கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திய மூன்று எடுத்துக்காட்டுகள்

தனுஷ்க சில்வா

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தொடர்ந்த போரின்போது பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. போருக்குப் பிந்தைய இலங்கையில் இனவெறி (குறிப்பாக சிங்கள-முஸ்லிம்) கலவரங்களைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில விதிகளின் கீழ் சட்டங்கள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டு மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் நோக்கம் அதில் அடங்கி இருக்கும் புதிய போக்குகளை அடையாளம் காண முயற்சிப்பதாகும்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை காவலில் வைத்தல்

இளம் மனித உரிமை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சாட்டப்படவுமில்லை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுமில்லை. அவர் 200 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொவிட் .19 மீதான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது இடம்பெற்றதாக ஆரம்பத்தில் காரணம் காட்டப்பட்டது. ஏழு மாதங்கள் கழிந்த நிலையிலும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்னும் ஒரு நீதவான் முன் ஆஜர்செய்யப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் விதம் குறித்து ஒரு நீதவான் பலமுறை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஹிஜாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட நீதவானுக்கு அதிகாரம் இல்லை, இது நம் நாட்டில் ஒரு பயங்கரமான சட்டமாகும். எனவே எந்தவொரு நீதித்துறை மேற்பார்வையும் இல்லாமல், ஹிஜாஸ் ஒரு தனிமைச் சிறையில் ஒரு கைதியாக நேரத்தை செலவிடுகிறார். அவருக்கு சட்ட உதவி பெறும் வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமைகள் குழு ஹிஜாஸ் குறித்து ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டது. குற்றச்சாட்டு இன்றி அவர் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டதற்கு இது அவர்களின் கவலையை வெளிப்படுத்தியது. ஹிஜாஸ் .ஹிஸ்புல்லாவை காவலில் இருந்து விடுவிக்கவும், துன்புறுத்தல், அச்சுறுத்தல், தடைகள் அல்லது பழிவாங்கல் போன்ற அச்சமின்றி இலங்கை சட்டத்தரணியாக அவரை அவரது தொழில்சார் கடமைகளைச் செய்வதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் இந்த குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியது.

 

மாக்கந்துரே மதுஷ் படுகொலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் இருந்தபோது மாக்கந்துரே மதுஷ் கொல்லப்பட்டார். அவர் பாதாள உலகில் ஒரு மோசமான குற்றவாளியாக இருக்கலாம். ஒரு குற்றவாளியேயாயினும் நிலையான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு குற்றவாளியாகவோ அல்லது நிரபராதியாகவோ காணப்பட்டு தண்டிப்பது அல்லது விடுவிப்பது என்பதுவே நியாயமான நடைமுறையாகும். ஆனால் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் அழைத்துச் செல்லப்படுகையில் வழியில் கொல்லப்படுவதானது அந்த நாட்டில் நீதித்துறைக்குப் புறம்பாக மக்களைக் கொல்லும் ஒரு கலாச்சாரம் (culture of extra-judicial killing) உள்ளது என்பதையே காட்டுகிறது. மதுஷ் சார்பாக ஆஜராகும் மனித உரிமை சட்டத்தரணி சமிந்த அதுகோரல இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் போலீஸ் மா அதிபருக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட படுகொலை தொடர்பாக சொல்லப்படும் காரணம் உயர் மட்டத்தால் மிகவும் திறமையாக புனையப்பட்ட கதை என்று கூறுகின்றார்.

மேலும் அவர் “சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் ஒரு நாகரிக சமுதாயத்தில், எந்தவொரு விசாரணையும் இன்றி, சட்ட அமுலாக்க நிறுவனங்களின் காவலில் இருந்த சந்தேகநபர்கள் அண்மையில் இறந்ததைப் பற்றி பொதுமக்கள் வெறுப்படைகிறார்கள், சந்தேகப்படுகிறார்கள்.” என்று தனது கடிதத்தில் கூறுகிறார்:

எந்தவொரு நாகரிக சமுதாயமும் அத்தகைய மரணத்தை நியாயப்படுத்தாது.” என்று அவர் மேலும் கூறுகிறார்.

எனது கட்சிக்காரரின் மரணம் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் நன்கு திட்டமிடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்” என்ற வாக்கியத்துடனேயே அவரது கடிதம் தொடங்குகிறது. அக்டோபர் 16, 2020 அன்று மாக்கந்துரே மதுஷ் குற்றப் புலனாய்வு பிரிவில் இருந்து கொழும்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது சட்டவிரோதமானது மற்றும் மதுஷின் கொலைக்கு முதல் முன்னேற்பாடாக இது அடையாளம் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்.

மதுஷின் தடுப்புக்காவல் அக்டோபர் 28 ஆம் திகதி முடிவடையவிருந்தது. அதற்கு முன்னர் இந்தக் கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக திரு.அத்துகோரல ஒரு முக்கியமான சட்டச் சிக்கலை ஐ.ஜி.பி.யின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதாவது, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருந்த எனது கட்சிக்காரரின் தடுப்புக்காவல் அக்டோபர் 28, 2020 அன்று முடிவடையவிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்ற விடயத்தை.

இதற்கு முன்னர் மதுஷின் மனைவி தனது கணவரை கைது செய்த விதம் சட்டவிரோதமானது என்று கொழும்பு குற்றப்பிரிவு இயக்குநருக்கு அக்டோபர் 17, 2020 திகதியிட்ட கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளார். மேற்படி கடிதத்தை மேற்கோள் காட்டி திரு.அதுகோரல, போலீஸ் காவலில் இருக்கும்போது மக்களைக் கொல்வது என்ற தீய நடைமுறையை முடிந்தவரை எதிர்க்குமாறு இலங்கை வழக்கறிஞர் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

அஹ்னாஃப் ஜஸீமின் தடுப்புக்காவல்

மன்னார் சிலவத்துரையில் வசிக்கும் அஹ்னாஃப் ஜஸீம் தமிழில் கவிதைகள் எழுதும் 25 வயது மிக்க இளம் கவிஞர், ‘மன்னாரமுது  அஹ்னாஃப்என்ற புனைப்பெயரில் கவிதை எழுதினார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் போலவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கும் மேலாக அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.நவரசம்என்ற அவரது கவிதை புத்தகத்தின் உள்ளடக்கம் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டுள்ளது என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். புத்தகத்தில் உள்ள சில கவிதைகள் தீவிரவாதைத் தூண்டுவதாக உள்ளதாகவும்  அவர் தீவிரவாத கருத்துக்களை பரப்பியதாகவும் போலீசார் ஆரம்பத்தில் கூறினர். அவரது இப் புத்தகத்தை ஜெஸீம் 2017 இல் வெளியிட்டிருந்தார். இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை, புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து கவிஞருக்கு எதிராக எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.

அஹ்னாஃப் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டம் மற்றும் சமூக நியதி அடிப்படையில் அதிகார துஷ்பிரயோகம் ஆகும், இது பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் துஷ்பிரயோகிக்கப்பட்ட சமீபத்தைய சம்பவமுமாகும். ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அஹ்னாஃப் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தற்போது 200 நாட்களுக்கு மேலாக குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மீதான விசாரணையுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது.

அஹ்னாஃப் ஜஸீம் கைது செய்யப்படும் வரை மதுரங்குலியில் சிறப்புமிக்க பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணியாற்றினார். நவரசம் எனும் கவிதை புத்தகத்தின் பிரதிகள் அவர் கற்பித்த பாடசாலை மாணவர்களின் வசம் இருந்ததால், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட கவிதை புத்தகமும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஆதாரமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், கவிதை புத்தகத்தின் சரியான மொழிபெயர்ப்பு இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அஹ்னாப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் கவிதை புத்தகத்தை மொழிபெயர்த்து, அந்தக் கவிதைகளால் மாணவர்களை “தீவிரவாதத்திற்கு” இழுக்க முடியுமா என்பதை பரிசீளித்து தீர்மானிப்பதற்காக கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை உளவியலாளர்களுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். புத்தகத்தை சிங்கள மொழியில் மொழிபெயர்க்க நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது, ஆனால் அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு பெறப்பட்டிருக்கவில்லை.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts