மோதல்கள் இல்லாத சமூகத்தை நாம் எங்குமே காண முடியாது. மோதல்கள், சச்சரவுகள் மற்றும் குற்றங்களைத் தீர்ப்பதற்கான பல்வேறு அமைப்புகள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் மோதல்கள் வெவ்வேறு நபர்களிடையேயும் வெவ்வேறு வடிவங்களிலும் வெளிப்படுகின்றன. மோதல்களைத் தீர்த்து வைப்பதற்காக நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சபைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில், மத்தியஸ்தம் செய்யக்கூடிய மோதல்களை நீதிமன்றத்தின் நீண்டகால வாதாட்டத்திற்கு இட்டுச் செல்லாமல் சுமூகமாகத் தீர்க்கக் கூடிய அமைப்பாக மத்தியஸ்த சபை அடையாளம் காணப்படுகிறது.

பாரம்பரிய நீதித்துறை அமைப்பினுள் உள்ள நிறுவனங்களை நாடாமல் தகராறு மற்றும் மோதல்களைத் தீர்ப்பதற்கான மாற்றுத் துணை மூலோபாயமாக மத்தியஸ்த சபை அறிமுகப்படுத்தப்படலாம்.

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நமது நாட்டில் மத்தியஸ்த சபை அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு மத்தியஸ்த சபை  நிறுவப்பட்டுள்ளது. மத்திஸ்த சபைக்குத் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார், மேலும் அவருக்கு கீழ் பல மத்தியஸ்த உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு சர்ச்சையைத் தீர்க்க மூன்று மத்தியஸ்தர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படும். இங்கு மத்தியஸ்த சபையின் பங்கு என்னவென்றால், இரு தரப்பினரையும் வரவழைத்து அவர்களின் சர்ச்சைக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை செய்தல் மற்றும் சர்ச்சைக்குத் தீர்வு காண தேவையான உதவிகளை வழங்குதல் என்பவையாகும்.

ஒரு மத்தியஸ்த சபையானது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் சார்பாக முடிவுகளை எடுக்கவோ அல்லது தவறான தரப்பிற்குச் எதிராக தீர்ப்பளிக்கவோ அல்லது ஒரு தரப்பு தவறு என்று நிரூபிக்கவோ செயற்படுவதில்லை. மாறாக இரு தரப்பினருக்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்தி, அந்த இரு தரப்பினரும் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு உதவுவதே அதன் பணியாகும்.

நீதிமன்றத்திற்குச் செல்லாமல், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான எளிதான வழி என மத்தியஸ்த சபைகளைக் குறிப்பிடலாம். மேலும், மத்தியஸ்த சபையின் ஊடாக மோதல்களைத் தீர்ப்பது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. குறிப்பிடப்பட்ட சர்ச்சைகளில் 60% தீர்வுகள் மத்தியஸ்த சபைகளின் ஊடாக எட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடுமையான குற்றங்கள் தொடர்பான சர்ச்சைகள் மத்தியஸ்த சபைக்குக் கொண்டு வரப்பட முடியாது. மத்தியஸ்த சபையால் தீர்க்கப்படக்கூடிய தகராறுகளில் சிவில் தகராறுகள் மற்றும் சிறு குற்றவியல் மோதல்கள் என்பவை அடங்கும்.

சிவில் தகராறில் பணம் செலுத்தாத தகராறுகள், கூலி செலுத்தாத தகராறுகள், வீட்டு வாடகை செலுத்தாத தகராறுகள், அசையா சொத்து தகராறுகள் போன்றவை அடங்கும்.

மேலும், தாக்குதல், காயம், துன்புறுத்தல் அல்லது இடைஞ்சல் போன்றவற்றால் எழும் மோதல்கள் மத்தியஸ்த சபைக்குப் பரிந்துரைக்கப்படலாம். ஒரு நபரின் உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல், அவதூறு அல்லது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தல் போன்றவற்றால் ஏற்படும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபைக்கு அவை கொண்டு செல்லப்படலாம்.

மத்தியஸ்த சபையில் ஒரு தரப்பினைத் திருத்துவதோ அல்லது மறு தரப்பு தவறு செய்ததாக தீர்மானிப்பதோ நடைபெற மாட்டாது, மாறாக இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டுவதை சாத்தியமாக்குவதே இதன் பொறுப்பாக உள்ளது. மேலும், ஒரு மத்தியஸ்த சபையினால் ஒரு சர்ச்சை தீர்க்கப்படும் போது, அதனை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதால் உண்டாகும் பணத்தையும் நேரத்தையும் சேமிக்க முடிகிறது.

ஒரு மத்தியஸ்த சபையின் மூலம் தீர்க்க முடியாத மோதல்களைத் தீர்ப்பதற்காக அவற்றை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts