கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தாய் மொழி அழிந்தால் ஓர் இனம் அழியும்

ஹயா அர்வா



 ”மொழி” என்பது அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது

மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம். மனித இனப் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய காரணியே மொழிகள்தான். எனவே ஒரு மொழி அழிவதென்பது, அந்த ஒட்டுமொத்த இனத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் என்ற  அனைத்தினதும்  அழிவாகும். ஒரு மொழியின் அழிவு, அந்த இனம் இந்த பூமியில் இருந்தது என்பதற்கான வரலாற்றின் அழிவாகவே கருதப்படும்.  



இவ்வாறான நிலையில்தான் இந்த உலகில் ,”6000 முதல்  7000 வரையிலான மொழிகள் உள்ளன. 2115 ஆம் ஆண்டில் வெறும், 600 மொழிகள் தான் இருக்கும். மிகுதி மொழிகள் அழிந்து போகும்” என, ஐ.நா.வின் மொழியியல் ஆய்வுத் துறை அச்சம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இன்றைய சூழலில் உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழியும் சூழலில் உள்ளன என்றும், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் தாய்மொழி அல்லாத மொழிகளில்தாம் கல்வி கற்கின்றனர் என்றும் யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

யுனெஸ்கோ வெளியிட்டுள் அழியும் மொழிகள் எனும் பட்டியலில் தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த் தன்மை அந்த நிலைக்குச் செல்கின்ற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. ஆனால் அழியும் நிலையில் உள்ள மொழிகளில், தமிழும் உண்டு என, இந்திய மொழியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.


2008 ஆம்  ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 89 வயதான மரியே ஸ்மித் ஜோனெஸ் என்பவர் இறந்தபோது, அவரின் இறப்புக்கு உலகின் பெரும்பாலானோர் வருத்தமடைந்தனர். அதற்கு முக்கிய காரணம், அலாஸ்கா இனப் பழங்குடி மொழியான, `ஏயக்’ மொழியைப் பேசத்தெரிந்த உலகின் கடைசி நபர் அவர்தான். அவருடன் சேர்ந்து ஒரு மொழியும் முற்றிலும் அழிந்துபோனது. அது தவிர, அந்த இனத்தின் பண்பாடு, கலாசாரம் என அனைத்துமே அழிந்துபோயின. இது ஒரு மொழியின் அழிவுக்கு உதாரணமான  சம்பவம்.


உலகளவில் 130 கோடி மக்களால் 38 நாடுகளில் பேசப்பட்டு உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற பெருமையை சீன மொழிதான் கொண்டுள்ளது. அதேவேளை உலகிலே அதிகம் பேசப்படும் முதல் இருபது மொழிகளில்   தமிழ்மொழி  20ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.  உலகம் முழுதும் சுமார் 8 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி கால வரையறை செய்ய முடியாது. செம்மொழித் தன்மையைத் தமிழ், இயற்கையாகவே தன்னிடம் கொண்டுள்ளது. எனவே ,உடனே ”தமிழ்”அழிந்து விடாது. ஆனால், இந்த நூற்றாண்டில், தமிழ் சந்தித்துக்கொண்டிருக்கும் ஆபத்துகள் ஏராளம். பேச்சு வழக்கில் புகும், பிற மொழிச் சொற்களே, தமிழ் மொழியை அழிக்கத்தொடங்கியுள்ளன என்பது அதிர்ச்சியூட்டும்   உண்மை.


தமிழ் மொழி, சொல் வளம் மிகுந்தது. ஒரு பெண்ணின் பரிணாமத்தை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனவும், ஆணின் பரிணாமத்தை, பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன் எனவும், தமிழில் கூற முடியும். நாங்கள்  இந்த பருவங்களை  கடந்திருப்போம் ஆனால், எங்களில் எத்தனை பேருக்கு இவை தெரியும்? 

எண்களில், லட்சம், கோடிக்கு அடுத்து, 10 கோடி என்போம். தமிழில், அதற்கு, அற்புதம் என்ற சொல் உள்ளது. 100 கோடி என்பது நிகற்புதம். நமக்கு மில்லியன், பில்லியன் கணக்கு தெரிந்த அளவுக்கு அற்புதம், நிகற்புதம் தெரியாது. ‘ஆலுமா டோலுமா’ என்று பாடத் தெரிந்த எங்களுக்கு , ‘நாலுமா’ என்றால் என்னவென்று தெரியாது. அது, ஐந்தில், 1 பங்கு என்பதை குறிக்கும். இப்படித் தான், தமிழ் மொழியின்,தமிழ் சொற்களின் அழிவு எம்மை அறியாமலேயே வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.



இன்று, பரீட்சை மதிப்பெண்ணுக்காக மட்டும் தமிழ் படிக்கும் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய  10 வயது முதல், 25 வயதுடைய தலைமுறை, தமிழ் புத்தகங்களை வாசிப்பதே இல்லை. தமிழில் எழுதுவதில்லை. அவர்களுக்கு, அது தேவையில்லாதவையாக இருக்கலாம். ஆனால், அதன் மூலம் எமது தாய் மொழியை இழக்கிறோம்.

‘புத்தகத்தில் மட்டுமே இருந்த ஆங்கிலம், மெல்ல அலுவலகத்திற்குள் நுழைந்து, இப்போது வீட்டிற்குள்ளும் சோறு, ‘ரைஸ்’ ஆகவும் கோழிக்கறி ”சிக்கன் ” ஆகவும்  மாறும் அளவிற்கு புகுந்துவிட்டது. தன்னிடம் இல்லாத, பிற மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மொழி, அழிவதில்லை. ஆனால், தன்னிடம் இருக்கும் சொற்களை துறந்து, பிற மொழி சொற்களை ஏற்றுக்கொள்ளும் மொழி, விரைவில் அழிந்துவிடும். அதுதான் தமிழ் மொழிக்கும் நடக்கிறது.



ஒரு நாட்டில் வசிக்கும்  மக்கள் பல தலைமுறைகளாகப் பேசிவந்த மொழிகளுக்குப் பதிலாகச் சமூக அந்தஸ்து காரணமாக ஆங்கிலம், மற்றும் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள  மொழிகளை நவீனம் மற்றும் தொழில்தகைமை  என்ற பெயரில் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார்கள். இது தவறல்ல. ஆனால் இவர்கள் நாளடைவில் அவர்களின் தாய்மொழிச் சொற்கள் மறந்துபோய், சரளமாகப் பேச முடியாத நிலைமை உருவாகி, அடுத்தடுத்த தலைமுறையினரை அந்த மொழி சென்றடையாமல் மறையும் பரிதாபமும் நிகழ்கிறது.



ஐ.நா.வின் முக்கிய பிரிவு கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பு. இந்த அமைப்பு உலக மொழிகளின் வாழ்வுநிலை பற்றி ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தது. அதில்  2100 ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 50 வீத மொழிகள் அழிந்துவிடும் எனக்கூறியுள்ளதுடன் மொழியின் அழிவுக்குரிய முக்கிய காரணங்களையும் குறிப்பிட்டுள்ளது.



தாய்மொழி, ஆட்சி மொழியாக இல்லாவிட்டால் அம்மொழி அழிந்துவிடும். கல்விமொழியாக இல்லாவிட்டாலும் ஒரு மொழி அழிந்துவிடும். நீதிமொழியாக இல்லாதிருந்தாலும் மொழி இறந்துவிடும். வழிபாட்டில் தாய்மொழிக்கு இடம் இல்லை என்றால் மொழி அழிந்துவிடும். பொருளியல் துறையில் மொழிக்கு முதல் உரிமை இல்லை என்றால் அது மறைந்துவிடும். மிகுதியாக மொழிக்கலப்படம் ஏற்பட்டாலும் மொழி மாண்டுவிடும். தாய்மொழியின் பெருமையை உணராமல் பிறமொழி மீது மோகம் கொண்டாலும் தாய்மொழி செத்து விடும். ஊடகங்கள் தாய்மொழியைச் சிதைத்துவந்தாலும் அம்மொழி அழிந்துவிடும். உலகமயமாக்கல், மக்களின் வாழ்க்கை முறை மாற்றம், பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு   தாய்மொழி கற்பிக்காதிருத்தல், பேச்சு வழக்கில் மட்டும் மொழி இருத்தல் முதலிய காரணங்களாலும் தாய் மொழி அழிந்து விடும் என்கிறது அந்த  அறிக்கை.



அத்துடன் தாய்  மொழியின் வீழ்ச்சிக்கு காரணமாக  சொந்த மக்களால் புறக்கணிக்கப்படுதல். ஆதிக்க மொழிகளால் நசுக்கப்படுதல், பயன்பாடின்றி ஒதுக்குதல் மற்றும் தாய்மொழியை தாழ்த்திப் பேசுதல் என்பன மூலமும் இடம்பெறுகின்றன. இன்று, நவீனமும், நாகரிகமும், மொழி சிதைவை உண்டாக்குகின்றன. வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, புதிய வசதிகள் போன்றவை, தாய் மொழியால் கிடைக்கப் பெறவில்லை என்பதே, இன்றைய இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது. அதனாலேயே அதிகமானவர்கள் வேறு மொழிகளில் நாட்டம்  கொள்கின்றனர்.



உதாரணமாக இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்களம் , தமிழ் மொழிகள்  ஆட்சி மொழிகளாக உள்ளன. இதில் தமிழருக்கு சொந்தமில்லாத ஒரு மாவட்டத்திலோ, மாகாணத்திலோ ஒரு அரச வேலை வாய்ப்பை அல்லது தனியார் துறையில் ஒரு வேலை வாய்ப்பை பெற வேண்டுமானால் நாட்டின் பெரும்பான்மையினரின் மொழியான சிங்களமொழி தமிழருக்கு தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகவுள்ளது. ஆனால் தமிழரின் மாவட்டத்திலோ அல்லது மாகாணத்திலோ சிங்களவர் ஒருவர் இந்த வேலை வாய்ப்பைப்பெற தமிழ் மொழி  தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. 

அரச வேலை வாய்ப்பொன்றை பெற வேண்டுமானால் சிங்களவருக்கு தமிழ் மொழியும் தமிழருக்கு சிங்கள மொழியும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்ற சுற்று நிருபத்தை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சு வெளியிட்டிருந்தாலும் அது சிங்களவருக்கு எந்தளவுக்கு அமுல்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. அதனாலேயே தமிழை தாய்மொழியாகக்கொண்ட பலரும்  சிங்கள மொழியில் ஆர்வம் கொண்டு  அதனால் தமிழை மறக்கும் நிலை இருப்பதனை மறுக்க முடியாது. அத்துடன் தமிழர்கள் பலரும் தமது சிங்கள நண்பர்களுடன் சிங்கள மொழியிலேயே பேசுகின்றனர். பேச முயற்சிக்கின்றனர். அதேவேளை அந்த சிங்கள நண்பர்கள் தமிழ் நண்பர்களுடன் தமிழ் மொழியில் பேசுவதும் இல்லை. பேச முயற்சிப்பதும் இல்லை. இதனால் ஒரு மொழி வளர்கிறது. இன்னொரு மொழி அழிகிறது.

தற்போது நம்மவர்களிடம் தமிழ் கையெழுத்து முறைகளும் அருகத்தொடங்கியுள்ளன. முன்பு தபால்காரரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து அவர் வந்ததும் நெருங்கிய உறவினரைக் கண்டதைப் போல் வரவேற்று எனக்கு தபால் இருக்கிறதா என்று ஆவலுடன் கேட்டு கடிதங்களைப்பெற்று அடுத்த நிமிடமே அதற்குப்பதில் எழுதிப்போட்ட காலம் இருந்தது. காதலன் மற்றும் காதலி தங்கள் உளக்கிடக்கையை வெளிப்படுத்தும் மனக்கண்ணாடியாக கடிதங்கள் விளங்கின. நமது இதயத்து எண்ணங்களை சுமந்து செல்லும் இனிய தூதர்களாய், தூர இடத்து சொந்தங்களுக்கு சுகத்தை சேர்க்கும் சொர்க்கமாய் இருந்தன. இப்போதெல்லாம் கடிதங்கள் கைவிடப்பட்டு விட்டன.

தகவல் ஊடகங்களின் வேகமான வளர்ச்சி கடிதம் எழுதும் பழக்கத்தை அழித்து  விட்டது.  அன்பை, ஆசையை, பாசத்தைக்கொட்டி எழுதும் கடிதப்பழக்கம் நம்மிடையே மறைந்து போனது. இன்று, செல்போனில்  பேசிப் பதிவுசெய்து அனுப்பலாம். புகைப்படம் எடுத்து அனுப்பலாம். வாட்ஸ்அப், வைபர்  மூலமாக கதைத்துக் கொள்ளலாம். உலகின் எந்த மூலையிலிருந்தும் நொடிக்குள் தொடர்பு கொண்டு பேசலாம்.



அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது நம்மவர்களுக்கு  தமிழ் முழுமையாகவே மறந்து போகிறது. குழந்தைகளுக்கு தூய தமிழ் சொற்களில் பெயர்களை வைக்க வேண்டும். ஆனால் இப்போதைய தமிழ் குழந்தைகளின் பெயர்கள் நம் வாய்க்குள் நுழைகின்றனவா? கடிதப் பயன்பாடுகள் கை  விடப்பட்டு வருகின்றமை, தாலாட்டுப்பாடல்கள்  மறக்கப்பட்டு வருகின்றமை, குழந்தைகளின் பெயர் சூட்டலில் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றமை  போன்றவையும்  தமிழ் மொழி அழிவுக்கு காரணமாகின்றன.



நவீன நாகரிகத்தின் அடிப்படையில் வாழ நினைக்கும் மனிதர்கள், அந்த நாகரிகத்துடன் ஒத்திருக்கும் மொழியினை மட்டுமே கற்றுக் கொள்ள விருப்பப்படுவர். அதன் காரணத்தினால் தான், இன்று தமிழர்களிடத்தில்  ஆங்கிலம் கற்போர் மிகுந்து வருகின்றனர், தமிழ் வழிக் கல்வி காண்போரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நகரங்களிலுள்ள அனைவரும் ஆங்கில வழிக் கல்வியை நோக்கிச் செல்கின்றனர். இன்றைய நாகரிக வாழ்வில் பொருளீட்ட வேண்டுமெனில், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம், தமிழ் தெரிய வேண்டியது அவசியம் இல்லை என்பது தான் இதற்குக் காரணம்.


மொழியே மனித இனத்தின் பேச்சுக் கருவி. அறிவு, கருத்து, எண்ணப் பரிமாற்றத்துக்கு மொழி அவசியம். மனித குலத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் வாகனம் மொழியே. எனவே, பன்மொழிகளை அழியாமல் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம், அவசரம்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts