சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தொல்பொருளியல் திணைக்களம் இன, மத ஆக்கிரமிப்பின் அடையாளமா?

பி.கிருபாகரன்

இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் சிங்கள, தமிழ் இனங்கள் துருவமயப்பட்டுப்போயுள்ளன. சிங்களவர்கள், தமிழர்களையும் தமிழர்கள் சிங்களவர்களையும்  எதிரிகளாகவும் சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கும் போக்கே தற்போதுவரை தொடர்ந்து வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு பேரழிவுகளுடன்  யுத்தம்  முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்  அதன் பின்னராவது இவ்விரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புக்கள் மேலெழுந்திருந்த போதும் அதனை  தகர்க்கும் வகையிலான முன்னெடுப்புக்களே அரசு இயந்திரத்தினால் நகர்த்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.

சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான விரிசலுக்கு பல விடயங்கள் காரணிகளாக உள்ள போதும் யுத்த நிறைவுக்கு பின்னர் சிங்களவர்களிடமிருந்து தமிழர்களை தூர விலக்கிவைக்கும் பிரதான காரணி என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை தொல்தொல்பொருளியல் திணைக்களத்தின்  செயற்பாடுகள் தொடர்பில் மட்டும் இங்கு பார்ப்போம்.  

இலங்கையில் தொல்பொருளியல் திணைக்களம் 1890ஆம் ஆண்டில்  அதன் பணிகளை ஆரம்பித்தாலும் தொல்பொருளியல் பணிகள் தொடர்பான அடிப்படை வேலைகள் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஹர்கியுலஸ் ரொபின்சன் ஆட்சிக் காலத்திலேயே தொல்பொருளியல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் தொல்பொருளியல் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் 1868ஆம் ஆண்டில்  இலங்கையில் புராதன கட்டிடக்கலை தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் குழுவொன்று அப்போதைய ஆட்சியாளர்களினால்   நியமிக்கப்பட்டது.  1871ஆம் ஆண்டில்  நாட்டில் ஆட்சியாளர்களிடமிருந்து   நிதி மற்றும் ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தையும் பொலனறுவையையும் முதன்மையாகக் கொண்டு கட்டிடங்களின் பெறுமதிமிக்க புகைப்படங்கள் பல பெற்றுக்கொள்ளப்பட்டன.

1873ஆம் ஆண்டில் வில்லியம் கிறகரி தேசாதிபதி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளும்படி பணிப்புரை வழங்கினார். அவ்வாண்டிலேயே புராதன அனுராதபுரம் தொடர்பான அமைவிட ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜே.ஜி. ஸ்மினரினால் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி பணிகளை சார்பாகக் கொண்டு தாதுகோபுரங்கள் மற்றும் ஏனைய அழிவுற்ற கட்டிடங்கள் உள்ளடங்கிய “அனுராதபுரத்தின் தொல்பொருளியல் அழிவுச் சின்னங்கள்” என்ற நூல் 1894ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு சிறிய புள்ளி அளவிலான தீவாக இருப்பினும் அது இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட தொல்பொருளியல் நிலப் பாகங்களைக் கொண்டதாகவும் அபரிமிதமான தொல்பொருட்களுக்கு உரித்துக் கோருகின்ற மகத்துவம் மிக்க ஒரு தேசமாகவும் இருப்பதனால் தொல்லியல் திணைக்களத்தின் பணிகள் நாட்டுக்கு இன்றியமையாததாகவே உள்ளன. இதனாலேயே தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் போது பிரயோகிக்கப்படுவதற்காக 1940 இன் 9 ஆம் இலக்கமுடைய தொல்பொருள் சட்டம்.1998 இன் 24 ஆம் இலக்கமுடைய தொல்பொருள் (திருத்தச்) சட்டம்.2005 இன் 12 ஆம் இலக்கமுடைய அபராதத்தொகையை அதிகரிப்பதற்கான (திருத்தச்) சட்டம்.1979 இன்7 ஆம் இலக்கமுடைய அரசாங்கத்தின் உடைமையை மீளப் பெறுவதற்கான சட்டம் என்பன அமுல் படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் தொல்பொருள் உரித்துகள் தொடர்பிலான உரிய முகாமைத்துவத்தினை மேம்படுத்தல் என்ற தூர நோக்கையும், நாட்டின் தொல்பொருள் உரித்துகளை முகாமை செய்வதற்கு அனுசரணை வழங்குதல் மற்றும் முதன்மை கண்காணிப்பு நிறுவனமாக இயங்குதல் என்ற செயற்பணியும் கொண்ட  இலங்கை தொல்பொருளியல்  திணைக்களம்.  யுத்தத்தின் பின்னரான சூழலில் வடக்கு,கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான தொன்மையான இடங்களில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ரீதியில் இனவாத ,மதவாத ஆக்கிரமிப்பு சிந்தனையில் தமது  அகழ்வாராய்ச்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளமையே தற்போது சிங்கள,தமிழ்  இன நல்லிணக்கத்துக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது  எனக்குற்றம் சாட்டப்படுகின்றது.

