பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தின்போது காப்பாற்றப்பட்ட மத சகவாழ்வு
நிமல் அபேசிங்க
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது மனிதநேயமுள்ள மக்கள் தாமாகவே ஒன்றிணைகின்றனர். அந்த ஒற்றுமைக்கு இனம் அல்லது நிற வேறுபாடில்லை. ஆகவே, மனிதநேயத்தின் தனிச்சிறப்புமிக்க உண்மையை எமது நாட்டிலுள்ள பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? மறுபுறம், இயற்கை பேரழிவுகள் இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் கவனம் செலுத்துவோம். காரணம், கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களே எமது எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
2015ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் அனைத்து இலங்கையர்களுக்கும் மறக்க முடியாத சம்பவமாகும். கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் உறுகொடவத்த மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில், களனி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வெள்ளம் பல நாட்களாக தொடர்ந்த நிலையில், மக்கள் உணவின்றி அல்லது ஏனைய தேவைகளின்றி தவித்தனர். பாரிய வெள்ளத்தால் தொண்டுப் பணியாளர்களும் அங்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர். இலங்கை கடற்படைகூட சில பகுதிகளுக்குச் செல்ல தயங்கியது. இவ்வாறான தடைகளுக்கு மத்தியில், எவ்வித முன்னாயத்தங்களுமின்றி எமது இந்த கட்டுரையின் முக்கிய பாத்திரமான கதாநாயகன் தலைமையேற்றார்.
இந்தக் கட்டுரையின் கதாநாயகனான பி. டபிள்யூ. ஏ. டி. ஜூட் (வயது-52) கொழும்பு மோதரை பகுதியில் வசிக்கின்றார். அவர் கொழும்பு மாநகர சபையின் தொட்டலங்க வீதி பராமரிப்பு பிரிவில் தொழிலாளியாக பணியாற்றுகின்றார்.
“18ஆம் திகதியன்று (18.05.2016) காலையில் நான் வேலைக்குச் சென்றேன். வெல்லம்பிட்டி, பொல்வத்த பகுதியிலுள்ள வென்வத்த கிராமத்தில் எனது சகோதரியின் மகள் வசிக்கின்றார். அவர் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் அவர்களை மீட்பதற்கு படகு ஒன்றை கொண்டுவருமாறும் கேட்டுக்கொண்டார்.”
“அப்போது நான் எனது மேலதிகாரியான பொறியியலாளரிடம், ‘அம்மணி, நான் பிரச்சினையில் உள்ளேன். இப்போது நான் செல்லவேண்டும்’ எனக் கூறினேன். தொழிநுட்ப அதிகாரியிடம் அறிவித்துவிட்டுச் செல்லுமாறு அவர் குறிப்பிட்டார்.”
“பின்னர் பேலியகொட பகுதிக்குச் சென்ற நான், அங்கு ஒரு லொறியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மோதர கடற்கரைக்கு வந்தேன். எனக்கு பிரதீப் என்ற நண்பர் ஒருவர் உள்ளார். அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. ஆனால், நான் அவரது படகை லொறியில் ஏற்றிக்கொண்டு, என்னுடைய நண்பரான பெனடிக்ட்-இடமிருந்து ஒரு படகு இயந்திரம் மற்றும் எரிபொருளை கடனாக பெற்றுக்கொண்டேன். எனது நண்பர் ராஜாவிடமிருந்து இரண்டு பாதுகாப்பு அங்கிகளையும் கடனாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து உறுகொடவத்த பாலத்திற்குச் சென்றேன்.”
அப்போது நேரம் முற்பகல் 11 மணி 45 நிமிடங்கள். உறுகொடவத்த பாலத்திற்கருகே வாகனங்கள்கூட பயணிக்க முடியாத அளவிற்கு வெள்ள நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. தன்னுடன் உதவிக்கு வந்த நண்பர்களான மார்கஸ் மற்றும் அஷ்ரப் ஆகியோரின் உதவியுடன் ஜூட் லொறியிலிருந்து படகை இறக்கினார். அஷ்ரப் படகில் ஏறி அவர்களுக்கு வழிகாட்டினார்.
“முதலில் நாம் எனது சகோதரியின் மகளின் வீட்டிற்குச் சென்றோம். மகள், அவரது மூன்று குழந்தைகள், மருமகன் மற்றும் அயல்வீடுகளில் இருந்த குழந்தைகளை மீட்டோம். சுமார் பத்து பேரை படகில் அழைத்துச் சென்று வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அருகில் இறக்கிவிட்டோம்” என ஜூட் குறிப்பிட்டார்.
வரும் வழியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளைக் கண்டதால், அவர்களை மீட்பதற்காக அவர்கள் மீண்டும் வெள்ளநீர் நிறைந்த பகுதிக்குச் சென்றனர். அவர்களை மீட்டு வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இறக்கிவிட்டனர். இந்த பணிக்காக அவர்கள் 5 முறை பயணித்தனர். நான்காவது தடவையாக செல்லும்போது சிரச ஊடக வலையமைப்பைச் சேர்ந்த ஊடகக் குழாமும் படகில் ஏறிக்கொண்டது. அன்றைய தினம் இரவு 7.30 வரை அவர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் படகு இயந்திரம் மற்றும் எரிபொருள் தாங்கியை வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துவிட்டு, தெமட்டகொடைக்கு வந்து வீட்டிற்குச் சென்றுவிட்டார்,
இதற்கு முன்னர் ஜூட்டை அறிந்திராத அஷ்ரப், அன்றைய நாள் முழுவதும் ஜூட்டுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் அறிந்த வகையில், அன்றைய நாள் அவர்களது படகைத் தவிர வேறெந்த மீட்புப் படகும் அங்கு செல்லவில்லை.
“மறுநாள், அதாவது 19ஆம் திகதியும் நான் வெல்லம்பிட்டிக்குச் சென்று படகை எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்றேன்.” அன்றைய தினம் மக்களை மீட்பதற்காக பல படகுகள் வந்தன. துரதிஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அவர்கள் பணம் பெற்றனர். எனினும், ஜூட் தான் வழங்கிய சேவைக்கு ஒரு சதம்கூட அறவிடவில்லை.
“ஒருதடவை நாம் மருத்துவர் ஒருவரது குழந்தையை மீட்டோம். மேல்மாடியில் சிக்கியிருந்த குறித்த கைக்குழந்தையை, கூடை ஒன்றை பயன்படுத்தி கீழே இறக்கினோம். அஷ்ரப் நீருக்குள் இறங்கி மக்களை மீட்பதற்காக அயராது உதவினார். அவர் ஒரு சிறந்த மனிதர்.” என்றார் ஜூட். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இன்னுமொருவர் படகில் ஏறிக்கொண்டார். அவர் யாரென்றுகூட ஜூட்டிற்கு தெரியாது.
அன்றைய தினம் கடற்படையின் படகுகளும் அங்கு வந்தபோதும், ஒருசில இடங்களுக்குச் செல்ல அவர்கள் தயங்கினார்கள்.
“பயணிப்பதற்கு கடினமான பகுதிகளுக்கு கடற்படையினர் செல்லவில்லை. சில வீதிகள் சுமார் 6 அடி அகலத்தை மாத்திரமே கொண்டிருந்தன. சுவர்களில் இடிபடாமல் அங்கு படகில் செல்ல முடியாது. ஆனால் நான் அவ்வாறான இடங்களுக்கும் சென்றேன்” என ஜூட் குறிப்பிட்டார். அனுபவம் வாய்ந்த மீனவரான ஜூட், மறுநாள் நீண்ட கயிற்றுடன் படகில் ஏறினார்.
“உறுதியான தூண் ஒன்றில் கயிற்றைக் கட்டி, படகு இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு படகை பின்னோக்கி ஓட்டினேன். இவ்வாறு செய்வதால், நான் திரும்பி வருவதற்கு படகை திருப்பவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், மூன்று சுவர்களை உடைக்கவேண்டி ஏற்பட்டது. ஆனால், மற்றவர்களால் செய்ய முடியாத மற்றும் செய்யாத விடயத்தை நான் செய்தேன்”
“அந்த இரண்டு நாட்களும் நான் சிகரட்கூட புகைக்கவில்லை. அவ்வாறு செய்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன்” என மனநிறைவுடன் கண்களில் மகிழ்ச்சி ததும்ப ஜூட் குறிப்பிட்டார்.
மொஹமட் பிர்சாம் ஹொசைன் மொஹமட் என்பவர், வெல்லம்பிட்டி வென்வத்த பகுதியின் மூன்றாம் ஒழுங்கையைச் சேர்ந்தவர். 18ஆம் திகதி அவர் தனது குழந்தைகளையும் மனைவியையும் கடவத்தை மாக்கொல பகுதியிலுள்ள தனது தாயின் வீட்டில் விட்டுவிட்டு, வெல்லம்பிட்டிக்குச் செல்வதற்காக ஒருகொடவத்தைக்கு திரும்பி வந்தார். அவர் ஜூட்டை பார்த்தபோது, சிறிதும் யோசிக்காமல் அவருக்கு உதவிசெய்ய முன்வந்தார். வெள்ளத்தால் மூழ்கிக்கிடந்த வீதிகளில் செல்லும்போது வழிகாட்டுவதற்காக அவர் ஜூட்டுடன் இணைந்தார்.
“வரும் வழியில் நான் ஜூட்டுடன் கதைத்தபோது, ‘சகோதரா, எம்மிடம் எரிபொருள் தீரும்வரை நாம் இந்த உதவியை செய்வோம்’ என்றார்” என அஷ்ரப் குறிப்பிட்டார். “அப்போது, என்னிடம் பணம் இல்லையென்றும், அவர் செய்வதை தொடர்ச்சியாக செய்யுமாறும் குறிப்பிட்டேன். அதற்கு அவர், ‘சகோதரா, இப்போது என்னை தனியே விட்டுவிட்டு செல்லாதீர்கள். நீங்கள் இருப்பது எனக்கு பலமாக உள்ளது’ என்றார்”
“ஜூட் என்னருகில் வந்து ‘நீங்கள் என்னோடு இருப்பீர்கள்தானே?’ என கேட்டபோது நான் பிரமித்துவிட்டேன்”. இவர்கள் முன்பின் அறிந்திராதவர்கள் என்றபோதும், இந்த கிறிஸ்தவ நபரும் இஸ்லாமிய நண்பரும் தமக்குள் ஒரு ஆழமான பிணைப்பை கட்டியெழுப்பியுள்ளனர். இதுவே மனிதநேயத்தின் மகிமை. பேரழிவை எதிர்கொள்ளும்போது அவர்களுக்குள் இன, மத வேறுபாடுகள் எதுவுமில்லை. மனிதநேயத்தைத் தவிர அங்கு வேறெதுவும் காணப்படவில்லை.
“ஒருதடவை, மேல்மாடியில் சிக்கித் தவித்த மூன்று வாரங்களே ஆன குழந்தை சகிதம் ஒரு குடும்பத்தை மீட்டோம். ஒரு கூடையை பயன்படுத்தி குழந்தையை கீழே இறக்கினோம்”
“பின்னர் அங்கு மூன்று பெண்கள் இருந்தனர். கடைசிப் பெண் தடித்த உருவத்தைக் கொண்டவர். அவர் மேல்மாடியிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தார். இரண்டு கைகளையும் விடுமாறு நான் அவரிடம் கூறியபோது அவர் தயங்கினார். படகு திடீரென அதிர்ந்ததால் நான் நீருக்குள் வீழ்ந்தேன். ஆனால், அந்த பெண் இன்னும் தொங்கிக்கொண்டிருந்தார். பின்னர், ஒரு முட்டுக்கட்டை போல நான் அவருக்கு கீழே நின்று, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரை இறக்கி படகில் சேர்த்தோம். இவ்வாறான சூழ்நிலைகளில்கூட, பெண்களை தொடுவதற்கு அஷ்ரப் தயங்கினார்” என ஜூட் குறிப்பிட்டார்.
ஏனையோரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளின்போது தமது உயிரைக்கூட பணயம் வைக்கும் பல்லின சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணமாகும். இன, மத மற்றும் சாதி போன்ற குறுகிய மனப்பான்மைக்குள் எளிதில் சிக்கிக்கொள்ளும் சராசரி மக்களுக்கு மத்தியில் இவர்கள் நட்சத்திரங்களைப் போல மிளிர்கின்றனர்.
Human Compassion At A Time Of Devastating Floods
ගංදියට සියල්ල යටවෙද්දි ඉතිරි වු ආගමික සහජිවනය