“போலி மருந்துகளைக் கண்டு ஏமாராதீர்கள்!”
சபீர் மொஹமட் மற்றும் ஹர்ஷன துஷார சில்வா
இலங்கையிலே நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் ஒன்பதாயிரத்தை (9,800 -04.09.2021) தாண்டியுள்ளது. அதே வேகத்தோடு இணைந்ததாக கோவிட்-19 பற்றிய பொய்யான வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.
கோவிட்-19 இற்கான ஆயுர்வேத மருந்துகள் எனக்கூறி பல்வேறுபட்ட பதிவுகள் மற்றும் மருந்து வகைகள் பற்றிய செய்திகள் முகப்புத்தகம் (Facebook)) மற்றும் வாட்ஸ்அப் (whatsapp) ஆகிய சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
‘கோவிட்-19’ இனை குணப்படுத்த முடியும் எனக்கூறி அடையாளம் தெரியாத பல ஆயுர்வேத குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாகவும் அவற்றின் மூலம் பொதுமக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் எனவும் கூறி ஆயுர்வேத வைத்திய சபை ஒரு அறிக்கையினை கடந்த மே மாதம் 6ஆம் திகதி வெளியிட்டிருந்தது.
எனவே இதுபற்றி நாம் இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தனவிடம் வினவினோம்.
” கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஏதேனும் சிகிச்சை முறைகளோ, மருந்துகளோ அல்லது துணை மருந்து வகைகளோ இருப்பின் அவை கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக நாங்கள் “சூத்திர குழு” ஒன்றினையும் நியமித்துள்ளோம். அதிலே பதிவு செய்யப்படாத எந்தவொரு மேலதிக உணவு, பானம் அல்லது மருந்து வகைகளுக்கோ நாங்கள் அங்கீகாரம் வழங்குவதில்லை.
தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தப்பட்ட 16 வகையான மருந்துகளை தயாரிப்பதற்கான ஒப்புதலை நாம் வழங்கியுள்ளோம். அவற்றில் இரண்டு வகையான மருந்துகள் ஆயுர்வேத திணைக்களத்தினாலும் ஒன்று ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினாலும் மீதமுள்ள 14 மருந்துகளும் தனியார் நிறுவனங்களினாலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இது தொடர்பான தகவல்களை எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் இதற்கான முக்கிய பிரிவு ஒன்றினை அமைத்து 25 தொலைபேசி எண்களையும் ஒதுக்கியுள்ளோம். மேலும் 1919 அரசு தகவல் மையத்தின் ஊடாகவும் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 1500 ஆயுர்வேத சமூக சுகாதார அதிகாரிகள் கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா பற்றிய ஆலோசனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் தமது பிரிவுக்கு உட்பட்ட ஆயுர்வேத சமூக சுகாதார அதிகாரியிடம் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். ஆயுர்வேதம் என்ற போர்வையில் வருகின்ற எந்தவொரு போலி மருந்துகளையும் கண்டு ஏமாராதீர்கள். இயலுமானவரை அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களை மட்டும் நாடுங்கள்” எனத்தெரிவித்தார்.
மேலும் நாவின்ன ஆயுர்வேத வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி ஜகத் ருஹனுகே எமது கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
” கொரோனா வைரஸூக்கு எதிராக ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள மருந்து வகைகள் பற்றி குறிப்பிடுவதாயின் ‘அவை மூலம் இந்த நோயினை முற்றுமுழுதாக குணப்படுத்தலாம்’ என உறுதியாக கூற முடியாது. எனினும் எமது பழங்கால ஆயுர்வேத ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் உள்ள மருந்துகள் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே எமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது கொரோனா போன்ற வைரஸ்களில் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதேபோல் தற்போதுள்ள கொரொனா நோய் அறிகுறிகளுடன் பழங்கால ஏடுகளில் குறிப்பிட்டுள்ள “ஜூரம்” அதாவது காய்ச்சல் என்ற நோய் அறிகுறிகளை ஒப்பிடலாம். எனவே அது போன்று தான் பழங்கால ஏடுகளில் குறிப்பிட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சை முறைகளை நாங்கள் நாவின்ன ஆயுர்வேத பரிசோதனை நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்குகின்றோம்.
எனினும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற ஆயுர்வேத மருந்துகள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக ஒரு சில மருந்து வகைகளை நல்லது தானே, என நினைத்து அளவுக்கதிகமாக சேர்க்கின்றார்கள். அவ்வாறு தேவையற்ற அளவு அவை சேர்க்கப்பட்டால் அவற்றின் தரம் குறைவடையும். இன்னும் சிலர் வெவ்வேறு இடங்களில் இருந்து பெற்றுக்கொண்ட ஆயுர்வேதக் குறிப்புகளை ஒன்றாக சேர்த்து ‘ ஆயுர்வேத மருந்து’ எனக் கூறி அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்கின்றார்கள். ஒரு சில மருந்து வகைகளை கலவை செய்யும் போது அதன் அளவுகள் குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை பற்றிய சரியான தெளிவு காணப்படுவது ஒரு தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியருக்கு மாத்திரமே ஆகும்.” என தெரிவித்தார்.
மேலும் ஆயுர்வேத திணைக்களத்திடம் நாம் இதுபற்றி வினவியபோது ” கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் பலர் ராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் நாவின்ன ஆயுர்வேத மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கு முழுமையான ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்பட்டால் மேற்கத்தேய சிகிச்சை வழங்குவதற்காக ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதுவரை சுமார் ஐம்பது நோயாளிகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.
ஆயுர்வேத திணைக்களம் கொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆயுர்வேத வழிகாட்டல் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றைப் பின்வரும் இணைப்புகளின் ஊடாக அணுகலாம்.
இணைப்பு 01: https://tinyurl.com/57ft5k24
இணைப்பு 02: https://tinyurl.com/57ft5k24
ஆயுர்வேத திணைக்களத்தின் இணையதளத்தின் வாயிலாகவும் திணைக்களத்தின் பேஸ்புக் பகுதியின் ஊடாகவும் இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இணையத்தளம்: http://www.ayurveda.gov.lk/home
அதிகரிக்கக் கூடிய மருந்து வகைகள் உள்ளன. அவற்றைப்பற்றிய தகவல்களை ஆயுர்வேத திணைக்களத்தின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். http://www.ayurveda.gov.lk/home
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி கொரோனா வைரஸிற்கான எந்தவொரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபற்றி அவர்களிடம் வினவியிய போது இவ்வாறு தெரிவித்தனர்.
“இதுவரை இன்னும் இந்த நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையங்களையோ அல்லது கொவிட்-19 அவசர அழைப்பினையோ நாடுங்கள். இந்த நோயில் இருந்து தப்புவதற்கு நீங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். பொது இடங்களில் எப்போதும் முகக்கவசம் அணிந்து கைகளை நன்றாக சுத்தமாக வைத்துக்கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இயலுமான வரை விரைவில் கொவிட்-19 கான தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டு சீரான உணவு பழக்கங்களை கடைபிடிப்பதுடன் நன்றாக நீர் அருந்துதல் வேண்டும். அத்துடன் தவறாமல் உடற்பயிற்சியும் போதுமான அளவு தூக்கமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.” என்பதையே வலியுறுத்தினார்கள்.
உலக சுகாதார நிறுவனம் உட்பட உலகளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தமான எச்சரிக்கை, ‘இந்த நோய்க்கான ஒரே தீர்வு தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுதல்’ என்பதேயாகும்.
(இக்கட்டுரையின் ஒருசில தரவுகள் #தலைமுறையின் உண்மை சரிபார்த்தல் பொறிமுறையில் இருந்து எடுக்கப்பட்டது)