சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் தீவிரம் காட்டும் அரசு!

கீர்த்திகா மகாலிங்கம்

புதிய அரசின் ஆட்சிக்காலம் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் உள்ள நினைவுகளை அழிப்பதில் அதி தீவிரம் காட்டுவதாக தெரிகிறது. முரண்பட்ட தரப்பினருக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கான பொறிமுறை எப்படி அமய வேண்டும் என முன்னைய அரசு யோசித்தது. அதற்கான பொறிமுறைகளில் ‘நினைவு கூரும் உரிமையை அந்த மக்கள் பெறவேண்டும்’ என்பதும் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று. அது அந்த மக்களை ஆற்றுப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இருக்கும். ஆனால் இவற்றை உடைந்தெறிந்தாற்போல் பலாத்காரமாக மக்களின் மனங்களில் இருந்து நினைவுகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்கின்றது. இது அவர்கள் எதிர்பார்க்கும் பலாபலன்களைவிட மோசமான விளைவுகளை மக்கள் மனதில் விளைவிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். சுமூக உறவு நல்லிணக்கத்திற்கு பதிலாக எதிர் நிலைகளைத்தான் கட்டியெழுப்பக்கூடியது. அந்தவகையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில முக்கிய சம்பவங்கள் இதற்கான எடுத்துக்காட்டாக அமையும்.

  • திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவு 
  • மாவீரர் தினத்திற்கான தடை உத்தரவு 
  • யாழ் பல்கலைக்கழக மாணவனின் கைது 
  • கார்த்திகை தீபமேற்றலுக்கான இடையூறு

இவை கடந்த ஒருவருடத்திற்குள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கிய சம்பவங்களாகும். இவற்றைத்தவிர காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பன தொடர்ந்தும் தீர்வு காணாத வினாக்களாகவே இருக்கின்றன.

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் என்று கொண்டாடப்பட்டாலும் கூட இறுதிப்போருக்குப்பின்,  போரில் இறந்தவர்களின் நினைவுகூரலாகவே அது முன்னெடுக்கப்பட்டது. அதற்கு இம்முறையும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி சத்தியநாதன் இறந்த நவம்பர் 27ம் திகதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர்.  நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அனுமதி என்பதைவிட, இறந்த தம் உறவுகளை நினைத்து மக்கள் தாமாக நினைவுகூரும் உரிமையாக அது கொள்ளப்பட்டது. இம்முறை இந்த ஆட்சியின் ஆரம்பத்திலேயே இந்த தினத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததது. இது மக்களின் மனங்களில் இருந்து அவற்றை துடைத்தெறியும் பகிரதபிரயத்தனமாகவே தெரிகிறது. ஏனெனில் சட்டரீதியாகவே தடைகள் ஏற்படுத்தப்பட்டது.

இலங்கை தண்டனைச்சட்டக்கோவையின் 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல்  என்ற அடிப்படையிலும், விடுதலைப்புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதாலும், கோவிட்-19  தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தையும் குறிப்பிட்டு வடக்கிலுள்ள 6 நீதிமன்றங்களில்  போலீசார் மாவீரர் தின நிகழ்வுக்கான தடை உத்தரவை வேண்டி விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தன் அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுக்கு அரசு தடை விதித்திருந்ததது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னர் இருந்த இதே கூட்டணியிலான அரசு, அவர்களது ஆட்சிக்காலப்பகுதியிலும் இதுபோன்ற தடை உத்தரவு வழங்கியிருந்தமை அவதானிக்க வேண்டியாதொன்று. ஒரு இனத்தின் சுயத்தை அழிப்பதன் மூலம் அவர்களுடனான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற யதார்த்தத்திற்கு சாத்தியமற்ற முடிவுகளுடன் இவ்வரசு பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இது மனித உரிமை மீறல் என்றும்,  மக்கள் தமது உறவுகளை நினைவு கூறுவதை தடுப்பதன் மூலம் அரசு தம் பலத்தை தவறாக உபயோகிக்கின்றது என்றும் நாடாளுமன்றம் முதல் பலதரப்பட்ட அரங்குகளிலும் குரலெழுப்பப்பட்டன. “அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய ஜே.வி.பியினர் தமது இறந்த சகாக்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கங்கள் அனுமதியளித்திருப்பது போன்று மாவீரர் தினத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்.”என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டன. எனினும் அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கைப்ப்போல் பயனற்றுப்போனது.

இதேபோல் திலீபனின் நினைவேந்தலுக்கும் அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் யாழ் நீதிமன்றத்தில் டீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திலீபனின் நினைவேந்தலுக்கும் தடை விதித்திருந்தது.

போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளை தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன்பிறப்புக்களை சகோதரர்கள் நினைவுகூர்ந்து தேற்றிக் கொள்வதையோகூட சகித்துக்கொள்ள முடியாத அரசினதும் பெரும்பான்மையினரினதும் இம்மாதிரியான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே கணிக்கப்படுகிறது.

இவைமாத்திரமன்றி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில்  உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய பல்கலைக்கழக மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டமையும், சுன்னாகம் பொலிஸ் பிரிவு இந்து ஆலயங்களில் கார்த்திகை விளக்கீட்டு தீபம் ஏற்றக்கூடாது என்று பொலிஸ் பொறுப்பதிகாரியால் மிரட்டல் விடுக்கப்பட்தோடு, மல்லாகம், சாலம்பை ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபமேற்றலை தடுத்த பொலிஸார், ஒழுங்கமைப்புக்களையும் கால்களால்  தட்டி அகற்றியுள்ளனர்.

‘அருண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பதைப்போல’ நவம்பர் மாதத்தில் வந்த விளக்கீட்டுக்கும் தீபம் ஏற்றமுடியாது போனது. இதனால் சமய கலாசாரங்களை பின்பற்றும் அடிப்படை உரிமைகளையே மக்கள் இழக்கின்றனர். எதையும் பகுத்தாராயாது அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்புகின்றவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டினது நல்லிணக்க பாதையில் பெரும் இடையூறாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களது ஜனநாயக விருப்புகளையும், அவர்கள் வேண்டும் சுய நிர்ணய உரிமையையும் தொடர்ந்து அரசு நிராகரித்துக் கொண்டிருப்பதே, இலங்கையிலுள்ள இன முரண்பாட்டிற்கு மூல காரணம். இன்று தமிழ் பேசும் மக்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் அப் படுகொலைகள் வரலாற்றுச் சுழற்சியில் இடம்பெறலாம் என்ற அச்சம் ஒவ்வொருவரதும் ஆழ் மனதில் குடிகொண்டுள்ளது. அச்சம் கொள்ளும் வகையில் அதிகாரத்தினூடாக சகலதையும் செய்யமுடியும் என அரசு நகர்கிறது. பௌத்த மத அடையாளங்களை பௌத்தர்கல் இல்லாத இடங்களில் நிறுவுவது தொடங்கி குடியேற்றங்கள் வரை அதிகாரத்தை பயன்படுத்தியே செய்யப்படுகிறது. இதில் நல்லிணக்கத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது?

வடக்கு கிழக்கில் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றமையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் நீதி கோரி இன்றளவிலும் மக்கள் வீதிகளில் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலம் கடந்துவிட்டபோதும், அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் தொடரும் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய இது போன்ற நடவடிக்கைகள் இறுதிவரையில் தமிழைரைப் பயங்கரவாதியாக்கும் அணுகுமுறையினை வெளிப்படுத்துகின்றது.

சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான அபிவிருத்தியூடாக நாட்டின் வளர்ச்சியினை மேம்படுத்தலே தேசத்தை கட்டியெழுப்பலாகும். அந்தவகையில் சமூக ஒற்றுமைக்கான முதல்படி மக்களின் மனங்களிப் புரிந்துகொள்வதாகும். மக்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றாது பௌதீக அபிவிருத்திகளை செய்வதில் பயனில்லை. தொடர்ந்தும் இரு தரப்பினரிடையே காணப்படும் கொள்கை;சார் இடைவெளிகளும் இதற்கு மற்றுமொரு காரணியாக அமைந்துள்ளது.

நல்லிணக்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்கிற விடயம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதிலிருந்தோ இழப்பீட்டை வழங்குவதில் இருந்தோ ஆரம்பிக்க முடியும். அது, எந்தத் தரப்பு எப்போது, எவ்வாறான தப்புக்களைப் புரிந்திருக்கின்றதோ அவை குறித்து திறந்த மனதோடு விசாரணைகளை முன்னெடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அதுதான், எதிர்காலத்தில் அவ்வாறான அநீதிகள் நிகழாதிருப்பதை உறுதி செய்யும். அதுவே, இனமுரண்பாடுகளைக் களைவதற்கான அடிப்படையாக இருக்கும்.தேசிய மற்றும் இன மதநல்லிணக்கம் நாட்டில் ஏற்படாது போனால், நாட்டின் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. நல்லிணக்கம் , சகவாழ்வு, சமாதானம் இந்த மூன்று சொற்பிரயோகங்களும் நாடு சுதந்திரமடைந்த நாள் தொட்டு 70 வருடங்களுக்கும் மேலாக இங்கு ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இந்த முயற்சியில் வெற்றி காண்பதில் தொடர்ந்து தோல்விகளையே நாம் சந்தித்து வருகின்றோம். எந்தவொரு தரப்பும் இதனை தனித்து நின்று சாதிக்க முடியாது. இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக கூட்டு அமைப்பாக சகல தரப்பும் ஒன்றிணைவதன் மூலம் தான் இந்தப் பயணத்தில் சரியான திசையை நோக்கி முன்னகரக் கூடியதாக இருக்கும். அதற்கு தனிப்பட்டவர்களின் உரிமைகளை பறிக்காத வகையிலும், உணர்வுகளை புண்படுத்தாத வகையிலும் அரசின் செயற்பாடு அமைந்தால் மாத்திரமே நிலையான சமாதானமும் நல்லிணக்கமும் சாத்தியம்!

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts