நாட்டின் ஜனநாயகமும் அரசியல் கட்சிகளின் ஜனநாயகமும்
கயான் யத்தேஹிகே
இலங்கை நாடானது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் தமது அறிவு நிலை மற்றும் புரிதலின் அடிப்படையில் ஜனநாயகம் தொடர்பான பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சுதந்திரமாக வாழும் உரிமையே ஜனநாயகம் என்பது ஒரு பிரதான கருத்தாகும். ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தத்தை புரிந்துகொள்வது, அதனை அரசியல் ரீதியாக அறிந்துகொள்ள உதவும். கிரேக்க மொழியில் டெமோஸ் என்றால் ‘மக்கள்’ என்றும் க்ரடோஸ் என்றால் ‘விதி’ என்றும் பொருள்படும். இதன் பிரகாரம் ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள்படும்.
ஜனநாயகம் இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று நேரடி ஜனநாயகம், மற்றையது பிரதிநிதித்துவ ஜனநாயகமாகும். நேரடி ஜனநாயகத்தின் கீழ், பிரஜைகள் நேரடியாக ஆட்சியில் பங்கேற்கின்றனர். கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் நேரடி ஜனநாயக முறை செயற்பாட்டில் காணப்பட்டது. சனத்தொகை வளர்ச்சியடையும் போது ஆட்சியில் மக்கள் பங்கேற்பது சிரமமாகும். எனவே, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை நியமிக்க பிரதிநிதித்துவ ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில், இலங்கை பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதேநேரம், வாக்கெடுப்புகளில் நேரடி ஜனநாயகம் காணப்படுகின்றது. இலங்கை அரசியலமைப்பின் ஒரு சிறந்த பண்பு என்னவென்றால், அரசியலமைப்பின் சில உட்பிரிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்த முடியாது. அத்தகைய திருத்தங்களை மக்கள் நேரடியாக அங்கீகரிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றமை, ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம் என்பது தெளிவாகின்றது. ஜனநாயகத்தின் இருப்பிற்கு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் அவசியம். மேலும், தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல்கள் உரிய நேரத்தில், சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படாதபோது, தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் வாய்ப்பை மக்கள் இழக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை நடத்தாத பல சந்தர்ப்பங்களை நாம் அவதானித்துள்ளோம். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற வடமேற்கு மாகாண சபை தேர்தலில் ஊழல் மற்றும் வன்முறைகள் நிறைந்து காணப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும். தேர்தல்களை ஒத்திவைத்த பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன. இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இப்போது பல வருடங்களாக தாமதித்து வருகின்றன.
உரிய நேரத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை கோருவது பிரஜைகளின் கடமையாகும். பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கீழ், கட்சி ரீதியில் அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒற்றைக் கட்சி முறைக்கு பதிலாக பல கட்சிகள் இணைந்த முறையானது ஜனநாயகத்தை மேம்படுத்துகிறது. மக்கள் பல்வேறு சிந்தனை வழிமுறைகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு அரசியல் கட்சியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் தேவைக்கேற்ப கட்சியின் கொள்கைகள் பொருந்தாவிட்டாலும் மக்கள் ஒரு கட்சியை தெரிவுசெய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது மக்களின் நேர்மையான கருத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற அதேவேளை ஜனநாயகத்திற்கும் ஏற்புடையதல்ல.
இலங்கையில் இனங்கள் மற்றும் மதத்தின் அடிப்படையில் கட்சிகள் உள்ளன. இத்தகைய கட்சிகள் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானவை அல்ல. தேர்தல் சட்டத்தின்படி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு. இது மக்களின் இறையாண்மை எனப்படுகின்றது. தற்போதைய தேர்தல் முறையின் கீழ், மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் விருப்பு வாக்கு முறைமை பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இலங்கை வாக்காளர்களின் சிந்தனையை பார்த்தால், அவர்கள் வேட்பாளர்களை விட கட்சிக்கு முன்னுரிமை வழங்குவதை காணலாம். இந்த நிலையை கடந்த உள்ளூராட்சி தேர்தலிலும் வெளிப்படையாக காணமுடிந்தது. இத்தகைய நடவடிக்கைகள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அத்தோடு, அதை திருத்தியமைக்கக்கூடிய ஒரே சக்தி மக்கள் மட்டுமே. ஒப்பீட்டளவில் இலங்கையின் கல்வியறிவு அதிகமாக உள்ளது. ஆனால் அரசியல் தொடர்பான அறிவு அந்த நிலையை எட்டவில்லை. எனவே, மக்கள் எப்போதும் உணர்ச்சிவசப்படுவதோடு, கொள்கைகள் மீது குறைந்தளவான கவனத்தை செலுத்துகின்றனர். இதன் விளைவாக, மக்கள் தேர்ந்தெடுத்த பல அரசியல்வாதிகள் கடந்த சில தசாப்தங்களில் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவித்துள்ளதை நாம் அவதானித்தோம்.
நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றிற்கிடையிலான அதிகார சமநிலை ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது. இவற்றில் ஒன்று மற்றொன்றை அதிகாரம் செலுத்த முயற்சிக்கும்போது ஜனநாயகத்தின் அத்திவாரம் நிலைகுலைகின்றது. சட்டத்தை விட ஜனாதிபதி உயர்ந்தவர் என்ற சூழ்நிலையை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கியுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக கட்டமைப்பை 20ஆவது திருத்தம் சீர்குலைத்துள்ளது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கீழ், பாராளுமன்றமானது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடியும். ஜனநாயகத்தை கட்டிக்காப்பதற்கு வலுவான எதிரணியொன்று அவசியம். பொதுமக்களின் கருத்தை புறக்கணித்து ஜனநாயக விரோத செயற்பாட்டில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டால், அடுத்த தேர்தல் வரை அவற்றை தடுக்கும் பிரதான கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.
கட்சி முறைமையின் கீழ், அரசியல் கட்சிகள் பரிந்துரைக்கும் வேட்பாளர்களிலிருந்து மக்கள் தாம் விரும்பும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும். இந்த பின்னணியில், அரசியல் கட்சிகளுக்குள் ஜனநாயகம் காணப்பட வேண்டியது அவசியம். துரதிஷ்டவசமாக, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளில் ஜனநாயகத்தை காண முடிவதில்லை. ஒரு சிலர் மாத்திரம் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு முன்னர் அதனை பாதுகாக்க வேண்டும். அதனை நாம் செய்யத் தவறினால் மக்கள் தமது பிரதிநிதிகளை வினைத்திறனுடன் தெரிவுசெய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.