அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ். “நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”

குறிஞ்சிப்பார்த்தன்

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, ஏனைய மொழியை, கலை, கலாசாரத்தை புரிந்துகொள்வதும் அவசியம்.

“சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாக இருப்பதால் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற மனநிலை காணப்படுகின்றது. துரதிருஷ்டவசமாக இடதுசாரிகள் இணைந்து தயாரித்த 72ஆம் ஆண்டு யாப்பிலேயே பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மனதளவில் இருந்த ஒரு விடயத்தை சட்ட ரீதியாக கொடுத்தவிட்டதன் பின்னர் அதிலிருந்து மாற்றம் பெறுவது இயலாத காரியமாக இருக்கின்றது.” என்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

அவர் கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வி.

த கட்டுமரன்: பல்லின சமூகங்களைக்கொண்ட இலங்கையில் இன, மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கான அடிப்படையான காரணங்கள் எவை என எண்ணுகிறீர்கள்?

அடிப்படையில் இலங்கைப்போன்ற பல நாடுகள் காலனித்துவ நாடுகளாகவே இருந்தன. மூன்று நான்கு நூற்றாண்டுகள் வெளிநாட்டினரின் கைகளில் இருந்ததால் தம்மை எப்படி ஆள வேண்டுமென்ற சிந்தனை சுதேச மக்களுக்கு இருக்கவில்லை. அதனைவிட அனைத்து நாடுகளும் தன்னிறைவு அல்லது கிராமிய பொருளாதார முறைமைகளில் இருந்தபோது இருந்த ஆட்சி முறைமையில் இருந்து முற்றாக மாறுபட்ட நவீன பொருளாதார முறைமையிலான ஆட்சி முறை ஒன்றில் நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களுக்கு மீண்டும் தம்மை தாமே ஆள்வது தொடர்பிலான சிந்தனை ஒன்று இருக்கவில்லை. ஆகவே தமக்கென ஒரு முறைமையை உருவாக்குவதா? அல்லது இதனையே தொடர்வதா? ஏன்ற சிந்தனையில் இரண்டும் இணைந்தே சென்றன. ஆகவே இலங்கையை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் பிரித்தானியர் விட்டுச் சென்ற நிர்வாக முறைமையில் ஒன்றில் மாத்திரம் மாற்றத்தை கொண்டுவந்தார்கள். அதாவது இனத்துவ ரீதியில் கையாள தீர்மானித்த விடயம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இந்தியத் தமிழ் (மலையகத் தமிழர்) மக்களின் குடியுரிமையை சுதந்திரம் கிடைத்தவுடன் பறித்த விடயம். அவர்கள் இந்த நாட்டின் மக்கள் அல்ல என்ற தீர்மானம். அதனைவிட சிங்களம் மாத்திரமே ஆட்சி மொழி என்ற நிலைப்பாட்டை எடுத்தமை. இவ்வாறான விடயங்கள் ஊடாக இந்த நாட்டை பல்லின சமூகங்கள் வாழும் பொதுவான ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளாத தன்மை நீடிப்பது இதற்கு அடிப்படையான காரணம். ஆகவே ஒரு இனத்தை அடக்கியாள முற்படுகையில் முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு.

த கட்டுமரன்: ஆனாலும் இத்தனை வருடகாலம் எல்லா இனத்தையும் பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர். அவர்களால் எந்த அசைவையும் ஏன் ஏற்படுத்த முடியவில்லை?

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சட்டத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பது ஒரு காரணம். மேலும் சிங்களவர்களுக்கென இருக்கும் ஒரே நாடு இலங்கை மட்டும்தான் என்பது அவர்களில் பெரும்பாலானவர்களின் எண்ணம். அதனால் தமது ஆதிக்கம் இந்த நாட்டில் இருக்க வேண்டுமென்ற மனநிலை அவர்களுக்குக் காணப்படுகின்றது. அதனைவிட சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாக இருப்பதால் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற மனநிலை துரதிருஷ்டவசமாக இடதுசாரிகள் இணைந்து தயாரித்த 72ஆம் ஆண்டு யாப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மனதளவில் இருந்த ஒரு விடயத்தை இவ்வாறு சட்ட ரீதியாக கொடுத்தவிட்டதன் பின்னர் அதிலிருந்து மாற்றம் பெறுவது இயலாத காரியமாக இருக்கின்றது. பல்லினத்துவ சிந்தனையுடன் பிரச்சினைகளைத் தீரக்க ஒருவர் முன்வந்தாலும் யாப்பு ரீதியாக அதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அரசியல்யாப்பு ரீதியாக இருக்கின்ற அதிகாரத்தை அவர்களே தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்கின்றர்கள். அதில் சிந்தனை மாற்றம் ஏற்படுவது அவசியம். அப்போதுதான் அனைத்துத் தரப்பினதும் நியாயங்கள் புரியும். இல்லாவிடின் இதுதான் தொடரும்.

த கட்டுமரன்: இந்த முரண்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு சிந்தனை மாற்றங்கள் தேவை என்கிறீர்கள், விளக்கமாகச் சொல்லுங்கள்?

அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்பதை விடுத்து, அல்லது தேர்தலை இலக்கு வைத்து செயற்படுவதற்கு அப்பால் சென்று பொது வெளியில் நாம் அனைவரும் இலங்கையர் இணைந்து வாழ வேண்டுமென பேசுகின்றார்கள். எனினும் அவர்களே ஆட்சியாளர்களாக வரும்போதும் அதே சிந்தனையில் செயற்படுவார்களாயின் அவர்களால் அதனை நிச்சயமாக செய்ய முடியும். என்னைப் பொறுத்தவரை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவ்வாறான ஒருவராக இருந்திருக்க முடியும். அவர் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற ஒருவர். அதனைவிட எதிர்காலத்தில் மீண்டும் பதவிக்கு வரப்போவது இல்லை எனக் கூறியவர். ஆகவே எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாத அவர் இதனை செய்திருக்கலாம். எனினும் நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது. ஆகவே சிந்தனை மாற்றம் அவசியம். அப்போது இது சாத்தியம்.

த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லீம் சமூகத்தின் மீதான கலாச்சார, மத கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசு தீர்மானங்களை மேற்கொண்டது. அரசாங்கத்தின் பங்காளி என்ற வகையில் உங்கள் கருத்து?

ஆடைகள் விவகாரத்தில் உண்மையில் அவரவர் விரும்பும் ஆடைகளை அணிவதில் தவறில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் கலாசார ஆடைகளை கட்டாயப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர (சிங்களவர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் என அனைவரும்) மேலைத்தேய ஆடைகளுக்கு இயல்பாகவே பழக்கப்பட்டுள்ளோம். அதனைத் தவிர்க்க முடியாது. இருந்தும் அவர்களது கலை, கலாசார விழுமியங்களை பாதுகாக்குக் வகையில் ஆடை அணிவதில் பிரச்சினையில்லை. ஆனால் அந்த அடையாளத்தை வெளிப்படுத்துவது என்ற நிலைப்பாடு அடுத்தவரை அச்சுறுத்தும் நிலைமைக்கும் போகும்போது அது சிக்கல்தான். இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், முஸ்லிம்களாகவும் இருக்க வேண்டும். இலங்கையர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அந்த இரண்டு அடையாளங்களையும் புரிந்துகொண்டுதான் செயற்பட வேண்டும்.
இதேபோல் , சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, ஏனைய மொழியை, கலை, கலாசாரத்தை புரிந்துகொள்வதும் அவசியம். அது அனைத்துத் தரப்பில் இருந்தும் வரவேண்டும். இந்தப் புரிதல் இன்றி தீர்வில்லை.

த கட்டுமரன் : குறிப்பாக பௌத்த மதத்தலைவர்களாக அடையாளப்டுத்திக்கொள்ளும் சிலர் இனவாதத்தையும், மதவாதத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து தோன்றும் கருத்தளவிற்கு அரச தரப்பிடமிருந்து வரவில்லை?

இது வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்தியது. இலங்கையில் பெரும்பாலானவர்கள் பௌத்தர்களாக இருப்பதால் அவர்களை பகைத்துக்கொண்டால் தமக்கான வாக்குகள் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அவர்களுக்கு காணப்படுகின்றது. எனினும் ஒரு சிலர் மறுக்கின்றார்கள் அதனையும் மறுப்பதற்கில்லை. எனினும் இந்த நாடு முறைசாராத வகையில் முறைசாராத தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நாடு (சட்ட ரீதியாக குறிப்பிடப்படாவிட்டாலும்) பௌத்தர்களிடம் கையில் உள்ளது. ஒரு உதாரணம் சொல்கிறேன். நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்புச் சபையாக மாற்றி, புதிய யாப்பு ஒன்றை உருவாக்குதவதற்கான இடைக்கால அறிக்கை ஒன்றை உருவாக்கிய பின்னர். (குழுக்களை நியமித்து, கலந்தாலோசித்து, வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஆலோசனைபெற்று) ஜனாதிபதி அறிக்கையை மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து அவர்கள் இணக்கம் தெரிவித்தால் நிறைவேற்றுவோம் எனத் தெரிவிக்கிறார் என்றால் இந்த முறைமையே அவசியமற்றது அல்லவா? இவ்வளவு பணிகளும் வீண் என்பதே எனது கருத்து. ஆகவே பௌத்த மதத்தின் ஆதிக்கம் எதனையும் செய்யவிடாது தடுக்கின்றது. பன்மைத்துவத்தை சமத்துவமாக ஏற்றுக்கொள்ளாது.

த கட்டுமரன் : இந்நிலையில், மலையகத் தமிழர்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதே?

மலையக மக்கள் ஏன் இன்னமும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லையென்றால் அவர்களுக்கென தனித்துவிடப்பட்ட வரலாறு ஒன்று காணப்படுகின்றது. அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளே அல்லவென குறிப்பிடப்பட்ட பின்னர் தங்களை எப்படி நாட்டிற்குள் தகவமைத்துக்கொள்வது என்பது தொடர்பிலேயே அவர்களது போராட்டம் காணப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னரான முதல் 40 வருடங்களும் அரசாங்கமும் எதனையும் செய்யவில்லை. அந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தாலும் அந்த போராட்டங்களும் தெளிவான நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. இந்த நாட்டில் இருப்பதா? அல்லது இந்தியாவிற்கு திரும்பிச் செல்வதா என்ற போராட்டமே தொடர்ந்தது. அரசாங்கம் இவர்களை திருப்பி அனுப்புவதிலேயே அதிக கவனம் செலுத்தியது. அதுதான் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம். அதன் பின்னர் ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு வாக்காளர் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொடுத்தார்களேத் தவிர
இந்த மக்களை மலையகத் தமிழர்களாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்கவில்லை. அந்த நிலைமை இன்றும் தொடர்கின்றது. வாக்குரிமை கிடைத்தவுடன் பிரஜாவுரிமை கிடைத்துவிட்டதாக அந்த மக்கள் நம்பிவிட்டார்கள். வாக்குரிமை கிடைத்தவுடன் அந்த மக்களின் பிரஜாவுரிமைக் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது முன்வைக்கப்படவில்லை. அதுதான் மலையக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம். 80 வருடங்களில் இறுதி 40 வருடங்களில் அதுதான் விடப்பட்ட மிகப்பெரிய தவறு. மேலைத்தேய நாடுகளில் வெளிநாட்டவர்கள் போய் குடியேறி இருக்கின்றார்கள். எனினும் அவர்கள் அந்த நாட்டிக் குடிமக்களாகவே வாழ்கின்றார்கள். மலையகத் தமிழர்களைப்போன்று மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அந்த நாடுகளின் பிரஜைகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். எனினும் இந்த நாட்டில் மாத்திரம்தான் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். ஆகவே இந்த மக்களை மலையகத் தமிழர்களாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுத் தொடர்பில் கடந்த காலத்தில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது சாத்தியப்படவில்லை. எனினும் இந்தக்காலப்பகுதியில் யாப்பின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய யாப்பில் இதனை உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. நாமும் வைத்துள்ளோம். புதிய யாப்புப் பணிகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே நான் இந்த மக்களை மலையகத் தமிழர்கள் என அடையாளப்படுத்தும் தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளேன். அது பதியப்பட்டுள்ளது. ஆகவே எதிர்காலத்தில் விவாதங்கள் இடம்பெறுமென நம்பலாம். இது அடையாளம். அதனைவிட அவர்களை தேசிய அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரச பொது நிர்வாகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்குள்ளும் அவர்களை உள்ளீர்க்க வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களிலும் மேன்மையடையும்போது தேசிய இனம் என்ற விடயம் சாத்தியப்படும்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts