நோயில் இருந்து உயிரை காப்பதா? பட்டினியில் இருந்து உயிரைக் காப்பதா?
அருள்கார்க்கி
பண்டாரவளை நகரத்தில் அன்றாடம் கட்டுமான உதவியாளராக தொழில் புரிந்து வாழ்க்கை நடாத்துபவர் குமார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி ஒரு தோட்ட தொழிலாளி. இவ்விருவரின் வருமானமே இந்த குடும்பத்தின் வாழ்க்கை செலவை கொண்டு செல்ல உதவியது.
பயணத்தடை, தனிமைப்படுத்தல், வீட்டில் இருத்தல் என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் குமார்.
“நான் பண்டாரவளை நகரில் மேசன் பாஸ் வேலை செய்தேன். இப்போது லொக்டவுன் போட்டாச்சி. தொழிலுக்கும் போக ஏலாது. எங்க ஊருலயும் எந்த கூலித் தொழிலும் கிடைப்பதில்லை. இந்த நெலம தொடர்ந்தா…..” என கண்கலங்குகிறார் குமார்.
நோயில் இருந்து உயிரைக் காப்பதா? பசியில் இருந்து உயிரைக் காப்பதா? என போராட்டமாகியுள்ளது குமாரின் வாழ்வு. தோட்டபுறத்தில் வாழும் பெரும்பான்மையான அன்றாட கூலித்தொழில் செய்பவர்களின் நிலைமை இதுதான். தோட்ட வேலைகளில் இருந்து விலகி வெளியில் அன்றாடம் கூலித்தொழில் செய்து வந்தவர்கள் அவற்றை செய்யமுடியாத நிலையில் வருமானத்தை இழந்துள்ளனர். இங்கே கொரோனா என்ற கொடிய நோய் வசதிபடைத்தவர்கள் வறுமையில் உள்ளவர்கள் என வேறுபாடுகொண்டு தாக்கும் நோயல்ல. மனிதர்களைத் தாக்கும் நோய். சமூகத் தொடர்பை நிறுத்தி தனித்திருத்தலும் சுத்தமாக இருத்தலும் இந்த நோயில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய உபாயம். அதை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தப்பலாம் வறுமை, பட்டினியில் இருந்து தப்ப முடியாத நிலைதான் இது. அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் எக்காலத்திலும் இந்த நிலைகளை சமாளிக்க வறுமைக்கோட்டில் வாழ்பவர்களுக்கு வழி என்ன? இவ்வாறான வறுமைக்கு என்ன சமூகக் காரணிகள் உள்ளன? பரம்பரை பரம்பரையாக சிலர் வறுமையில் உழல்வது ஏன்?
குமாரின் இந்த நிலையுடன் சமூக பொருளாதார காரணிகளும் நேரடியான தாக்கத்தை செலுத்துகின்றன. குமாரின் குடும்பமானது பரம்பரை பரம்பரையாக சலவைத் தொழிலாளர்களாகவே இருந்துள்ளனர். அவரின் பாட்டனாரும், தந்தையும் அதே தொழில்தான் புரிந்தனர். ஆரம்பகாலத்தில் மலையகத்தில் ‘டோபி’ என்று அழைக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்களும், ‘பாபர்’ என்று அழைக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்திடம் சம்பளம் பெற்று தமது தொழிலை புரிந்து வந்தனர். காலப்போக்கில் இந்த தொழில்வழி முறைகளில் மாற்றம் ஏற்பட்டு இவர்களின் தொழில்கள் அருகிவிட்டன. இவர்கள் தோட்டங்களில் வேலைகளில் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக இவர்களுக்கு பின்வந்த சந்ததியினர் நகரங்களில் கூலித்தொழிலாளர்களாகவும், நாளாந்த சிப்பந்தி வேலைகளுக்கும் போகத் தொடங்கிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக இவ்வாறான பிற்படுத்தப்பட்ட சமூக குழுக்கள் இன்று வரை சமூகத்தின் கீழ்மட்டத்திலேயே இருக்கும் நிலையும், ஏனையவர்களில் தங்கி வாழும் சூழலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. குமார் போன்ற பலருக்கு இன்று நிரந்தர தொழில் இல்லை. சமூக மட்டத்திலும் இவர்கள் அங்கீகாரமற்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இதுவே குமாரின் கூற்றில் வெளிப்படும் மறைபொருளாகும்.
இவ்வாறான சாதிய ரீதியான சமூக கட்டமைப்புகள் மலையக சமூகத்திடம் இன்றும் காணப்படும் வழமைகளாகும். சமூக ரீதியாக பல்வேறு பாரபட்சங்கள் காணப்பட்டாலும் இவர்கள் இந்த நிலைமையில் இன்னும் இருப்பதற்கு இவர்களின் போதுமான முயற்சியின்மையும் பிரதான காரணமாக உள்ளது. குமாருடனான உரையாடல் மூலமாக உணர முடிந்தது.
“நான் தோட்ட ஸ்கூலில் ஆறாமாண்டு வரை படிச்சேன். எனக்கு சரியான வழிகாட்டல் இல்லை, பாடசாலையிலிருந்து நின்று விட்டேன். ஆனால் அப்போது எனக்கு தொழிலுக்கு போகவேண்டிய சூழல் இருக்கல. இருந்தாலும் படிப்பதைவிட அப்பாவுக்கு உதவி செய்வது எனக்கு விருப்பமாக இருந்தது. அந்த காலத்துல அதிகமான வேலை அப்பாவுக்கு இருக்கும். அதனால் உதவி செய்ய ஆரம்பிச்சன். நான் ஸ்கூலுக்கு போகாததை அவரும் பெரிதாக கணக்கெடுக்கவில்லை.இதனால் படிப்பு இல்லை. பரம்பரைத் தொழிலும் இல்லை. கூலித்தொழிலை தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?” என்று வருத்தப்படுகிறார். இது குமாரின் இன்றைய நிலைக்கான பின்னணியாக இருக்கின்றது. இது மலையக சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக வகுப்புகளின் சமகால நிலவரத்தை குறிக்கின்றது.
குமாரைப் போன்று படிப்பதற்கான வசதிகள் இருந்தும் கல்வியை கைவிடுவது முட்டாள்தனம். அதுவும் இலவசக் கல்வியுள்ள இந்த நாட்டில் அடிப்படைக் கல்வியைக்கூட பெற்றுக்கொள்வதில் நாட்டமில்லாதவர்களாக பலர் உள்ளனர். சிலர் வறுமையைக் காரணம் காட்டினாலும் இலவசக் கல்வி, இலவச உணவு, இலவச சீருடை என்பவற்றை வைத்து எத்தனையோபேர் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். கல்வி பற்றி நாம் கட்டாயம் சிந்திக்கவேண்டும்.
தனது வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அதை சரிவர பயன்படுத்த தவறியதை நினைத்து குமார் வருந்துகிறார். இந்நிலைமை அவரின் பிள்ளைகளுக்கும் வராமல் இருப்பதற்கு முயற்சித்த அவர் இன்று பெரும் சவாலை எதிர்கொள்கிறார். கொவிட் பெருந்தொற்றினால் குமாரின் குடும்ப வருமானம் கேள்விக்குறியாகியுள்ளது. கடனுடன் காலம் கழிகிறது. மனைவியின் தோட்டவேலை சம்பளத்தில் வாழ்வு நகர்கிறது.
குமாருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் பாடசாலை செல்பவர்கள். இவர்கள் இப்போதுள்ள நிலையில் பிள்ளைகளின் படிப்பு பற்றி சிந்திக்கமுடியாதவர்களாக உள்ளனர். ஆயினும் இந்தப் பெற்றோரின் கையில்தான் தங்கியுள்ளது பிள்ளைகள் படிப்பதற்கான உற்சாகத்தை வழங்குவது.
மலையக அரசியல் தொழிற்சங்க ரீதியாகவும் சாதிய பாகுபாடுகளும், பாரபட்சங்களும் காணப்படுவதற்கு குமார் போன்றோர் உதாரணங்களாக உள்ளனர். அரசியல் தொழிற்சங்க கட்டமைப்புகள் எல்லாம் தமக்கு தேவையான கூலிகளை தயார்நிலையில் சேர்த்து வைப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ளன. மக்களை தினக் கூலிகளாக வைத்திருக்க வேண்டுமென்றால் கல்வியின் அவசியம் அங்கு இருக்காது. எனவே மக்கள்தான் இதில் அதிக கவனம் எடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
அதே நேரம் ஒரு சுயதொழிலை மேற்கொள்வதற்கான உதவிகளை பலர் பெற்றுக்கொண்டுள்ள போதும் குமார் போன்றோருக்கு அவ்வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு அவரை சமூச, வகுப்பு ரீதியாக அணுகியமையே காரணம் என குமார் உறுதியாக நம்புகின்றார்.
மலையக அரசியலில் கட்சிகளின் தலைமை மட்டத்திலிருந்து தோட்ட தலைவர் வரை சாதிய ரீதியான கட்டமைப்புகளே உள்ளன. பிற்படுத்தப்பட்ட சமூக வகுப்புகளை சேர்ந்தோர் அதற்குள் நுழைய முடியாத அளவுக்கு இறுக்கமான நடைமுறைகள் காணப்படுகின்றன. ஆனால் அனைத்து சமூகங்களை சேர்ந்தோரும் வாக்காளர்களாக அவர்களின் கடமையை செய்கின்றனர். குமாரின் சொந்த அனுபவத்தில் அவரின் பின்னணியை மையப்படுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாகுபாடாக நடத்தப்படுவதற்கு அரசியல் காரணங்களும் இருக்கின்றமை அவதானிக்கத்தக்கது. இதனை குமாரின் கூற்று மூலம் நாம் தெளிவாக அடையாளம் காணலாம். இந்த சமூக நிலையை மாற்றுவதற்கு குமார் தன் குழந்தைகள் மூலம் முயற்சிப்பது நம்பிக்கை தருவதாகும்.
இன்றுள்ள இந்த பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்கு நிரந்தர தொழில் செய்யும் குடும்பங்களே தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் குமார் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலை மோசமானது. நாடு குறித்த நெருக்கடியிலிருந்து மீண்டாலும் வழமைக்கு திரும்புவதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விளிம்பு நிலையிலுள்ள இவ்வாறான குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கை மிகப்பெரும் சவாலானதாகவே காணப்படும்.
குமார் இன்று தொழிலற்று இருப்பதற்கு கொவிட் தாக்கம் காரணமாக இருந்தாலும் நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்படும் சந்தர்ப்பங்களில் இவர்களது வருமானம் ஸ்தீரமற்று இருப்பதற்கான அடித்தளத்தை சமூக காரணிகளே உருவாக்கியிருக்கின்றன. அது குமார் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூக வகுப்புகளுக்கு நேரடியாகவே பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. எவ்வாறாயினும் தனது குடும்பத்தின் பரம்பரை அடையாளத்தை கல்வியால் மாற்ற முடியும் என்று குமார் உறுதியாக நம்புகின்றார். தான் இழந்த அந்த வாய்ப்பை தனது பிள்ளைகளும் இழக்க கூடாது என்பதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் முன்நோக்கி நடக்கின்றார்.
Protection From Diseases And Hunger?
රෝගවලින් ජීවිතය බේරාගන්නද ? කුසගින්නෙන් ජීවිතය බේරාගන්නද?