பாகுபாடு காட்டுவது நிறுவனமயப்படுத்தப்பட்ட வைரஸாகும் (பகுதி 2)
முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையில் நடந்த சம்பவம் மூலம் கோவிட் -19 சூழ்நிலையில் அசல் சமூகத்திற்கு பாகுபாடு காட்டப்படுவது மிகத் தெளிவாகியது. பேருவளையில் கொவிட் -19 நோயாளிகள் இருவர் “இலங்கை சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை” இழக்கச் செய்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையை தெரண தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புச் செய்தது. இங்கு “பேருவளை மக்கள்” என்ற பெயர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அவதானிக்கலாம்.
மத அனுஷ்டானங்களுக்காக முஸ்லிம்கள் “பொலிஸ் ஊரடங்கு உத்தரவை” மீறுவதாக வெளியான தகவல்கள் பிரதான நீரோட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக பரப்பப்பட்டன. ஹொரவபத்தானையில் அனுஷ்டானங்களில் பங்கேற்றனர் என்ற குற்றச்சாட்டில் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சில சிங்கள பௌத்தத் தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பரப்பும் விதத்தைக் காணக் கூடியதாகவிருந்தது(IMADR).
2020 மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, கொழும்பு ஜாமிஉல் அப்ரார் ஜும்ஆ மஸ்ஜித் முஸ்லிம் பள்ளிவாயிலில் தொழுகையொன்று நடாத்தப்பட்டதாக பொய்யான செய்தி அறிக்கையொன்று ‘அத தெரண’ வினால் வெளியிடப்பட்டதை எதிர்த்து இலங்கை முஸ்லிம் கவுன்சில் மார்ச் 27 ஆம் திகதி ‘அத தெரண செய்திகளுக்கு’ ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது. 2019 ஆம் ஆண்டில் முஸ்லிம் பள்ளிவாயிலொன்றில் நடைபெற்ற மத அனுஷ்டானமொன்றின் காணொளியைப் பயன்படுத்தி, ஊரடங்கு உத்தரவின் போது முஸ்லிம்கள் பாரிய மத அனுஷ்டானமொன்றை மேற்கொண்டார்களெனக் குற்றஞ்சாட்டி 2020 மார்ச் மாதம் ஹிரு தொலைக்காட்சி அலைவரிசையில் பொய்யான செய்தியொன்று பிரச்சாரம் செய்யப்பட்டது FACT Crescendo, 2020 March). காணொளியை சமூக ஊடகத்தில் பகிர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இந்த நிகழ்வுகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களுக்கெதிராக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில், எந்தவித எதிர்ப்பிற்கும் முகங்கொடுக்காது இலங்கையின் பல பிரதேசங்களில் ஒன்றிணைந்து பிரித் ஓதல் நிகழ்ச்சிகளை நடாத்த பௌத்த குழுக்களுக்கு முடியுமாகவிருந்தது(Ground views 03, 2020).
சமூக ஊடகங்களில் முஸ்லிம்களை குறிவைத்து வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் குரற்பதிவு உள்ளடக்கங்களை விரைவாக பரவுவது குறித்து இலங்கை முஸ்லிம் கவுன்சில் மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளின் குழு, 2020 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொண்டது. அத்தகையதொரு குரற்பதிவில் இலங்கைச் சுகாதார அதிகாரிகள் சங்கத் தலைவரினது பதிவும் உள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
கொவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக 2020 மார்ச் 31 ஆம் திகதியன்று அரசாங்கம் எடுத்த முடிவானது அநேகரால் பொதுச் சுகாதார நடவடிக்கையாக பார்க்கப்படாததுடன் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை நிறுவனமயமாக்குவதன் வெளிப்பாடாகவே இதனைக் கருதினர்.
2020 ஏப்ரல் 8 ஆம் திகதியிட்ட ஒரு கூட்டு கடிதத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதியினர் குழுவொன்று கொவிட் -19 பரவுவது தொடர்பாக இன அல்லது மதக் குழுக்களைக் கண்டனம் செய்வதை “கடுமையாக கண்டிப்பதாக’” குறிப்பிட்டு அதனை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதுபோன்றே, முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு கொண்ட கருத்துக்கள் அதிகரிப்பதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது (LKA 2/2020).