கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளும் இணைய வழி கற்றலும்

ஜீவா சதாசிவம்

‘தொலைக்காட்சிகளில் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்ட்டாலும்  குறித்த அலைவரிசை வேலை செய்யாத நிலையில் நாம் எமது பிள்ளைகளை எவ்வாறு கற்றலில்   ஈடுபடுத்துவது? கைப்பேசி ஒன்று வாங்குவதற்கு   எத்தணித்தாலும் அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொடுப்பது” என்று மலையக தந்தையொருவர் அங்கலாய்கிறார்.  அது மாத்திரம் அல்ல கவரஜை தேடி மலைமுகடுகளுக்கு செல்வதுடன், கூரைகளின் மீது ஏறி நிற்க வேண்டிய அவலமும் தொடர்கின்றது..

‘போன் வசதி , அதற்கான டேட்டா கார்ட் வாங்குவதில் சிரமம், சில நேரங்களில் இவ்விரண்டும் இருந்தாலும் எமது பிரதேசங்களில் போதியளவான கவரேஜ் (Coverage) இல்லாமையினால், தினமும் நடாத்தப்படும் இணைய வழியிலான (ZOOM) வகுப்புக்களுக்கு எமது பிள்ளைகளை இணைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இப்பகுதியில் உள்ள ஒரே வகுப்பைச் சேர்ந்த பத்து மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே போனில் கற்கும் அவல நிலையிலேயே எமது பிள்ளைகள் கல்வி கற்கின்றனர்’  என மலையக தாயொருவர் கவலையுடன் கூறுகின்றார்.

இவ்வாறான    நிலைமை ஏற்படுவதற்கான காரணம் திடீரென எழுந்த ஒன்றல்ல. மலையகத்திற்கென நீண்டதொரு வரலாற்று பின்னணி இருக்கின்றது போல எல்லா சம்பவங்களுக்கும் ஒரு   பின்னணியுண்டு.

அந்த வரலாற்றுப் பின்னணியுடன் கூடியதாக சமகாலத்தில் கொரொனா தொற்றுப்பரவலுடன் ‘மலையக கல்விச் சூழல்  எதிர்நோக்கும் சவால்கள்’ குறித்து ஆராய்வதே இந்தக் கட்டுரை.

மலையகத்திற்கான இலவச கல்வி முறை

இலங்கை சுதந்திரம் அடைந்தவேளை மலையக மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரஜா உரிமை அதே ஆண்டு பறிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு பறிக்கப்பட்டதன் விளைவே இன்று மலையகம் ஏனைய சமூகங்கங்களுடனும்  ஒப்பிட்டுப்பார்க்கும் போது பின்தங்கிய நிலையில் இருக்கக் காரணமாக இருக்கின்றது.

இலவசக் கல்வியின் தந்தை என போற்றப்படும் சி.டபிள்யூ.சி. கன்னங்கரவினால் 1943 இல்   அறிமுகப்படுத்தப்பட்ட  இலவச கல்வி முறைமை ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கப் பெற்று சுமார் 40 வருடங்களுக்குப் பின்னரே    மலையகத் தோட்டப் பாடசாலைகளுக்கு கிடைத்தது.

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதோடு, தோட்ட நிர்வாகத்தின்  கீழ் இயங்கி வந்த    பாடசாலைகளை  அரசாங்கப் பாடசாலைகளாக    பொறுப்பேற்றது. ஆனால், 1980ஆம் ஆண்டில் இருந்தே    செயற்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

அதன்படி   பாட விதான முறைமைகள்,   நிர்வாக  சுற்று நிருபங்கள்,   அதிபர்,  ஆசிரியர்களின் நியமனம், சம்பளம் முதலான விடயங்கள் மாற்றம் பெற்றது. ஆனால், குறித்த பாடசாலைகளுக்குறிய கட்டடம், மைதானம், உட்கட்டமைப்பு வசதிகள் தரம் போன்ற பாடசாலைக்குத் தேவையான   இன்னோரன்னா  பௌதீக  நிலைமைகளில்,    எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

1990 களில் இதற்கான தேவை உணரப்பட்டபோது வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களான GTZ (ஜேர்மனி), SIDA ( சுவீடன் ) போன்றவை உதவ முன்வந்தன. அதன்போது  தோட்டப்  பாடசாலை  அலகு (Plantation Schools Unit) என்ற ஒரு அலகு மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கத் தொடங்கியது.  

இத்தகைய தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் (Project) நிறைவுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம், நாற்பது வருடங்களின் பின்னர் உள்வாங்கிக்கொண்ட ‘தோட்டப் பாடசாலைகளை’ அரசாங்கப் பாடசாலைகளாக ஆக்கிக் கொள்ள எத்தகைய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது ? செய்து வருகிறது ? எனும் பெரும் கேள்வி இப்போதும் எம்முன் எழுகின்றது.

நாடளாவிய ரீதியில் 843 பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகள் இயங்கி வருகின்றமையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

கொரோனாவில் சிக்கியுள்ள பெருந்தோட்டப்புற பாடசாலைகள்…

2020ஆம் ஆண்டு வைரஸ் பரவல் முடக்கத்தில்   மூடப்பட்ட   பாடசாலைகள் மீண்டும் கட்டம், கட்டமாக கொரோனா சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகவே திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட போது மேற்படி பாடசாலைகள் பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாது பெரும் பாதிப்பை எதிர்க்கொள்ள நேர்ந்தது.

கைகழுவும் வசதி, அதற்கான தண்ணீர், மலசலகூட வசதிகள், அதற்கான பராமரிப்புகள், தூர இடைவெளியைப் பேணி வகுப்பறைகள் அமைக்க நேர்ந்தால் அதற்கான இடவசதி , அதனால் உருவாகும் கட்டடத் தேவை, அவை அமைக்கப்படுமானால் காணித்தேவை என பௌதீக தேவைகளின் தேவை விரிவடைந்தது.

இந்நிலைமையில்   தமது  கல்வியை எவ்வித அச்சமும் இல்லாமல் எப்படி தொடர முடியும் என மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.    பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது குறித்து அச்சத்தையும் எதிர்நோக்கியிருந்தார்கள்    .

ஆனால், 2021ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களின் கல்வியில் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரதானமாக கருதப்படுவது இணையவழியிலான கல்வி முறைமை.

இணைய வழிமுறையிலான கல்வி (ZOOM)

கொரொனா உருவாக்கி இருக்கும் இலத்திரனியல் கல்வி முறை போக்கினை (E- learning trend) எதிர்கொள்ள மலையகப் பெருந்தோட்ட மாணவர்களைத் தயார்செய்வதில் உள்ள சவால்களை எடுத்தாராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது.

வீடுகளில் – பாடசாலைகளில் பாதுகாப்பான மின்சார வழங்கல் கிடைக்கிறதா?, கணணி அல்லது அதற்கு இணையான இலத்திரனியல் சாதனங்கள் (Android Mobile Phone,Tab, I pad , Laptop etc..) இருக்கின்றதா? இல்லாவிட்டாலும் அவர்களுக்கு யாராவது பெற்றுக்கொடுப்பார்களா என்ற கேள்வி எழுகின்றது.

பொதுவாக இல்லைகள் என்ற இல்லாமை அதிகமாக இருக்கும் சமூகத்தில் வாழும் பெருந்தோட்டப்புற மாணவர்கள் பலர் இன்று இணையவழியின் ஊடாக கற்பதற்கு ஆர்வம் அதிகமாக இருந்தாலும் அதற்கான கருவி (Devices) இல்லாமல் ஏங்கித் தவிக்கும் நிலைமையை கட்டுரையாளரான என்னுடன் பல மாணவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் மூலம் உணரக்கூடியதாக இருந்தது.

“என் சக வகுப்பு தோழர்கள் இணைய வழியின்  ஊடாகவே ஸ்மார்ட் போன் உதவியுடன்   கற்கின்றார்கள்.    என்னிடம் போன் இல்லை. வீட்டில் உள்ள தொலைக்காட்சியை போட்டால் உரிய அலைவரிசை வேலை செய்வது இல்லை. இந்த வருடம், கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை எழுதவுள்ள நான் எவ்வாறு பரீட்சையில் ஈடுபடுவேன் என்று மாணவியொருவரும் , ‘என்னுடைய சக வகுப்பு நண்பர்கள் ஐ- போன் உதவியுடனேயே கற்றலில் ஈடுபடுகின்றனர். எமக்கு அந்த வசதி  இல்லை. அதனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியாது. இணையவழியில் இணைந்து கற்பதற்கு ஆர்வமும் ஆசையும் இருந்தாலும் கூட எமக்கு இணைய முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது’ என தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன்.

ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை  இது தொடர்பில் தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். 

“இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 28 மாணவர்கள் என்னிடம் கல்வி கற்கின்றார்கள். 28 பேரில் 20 பேர் மாத்திரமே இணையவழி கற்றலில் இணைகின்றார்கள். கவரேஜ், விட்டு விட்டு வரும் நிலைமையினால்   மாணவர்களின்   கற்றலுக்கு இடையூறு அதிகமே. கற்பிக்கும் போது, கேள்விகள் கேட்டால் Zoom இல் உள்ள ஒலிவாங்கியை (MIC) ஒன் பண்ணி பேசுவதற்கு மாணவர்கள் சிரமப்படும் நிலைமையும் ஏற்படுகின்றது. அருகில் அவர்களது பெற்றோர்களோ அல்லது சகோதரர்களோ இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகின்றது.

‘டேட்டா’ போட்டுக்கொள்ள முடியாத நிலை ஒரு புறமிருக்க.. மாணவர்களின்  பெற்றோர்கள் சிலரிடம் கற்க கூடிய வசதியுடைய கைத்தொலைபேசி இல்லாத நிலைமையும் கூட. கற்றல் செயற்பாட்டுக்குத் தடையாக இருக்கின்றது. இந்நிலை தொடர்ந்தால் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையில்  வீழ்ச்சி  ஏற்படும்.  இணையவழி கற்றல் நடவடிக்கை மாணவர்களுக்கு முழு திருப்தியைத் தரப்போவதில்லை. உயர்தர மாணவர்களுக்கு 100 வீதம் சாதக நிலையை தராத பட்சத்தில் சிறு வகுப்பு மாணவர்களின் நிலை?” என்ற கேள்வியுடன் முடிக்கின்றார்.

தகவல் வலையமைப்பும் கற்றலையும்

மலையகப் பெருந்தோட்டப்புற பகுதியில்  பெரும்பாலான பாடசாலைகளின் அமைவிடம்    மலைப்பாங்கான பகுதியில் இருப்பதனால் கற்றலை (Coverage) பெரிதும் வீழ்ச்சியாகவே இருக்கும். அதேபோலவே மலையக பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்புக்களில் வசிக்கும் மாணவர்களும் இந்த கவரேஜ் (Coverage) பிரச்சினையினால்  இணையவழியிலான கற்கையை ஒரு வெறுப்பாகவே கருதும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி தரம் 12 இல் கற்கும் மாணவர் இவ்வாறு தனது கருத்துக்களைப் பகிர்கின்றார்,

“இணையவழியின் ஊடாக காலை 6 மணிக்கு வகுப்புக்கள் ஆரம்பிக்கும்.   ஆர்வமாக, இணைந்தாலும் கவரேஜ் போதியளவு இல்லாது இடை இடையே வருவதனால் கற்பித்தலிலும் அவ்வாறே விளங்கும். ஆசிரியர் ஏதேனும் கேள்வி எழுப்பினால் கூட பதில் சொல்ல முடியாத அவலம். தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையினால்   மனம் விரக்தியாக இருக்கின்றது . இந்நிலையில், அடுத்தவருடம் நான் எப்படி உயர்தரப் பரீட்சை எழுதுவது?’ என சலித்துக்கொள்ளும் நிலையிலேயே பெரும்பாலான  மலையகப் பெருந்தோட்டப்புற மாணவர்களின் மன  நிலைமை உள்ளது.

உயர்தர விஞ்ஞான, கணித பாடங்களுக்கான உயர்தர வகுப்புக்கள் இடம்பெறுவது அரிது. பொதுவாக இவ்விரு பாட நெறிகளும் தனியார் வகுப்புகளிலேயே அதிகளவு நடத்தப்படும். தனியார்  வகுப்பை தொழிலாக நடத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு வருமான மூலமாகவே இவை அமைகின்றதால், இப்பாடநெறிகளுக்கு கட்டணம் அறவிடப்பட்டு தனியான கற்கைகளும் இடம்பெறாமல் இல்லை.

நல்லாட்சியும் நவீன திட்டங்களும்

நல்லாட்சி காலப்பகுதியில் பாடசாலைகள், கல்வியல் கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மடிக்கணினி (லெப்டப்) பெற்றுக்கொடுக்கத் தயாரான போதிலும்,  அப்போதைய எதிர்க்கட்சியே எதிர்த்தது. ஆனாலும் சில பாடசாலைகளுக்கு மாத்திரம் கொடுக்க கூடிய வாய்ப்பாக இருந்தது. ஸ்மார்ட் கற்றல் வகுப்புக்களும் சில பாடசாலைகளுக்கே கிடைத்து. பல பாடசாலைகள் அதனை நிராகரித்த (அரசியல் காரணங்களால்) நிலையும் அத்தருணத்தில் ஏற்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.

தொழில்நுட்ப அறிவு

கொரோனாவிற்கு பின்னர் பிரபலமான செயலிதான் ZOOM… பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் ஏன் சிறு பிள்ளைகளின் வாயிலும் அதிகளவு உச்சரிக்கும் சொல்   ZOOM Class. ஆனால், இதனை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் இன்று பலரிடமும் உள்ள கேள்வி.

இது தகவல் யுகத்தில் (informational age) உலகம் எண்ணிமத்தால் ( Digital ) கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மலையகப் பெருந்தோட்டப் பகுதி எந்தளவு தூரம் இணைந்து செயற்படக்கூடியதாக உள்ளது என்பது இங்கு பேசுபொருளாகவேண்டி உள்ளது.

கல்வி அதிகாரிகளின் கருத்து…

01. ஏனைய பிரதேச அல்லது இன ரீதியான மாணவர்களுடன் ஒப்பிடும் போது பெருந்தோட்டப்புற மாணவர்கள் இணையவழி கற்றலில் பங்கு பெறுவது 50:50 குறைவாகவே இருப்பதாக அண்மையில் மத்திய மாகாணத்திற்குட்பட்ட கல்வி வலயமொன்றில் எடுக்கப்பட்ட புள்ளிவிபர ஆய்வில் தெரிய வருகிறது.

02. தொடர்ச்சியான லொக் டவுன் அமுலிலுள்ளதால்   இணைய வழியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது.

03. சிலரிடம் கைத் தொலைபேசி இருந்தும் அதனூடாக ZOOM  செயழியை எவ்வாறு இயக்குவது என்பது பற்றி போதிய விளக்கமில்லாமல் இருக்கின்றமையினால்,   ஆர்வம் இருந்தும் மாணவர்கள் கற்றலில் ஈடுபட முடியாத நிலை.

பெரும்பாலான வீடுகளில் பிரதான தொடர்பாடல் சாதனமாக கைத் தொலைபேசி இருந்தாலும் கற்றலுக்கான கருவியாக அதனை எவ்வாறு  மாற்றிக்கொள்வது, உபயோகப்படுத்துவது என்பது பற்றி போதிய தெளிவின்மை  மனவிரக்தியையும் ஏற்படுத்தவதாக அமைந்துவிடும்.

 ஆசிரியர்கள்.

குறிப்பிட்ட சில ஆசிரியர்களே இணையவழி  வகுப்புக்களை நடத்துகின்றனர். தொழில்நுட்ப அறிவு ஒரு புறமிருக்க, “கவரேஜ்” குறைவான மலைப்பாங்கான இடத்தில் வசிக்கும் ஆசிரியர்களால்  இணையவழியில் மாணவர்களை ஒணறிணைக்க முடியாத நிலைமை. இதனால்    மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு பெரும் இடைவெளியொன்றும் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

சில பாடசாலை ஆசிரியர்களுக்கு ZOOM  தொடர்பான சுய பயிற்சி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இணைய வழியின் ஊடாக இணைந்து கொள்ள முடியாத சுமார் 50 சதவீதமான மாணவர்கள் இந்த கற்றல் முறைமையில் இருந்து கைவிட்டு போயுள்ள நிலைமையே காணப்படுகின்றது.

தொலைக்காட்சிகள், வானொலியில் கற்றல் நடவடிக்கை

கல்வியமைச்சின்  விஷேட நடவடிக்கைக்கு அமைவாக ஈ-தக்ஸலா- ஐ.செனல், குறிஞ்சி வானொலியில் குருகெதர என கல்வி கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் தொலைக்காட்சி வசதி அல்லது உரிய அலைவரிசையை இல்லாத மாணவர்களுக்கு இது சாத்தியப்படாத ஒன்றாகவே அமைகின்றது. 

இணைய வழி கற்றல் முறைமை முன்னெடுக்கப்பட்டாலும் இது நூற்றுக்கு நூறுவீதம் சரியாக என்று கணக்கிட முடியாத நிலைமை. நேரடி கற்கையை போல   மாணவர்களுக்கான மதிப்பீட்டை கணித்து அடைவு மட்டங்கள் நோக்கி அறிய முடியாது.

தீர்வு

பாடசாலை மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களுக்கு தொலைபேசி நிறுவனங்கள் தமது இணையத்தள சேவையை இலவசமாக வழங்குவதற்கான கொள்கையை ஆரம்பிக்க வேண்டும். பாடசாலை தற்போது இணையத்தளத்தின் ஊடாக Zoom தொழில் நுட்பத்திலேயே செயற்படுத்தப்படுகின்றது. டேட்டா இல்லாத மாணவர்களால் இந்த இலக்கை அடைய முடியாதுள்ளது. திறமையான மாணவர்கள் முன்னேறத் துடிக்கும் மாணவர்களும் தற்போது பின்தங்கியுள்ள நிலையிலுள்ளனர்.

டேட்டாவிற்கு செலவழிக்கும் பிள்ளைகள் மாத்திரமே கல்வியில் இன்று முன்னேற்றம் அடையக் கூடியவர்களாக கணிக்கப்படுவார்கள். இது பாரிய விளைவை ஏற்படுத்தும். இதன்  ஊடாக   மாணவர்களுக்கு உரிய திட்டத்தினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

தகவல் புரட்சியுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அது பற்றி புரிதலையும் அறிதலையும் இன்னும்  நம் மாணவர்களாகிய எதிர்கால சந்ததிக்கு பெற்றுக்கொடுக்காதிருப்பது வருந்தத் தக்க விடயம்.

கொரோனா காலத்துடன் ஆரம்பமான இணையவழியிலான கற்கை முறை சகல மாணவர்களுக்கும் சமமாக கிடைக்கின்றதா என்பது கேள்விக்குறி.  வசதி படைத்த மாணவர்களுக்கும் வசதிகுறைந்த மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம். கற்றல் முறையில் இவ்வாறான சவால்களை முன்நிறுத்தி எவ்வாறு மலையகப்பெருந்தோட்டப் பகுதியில் இருந்து கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை எண்ணி பயணிக்க முடியும் என்பது பலரது கேள்வியாகவும் உள்ளது.

இந்த நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் மாத்திரம் தங்கி இருந்து மலையகப் பெருந்தோட்ட கல்விச் சூழலை முன் கொண்டு செல்லலாம் என எதிர்பார்ப்பது தவறு.

பின்னிலையில் நிற்கும் இந்தச் சமூகத்தின் கல்விநிலையை அந்தச் சமூகத்தில் முன்னிலைக்கு வந்த பல்வேறு தரப்பினரும் பங்குபற்றுதல் வேண்டும். அது ஆலோசனையாக, நிதியீட்டமாக, நன்கொடையாக, தொண்டாக அமையலாம். பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுக்கள், தனவந்தர்கள், வர்த்தகர்கள், கற்று உயர் தொழில் செய்வோர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்துறையினர் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உரையாடுவதும் செயற்படுவதும் இன்றியமையாதது.

Estate Schools And Online Education

වතු පාසල් සහ මාර්ගගත අධ්‍යාපනය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts