பாடங்களை கற்றுக்கொண்ட ஆணைக்குழு
சம்பத் தேசப்பிரிய
மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அதன் பின்னர் சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வாறான ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அது குற்றமாக அமையும். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டுமென ஐ.நா. அதிகாரி வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இழப்புகள் மற்றும் அநீதிகள் தொடர்பாக ஆராய்வதாக உறுதியளித்தார்.
ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது புகழ்பெற்ற எட்டு ஆணையாளர்களைக் கொண்டுள்ளது. யுத்தத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இவ்விடயங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும் செயற்பாடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது 2010ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பொதுமக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய ஆலோசனைகளை நடத்தியதோடு 285 பரிந்துரைகளை வழங்கியது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விமர்சித்தனர். எனினும், ஆணைக்குழு அதன் வரையறைக்குட்பட்ட அநேகமான விடயங்களை தவற விடவில்லை என எதிரணியினர் வாதிட்டனர்.
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விமர்சித்தது.
எவ்வாறாயினும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் ஆக்கபூர்வமானவை என்ற பொதுவான ஒருமித்த கருத்து நிலவியது. எனினும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பத்து வருடங்களின் பின்னரும் அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கங்கள் தவறிவிட்டன. அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் அல்லது தக்கவைத்துக்கொள்ளும் பசி காரணமாக, நாட்டின் நீடித்த பயணத்திற்கு நன்மை பயக்கும் தீர்மானங்களை எடுக்க அரசியல் அதிகாரிகள் தொடர்ச்சியாக தவறுகின்றனர்.
நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடிய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் பின்வருமாறு-
கடத்தப்பட்டமை மற்றும் காணாமல் போனமை தொடர்பாக விசாரணை நடத்துதல், சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக ஆராய்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குதல், பெண்கள், குழந்தைகள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு அவசியமான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குதல், நீண்டகால வேலைத்திட்டமொன்றின் ஊடாக பல்லின குழுக்களுக்கிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பாடசாலை மட்டத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், சமாதான கல்வியை உறுதிப்படுத்தல், தேசிய ஒற்றுமைக்காக கலை மற்றும் கலாச்சாரத்தை பயன்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டதோடு பிரச்சினைகளை மறப்பதற்கு முயற்சித்ததாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால துரதிஷ்டமான அனுபவத்தின் காரணமாக அந்த சூழ்நிலையை தவிர்த்து சிறந்த விடயங்களை செய்ய தமக்கும் கடினமாக உள்ளதென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. முப்பது வருட கால யுத்தத்திற்கான மூல காரணங்களையும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு தடையாக அவ்வப்போது ஏற்படும் இனரீதியான பதட்டங்களையும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கோடிட்டு காட்டின. இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கான அத்திவாரத்தை அமைக்கும் என்பதை மீண்டும் கூறவேண்டியதில்லை.