பொறுப்புக்கூறவேண்டிய வெளிப்படையான தேர்தல் செயல்முறைக்கு வேண்டிய பிரச்சார நிதி ஊட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குவிதிகள்.
ஹரிணி பெர்னான்டோ
உலகின் எப்பகுதியிலாயினும் தேர்தல் காலக் கலந்துரையாடல்களின்போது தேர்தல் முறைமைச் சீர்திருத்தம், பிரச்சார நிதி ஊட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய விடயங்களைச் சுற்றியே இருக்கும். ஏனைய வேளைகளில் இல்லாத உயர்மட்ட உற்சாகத்தில் இவை பேசு பொருளாக இருக்கும். இலங்கைச் சரித்திரத்தில் முதற் தடவையாக உலகம் முழுவதும் ஒரு பெரும் கொள்ளை நோயினாற் பாதிப்படைந்த காலப்பகுதியில் இவ் வருடம்; தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது. கொவிட் 19 கொள்ளை நோய் காரணமாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டல்கள் எதனையும் கவனத்தில் எடுக்காது பல வேட்பாளர்கள் தங்களின் வழமையான முறையிற் பிரச்சாரஞ் செய்வதை நாங்கள் கண்டோம். எவ்வாறாயினும் இது சம்பந்தமாக ஒருவர் கேட்கக்கூடிய கேள்வியாக இருப்பது தேர்தல்களின்போது தங்கள் சார்பாகப் பிரச்சாரஞ் செய்வதற்கு இவர்களுக்குப் பெருந் தொகையான பணம் எவ்வாறு கிடைக்கிறது? ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மீது தேர்தல் பிரச்சார நிதி ஊட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் சீர்திருத்தம் ஆகியவை தொடர்பாகப் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பிரச்சார நிதி ஊட்டத்தில் அடங்குபவை யாவை?
ஐரோப்பாவிலுள்ள பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான இயக்கத்தின் ஜனநாயக நிறுவனம் மற்றும் மனித உரிமைகள் பணியகம் பிரச்சார நிதி ஊட்டத்தைப் பின்வருமாறு வரைவிலக்கணம் செய்கிறது. தேர்தல் தேவைகளுக்காக பணமாகவும் பண்டமாகவும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பிரச்சார நிதி ஊட்டமாகச் கிடைக்கப்பெற்ற சகல பங்களிப்புகளும் ஏற்பட்ட செலவுகளும். இச்செயற்பாடுகளில் உள்ளடங்கிய உதாரணங்களாவன, வாடகைக்குப் பெறும் தற்காலிக அலுவலகம், அலுவலர்களை வேலைக்கமர்த்துதல், பிரச்சாரம் தொடர்பான தகவல் பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள், தேர்தல் பிரச்சாரப் பேரணிகளை நடத்துதல், வீடுவீடாகச் சென்று பிரச்சாரஞ் செய்தல், பிரச்சாரத்திற்குத் தேவையானவற்றை உருவாக்குதல் மற்றும் வெகுஜன ஊடகங்களில் விளம்பரஞ் செய்தல்.
பிரச்சார நிதி ஊட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு விதிகள் எதற்காக?
எளிதாகச் சொல்வதானால்; நியாயமான அரசியல் போட்டா போட்டிகளை உறுதிப்படுத்துவதற்கும், போட்டிக்கான சமதளமொன்றை உருவாக்கவும், அரசியல் மற்றும் கொள்கைகள் மீது பணம் செல்வாக்குச் செலுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்குமாகும். மக்களைத் தேடிச்சென்று அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக எந்த வேட்பாளருக்காயினும் போதிய பணம் அவசியமாகத் தேவைப்படுகிறது. தேர்தல்களிற் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோருக்கும் நியாயமான சூழல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒழுங்கு விதிகள் இருக்கவேண்டும்.
அதற்குமப்பால், வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களுக்குத் தேவையான பணத்தை எவ்வாறு பெற்றுக் கொள்கிறார்கள் என்னும் தகவலை அறிந்திருப்பதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று நன்கறிந்து தீர்மானம் எடுப்பதற்கு உதவி கிடைக்கும். குறிப்பாக தங்கள் மாதாந்த சம்பளம் ஒரு லட்சம் ரூபாவிற்கும் (படிகள் அடங்கலாக ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கு மேல் இல்லாதது) குறைவாகக் கிடைக்கும் நிலையில் அரசியல் பிரவேசத்திற்காக பல மில்லியன் வரையிற் செலவிடுவாராயின், பாராளுமன்றத்தில் ஒரு இடம் பிடிப்பதற்காக அவர்கள் ஏன் இத்தனை கடும் பிரயத்தனத்தையும் போராட்டத்தையும் மேற்கொள்கிறார்களென ஒருவர் ஆச்சரியப்படும்படி செய்கிறது. அவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்வது உண்மையாக நாட்டு மக்களுக்குச் சேவைசெய்வதற்காகவா அல்லது அவர்களுக்கு இருக்கும் வேறேதும் உள் நோக்கத்திற்காகவா?
இதன் காரணமாகவேதான் பிரச்சார நிதி ஊட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு விதிகள் இருத்தல் வேண்டும். நடப்புக்காலச் சூழ்நிலை பெருந்தொகையான பணத்தைத் தங்கள் பிரச்சாரங்களுக்குச் செலவு செய்யக்கூடிய வேட்பாளர்களே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதனைப் பிரதிபலிக்கிறது. முன் ஒருபோதும் ஏற்படாத கொவிட் 19 சூழ்நிலையிலுங்கூட இந்த வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சில வேட்பாளர்கள் தங்கள் வெற்றிக்குக் கருவியாயிருந்த மின்னியல் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பெருந்தொகையான பணத்தை அள்ளி வீசினர்.
அரசியல் கட்சிகளின் பிரச்சார நிதி ஊட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றிற்கு ஒரு உச்ச வரம்பை ஏற்படுத்துவதுடன் அதனை மீறுவோரிடம் தண்டப் பணம் அறவிடும் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டிருந்தபோதிலும் இந்த ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திடமிருந்து முன்னேற்றகரமான பதிற்குறி எதுவும் இருக்கவில்லை. ஆகவே, பிரச்சார நிதி ஊட்டங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு விதிகள் எதுவும் இல்லாதபடியால் தேர்தல் ஆணைக்குழு இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குத் தன்முனைப்புடன் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
அரசாளும் அதிகாரம் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருக்கும் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்களின் அதே முகங்களையே நாங்கள் வருடக் கணக்காகப் பாராளுமன்றத்திற் காணக்கூடியதாக இருப்பதுடன், இவர்களிற் பெரும்பாலானோர் நாட்டின் அபிவிருத்திகெனக் கணிசமான பங்களிப்பு எதனையும் செய்யவில்லை. நாங்கள் விவேகமும் அர்ப்பணிப்பும் உள்ளவர்களைப் பாராளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டுமாயின் பிரச்சார நிதி ஊட்டங்களால் ஏற்படும் சமத்துவமின்மையை இல்லாது செய்வதுடன் சமநிலையான ஆடுகளத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கட்டாயம். இதன்; பலனாக ஊழல் நிறைந்த அரசியல் பிரச்சாரங்கள் கட்டுப்பாட்டிற்கு வருவதுடன் இக் கட்டுப்பாடுகள் இலங்கை அரசியலில் பொறுப்புக்கூற வேண்டிய மற்றும் வெளிப்படையான நிறுவனமயப்பட்ட ஒரு பொறிமுறையைப் பேணிப் பாதுகாப்பதற்கு மிகவும் அவசியமாகின்றன.