பாலியல் தொழிலிலுக்கு இலங்கைச் சட்டத்தில் கிடைக்குமிடம்
ஒரு கட்டணத்திற்கு பாலியல் தொழிலை மேற்கொண்டு ஊதியம் பெறுவது உலகின் முதலாவது தொழிலின் தொடக்கமாக கருதப்படுகிறது. பண்டைய கிரேக்க, ஹீப்ரு மற்றும் உரோம நாகரிக ஆதாரங்கள் அந்த நாட்களில் பாலியல் தொழில் பிரபலமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, உலக அளவில் பாலியல் தொழில் (விபச்சாரத் தொழில்) ஒரு நாகரிக இருப்பைக் கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் சுமார் 40,000 தொழில்முறை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பாதி பேர் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ளவர்கள். இவர்களுள் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைச் சமூகத்தினரும் உள்ளனர். 2016 ஆம் ஆண்டில், இலங்கை பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் சங்கம் முதன்முதலில் வெளிப்படையாக, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டிய அவசியத்தையும் அனுமதியையும் கோரியது. ஆனால், பாலியல் தொழிலை ஒரு தொழிலாக சட்டபூர்வமாக்குவது தார்மீக ரீதியாக நியாயமானதல்ல என்றும் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாட்டினைக் கவனத்திற்கொண்டு, மத அமைப்புகள், சிவில் சமூக குழுக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக சிந்தனையாளர்களிடையே பெரும் விவாதம் நிலவுகிறது. ஆனால் காலப்போக்கில், இந்தக் கலந்துரையாடல் மீதான சமூக கவனம் மங்கிவிட்டதுடன் பாலியல் என்பது சட்டத்தின் முன் ஒரு தொழிலாக இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், தற்போது பாலியல் தொழிலை நேரடியாக ஒழுங்குபடுத்துவதற்கான சட்டக் கோவையொன்று கூட எங்களிடம் இல்லை. ஆனால் ‘Rooms’ எனும் அடிப்படையில் நடாத்தப்படும் சிறிய அளவிலான அறைகள், மசாஜ் நிலையங்கள் மற்றும் பல்வேறு அளவிலான ஹோட்டல்கள் பாலியல் தொழிலை இலவசமாக விற்பனை செய்கின்றன என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும்.
நேரடிச் சட்டமொன்று இல்லையா?
இலங்கை பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்காத நாடு என்றாலும், பாலியல் தொழிலை தண்டனைக் குற்றமொன்றாகக் கருதும் நோக்கத்துடன் சட்ட அமைப்பை மேற்கொள்ளாத நாடாகும். ஆனால், இலங்கையில் பல பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுட்டதற்காகப் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். நேரடி சட்டம் இல்லாத நிலையில் கூட, பொலிஸார் பாலியல் தொழிலாளர்களைக் கைது செய்வதற்காக அலைந்து திரிவோர் கட்டளைச் சட்டம் (Vagrants ordinance -1847) மற்றும் விபச்சார விடுதிகளுக்கெதிரான தடைச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் மூலம் (Brothel Ordinance – 1889) எடுத்துக் காட்டப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
அலைந்து திரிவோர் கட்டளைச் சட்டத்தின் 02 மற்றும் 07 பிரிவுகளின்படி எந்தவொரு காரணமும் இன்றி நெடுஞ்சாலையில் அநாகரீகமாக நடந்துகொள்வது குற்றமாகும். அலைந்து திரிவோர் கட்டளைச் சட்டத்தின் வரலாற்றை ஆராயும் போது, இலங்கையில் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இந்தியாவில் இருந்து வந்து, தோட்டங்களை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த தொழிலாளர்களைக் கைது செய்யும் நோக்கில் பிரித்தானியர்கள்; இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தனர்.
விபச்சார விடுதிகளுக்கெதிரான சட்டமானது, ஒரு விபச்சார விடுதியை அல்லது அதன் ஒரு பகுதியை நடாத்துதல், நடாத்துவதற்கு உதவுதல், உரிமையாளராதல், வாடகைக்கு விடுதல், வாய்ப்பினை வழங்குதல் தண்டனைக்குரிய குற்றமாகக் காட்டுகின்றது. ஆனால், பணத்திற்காக பாலியல் தொழிலினை மேற்கொள்வதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் எந்தவொரு ஏற்பாடும் இச்சட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.
மேற்படி சட்ட ஏற்பாடுகளைக் கவனமாக ஆராயும் போது, பணத்திற்காகப் பாலியல் தொழிலை மேற்கொள்வதை சட்டத்தின் முன்னர் குற்றமாகக் கருதுவதற்குப் போதியளவிலான நேரடிச் சட்டமொன்று இல்லை என்பது தெளிவாகின்றது.
சட்டபூர்வமாக்குவதா இல்லையா என்பது பற்றிய விவாதங்கள்
உலகில் பெரும்பான்மையான நாடுகள் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்குத் தயக்கம் காட்டினாலும், சட்டபூர்வமாக்குவதா இல்லையா என்ற நிலைப்பாட்டில் இருந்து தங்கள் சட்ட அமைப்பை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அந்த நாடுகளின் நீதிமன்றங்களின் பொறுப்பாகும்.
வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகள் சிலவற்றின் கீழ் மட்டும் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதற்கு (Immoral Traffic Prevention Act – 1986 இன் கீழ்) அண்டைய இந்திய நீதிமன்றங்கள் சட்டத்தை இயற்றியுள்ளன. இங்கு, இந்தியாவில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டாலும், பாலியல் தரகுத் தொழில், பாலியல் தொழிலாளர்களை வழங்குதல் மற்றும் அந்த வணிகங்களை விளம்பரப்படுத்துதல் ஆகியன குற்றங்களாகும்.
வகைப்படுத்தல்
உலகின் சட்ட அமைப்பு பாலியல் தொழிலுக்கு சட்டத்தின் முன் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தினை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
குற்றமாக்கல்
சட்டரீதியானதாக்கல்
செல்லுபடியற்றதாக்கல்
பிராந்தியச் சட்டத்திற்கு சட்டத் தீர்மானத்தை மேற்கொள்ள இடமளித்தல்
இலங்கை வகைப்பாட்டில் பாலியல் தொழிலைக் குற்றமாகக் கருதும் ஒரு நாடாகக் கருதப்பட்டாலும், அத்தகைய குற்றமயமாக்கலுக்கு மிகவும் பொருந்தக்கூடிய (குற்றமாக்க வேண்டுமானால்) நேரடி ஒழுங்குமுறைக்கு உட்படுத்த முடியுமான சட்டமொன்றின் தேவையை இதுவரை பூர்த்தி செய்யாத சட்டக் கட்டமைப்பொன்றாகும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.