2009 முற்பட்ட யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதியில்   தொல்லியல் திணைக்களத்தினரினால் செயற்பட முடியாத நிலைமை இருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்  நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. சிங்களவர்களும்,பௌத்த தேரர்களும் வட,கிழக்கு நோக்கி பெருமெடுப்பில் வந்தவனர். அப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான படையினரின் துணையுடன் அங்குள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் புலங்களையும் அரச இயந்திரத்தின் துணையுடன் அவர்கள் ஆக்கிரமித்து வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கின் வரலாற்றைத் திரிபுபடுத்தி, புதிய புதிய கதைகளையும் வரலாற்றையும் உருவாக்க முற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள்தான் இதற்குத் துணைபோவதாக பிரதான தமிழ்க் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. தொல்பொருள் திணைக்களம் அடையாளப்படுத்தும் இடங்களில் புத்தர் சிலைகளையும், பௌத்த விகாரைகளையும் அமைத்து வருவதை கடந்த வருடங்களில் அவதானிக்க முடிந்தது. இச்செயற்பாடுகள் திட்டமிடப்பட்ட, சிங்கள, பௌத்த விரிவாக்கம் என்பதனாலேயே தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் சிவில் அமைப்புக்களும் இதனை கடுமையாக  எதிர்ப்பதாக கூறுகின்றனர்.

புத்தர் சிலைகளை வைப்பது .பௌத்த விகாரைகளை அமைப்பது என்பது மட்டுமன்றி  வன பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திட்டம், உட்பட இதர பல அரச நிறுவனங்கள் விரிவாக்கம், பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றின் பெயரில் ஆக்கிரமிப்பு வடிவங்களை மாற்றி  சிங்கள குடியேற்றங்களையும் தாராளமாக மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டும் தமிழர்கள் இவற்றுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்க ,போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் .

வடக்கு,கிழக்கில்  இடம்பெறும் தொல்லியல் ஆய்வுகள் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க கூறுகையில் பின்வரும் தகவல்களைத் தெரிவித்தார்:

“வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஆய்வுகள் முழுமை பெறவில்லை. அம்மாவட்டங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் சுமார் நூறு இடங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பகுதியளவில் மேற்கொண்ட ஆய்வுகளின் பிரகாரம் 270இடங்களும், மன்னாரில் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் 230இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று கிழக்கில்  அம்பாறையில் 450இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளபோதும் 250வரையிலான இடங்களே தற்போது வரையில் வர்த்தமானி அறிவித்தலுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் பிரதான தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திருகோணமலையில் ஒரு சில இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான ஆய்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தொல்பொருளியல் திணைக்களம் பௌத்த சமயத்தினை முன்னலைப்படுத்தி அல்லது அதுசார்ந்த சின்னங்களை அடையாளப்படுத்துவதிலேயே கூடிய கரிசனை கொண்டு செயற்படுவதாக முன்வைக்கும்   குற்றச்சாட்டை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். தொல்பொருளியல் திணைக்களத்திற்கென மதமொன்று இல்லை. எந்தவொரு மதத்தினையும் முன்னிலைப்படுத்தவும் இல்லை. நாட்டின் வரலாற்று சுவடுகளாக இருக்கும் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதையே இலக்காக கொண்டு செயற்பாடுகள் அமைகின்றன.இந்த நாட்டின் இன,மத விகிதாசாரத்திற்கு அமைவாக ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும், அடையாளப்படுத்தப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கையில் காணப்படுகின்ற ஏற்ற இறக்கத்தினை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தவறானதாகும்” என்கிறார்.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளமையும் அவற்றில் தமிழர்களோ, முஸ்லிம்களோ உள்ளீர்க்கப்படாமை  தொடர்பில் தமிழ் முஸ்லிம் தரப்புக்களினால் முன் வைக்கப்படும் குற்றச்சட்டுக்கு பேராசிரியர்.செனரத் திஸாநாயக்க பதிலளிக்கையில்,

“எமது செயற்பாடுகளை விரைவாகவும், வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கான மேலதிக ஒத்துழைப்புக்களை நல்குவதற்கான ஒரே நோக்கத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதியால் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி மட்டக்களப்பிலிருந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு தவறான அர்த்தப்படுத்தல்களை செய்வது தவறு. வடக்கு,கிழக்கில் மூன்று தசாப்த போர் காரணமாக தொல்பொருள் இடங்கள் உரிய முறையில் அடையாளப்படுத்தப்படவில்லை. அதனால் பல இடங்கள் காடுகளாகியுள்ளன. மேலும் சில இடங்கள் சிதைந்துள்ளன. மண்ணில் மங்கியுள்ளன. ஆகவே அவற்றை கண்டறிவதற்குரிய பணிகளை தனியே திணைக்கள ஊழியர்களால் மட்டும் மேற்கொள்ள முடியாது. ஆகவே அவ்விதமான பணிகளை முன்னெடுப்பதற்கு படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அதற்கு அப்பால் உள்ள பணிகளில் படையினரின் தலையீடுகள் இருக்கப்போவதில்லை.

விசேட செயலணி அரசினால்  அதிகாரிகளை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். அந்தவகையில் செயலணியில் பாதுகாப்புச்செயலாளர், நான், காணி ஆணையாளர், நில அளவை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளோம் . இவ்விதமாக உள்ளடக்கப்பட்டவர்கள் தமது பணிகள் தொடர்பான தீர்மானத்தினை எடுத்து பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவித்தே செயற்படவுள்ளார்கள். ஆகவே அதில் குழப்பமடைய வேண்டியதில்லை. எவ்வாறாயினும், தற்போது தமிழ் பேசும் இருவரை செயலணியில் உள்ளீர்ப்பதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

“எமது செயற்பாடுகளுக்கு இன,மத வாத சாயங்களை பூசு  கின்றபோது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட கோணத்திலேயே எமது செயற்பாடுகள் தெரியும். வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி ஒரு மதத்தினை மையப்படுத்திய சின்னங்களின் மீது பிறிதொரு மதத்தின் சமயத்தலங்கள், அடையாளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வடக்கில் சில பௌத்த சுவடுகள் மீது இந்துக் கோவில்கள் உள்ளன. அதேபோன்று, கூரகலையில் பௌத்த மதத்திற்கு சொந்தமான இடத்தில் பள்ளிவாயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும் இந்த இடங்களை நாம் தொல்பொருள் திணைக்களம் என்ற அடிப்படையில் தான் பாதுகாக்கின்றோமே தவிரவும் இனத்தின், மதத்தின் பக்கம் நின்று அல்ல. நாட்டின் மரபுரிமை என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றோம்” என்கிறார் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க .

ஆனால்  பேராசிரியர் செனரத் திஸாநாயக்கவின் கூற்றை நிராகரிக்கும் தமிழ் கல்விமான்கள் ,தமிழ் ஆர்வலர்கள், வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் பல சைவ சமய ஆலயங்களில் தொன்மையை சிதைக்கும் நடவடிக்கையில் தொல்பொருளியல் திணைக்களம் ஈடுபடுவதாக  குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கையில் 823/73 ஆம்  இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ஆம்  அத்தியாயம்) 16ஆம்  பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக நல்லாட்சி அரசாங்க காலத்திலும் அதற்கு முந்திய ஆட்சி காலத்திலும் தொல்லியல் திணைக்களம் சிறப்பு வர்த்தமானிகள் மூலம் அடையப்படுத்தியுள்ளது.

அவற்றில்   ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்,மாந்தைகிழக்கு பூவரங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில், குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்,பாண்டியன்குளம் சிவன் கோவில்,வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில் ,மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில், மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில் , ஒதியமலையில் வைரவர் கோவில்,முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை,செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்,புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்,வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலயம், திருகோணலை கோணேஸ்வரர் ஆலயம்,மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,, சிவபுரம் சிவாலயம்,, மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்,ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில்,மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்,. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை போன்றவை உள்ளடங்குவதாகவும் இவற்றை தொல்லியல் இடங்களைக் அடையப்பப்படுத்தியுள்ளமை மத ரீதியிலான ஆக்கிரமிப்பின்றி வேறென்ன எனவும் தமிழ் ஆர்வலர்கள், கல்விமான்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.

வரலாற்று சிறப்பு பெற்ற திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும், தொல்பொருளியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது . குறிப்பாக இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்திருந்தார்கள்.அதே போல பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் முன்னைய – ஆட்சி காலத்தின் போது மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வரப்  பட்டிருந்தன.  கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவில் இன்று அத்திவாரம் மட்டும் தான் உள்ளது . தமிழர் வாழ்வியலை,தொன்மையை சிதைக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆக்கிரமிப்புக்கள் தற்போதைய ஆட்சி காலத்தில் உக்கிரம் பெற தொடங்கி இருக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுகள் மற்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளை கையாள்வதில் பாகுபாடு காண்பிக்கவில்லை. தெற்கினைப் போன்ற வடக்கு, கிழக்கினையும் அணுகின்றோம் என்று தொல்பொருளியல் திணைக்களம் கூறினாலும் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பின் வடிவமாகவே இந்த விடயத்தினை பார்ப்பதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு  எதிராக போராடும் மக்களும் அரசியல், சிவில் சமூகத் தரப்பினரும்  கூறுகின்றனர். தொல்பொருள் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைகள் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு. சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் ஒரு செயற்பாடு என்பதை அவதானிக்க முடிகின்றது. தொல்பொருள் திணைக்களம் இன – மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். 

The Archaeological Department: A Symbol Of Ethnoreligious Aggression?

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts