முக்கியமானது

மக்கள் செய்யவேண்டியது: இனவாத அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.

பி.பொன்னரசு

சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும்.

ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னரான முஸ்லிம் மக்கள் மீதான மோதுகை நிலைஇ வெளிப்பார்வைக்கு தணிந்தது போன்று தெரிந்தாலும்இ அது பல மறைகரங்களால் இன்னமும் நீடித்தபடியே உள்ளது. இவை பற்றி மூவின மக்களோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டவரும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவரும் சர்வதேச மனித உரிமைக்கான வளவாளர் அய்யூப் அஸ்மின் த கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வி.

த கட்டுமரன் : ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னரான முஸ்லிம் மக்களின் மனோநிலை தற்போது எப்படியுள்ளது?

அய்யூப் அஸ்மின்: ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் உடனடியாக முஸ்லிம் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மிகவும் குறுகிய காலத்தினுள் அதனது உண்மையான சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அதேநேரம் அதனை இயக்கிய சக்திகள் குறித்தும் ஓரளவுக்கு வெளிப்பட்டிருந்தது. இந்த தாக்குதல்களின் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் மீது தொடுக்கப்பட்ட பலவிதமான வன்முறைகள் அதன் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருந்ததால் முஸ்லிம் மக்கள் தமது அடுத்தநிலை குறித்து ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் அளவுக்குச் சுதாரிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

முஸ்லிம் மக்களின் மீதான வெறுப்புப் பிரசாரம், பொருளாதாரத்தின் மீதானபகிஷ்கரிப்புக்கள், அரச நிர்வாகப் பயங்கரவாதம், இலங்கையின் நீதித்துறையின் பக்கச்சார்பான செயற்பாடுகள் எனப் பலவிடயங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக இருந்தாலும், தூரநோக்கோடு பார்க்கின்றபோது இத்தகைய அநீதிகள் அனைத்துக்கும் ஆயுள் மிகமிகக் குறைவானது என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

சிங்களப்பேரினவாதத் தலைவர்களால் வீரத்தை அவர்களுடைய அடியாட்களுக்கு ஊட்டமுடியாமல் இருக்கின்றது. எனவே தோல்விப்பயத்தை அவர்களுக்கு ஊட்டுகின்றார்கள்.

வர்த்தகம், சிங்களமக்களின் வாழ்வாதாரமல்ல அது அவர்களுக்குத் தெரியாத கலையுமாகும், இப்போது அவர்கள் வியாபாரத்தை நோக்கி நகர்ந்தாலும் அவர்களால் அதிலே நீடித்திருக்க முடியாது, ஏற்கெனவே தோற்றுப்போன பல செய்திகள் இருக்கின்றன. எனவே அவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கின்ற போது இப்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையானது தற்காலிகமானது, எனவே முஸ்லிம்கள் சுதாரித்துக் கொள்ளும் நிலையில் இப்போது இருக்கின்றார்கள். என்றாலும் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களில் இருந்து மீண்டெழுந்து வருவதற்கு சற்றுக் காலஅவகாசம் அவர்களுக்குத் தேவைப்படும் என்றே நான் கருதுகின்றேன்.

த கட்டுமரன்: முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை ஆயுதமாக்கும் அவசியம் என்ன?

அய்யூப் அஸ்மின்: ‘தோல்விப்பயம்’. சிங்களப்பேரினவாதத் தலைவர்களால் வீரத்தை அவர்களுடைய அடியாட்களுக்கு ஊட்டமுடியாமல் இருக்கின்றது. எனவே தோல்விப்பயத்தை அவர்களுக்கு ஊட்டுகின்றார்கள். எனவே தோல்விப் பயத்தின் காரணமாக வெகுண்டெழுகின்ற சிங்கள இளைஞர்கள் நாசங்களை உண்டுபண்ணுகின்றார்கள். இதுதான் நீண்டகாலமாக இந்தநாட்டிலே இடம்பெறுகின்றது.

த கட்டுமரன்: ‘தோல்விப்பயம்’ என்பதனால் நீங்கள் குறிப்பது என்ன?

சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்கினால் அவர்கள் மேலோங்கி விடுவார்கள் என்று கருதுகின்ற ஒரு குழுவினர், மிகப் பிழையான, மிகப்பொய்யான பிரசாரங்களின் மூலம் ‘நாம் பின்தங்கிவிடுவோம், தோற்றுவிடுவோம்…என்ற விடயங்களைக் கூறுவது ‘தோல்விப்பயம்’. இதனால் சிங்களமக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றார்கள். 1980 களிலே தமிழ்மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தார்கள், இப்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றார்கள். ஆனால் இவ்வாறான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிங்களமக்கள் எதிர்நோக்கும் பின் விளைவுகள் மிகப்பாரதூரமானவை. அதன்மூலம் அவர்கள் உலகநாடுகளோடு ஒப்பிடும்போது எப்போதும் பின்தங்கியே இருக்கப்போகின்றார்கள்.

திடீரென ஏற்படுத்தப்படும் வன்முறையை எதிர்கொள்ள சாதாரணமக்களால் ஒருபோதும் முடியாது, அவர்களால் அழிவுகளைத் தடுக்கமுடியாது. சிறுபான்மை மக்களோடு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஒன்றைப் பெரும்பான்மையினர் அறிவித்தால் அப்போது பெரும்பான்மையினரின் ஒட்டுமொத்தப் பலவீனமும் வெளிப்படும்.

தமிழ் மக்களோடும் சிங்களப் பேரினவாதிகள் பிரகடனப்படுத்தாத யுத்தமொன்றையே முன்னெடுத்தார்கள்; ஆனால் தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்கள் சிங்கள இராணுவத்தினரின் மீது யுத்தத்தைப்பிரகடனப்படுத்தினார்கள், அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தத்தை சாதாரண சிங்கள மக்களால் எதிர்கொள்ளமுடியாமல் போயிற்று. இறுதியாக சர்வதேச ஆதரவோடு, பலவிதமான சதிகளை மேற்கொண்டு, பல பில்லியன் ரூபாய்களைச் செலவு செய்தே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இதனைச் சிங்கள தேசம் வெற்றியாகக் கருதினாலும், அது முழுமையான தோல்வி என்பதே பல அவதானிகளுடைய கருத்தாகும்.

த கட்டுமரன்: முழுமையான தோல்வியா? ஏப்படிச் சொல்கிறீர்கள்?

பல ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றமை தொட்டு, தமிழ் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நோக்கத்தை அவர்களால் இதுவரை சிதைக்க முடியாமல் போய்விட்டமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டியே அது ஒரு முழுமையான தோல்வி என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தமொன்றை சிங்களப் பேரினவாதம் சிறுபான்மையினரின் மீது முன்னெடுக்காது. ஆனால் பிரகடனப்படுத்தப்படாத இத்தகைய வன்முறைகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களை அடக்கியாள்வதே அவர்களின் நவீன உத்தியாக மாறியிருக்கின்றது.

த கட்டுமரன்: இந்த தோல்விப்பயத்தை ஊட்டி வன்முறைக்கு வித்திட்ட குழுவினர் யாரென எண்ணுகிறீர்கள்?

அய்யூப் அஸ்மின்: சிங்களப் பேரினவாதிகள், மஹிந்தராஜபக் வின் தலைமையிலான பொதுஎதிரணி முக்கியஸ்தர்கள், மைத்திரிபால சிறிசேனா ஆகிய மூன்று அணியினருமே முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை முழுமையாக ஒவ்வொரு கட்டத்திலும் இயக்கியவர்கள். மஹோசான் பலகாய, டொன் பிரசாத் தலைமையிலான குழுவினர், மதுமாதவ தலைமையிலான குழுவினர், விஷேட புலனாய்வுப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் என மிக முக்கியமானவர்கள் நேரடியாகக் களத்திலே காணப்பட்டார்கள் எனச் தற்போதைய சாட்சிகள் குறிப்பிடுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறை இவர்களைக் கைது செய்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முனையவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் தருகின்ற விடயம். அதுமட்டுமன்றி மாத்திரமன்றி இந்த நாட்டிலே நிலவும் அராஜகத்தின் உச்சநிலையையும் அது பறைசாற்றுகின்றது.

த கட்டுமரன்: இந்த வன்முறைகளைத் தடுக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறிவிட்டனர் எனக் கூறலாமா?

அய்யூப் அஸ்மின்: இத் தாக்குதல்கள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை. இவற்றைத் தடுக்கும் சக்தி முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமல்ல, நாட்டின் பிரதமருக்குக் கூட இருக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான நிலைமையாகும்.

த கட்டுமரன்: வன்முறைகளின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் எதுவுமே செய்யவில்லை.
ஆனால் நிலைமை சுமுகமான பின்னர், முஸ்லிம்களை அரசு காக்கத் தவறியதாக கூறி,
முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அமைச்சுப் பதவிகளைத் துறந்தனர். அதுபற்றி….?

அய்யூப் அஸ்மின்: அது ஒரு அரசியல் தீர்மானம்;. அது ஒரு பலமான அரசியல் செய்தியை இலங்கை மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் முன்வைக்கும் தீர்மானம்;. அவ்விடயத்திலே பலரும் பல்வேறு கருத்து நிலைகளைக் கொண்டிருந்தாலும் அது ஒரு மிகப்பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. சிங்களப் பேரினவாதம் தற்போதைய ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கி நகர்த்திய மிகப்பெரும் நகர்வை ஓரிரு மணிநேரத்தினுள் நிர்மூலமாக்கியது. எனவேதான் அந்தத் தீர்மானம் மிகுந்த முக்கியத்துவத்தோடு நோக்கப்படுகின்றது.
சுயாதீன விசாரணைகளுக்கான சூழ்நிலைகளையும், முஸ்லிம் சமூகத்தின் மீதான தேவையற்ற அழுத்தங்களைக் கைவிடும் சூழ்நிலைகளையும் அந்தத் தீர்மானம் ஏற்படுத்தியது என்றும் கூறமுடியும். எனவே தான் அது அவசியமானது.

த கட்டுமரன்: தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவான கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முஸ்லிம்கள் ஏன் இப்போது எதிர்க்கின்றனர்?

