சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்கள்

ஆர்.பாரதி

2006 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அதிகாலையில்தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது. 

காலை 7.00 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட ஊடகத்துறை நண்பர் ஒருவர் அந்தச் சம்பவம் பற்றிக் கூறினார். 

“சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டார்” என்பதுதான் அந்தச் செய்தி. வழமைபோல அதிகாலையில் அலுவலகத்தை நோக்கி தனது வாகனத்தில் புறப்பட்ட குருபரன், கல்கிசைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். கதவு திறந்த நிலையில் வீதியோரத்தில் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. குருபரனின் தொலைபேசி இயங்கவில்லை. அதிகாலை 5.00 மணிக்கு முன்னதாக அலுவலகத்தில் இருக்க வேண்டிய குருபரன் வரவில்லை. 

காலை 6.45 க்கு ஒலிபரப்பாகும் காலைச் செய்தி அறிக்கையைத் தயாரிப்பதற்காக குருபரனின் வருகை எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அவரும் வரவில்லை. கைப்பேசிக்கு எடுத்தால் அதுவும் இயங்கவில்லை.  வீட்டு இலக்கத்துக்கு கோல் எடுத்தால் அதிகாலை 4.30 மணிக்கே அவர் புறப்பட்டிருந்தார் என்ற செய்தி கிடைத்தது.  

காலை 7.00 மணிக்கு மேல் செய்தி பரவத் தொடங்கியது. Braking News ஆக வானொலிகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளை பரபரப்பாக வெளியிடத் தொடங்கிய போது ஊடகத் துறையினருக்கு அச்சம் ஏற்பட்டது. 

இலங்கையில் இதற்கு முன்னரும் ஊடகவியலாளர்கள். கடத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் உயிருடன் திரும்பியதாக வரலாறு இல்லை. 2005 ஏப்ரல் 28 ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட சிவராம் அடுத்த நாள் காலையில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். அந்த நினைவுகளை மறப்பதற்கு முன்னதாகவே குருபரன் கடத்தப்பட்டது ஊடகத்துறையினருக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. உடனடியாகச் செயற்படாவிட்டால், மீண்டும் துயரக் கதைதான் தொடரும் என்ற அச்சம் அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. 

ஊடகத்துறையின் சுதந்திரத்துக்காகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுக்கும் ஐந்து அமைப்புக்கள் அப்போது இணைந்து கூட்டாகச் செயற்பட்டன. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய இரண்டையும் தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்புக்களில் செயற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள ஊடகவியலாளர்கள். 

இதில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் பலமானதாக இருந்தது. சுதந்திர ஊடக அமைப்பு அதிகளவு வெளிநாட்டுத் தொடர்புகளைக் கொண்டதாக இருந்தது. இதனைவிட ஊடக தொழிற்சங்க சம்மேளனம் என்பன கூட்டாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தன. இந்த ஐந்து அமைப்புக்களும் இணைந்துதான் கொழும்புப் பிரகடனத்தை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

கடத்தல் செய்தி வெளிவந்த நொடியிலிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் தொடர்பு கொண்டிருந்தார்கள். என்ன நடைபெற்றது? என்பதை அறிந்துகொள்வது மட்டுமன்றி, இதற்காக என்ன செய்வது? எமது எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது? குருபரனை எவ்வாறு உயிருடன் மீட்பபது? என்பதையிட்டுத் திட்டமிடுவதற்காகவும் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். 

போர்க் காலம் மட்டுமல்ல சமாதான காலம் கூட தமிழ் ஊடகவியலாளர்களுக்கும், ஊடகத் துறைக்கும் ஆபத்தானதாகவே இருந்திருக்கின்றது. 2000 அக்டோபர் 19 ஆம் திகதி நிமலராஜன் கொலையுடன் ஆரம்பமான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நீண்ட வரலாறுள்ளது. கொலை, கடத்தல், தாக்குதல், காணாமலாக்கப்படுதல் என தமிழ் ஊடகவியலாளர்கள் கடந்துவந்த பாதை கடுமையானது. ஊடகவியலாளர்கள் சிலர் தமது பாதுகாப்புக்காக வெளிநாடுகளில் தஞ்சமடைவதற்கும் இதுதான் காரணம்.

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்று என சர்வதேச அமைப்புக்கள் பலவும் முத்திரை குத்தும் அளவுக்கு இலங்கையின் நிலைமை இருந்தது!

இதில் மற்றொரு பிரச்சினையும் இருந்தது. இலக்கு வைக்கப்படும் ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புபட்டவர்களாகக் காட்டப்படுவார்கள். இது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். முதலாவது, அவர்களுடைய குடும்பத்தினர் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். இரண்டாவது – குறிப்பிட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு சக ஊடகவியலாளர்கள் அஞ்சும் நிலை ஏற்படும். இதனை இலக்காகக் கொண்டுதான் அவ்வாறான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்தப் பின்னணியில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இலக்கு வைக்கப்படும் போது அதற்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான துணிச்சல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எப்படி வரும்? அதிலும் தலைநகர் கொழும்பில்?

இந்த இடத்தில்தான் இன, மத பேதங்கள் என்பவற்றை தாண்டி ஊடக சுதந்திரத்துக்காகவும், ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்கள் என்பதை சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் வெளிப்படுத்தினார்கள். 

யாழ்ப்பாணத்தில் வைத்து நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டபோது, கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், சிங்கள ஊடகவியலாளர்களே அதில் முன்னின்றார்கள். முழுமையான ஆதரவை வழங்கினார்கள். அத்துடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நம்பிக்கையளித்ததும் அவர்கள்தான். 

அதேபோல குருபரன் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்த உடனடியாகவே அதற்கு எதிரான போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஏனைய நான்கு அமைப்புக்களுடனும் இணைந்தே அதனை ஏற்பாடு செய்திருந்தது. ஹிரு அமைப்பினரும் இதில் இணைந்துகொண்டனர். தேவையான பனர்கள், பிரசுரங்கள் போன்றன சிங்கள ஊடகவியலாளர்களின் ஆதரவுடன் அவசரம் அவசரமாகத் தயாரிக்கப்பட்டது. 

நண்பகல் 12.00 மணியளவில் கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் மீறி கூடினார்கள். இரண்டு மணி நேரத்துக்கு நடைபெற்ற அந்த கவனயீர்ப்பு மறியல் போராட்டம் பல செய்திகளைச் சொல்லியது. 

முக்கியமானது – ஊடகவியலாளர்கள் என்ற முறையில் யாருக்காவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அனைத்து ஊடகவியலாளர்களும், இன, மத பேதங்களுக்கு அப்பால் இணைந்திருப்பார்கள் என்பதை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியது. சுனந்த தேசப்பிரிய, றோஹித பாஷன, போத்தல ஜயந்த, ஞானசிறி கொத்திக்கொட, என்.எம்.என்.அமீன் என ஊகத்துறை செயற்பாட்டடாளர்கள் பலருடன், தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். முக்கிய உரைகளையும் நிகழ்த்தினார்கள். 

ஒருபுறம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற சர்வதேச அமைப்புகள், இராஜதந்திரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றின் மூலமாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 

இந்தப் பின்னணியில் மறுநாள் அதிகாலை குருபரன் விடுதலை செய்யப்பட்டார். 

கடத்தப்பட்டு உயிருடன் திரும்பிய முதலாவது ஊடகவியலாளராக அவர் இருக்கலாம். அவரைத் தொடர்ந்து 2009 இல் கல்கிசையில் வைத்து கடத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனும், பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடத்தப்பட்டு, பின்னர் அது கைது என அறிவிக்கப்பட்டு, பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டார். 

தமிழ் ஊடகத்துறையின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்த நிலையில், அதற்கு எதிராக  தலைநகரில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்திலும் சிங்கள ஊடகவியலாளர்கள் அதிகளவுக்குப் பங்குகொண்டு ஊடகத்துறையின் சுதந்திரத்துக்காக தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 

தமிழ் ஊடகத் தரப்பினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் போதெல்லாம்கு அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் காட்டிக்கொள்வதற்கான முயற்சிகள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஏதோ ஒருவகையில் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கும், அதற்கு எதிராக உருவாகக்கூடிய குரல்களை ஒடுக்குவதற்கும் இந்த உபாயம் அவர்களால் கையாளப்பட்டது. 

2,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் 40 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டிருப்பதாக ஊடகத்துறைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்கள் பட்டியலிட்டுள்ளன. 

2015 இல் ‘நல்லாட்சி’ அரசு பதவிக்கு வந்தபோது, இந்தச் சம்பவங்கள் குறித்து மீள விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என உறுதியளித்திருந்தது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறாமலிருப்பதற்கு அவசியம். அத்துடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றிச் செயற்படுவதற்கும் இது வழி ஏற்படுத்தும். அதனால்தான் நாம் அதனை வலியுறுத்தினோம். 

ஆனால், 3 சிங்கள ஊடகவியலாளர்களுடைய சம்பவங்கள் தொடர்பாக மட்டுமே ‘நல்லாட்சி’ மீள் விசாரணையை ஆரம்பித்தது. நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 5 ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்த போது இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. 

ஆனால், கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணையை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதை பின்னர் உணர்ந்துகொள்ள முடிந்தது. “கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஏதோ ஒருவகையில் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர்களாகவே காட்டப்பட்டுள்ளார்கள். அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்திவிடலாம் என அரசாங்கம் அஞ்சுகின்றது” என சிங்கள ஊடகத்துறை நண்பர் ஒருவர் அதற்கான காரணத்தை எனக்குச் சொன்னார். “சொந்தச் செலவில் தனக்குத்தானே சூனியம் செய்ய அரசு விரும்பாது” என்பதுதான் காரணம். 

ஒரு ஊடகத்துறைச் செயற்பாட்டாளராக ஒரு தசாப்தத்துக்கு மேலாகச் செயற்பட்டவன் என்ற முறையில் நான் எனது அனுபவத்தில் உணர்ந்துகொண்ட ஒரு விடயம் இதுதான்; அரசாங்கங்கள் தமிழ் – சிங்கள ஊடகவியலாளர்களிடையே ஒரு பிரிவினையை வைத்திருக்க விரும்புகின்றது. ஆனால், ஊடகவியலாளர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஊடகத்துறையின் பெறுமானங்களுக்காகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திரத்தை நிலைநாட்டுவதற்காகவும் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள். அதற்கான நம்பிக்கை அவர்களிடம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இதனை ஊடகத்துறையினர் கட்டிவளர்க்க வேண்டும்.

சிங்கள ஊடகவியலாளர்களுடன் குறிப்பாக, யுக்திய, ஹிரு குழுவினருடனும், சிங்கள ஊடக செயற்பாட்டாளர்கள் பலருடனும் நெருக்கமாகப் பழகியவன் என்ற முறையில் பல விடயங்களை என்னால் உணாந்துகொள்ள முடிந்தது. போர் முடிவடைந்த போது, அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முறை குறித்தும், அதன் பின்னர் தென்பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்டங்களையிட்டும் அவர்கள் கடும் அதிருப்தியடைந்திருந்தார்கள். நல்லிணக்க முயற்சிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள். அதேவேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள் அதற்காக எழுதினார்கள். 

ஐந்து ஊடக அமைப்புக்களின் சந்திப்பு பெரும்பாலும் கொழும்பு பிளவர் வீதியில் இருந்த சுதந்திர ஊடக அமைப்பின் அலுவலகத்தில்தான் நடைபெறும். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  சார்பில் இதில் பெரும்பாலும் நான் கலந்துகொள்வது உண்டு. கூட்டத்துக்கு தலைமைதாங்கும் சுனந்த தேசப்பிரிய கூட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்வார். “சிங்களத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒருவர் இருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பை அவருக்கு வழங்க வேண்டும்” என்பது அவரது கட்டளையாக இருக்கும். எனக்காக அனைவரது கருத்துக்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதேபோல நான் தமிழில் சொல்வது உடனடியாகவே சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக சிவகுருநாதனை அல்லது இரண்டு மொழிகளும் தெரிந்த மற்றொருவரை எனக்கு அருகில் இருக்குமாறு சுனந்த அனுப்பிவைப்பார். 

தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக்கொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை சிங்கள மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும். இலங்கைத் தீவில் உண்மையான நல்லிணக்கம் ஒன்று ஏற்பட வேண்டுமானால், ஊடகவியலாளர்களுடைய பங்கு அதில் பிரதானமாக இருக்க முடியும். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts