தற்போதைய ஊடக கலாசாரம்
ஊடகம் என்பதால் விளங்கிக் கொளளப்படுவது ஏதாவதொரு நிகழ்வு அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட நபர் தொடர்பான தகவல்களை பரந்தளவிலான மக்களை அறிவூட்டல் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற வழிமுறையாகும். ஓலிபரப்பு ஊடகம், சினிமா, நாடகம், அச்சு ஊடகம், இணையத்தளம் உட்பட அனைத்து ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகளை ஊடக ஒழுக்கக்கோவை என்று அழைப்பதுண்டு. மேலே சொல்லப்பட்ட ஊடக ஒழுக்கக் கோவையானது 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே நடைமுறைக்கு வந்ததாகும் என்பதாக ரபாயல் கபுரோ, பாபரா ஜே மற்றும் ரொபட் ஹொப்ட்மன் போன்றவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஊடகங்களின் முதன்மையான பொறுப்புணர்வாக அமைவது அறிக்கையிடல் மாத்திரமல்லாது, சமூக விஞ்ஞானம் மற்றும் மக்களுடனான தொடர்பாடலை அபிவிருத்தி செய்வதாகும். ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் அந்த பணியானது ஊடகம் என்றால் அறிக்கையிடல் என்ற தகவல் வெளிப்படுத்தலுடன் மட்டும் வரையறுக்கப்பட்டதாக இருந்து வருகின்றது. அதன் மூலம் ஊடக ஒழுக்கக்கோவையானது சமாதியாகி வருகின்றது என்ற விடயம் அனைவருக்கும் தெளிவாக தெரிகின்றது.
ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்த மக்கள் சமூகங்களையும் நல்ல வழிக்கு அல்லது தவறான வழிக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் ஊடக கலாசாரம் என்பது அல்லது ஒழுக்கநெறிக்கோவையானது மிகவும் அத்தியாவசியமானதாகும். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் இந்த ஒழுக்கநெறிக்கோவையை பின்பற்றும் நடைமுறையானது சரிவடைந்து வருகின்றது. அதற்கு பிரதான காரணமாக இருந்து வருவது அரசியல் மயப்படுத்தலாகும். கடந்த காலங்களில் எந்தவிதமான அரசியல், கட்சி, நிறம் என்ற சார்பு இல்லாமல் நடுநிலையாக செயலாற்றி வந்த அதிகமான ஊடகத்துறை சார்ந்தவர்கள் இன்று அரசியல் செல்வாக்கிற்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர். அதனால் இத்தகையவர்கள் அரசியல் முகாமுக்குள் முடங்கியவர்களாக மக்களையும் அவர்கள் சார்ந்த அரசியல் சார்பை அடிப்படையாகக் கொண்டவைகளை நல்லது என்றும் அவர்களால் விரும்பாதவைகளை தவறானது என்றும் பரப்புவதில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கையானது சமூக அறிவியல் நடத்தைக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை யாராலும் மறுக்க முடியாது.
அவ்வாறே ஊடக ஒழுக்ககோவை சரிவடையும் இன்னுமொரு சந்தர்ப்பமாக இருப்பது ஊடகவியலாளனின் நடத்தையாகும். அவர்கள் எப்போதும் இத்தகைய ஒருதலைப்பட்சமான சார்பு போக்கை கைவிட்டு விட்டு நாட்டின் மற்றும் மக்களது வாழ்வியல் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடக்கூடியவர்களாக மாற வேண்டும். அவர்களது பேச்சு மற்றும் நடத்தை சுபாவங்களிலும் மாற்றங்களை காண முடிகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான எச்சரிக்கையை விட முன்மாதிரி மேலானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதாவதொரு விடயம் தொடர்பாக ஒருவரிடம் கேள்வி எழுப்புகின்ற போது அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் உரையாடுவதை அவதானிக்க முடிகின்றது. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக கலந்துரையாடும் போது இந்த விடயம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
அவ்வாறே மக்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அவர்களால் பதிவிடப்படுகின்ற அல்லது படம் பிடிக்கப்படுகின்ற காட்சிகளால் அத்தகைய அறிக்கையிடலுக்கு உள்ளாகிய மக்களும் சமூகத்தில் ஓரங்கட்டலுக்கு ஆளாகின்றனர். இத்தகைய செயலால் ஊடகவியலாளன் எதிர்பார்ப்பது தமது இவ்வாறான நடத்தை மூலம் தாம் சார்ந்த ஊடக நிறுவனத்தை அல்லது ஊடக அடையாளத்தை பிரசித்தப்படுத்திக் கொள்வதற்காகவாகும். இவ்வாறு ஊடக தர்மத்தை மதிக்காமலும் ஒழுங்கீனமாகவும் நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் நாட்டில் சிறந்த பண்பாடு, ஒழுக்கம் நிறைந்த சாதகமான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக எத்தகைய பங்களிப்பை வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்து வருகின்றது.