தவறான தகவல்கள் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? (இணையத்தள சகாப்தத்தில் தவறான தகவல்களின் தாக்கத்தை பற்றிய பகுப்பாய்வு)
தவறான தகவல்கள் என்பது ஓரு புதிய கருத்தாக இல்லாவிட்டாலும், இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களின் வளர்ச்சியுடன், இவ்விடயம் ஒரு உக்கிரமான பிரச்சனையாக மாறியுள்ளது. தவறான தகவல்கள் எவ்வாறு சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது?
இது சம்பந்தமாக தவறான தகவல்களை அடையாளம் காண்பது அவசியம். ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக போலிச் செய்திகள், தவறான தகவல்கள், தவறான செய்தி, பொருத்தமற்ற தகவல்கள் என்னும் பல சொற்பதங்கள் காணப்படுகின்றன.
இந்த நிகழ்வில், பொதுவாக பரந்தளவில் காணப்படும் தகவலான தவறான தகவல் “தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அல்லது குற்றம் விளைவிப்பவர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்ட அல்லது பரப்பப்பட்ட தவறான அல்லது தவறான வழிக்கு நடத்தக்கூடிய தகவல்களாகும். தீங்கு விளைவிக்கும் நோக்கமானது தனிநபர்கள், குழுக்கள், நிறுவனங்கள் அல்லது செயல்முறைகளை நோக்கிச் செயல்படுத்தப்படலாம்.” அதற்கமைய, தவறான செய்தியானது, தவறானவை அல்லது தவறான வழிக்கு நடத்திச் செல்பவை மற்றும் அவை தீமை விளைவிக்கும் நோக்கத்துடன் (குற்ற மனம் – மென்ஸ் ரியா) அல்லது அதனூடாக பயன் பெறுவதற்கு செயல்படுத்தப்பட்டவை என பொருள்படும்.
தவறான தகவல்கள், எவ்வாறு சர்வதேச உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கிறது? ஜேர்மனியில் காணாமற்போன ஒரு ரஷ்யப் பெண்ணான லீசாவின் கதையைப் பொறுத்தவரை, அது அந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவிற்கு அழுத்தத்தை கொடுத்தது. பின்னர் இச்சம்பவத்தினால் ஏற்பட்ட பெரும்பாலான சிக்கல்களுக்கு தவறான செய்திகளே அடிப்படையாக அமைந்தன என்பது உறுதிசெய்யப்பட்டது. சமீபத்தில், வடகொரிய தலைவரான கிம் ஜொங் உன் என்பவருடைய மரணத்தைக் குறித்து செய்திகள் பரவின, ஆனால் அது தவறான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது. இவ்வாறான தவறான தகவல்களால் சில கட்சிகள் எதிர்மறையான தாக்கத்தை அனுபவிக்காவிட்டாலும், தேவையற்ற பிரச்சினைகளையும் பிளவுகளையும் உருவாக்கி தனிநபர் மற்றும் சமூகத்தின் மீது மிகவும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது அனாவசியமான சிக்கல்களையும், பிளவுகளையும் உண்டாக்கி உலக ஒழுங்கை சேதப்படுத்தக்கூடிய விவாதங்களை நாடுகளுக்கு இடையே ஏற்படுத்துகிறது.
ஐக்கிய சாம்ராஜ்யத்தின் (U.K.) பாரளுமன்றத்தில் (House of commons) முன்னிலைப்படுத்தியபடி, (Digital culture) எண்மின் கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுக் குழுக்களின் தவறான தகவல்கள், ஏற்கனவே காணப்படும் ஜனநாயக விழுமியங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். குறிப்பிடத்தக்க வகையில், இது மக்களின் தீர்மானிக்கும் திறமையையும் சிந்தனைச் செயல்பாட்டையும் மிக மோசமாகப் பாதிக்கும். 2016 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளரான ஹிலரி கிளின்டன், சிறுவர் கடத்தல் வளையமொன்றை இயக்கிக்கொண்டிருப்பதாக ஒரு தவறான தகவல் பரவியது. இது வாக்காளர்களை பாதித்திருக்கலாம்.
மேலும், தவறான தகவல்கள் தேசிய பாதுகாப்பிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உதாரணமாக, வட கொரியாவின் அணு ஆயத பரிசோதனை மற்றும் ஈரானின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தவறான தகவல்கள் உள்ளன. அவை சில நாடுகளில் அநாவசியமான பீதியை ஏற்படுத்தி உலக சமாதானத்தின் உறுதியற்ற நிலைமையை உருவாக்குகிறது.
தவறான தகவல்கள் பொருளாதாரங்களில் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு சிறந்த உதாரணம் 2013இல் பங்குச் சந்தையில் டவ் ஜோன்ஸின் வீழ்ச்சி. 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி அசோஸியேடட் பிரஸ்ஸின் கீச்சகக் கணக்கு (twitter account hacked) ஊடுறுவப்பட்டு, வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பரக் ஒபாமா காயமடைந்து உள்ளதாகவும் ஒரு போலி கீச்சு வெளியிடப்பட்டது. அசோசியேடட் பிரஸ் தமது கீச்சக ஊடுறுவலை, சம்பவம் நடந்து 3 நிமிடத்திற்குள் வெளியிட்டிருந்த போதும் டவ் ஜோன்ஸ் பங்குகள் 1.39 மில்லியனால் வீழ்ச்சி கண்டது.
தவறான தகவல் மனித உரிமைகளுக்கும் பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 25 ம் உறுப்பில், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கான உரிமையும்; வாக்காளர்களுக்கு கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் மற்றைய காரணிகள் பற்றிய சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்கூறியபடி, தவறான தகவல்கள் தீர்மானங்களை பாதிக்கக்கூடும்.
தவறான தகவல், சுகாதார உரிமைகளையும் பாரிய அளவில் பாதிக்கக் கூடும். அனைத்துலக பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் உடன்படிக்கையின் 12 ம் உறுப்பில் விளக்கியுள்ளவாறு, சுகாதார பராமரிப்பு “அனைவரும் அனுபவிக்கக்கூடிய அதிஉயர்ந்த தரமான உடல் உள சுகாதாரத்திற்கான உரிமை” என கூறப்பட்டுள்ளது. தவறான தகவல், மக்களை குணப்படுத்த உதவும் சில தடுப்பு மருந்துகள் மற்றும் சில மருந்துகளைக்குறித்தான அநாவசியமான பயத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.
பெருவாரியான தொற்றுநோய் பரவலின் போது தவறான தகவலின் பங்கு மிகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக அமைகிறது. கிழக்கு ஆசியாவில் 2003ம் ஆண்டு சார்ஸ் நோயும் 2010ம் ஆண்டின் இறுதியில் தென் ஆபிரிக்காவில் கொலரா நோயும் மோசமான நிலைமையை அடைய போலிச்செய்திகளின் பங்கு உதவியுள்ளது. கொரோனா வைரசின் சர்வதேச தொற்றின் போது அதனை மோசமான நிலைக்கு கொண்டு செல்ல போலிச் செய்திகள் பங்களித்தன என்பதற்கான நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 17ம் உறுப்பில் காணப்படும் தனி உரிமைப் பேணல் கூற்று, தவறான தகவல்களால் பாதிக்கப்பட்ட முதன்மையான உரிமையாகும். தவறான தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் போலியான தொடர்புகளையும் உள்ளடக்கங்களையும் கொண்ட நூற்றுக் கணக்கான கதைகளை உருவாக்குகின்றனர். இது பல சந்தர்ப்பங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கும் இக்கதைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கமாட்டாது. மற்றைய சந்தர்ப்பங்களில் உண்மை திரிபுபடுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டோரில் அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் காணப்படுகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு தவறான தகவல்களால் ஏற்படுத்தப்படும் தாக்கம் அதிக தர்க்கத்துக்குரிய நிகழ்வாகும். தவறான தகவல்களின் உருவாக்கம், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையின் விளைவாகும். சரியாகச் சொல்வோமென்றால், கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் என்னும் உரிமையை பயன்படுத்தி தவறான தகவல்களை உருவக்குகிறார்கள். இவ்வுரிமையை கட்டுப்படுத்த நியாயமான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், எண்மின் யுகத்தில் இதன் பிரதிபலன் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, அரசாங்கங்கள் தவறான தகவல்களுக்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. எவ்வாறெனினும், இவ்வணுகுமுறை கருத்துச் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக, மலேசியாவின் போலிச் செய்திச் சட்டம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது, ஏனெனில், அதிகாரிகள் விரும்பாத அல்லது உண்மை என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை நிராகரிக்க அவர்களுக்கு எதுவித தடையுமில்லாத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருசில அரசாங்கங்கள் தவறான செய்திகளை மட்டுப்படுத்த இணையத்தளத்தை மூடி உள்ளடக்கத் தடுப்பை செயல்படுத்துகின்றனர். உதாரணமாக, 2019ம் ஆண்டின் முதல் பத்து மாதப் பகுதியில், உலகளவில் 30 நாடுகளில் எண்மின் ஊடகங்களை அல்லது இணையத் தளத்தை ஒரு முறையேனும் தடுத்தனர். இது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் குறிப்பிடத்தக்க அங்கமான இணைய அணுகலுக்கான உரிமை மீறலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
அதன்படி, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் நவீன கால தவறான தகவல்கள் பல பாதகமான தாக்கங்களை உருவாக்குகின்றன. இது உலக ஒழுங்கு, சமாதானம், பாதுகாப்பு மற்றும் நாடுகளுக்கு இடையேயான நட்புறவு என்பவற்றை பாதிக்கிறது. மேலும் இது ஜனநாயகம், மக்களின் சிந்தனை மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் செயல்முறைகள் என்பவற்றில் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது.
ஆகவே, தவறான தகவல், முக்கியமாக இயங்கலை நடைமுறைகள், உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாக இனங்காணப்படவேண்டும். மாறாக, இச்செயன்முறையின்போது கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் எதிர்மறையாகப் பாதிக்கப்படகூடாது.