நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் யாப்பு
அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ
பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் யுத்தத்திலிருந்து இலங்கை இப்போது விடுபட்டுள்ளது. மனிதாபிமானத்தின் பேரழிவாக காணப்பட்ட யுத்தம் மீண்டும் நிகழாமல் இருக்க பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்பட்டன. பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அதில் ஒன்றாகும். எனினும், 2009ஆம் ஆண்டுமுதல் நாட்டை ஆண்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், 2015ஆம் ஆண்டு தோல்வியை தழுவும் வரை அத்தகைய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்தவில்லை. குறைந்தபட்சம் ஒரு வரைபையேனும் தயாரிக்கவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக அரசியலமைப்பு சீர்திருத்தம் காணப்பட்டது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கோருவதற்கு, லால் விஜேநாயக்காவின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டது. எனினும், புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் வரை இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள, தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் சில்வா தலைமையிலான குழுவொன்றை நியமித்தது. குறித்த குழுவிடம் வணக்கத்திற்குரிய ஓமரே கசப்பா தேரர் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தார். அதில், நாட்டின் பெயரை சிங்களே அல்லது சிங்கள தேசம் என மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவமாக இக்கோரிக்கை அமைந்ததே தவிர, இதனை ஒரு தனிப்பட்ட முன்னெடுப்பாக கருத முடியாது.
அரசியலமைப்பு சீர்திருத்தம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட வழியில் ஒரு நாட்டின் பெயரை மாற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த பிரிட்டிஷ் இலங்கை (பிரிட்டிஷ் சிலோன்), சுதந்திர இலங்கையாக மாறியது. 1972 குடியரசு அரசியலமைப்பினால் இலங்கை (ஸ்ரீலங்கா) என பெயரிடப்பட்டது. எனினும், நாட்டின் பெயரை சிங்களே என மாற்றுவதும் நாட்டின் நிர்வாக அலகுகளை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளவாறு ருஹூணு, மாயா மற்றும் பிஹிட்டி என மீண்டும் துணை தேசிய அலகுகளாக பிரிப்பதும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகும். இந்த யோசனையானது, களங்கமில்லாது பழைமையை கொண்டாடுவது போல தோற்றமளித்தாலும், சிறுபான்மை சமூகங்களை அடக்குவதையும் அவர்கள் ஏற்கனவே அனுபவிக்கும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதையும் பின்னணியில் நோக்கமாக கொண்டுள்ளது.
சிங்களே என்பது எமக்கு பரீட்சமான பெயர். மார்ட்டின் விக்ரமசிங்கவின் கம்பெரலிய நாவலில், ஜினதாச என்பவர் சிங்களே என்ற பிரதேசத்திற்கு தொழில் தேடிச் செல்கின்றார். சிங்களே என்பது அப்போது ஊவா மாகாணமாக காணப்பட்டது. இலங்கையை சிங்களே என பெயர்மாற்றுவதானது, அந்த அனுபவத்திலிருந்து மாறுபட்டது. சிங்களே என்பது முற்றிலும் சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் சிறுபான்மையினரை அடிபணிய வைக்க விரும்பும் இனவாதிகளை உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு பேரினவாத பெயரிடலாகும். இச்செயற்பாடானது தமிழ், முஸ்லிம், மலாயர் மற்றும் பறங்கிய சமூகங்களை விரக்தியடையச் செய்யும். இந்நாட்டில் வாழும் வெளியாட்களைப் போல அவர்கள் தம்மை உணர்வார்கள். ஆகவே, இலங்கையின் பெயரை சிங்களே என மாற்றுவது இன நல்லிணக்கத்திற்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.
இது ஒரு யோசனை என்றும் பரிந்துரை என ஒருசாரார் வாதிடலாம். எனினும், அதனை குறைத்து மதிப்பிட முடியாது. காரணம், எமது நாட்டின் பல்கலாசார நிலையை எமது தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் முன் ஒப்புக்கொள்கின்ற நிலையில், இத்தகைய யோசனை ஆபத்தானது. அதேநேரம், தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தை ஊக்குவிக்கின்றது.
பிரித்தானியா எமது நாட்டை காலனித்துவப்படுத்தியபோது ஏற்றப்பட்ட கொடியை பயன்படுத்துதல் மற்றும் தேசிய நிகழ்வுகளில் சிங்களத்தில மாத்திரம் தேசிய கீதத்தை இசைத்தல் போன்ற ஏனைய நகர்வுகளுடன் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாடுவது தற்போது வழக்கத்தில் உள்ளதோடு, எதிர்காலத்தில் அரசியலமைப்பு வரைபில் இது உள்வாங்கப்படும். இலங்கையின் பெயரை சிங்களே என மாற்றும் யோசனையில் காணப்படும் இவ்விடயங்கள் நிறைவேற்றப்பட்டால், நிச்சயம் அது மற்றொரு பேரழிவின் ஆரம்பமாக அமையும். அத்தகைய முடிவை மாற்றியமைப்பது எளிதானதல்ல.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரத்தை சிறுபான்மையினர் கொண்டுள்ளதோடு, மத்திய மாகாணத்திலும் அவர்கள் கணிசமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர். ருஹுணு, மாயா, பிஹிட்டி அமைப்பின் கீழ், முழு வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டமும், வடமேற்கு மாகாணத்தின் ஒரு பகுதியும் பிஹிட்டி துணை தேசிய பிரிவின் கீழ் வரும். இந்த மாகாண அலகிலும் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் மீண்டும் சிறுபான்மையினராக மாற்றப்படுவார்கள். வடக்கு மாகாண சபையில் அவர்கள் தற்போது கொண்டுள்ள பெரும்பான்மை அதிகாரத்தை இழப்பார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சிறுபான்மையினரும் இதே நிலையை எதிர்கொள்ள நேரிடும். இது இன நல்லிணக்கத்தை கடுமையாக பாதிக்கும் மற்றும் நீடித்த இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும்.
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் அனைத்து வகையான சட்டங்கள், நிர்வாகங்கள் மற்றும் செயற்பாடுகளின் அடித்தளமாகும். அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த பொதுமக்கள் கருத்துக்கோரலில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பாக்கியத்தை மக்கள் அனுபவிக்க வேண்டும். எனினும், அத்தகைய வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்வைக்கப்படும் யோசனைகள், உரையாடல்களை தேவையற்ற திசைக்கு இட்டுச்செல்வதாக அமையக்கூடாது. இறுதியில், அரசியலமைப்பை உருவாக்கும் ஜனநாயக செயன்முறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். இன சமூகங்களிடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் காணப்படுவதே இலங்கையின் புதிய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைய வேண்டும். இந்த அடிப்படை விடயங்களை புறக்கணிக்கும் எந்தவொரு அரசியலமைப்பும் இலங்கையை ஒரு அங்குலமும் முன்னோக்கி நகர்த்திச்செல்லாது. 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புகளின் நீட்டிப்புகளாக புதிய அரசியலமைப்பு இருக்கக்கூடாது. புதிய அரசியலமைப்பானது, மனித உரிமைகளையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் அதேவேளை, பிளவுபட்ட அனைத்து சமூகங்களையும் ஒரே ஆளும் கட்டமைப்பாக ஒன்றிணைப்பதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
A Constitution For Reconciliation