Transparency தகவலறியும் உரிமை

தகவல்அறியும் உரிமை:பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு தகவல் ஆணைக்குழுவின் உத்தரவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப்  பெறக்கூடிய நிலைமை முக்கியமானதென்பதுடன், பொறுப்புள்ள அரசாங்கத்தின் அரச நிறுவனங்கள் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள் அந்த பொறுப்பை புறக்கணித்தால், குடிமக்கள் அந்த உரிமைக்காக போராட வேண்டும்.

ஒரு நாட்டில் மோசமான சட்ட அமுலாக்கம் காரணமாக குடிமக்கள் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். தகவல் அறியும் உரிமைக்கு, சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையானது இலங்கையில் பல அரச நிறுவனங்களால் தடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே, ஒரு ஜனநாயக சமுதாயத்தின் அடையாளமான தகவல் உரிமை இன்று கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களை, வழங்காத 18 பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு, சட்டத்தில் வரையறை செய்யப்பட்ட கால எல்லைக்கு இணங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RIC) உத்தரவிட்டுள்ளது.

2020 பாராளுமன்றத் தேர்தலின் போது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சரியாகத் தெரிவிக்கப்படாமல், தேர்தல் பேரணிகளை நடாத்தியமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கோரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இந்த ஒழுங்குவிதிகள் வழங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 14, 2020 அன்று நாடு முழுவதும் 42 பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன, ஆனால் 09 பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள் மட்டுமே உரிய திகதியில் பதிலளித்தன. காங்கேசன்துறை, முல்லைத்தீவு, வவுனியா, குளியாப்பிட்டி, களுத்துறை, கண்டி, மட்டக்களப்பு, தங்காலை மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களில் உள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள் மட்டுமே உரிய திகதியில் பதிலளித்தன. அதேநேரத்தில், இலங்கையில் உள்ள 33 பிற பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரின் அலுவலகம் என்பன தகவலளிக்கத் தவறிவிட்டன. குறிப்பிட்ட நேரத்தில் தகவல் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காத 33 பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களில் 18 இற்கு இந்த  ஒழுங்குவிதிகள்  வழங்கப்பட்டன.

அந்த உத்தரவில்  கூறப்பட்டுள்ளதாவது, “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (3) ன் கீழ் கோரிக்கை கிடைத்தவுடன், உத்தியோகத்தர் 25 (1) ன் கீழ் கோரிக்கை மேற்கொண்ட குடிமகனுக்கு கேட்கப்படும் தகவலை எழுத்து பூர்வமாக அனுப்ப வேண்டும்.” பிரிவு 24 ன் கீழ் கோரிக்கையைப் பெற்ற 14 நாட்களுக்குள் கோரப்பட்ட தகவலை வழங்கலாமா அல்லது சட்டத்தின் பிரிவு 5 இல் கூறப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக கோரிக்கையை நிராகரிக்கலாமா என்பதை நிறுவனங்கள் முடிவு செய்யலாம். பின்னர் முடிவை கோரிக்கையை மேற்கொண்ட குடிமகனுக்கு தெரிவிக்கப்படவேண்டும். எவ்வாறாயினும், மேற்கண்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள் தங்கள் சட்டரீதியான பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்று ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிக்காத மாத்தறை மாவட்டத்தில் உள்ள 10 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் இருப்பதாகக் கூறி தகவல் கொடுக்க மறுத்துவிட்ட பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு ஆணைக்குழு ஒழுங்குவிதிகளை வழங்கியது. இந்த சம்பவத்தில் கோரப்பட்ட தகவல்கள் பிரிவு 5 இன் எந்தவொரு ஏற்பாடுகளின் கீழும் வராது என்பதை அது வலியுறுத்தியது. எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளில் விண்ணப்பதாரரால் கோரப்பட்ட தகவலை வழங்குவதில் தடையில்லை.

தகவல் பெறாதது தொடர்பாக 12.10.2020 அன்று பொலிஸ்மா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.ஆனால், பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தால் கூட எந்தவொரு பதிலையும் அளிக்க முடியாதிருந்தது. தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம்  கொடுக்கப்பட்ட மனுக்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் முன் அறிவித்தலுக்கு இணங்கத் தவறினால் மேன்முறையீடுகளைக் கேட்க உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி அவர்கள் முன்னறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுவரை தகவல்களை வழங்காத அனுராதபுரம், மாத்தறை, குருநாகல், கொழும்பு தெற்கு, அம்பாறை, பொலன்னறுவை, எம்பிலிப்பிட்டி, நிகவெரட்டிய ஆகிய இடங்களிலுள்ள எட்டு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கும்  பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கும் தகவல் ஆணைக்குழுவானது முன் அறிவித்தலை வழங்கியுள்ளது. 12.03.2021 முதல் மேன்முறையீட்டு விசாரணையை தகவல் ஆணைக்குழு அவர்களுக்கு அறிவித்தது, ஆனால் இன்னமும் அந்த அரச நிறுவனங்கள் தகவல்களை வழங்கத் தவறிவிட்டன. 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 25, 28 மற்றும் 31 ஆகிய பிரிவுகளின் கீழ், கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிவித்தல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் குடிமக்களின் தகவல் உரிமைக்காக அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட ஆணைக்குழுவின் அறிவிப்புகள், முடிவுகள் மற்றும் உத்தரவுகளைக்கூட புறக்கணிக்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடு அந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.

தகவலுக்கான விண்ணப்பங்கள் 12.09.2020 அன்று பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அரச நிறுவனங்களிடமிருந்து தகவல் இல்லாததால், 12.10.2020 அன்று பொலிஸ்மா அதிபரிடம் முறையிடப்பட்டதுடன் பொலிஸ்மா அதிபரின் அலுவலகமும் எந்தவொரு பதிலையும் அளிக்கத்தவறிவிட்டது. 04.12.2020 அன்று தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு மேற்கொண்ட பின்னர், மேன்முறையீடு சுமார் 07 மாதங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

An Order From The Information Commission To The Police Against Withholding Information

තොරතුරු සඟවන පොලිසියට තොරතුරු කොමිසමෙන් නියෝගයක්

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts