பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ந.லோகதயாளன்
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட கிளைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த காலங்களில் போர் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே இலட்சக் கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். எனினும் நாட்டில் கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழில்தேடி வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு நாட்டைவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதை இத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட 05 நிர்வாக
மாவட்டங்களான வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2020.01.01 முதல் 2023.06.30 வரையிலான 4 ஆண்டு காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப் பெற்றன. அதற்கமைய,
வவுனியா மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு 46 பேரும் 2021 ஆம் ஆண்டு 60 பேருமென மொத்தமாக 104 பேரே இரு ஆண்டுகளில் பயணித்தபோதும் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 600 பேர் பயணித்துள்ளனர். அதேநேரம் நடப்பாண்டான 2023 இன் யூன் 30 வரையிலான காலப்பகுதியில் 283 பேர் பயணித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு 572 பேரும் 2021 ஆம் ஆண்டில் 725 பேரும் பயணித்த நிலையில் 2022 இல் மாத்திரம் 1104 பேர் பயணித்துள்ளனர். 2023 இல் யூன் 30 வரையிலான காலப் பகுதியில் 1403 பேர் பயணித்துள்ளனர்.
இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2020 இல் 08 பேரும் 2021 இல் 12 பேருமே பயணித்த நிலையில் 2022 இல் 248 பேர் பயணித்துள்ளதோடு 2023 யூன் 30 வரையில் 129 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் பயணித்த அனைவருமே பெண்களாகவே இருப்பதோடு 2020 ஆம் ஆண்டில் 30 பேரும், 2021 இல் 36 பேரும் பயணித்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 297 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்ததோடு 2023 ஆம் ஆண்டு 155 பேர் பயணித்துள்ளதாக மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வழங்கிய தகவல் உறுதி செய்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் 180 பேரும் 2021 ஆம் ஆண்டில் 463 பேரும் பயணித்துள்ள நிலையில் 2022 இல் 1436 பேர் பயணித்துள்ளதோடு 2023 ஆம் ஆண்டின் யூன் மாதம் வரையிலும் 623 பேர் பயணித்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளித்துள்ளது.
இவற்றிற்கமைய 5 நிர்வாக மாவட்டங்களிலும் மொத்தமாக 2020 ஆம் ஆண்டில் 836 பேரும், 2021 ஆம் ஆண்டு ஆயிரத்து 296 பேரும் பயணித்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 685 பேர் பயணித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டினை விடவும் 3 மடங்கு அதிகமாகும். 2023 ஆம் ஆண்டின் யூன் மாதம் வரையிலும் 2 ஆயிரத்து 583 பேர் பயணித்துள்ளதனால் இந்த எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விஞ்சும் வாய்ப்புள்ளது.