடந்த 50 வருடங்களில் நடந்துள்ளது என்கிறது WWF (World Wide Fund for Nature) அமைப்பின் `Living Planet’ ஆய்வறிக்கை. 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதுகெலும்பு இனங்களில் சுமார் 60 சதவீதமானவை மனித நடவடிக்கைகளாலும், ஆதிக்கத்தாலும் அழிந்துள்ளன என்கிறது இந்த அறிக்கை.
நாம் எந்தளவு அழிவை மிருகங்களுக்கும் இயற்கைக்கும் தந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அபாயமணி இது என்பதை ஆய்வறிக்கையின் அணிந்துரையில் கூறுகிறார் இதன் நிர்வாக இயக்குநர் மார்கோ லம்பர்டினி. மொத்தமாகப் பூமியில் நடந்துள்ள மாற்றத்தைக் கண்காணித்துள்ளது இந்த 75 பக்க ஆய்வறிக்கை. நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை சமீபத்தில் உலகம் மாறியுள்ளது, இயற்கை நமக்கு ஏன் தேவை, பல்லுயிர்களைக் காப்பது ஏன் மிகமுக்கியம் என்பதைப் புள்ளிவிபரங்களுடன் விளக்குகிறது.
உலகில் மனிதர்களினால் விலங்குகள் மட்டுமல்ல மனிதர்களும் அழிக்கப்படுவதனால் விலங்குகளும் மனிதர்களும் போட்டிபோட்டு அழிந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் அழிந்து வரும் விலங்கினங்கள், அதற்கான காரணங்கள் தொடர்பிலும் அவற்றை பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்தும் பார்ப்போம்.
பண்டைய காலத்தில் மனிதனுடைய வாழ்வியல் முறைகள், வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளன. இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் இயந்திர மயமாகிவிட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.
1500 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அழிந்த மிருக இனங்களில் 75 வீதத்துக்கு அதிகமானவற்றுக்கு மனித நடவடிக்கைகள்தாம் காரணமாக இருந்துள்ளனவாம். இதில் விவசாயத்துக்காக அழிக்கப்பட்ட காடுகளும் ஒரு முக்கிய காரணம். இன்றும் வாழ்வினங்களுக்கு அதே வேட்டையாடுதல், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகின்றன என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தாம். மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும். இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வருடந்தோறும் 6 சதவீதமான காட்டு வாழ் உயிரினங்கள் அழிவுக்குள்ளாகின்றன.
நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது 300 கோடிக்கும் மேலான மனிதர்களையே நேரடியாகப் பாதிக்கிறது. தற்போது உலகில் வெறும் கால் பங்கு நிலம்தான் மனித பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்து வருகிறது. 2050ஆம் ஆண்டை எட்டும்போது இது பத்தில் ஒரு பங்காகிவிடும். இந்த நிலச் சீரழிவால் மகரந்த சேர்க்கை செய்யும் தேனீக்கள், பூச்சிகள் தொடங்கி பெரிய மிருகங்கள் வரை பாதிப்புகளைச் சந்திக்கின்றன.
கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கினங்களும் 140 பறவையினங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின் படி மேலும் சுமார் 300 இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சுமார் 15 சதவீதமான பாலூட்டிகள் மற்றும் 11சதவீதமான பறவை இனங்கள் அழிந்து வரும் உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் நிபுணர்களின் ஆய்வின்படி பூமியின் மனிதனின் செயல்களின் காரணமாக, 150 வகை விலங்குகள் ஏற்கனவே மறைந்துவிட்டன. முழு அழிவு அச்சுறுத்தலின் கீழ் 600 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
இதேவேளை இலங்கையில் எழுபது வகைக்கும் அதிகமான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துள்ளதாக அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. இலங்கையில் பலவித விலங்குகள் மற்றும் தாவர வகைகள் அழிவின் விளிம்பில் உள்ளன அல்லது அழிந்து விட்டன என்றும் அரசின் அறிக்கை கூறுகிறது. இலங்கையில் அழிந்து வரும் நிலையில் உள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த சிவப்பு தரவுகள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தொகுக்கப்படுகிறது. இலங்கையில் இறுதியாக இப் புத்தகம் தொகுப்பு 2012 இல் வெளியிடப்பட்டது. அதில் உள்ள தரவுகளின் படி இலங்கையிலிருந்து குறைந்தது 72 வகை உயிரினங்கள் அழிந்து விட்டன அல்லது மறைந்து விட்டன என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான வகை உயிரினங்கள் குறித்து அரசின் அந்த சிவப்பு அட்டவணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த உயிரினங்களின் இருப்பின் அடிப்படையில், அவை பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அழிந்து விட்டவை, அழிவின் விளிம்பில் இருப்பவை, மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவை, அண்மைக் காலங்களில் அளவில் பெருகியுள்ளவை என அவை பட்டியிலடப்பட்டுள்ளன.
19ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் யானைகள் சுமார் 65 சதவீதமான வரை அழிவடைந்துள்ளது. தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதை விட, தங்களது வாழ்விடங்களை இழப்பதாலும், மனிதர்களோடு ஏற்படும் மோதல்களாலுமே அதிகளவான ஆசிய யானைகள் ஆபத்துக்குள்ளாகின்றன.இலங்கையின் யானைகள், IUCN இனால் (International Union for Conservation of Nature) 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் யானைகளை வேட்டையாடுவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும், சட்டவிரோதமாக யானைகளை வேட்டையாடுதல் ஒருவருக்கு மரண தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவல்லது.
இலங்கையின் யானைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை வாழிடங்களை இழத்தலாகும். அதிகரித்துவரும் காடழிப்பு யானைகளின் இருப்பிடங்களை வெகுவாகக் குறைத்துள்ளது கண்கூடு. தொடர்ந்தும் அபிவிருத்தித் திட்டங்கள், குடியேற்றங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை இப்பிரச்சினையை இன்னும் இன்னும் அதிகரிக்கும்.
இலங்கையில் காணப்படும் 204 ஊர்வன இனங்களில் 114 இலங்கைக்கு தனிச் சிறப்பானவையாகும். மேலும் 17 ஊர்வன இனங்கள் அவற்றின் துணை இன அடிப்படையில் இலங்கைக்கு தனிச் சிறப்பானவையாக உள்ளன. இப்பகுதியில் காணப்படும் மீனினங்களில் எட்டு வகை இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையும் அரிதாகிவிட்டவையும் ஆகும். உலகில் ஆகக் கூடுதலான ஈரூடக வாழி இனங்கள் இலங்கையிலேயே காணப்படுகின்றன.
இலங்கையின் தாழ்நில மழைக்காடுகளில் காணப்படும் இலங்கைக்கேயுரித்தான 250 க்கும் மேற்பட்ட தவளையினங்கள் மிகக் குறைந்தளவு பரப்பளவிலான பகுதிகளிலேயே விரவிக் காணப்படுகின்றன. அவற்றிற் பல அரை சதுர கிலோமீற்றர் போன்ற அளவுகளுக்குள்ளேயே தம் வாழிடத்தைக் குறுக்கிக் கொண்டுள்ளன. அவ்வினங்களும் தற்காலத்தில் வாழிடமிழத்தலால் அழிவுறும் நிலையை எதிர்நோக்குகின்றன
ஆய்வொன்றின் படி, இலங்கைக்கேயுரித்தான தவளை இனங்களில் பதினொன்று அதற்கு முந்திய பத்தாண்டுகளில் முற்றும் அழிந்து விட்டுள்ளன. அத்துடன், மேலும் 11 தவளை இனங்கள் அழிவுறும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. அவற்றின் வாழிடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினாலேயன்றி அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகக் கடினம்.
இதேநேரம் சட்டவிரோத மிருக வேட்டைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. தற்போதுள்ள வனவிலங்கு சட்டம் சட்டவிரோத வேட்டைக்காரர்களைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருந்தாலும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை . வனவிலங்கு சட்டத்தின் பிரிவுகள் 30, 31, 314, 3113, 12 என்பன மிருகங்கள் வேட்டையாடப்படுவதிலிருந்து பாதுகாக்கின்றன.இந்த சட்டப் பிரிவுகளால் பாதுகாக்கப்படாத மிருக இனங்களை மட்டுமே இலங்கையில் வேட்டையாட முடியும். இரவிலும், காடுகளில் விஷம், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடுவதில் கட்டுப்பாடுகள் உண்டு. தாவரம், மற்றும் விலங்கு சட்டத்தின் பிரகாரம் விஷம் கொடுத்து மிருகங்களைக் கொல்வது சட்டவிரோதமானது.
ஆனால் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் அதிகமாக உள்ள யால, நக்கில்ஸ் மலைத் தொடர், டன்வில, சிங்கராஜா, வங்கமுவ, ஹம்பாந்தோட்டை வனவிலங்கு பூங்காக்களிலும், காட்டுப் பிரதேசங்களிலும் பல மிருகங்கள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு விட்டதாக சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இருப்பினும், சட்டவிரோத வனவிலங்கு வியாபாரம் இலங்கையைத் தளமாகக் கொண்டு மிக வேகமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாததும், சட்டத்தில் திருத்தம் செய்யப்படாததுமே மூலகாரணமாகும்.
வன விலங்குகள் அழிவடைவதற்கான காரணங்களாக மனிதனின் வேட்டையாடும் முறை, மாற்றமடையும் காலநிலை, காட்டுத்தீ, இயற்கை அனர்த்தங்கள், காட்டு நிலங்களை பயன்படுத்தல் ,போதிய அறிவின்மை,இரசாயன உள்ளீடுகளின் பாவனை, வியாபார நோக்கத்திற்காக சட்டவிரோதமான முறையில் அதிகளவில் யானைகளைக் கொல்லுதல் , வளர்முக நாடுகளிலிருந்து அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு மிருகக் காட்சிச் சாலைகளுக்கு அருமையான விலங்குகளைப் பிடித்து அனுப்புதல், யுத்த நடவடிக்கைகள், அரச கொள்கைகள் போன்றவற்றினைக்கூற முடியும்.
எனவே வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகளாக,வனங்களை மற்றும் தேசிய சரணாலயங்களை இடையில் மூடிவைக்கும் காலமொன்றை அறிமுகம் செய்தல்,வனவிலங்குகளின் உறைவிடங்களைப் பாதுகாத்தல்,பொதுமக்களுக்கு அறிவூட்டல், புதிய சட்டங்களை ஏற்படுத்துதலும், ஏற்கனவே உள்ள சட்டங்களை வலுவடையச் செய்தல், காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது விலங்கினங்களைப் பாதுகாக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளல், காட்டு விலங்குகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அழிவடையும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாத்தல், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளைப் பெற்று வனவிலங்குகளைப் பாதுகாத்தல் என்பனவற்றை முன்னெடுக்க வேண்டும்.