மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி I)
சமஷ்டி என்பது தெற்கில் உள்ள சிங்களவர்களிடையே எல்லையற்ற அச்ச உணர்வை உருவாக்கும் ஒரு கருத்தாகும். இதேபோல் ஒரு ஒற்றையாட்சி என்ற கருத்து வடக்கில் உள்ள தமிழ் மக்களிடையே அதே உணர்வை ஏற்படுத்துகின்றது. இரண்டு எண்ணக்கருக்களும் வெறுமனே மத்தியிலிருந்து மாகாணத்திற்கு அதிகாரத்தை பரவலாக்கும் அதிகாரப் பகிர்வு வழிமுறைகளாகும். இலங்கை பாணியிலான தேசிய கேள்வியை அவர்களால் படிப்படியாக வெளிப்படுத்த இன்னமும் முடியவில்லை. இந்த எண்ணக்கருக்களின் சரியான பயன்பாடு ஒரு குழப்பத்தில் உள்ளது, ஏனெனில் சாதாரண மக்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை. மறுபுறம், இந்த பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்கள் அவற்றை அவசியமானதாக கருதி விளக்குவதில்லை. எனவே, இந்த எண்ணக்கருக்களின் சரியான பொருள் மங்கலாகிவிட்டது.
மதச்சார்பின்மை என்பது இலங்கையிலும் ஒரு சிதைவடைந்த எண்ணக்கருவாகும். மதச்சார்பின்மை குறித்த சமீபத்திய கலந்துரையாடல் பொது பிரதிநிதித்துவக் குழு அறிக்கையின் பரிந்துரைகளுடன் 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்தே தொடங்குகிறது. புதிய அரசியலமைப்பிற்கும் மதத்திற்கும் இடையிலான உறவு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்தது. இது அரசாங்கத்தின் தன்மை குறித்த பலரிடையேயான முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாகும். PRC அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து முந்தைய அரசாங்கத்திற்கு விழிப்புணர்வுக்கு பிந்தைய திட்டம் இல்லாததால், இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள், தங்கள் சொந்த அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பரிந்துரைகளை பகுப்பாய்வு செய்தன.
நவீன உலக அரசியலமைப்புவாதத்தில் அரசின் நிலையை தீர்மானிப்பதில் கருத்தியல் மதச்சார்பின்மை ஒரு முக்கியமான தூணாகும். இந்த கட்டுரை இலங்கை அரசியல் தொடர்பாக மதச்சார்பின்மை நடைமுறை குறித்த ஆரம்ப விசாரணையாகும்.
சமத்துவத்துடன் மதச்சார்பின்மை பற்றிய கருத்தை புரிந்துகொள்தல்
மதச்சார்பின்மை என்ற எண்ணக்கருவுக்கு இரண்டு முதன்மை அர்த்தங்கள் உள்ளன,
முதலாவது மதத்தை அரசிலிருந்து பிரிப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, சட்டமியற்றுபவர்களுக்கு மத-சார்பு-சட்டங்களை உருவாக்க இடமளிக்கவில்லை என்பதாகும். இந்த சூழலில், ஒவ்வொரு மதத்திற்கும் நடுநிலையான மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை பராமரிக்க அரசு முயல்கிறது. இந்திய சட்ட எழுத்தாளர் பி. சக்ரபாரதி, இந்த யோசனையை அரசுக்கும் மதத்திற்கும் இடையில் ஒரு “ஊடுருவமுடியாத சுவரை” உருவாக்கியதாக குறிப்பிட்டார்.
மதச்சார்பின்மையின் இரண்டாவது விளக்கம், எல்லா மதங்களையும் சம அடிப்படையில் மதித்தலாகும். இந்த யோசனை ஒரு அரசு நடுநிலையானது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. முறையான விளக்கங்களின்படி, சமத்துவம் என்பது அனைவரும் சமமாக நடாத்தப்படல் என்று அழைக்கப்படுகிறது. சமத்துவம் என்ற கருத்தின் அடிப்படை விளக்கம் ஒரு சமத்துவ சமுதாயத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட சில நபர்களுக்கான சிறப்புக் கவனத்தை ஊக்குவிக்கிறது. ஜான் ரோல்ஸ் இன் கருத்துப்படி, கல்வியில் பின்தங்கிய குழந்தைக்கு சிறப்பு கவனம் செலுத்துவது சமத்துவமின்மை அல்ல. ஏனெனில் அந்த சிறப்பு கவனத்தின் இறுதி நோக்கம் சமத்துவத்தை உருவாக்குவதாகும். இந்த தர்க்கத்தை சூழலுக்கு பயன்படுத்துகையில், ஒரு மதம் அரச விவகாரங்களில் அல்லது சட்டத்தில் தலையிட்டுக்கொண்டே இருந்தால், மதச்சார்பின்மையின் அடித்தளம் கவிழ நேரிடும். மாறாக, மத சமத்துவத்தை ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்துவது மதச்சார்பின்மையின் தெளிவான அர்த்தத்திற்கு எதிராக கருதப்படாது.