அய்யூப் அஸ்மின்: குறித்தவிடயம் இனரீதியானதாக அமைந்திருப்பதே இந்த கொதிநிலைக்குக் காரணமாகும். கல்முனை பிரதேச செயலகம் தமக்கு கிடைத்துவிட்டால் தமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று தமிழ் மக்கள் எண்ணுமளவுக்கும், அவ்வாறு பிரதேச செயலகத்தைக் கொடுத்துவிட்டால் நாடே இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது என்று எண்ணுமளவுக்கு முஸ்லீம்களும் உசுப்பேற்றப்பட்டிருப்பதைப் இங்கு பார்க்கமுடியும்.

இலங்கையில் பிரதேச செயலக உருவாக்கங்கள், தரமுயர்த்தல் போன்ற விடயங்கள் நிர்வாகரீதியாக அணுகப்படல் வேண்டுமே தவிர அது அரசியல் ரீதியாக அணுகப்படக்கூடாது. ஆனால் இது இப்போது இனரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கொதிப்படைந்திருக்கும் விடயமாக மாற்றப்பட்டிருக்கின்றது.

த கட்டுமரன்: இந்த விவகாரத்தை எவ்வகையில் சுமுகமாக தீர்க்கமுடியுமென எண்ணுகிறீர்கள்?

அய்யூப் அஸ்மின்: நிர்வாக நடைமுறைகளுக் கூடாக மேற்படிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியும். ஒரு பிரதேச செயலகம் அமைவதற்கு ஆகக்குறைந்தது எத்தனை கிராமசேவையாளர் பிரிவுகள், நிலப்பரப்பு, சனத்தொகை அவசியம் என ஒரு முறைமை இருக்கின்றது. அதனடிப்படையில் இதனை அணுகமுடியும்,

அடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் நியாயப்பாடுகளை எழுத்து வடிவில் பெற்று அதனை முறைப்படியான ஒரு ஆய்வுக்குட்படுத்தி பொதுநிலைப்பாட்டொன்றை மக்கள் மத்தியில் உருவாக்கமுடியும், இதனை கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்கமுடியும்.

த கட்டுமரன்: தற்போது நாட்டில் சிங்கள,முஸ்லிம்,தமிழ்மக்களிடையே ஒருமுக்கோண முரண்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தீர்க்க அரசு என்ன செய்ய வேண்டும்?

அய்யூப் அஸ்மின்: முக்கோண முரண்நிலை என்பதை விடவும் எல்லா இனங்களுக்கிடையிலும் பரஸ்பர அவநம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன். இது துரிதமாகச் சீர்செய்யப்படக்கூடிய நிலைமைஅல்ல, நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல் என்பது ஓரிரு தினங்களில் இடம்பெறக்கூடிய விடயமல்ல. ஆனால் இப்போது மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கை இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. அரசியல் தலைவர்கள், மதகுருமார், புத்திஜீவிகள், உள்நாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு சக்திகள் எனப் பலரின் பங்களிப்போடு இனங்களுக்கிடையிலான விரிசலை மிகவும் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இது மிகவும் பயங்கரமான சூழ்நிலையாகும்.

அரசாங்கத்தைப்பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கினை எவ்வித பாகுபாடுமின்றி சீராக அமுலாக்கினால் அதுவே போதுமானதாகும். ஆனால் இலங்கை அரசும் சட்டம் ஒழுங்குத்துறை மற்றும் நீதித்துறையும் இவ்விடயத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றுவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் உணரவில்லை.

சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும்.

த கட்டுமரன்: இந்த முரண்களைக் களைய மக்கள் தாமாக ஒரு தீர்வினை உருவாக்குதல் சாத்தியமா?

அய்யூப் அஸ்மின்: இனவாத முரண்பாடுகளைத் தடுப்பதற்கான முழுமையான சக்தியும் பலமும் மக்களிடமே இருக்கின்றது, ஆனால் அதுமுறையாக ஒழுங்கமைக்கப்படுவதில்லை. மக்கள் தமக்குக் கிடைக்கின்ற செய்திகளை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், நம்பிவிடாமல் அலசி ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை எதுவென்று கண்டுகொண்டதன் பின்னர் வினையாற்றுவார்களாயின் இனவாத முரண்பாடுகளை சற்றுத் தணிக்க முடியும், ஆனால் அது எவ்வளவுக்குச் சாத்தியமானது?

இனவாதக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் தலைவர்களை புறக்கணிக்க முடியும், இனவதக் கருத்துக்களை மதங்களினூடாக முன்வைக்கின்ற மதகுருமார்களைப் புறக்கணிக்கமுடியும், இனவாத ஊடகங்களைப் புறக்கணிக்க முடியும் இவ்வாறாக மக்கள் இனவாதத்திற்கு எதிரான ஒரு எழுச்சியை ஏற்படுத்துவார்களாயின் இனவாதத்தை செல்வாக்கற்றதாக எம்மால் ஆக்கிவிடமுடியும். அவ்வாறு ஒரு செயற்திட்டத்தை முன்வைப்பதற்கு மக்கள் முன்வரவேண்டும்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts