சுற்றுச்சூழல்

டிகுவா பழங்குடியினரிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

டி.எம்.ஜி. சந்திரசேகர

பழங்குடியின மக்கள் தமது பிரதிநிதித்துவத்திற்காக தனி அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசிப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. அது நல்லதா கெட்டதா என்ற தீர்மானத்தை வழங்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள், தொடர்ந்து வில் மற்றும் இலைகளை ஆடையாகப் பயன்படுத்துவது உட்பட, பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையைப் பேண வேண்டும் என்ற கருத்தியலை சிலர் கொண்டுள்ளனர். உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பலர், தம்பான போன்ற இடங்களுக்குச் சென்று இந்த பூர்வீக கலாசாரத்தை பார்க்க விரும்புவதை அவதானிக்க முடிகின்றது. 

நாம் தம்பானைக்குச் சென்றபோது, எமது வாகனத்தைக் கண்ட பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தையொன்று வனப்பகுதியை நோக்கி ஓடியதை எமது குழு கண்ணுற்றது. பின்னர் நாம் அந்தக் கிராமத்திற்குச் சென்றபோது, அதே குழந்தை மேற்சட்டையின்றி லுங்கியை மாத்திரம் அணிந்தவாறு, வில் மற்றும் அம்புடன் நின்றது. தமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ஏதேனும் பெற்றுக்கொள்ளவும் அந்தக் குழந்தை விரும்புவதை இச்சம்பவம் எடுத்துக்காட்டியது. இது அந்த பழங்குடியின மக்களின் தவறல்ல என்பதையும், வெளிப்புற காரணிகளின் விளைவே அவர்களை இவ்வாறு செயற்பட வைத்துள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.

இந்த நிலைமையை சீர்படுத்துவதற்கு ஒழுங்கற்ற சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதே தவிர, போதுமான கணிசமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. எனவே, பழங்குடியின மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபடுவது பாராட்டுக்குரியது. அதற்காக அவர்கள் தெரிவுசெய்த அணுகுமுறை சரியா தவறா என்பது வேறு விடயமாகும்.

இலங்கை அல்லது வேறு எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும், இயற்கையுடன் ஒன்றித்தே பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். சூழலை பாதுகாப்பதற்கு, சியாட்டில் போன்ற பழங்குடித் தலைவர்கள் தமது உயிரைக் கூட பணயமாக வைத்து பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர். இலங்கையில் பழங்குடியின மக்கள், தமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் உள்ளார்ந்த பகுதியாக இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதனை தமது வலுவான உரிமையாக கருதுகின்றனர். 

உலகளாவிய ரீதியில் 70 நாடுகளில் சுமார் 400 மில்லியன் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் தரவுகள் குறிப்பிடுகின்றன. தமது உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் செயற்படும் சர்வதேச அமைப்புகளை இந்த பழங்குடி சமூகங்கள் கொண்டுள்ளன. 1999ஆம் ஆண்டு கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற International Conference on Federalism மாநாட்டில் பழங்குடித் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தமது ஆளுகை அனுபவங்களை தமக்கிடையே பகிர்ந்துகொண்டதை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பழங்குடி தலைவர்கள் தமது கருத்துக்களையும் ஆளுகை பற்றிய தமது கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொள்ளும் முக்கிய தளமாக அது அமைந்தது.

2005ஆம் ஆண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கான தலைமைத்துவ நிகழ்வில்  பங்கேற்க அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அமெரிக்காவிலுள்ள பூர்வீக செவ்விந்திய சமூகமான டிகுவாவின் பழங்குடி கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. டெக்சாஸில் உள்ள மெக்சிகோ எல்லைக்கு அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில், செவ்விந்தியர்களின் பல்வேறு பழங்குடியினர் வசிப்பதோடு, இவர்கள் வெவ்வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றனர். அவர்களில் பாப்லோ டிகுவா என்ற பழங்குடி மக்களையே நான் சந்தித்தேன். 

1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த சந்தர்ப்பத்தில், அங்கு சுமார் 20 மில்லியன் மக்கள் இருந்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், பழங்குடியின மக்கள் மீதான பல்வேறு படையெடுப்புகள், வற்புறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக, இவர்கள் தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு தப்பிச்சென்றனர் என வரலாறு குறிப்பிடுகின்றது. இவ்வாறு இடம்பெயர்ந்த பழங்குடி சமூகங்கள், புதிய பகுதிகளில் குடியேற்றங்களை நிறுவி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பித்தனர்.  

இந்த பழங்குடி குழுக்களில் ஒன்றான டிகுவா பழங்குடி மக்களை ஒரு தனித்துவமான குழுவாக, 1967ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.  இயற்கையோடு ஒன்றித்து வாழும் டிகுவா மக்கள், பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், கோதுமை போன்ற பயிர்களை பயிரிட்டு தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களது ஒன்றிணைந்த அடையாளம் மற்றும் சமூகத்தின் வலுவான உணர்வு காரணமாக, இந்த சவால்களை சமாளிக்கும் திறன் அவர்களுக்கு உள்ளதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மிஷனரிகளின் தாக்கத்தின் விளைவாக, தமது பூர்வீக நம்பிக்கைகளுக்கு மேலதிகமாக டிகுவா மக்கள் காலப்போக்கில் கிறிஸ்தவ மதத்தையும் தழுவிக்கொண்டனர். எனினும், இயற்கையை அவர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்துவதோடு, அதனை தமது ஆன்மீக நம்பிக்கையின் ஒரு பகுதியாகவும் கருதுகின்றனர். 

இயற்கையுடன் டிகுவா மக்கள் கொண்டுள்ள ஆன்மீக தொடர்பு பற்றி, டிகுவா பழங்குடியின் முன்னாள் தலைவர் ஜோய் சியெர்ரா இவ்வாறு குறிப்பிடுகின்றார். “இயற்கை சக்திகளுடன் ஒன்றித்திருக்க நாம் முயற்சிக்கின்றோம். இயற்கையே எமது மதம். இயற்கையின் சக்தியை நாம் வணங்குகின்றோம். இயற்கை எம்முடன் கதைக்கின்றது. அது கடவுள் அல்ல, ஆனால் இயற்கை அன்னை. பறவைகளும் மரங்களும் எம்முடன் பேசுகின்றன. உதாரணமாக ஒரு செடியை எடுத்துக்கொண்டால், அது சிறந்த ஆரோக்கியம் மற்றும் சக்தி உள்ளிட்ட அனைத்தையும் எமக்குத் தருகின்றது. மழை எம்மை நெருங்கிவிட்டதென, இடி எமக்கு உணர்த்துகின்றது. பயிர்ச்செய்கைக்கு மழை நீரை பயன்படுத்துகின்றோம். இந்த சிறிய தாவரங்கள் மற்றும் பூச்சிகள் ஒவ்வொன்றும் நமக்கு முக்கியம். இவை ஒவ்வொன்றும் எமக்கு ஏதாவது ஒன்றை கற்பிக்கின்றன”.

பண்டைய காலம் தொட்டு இந்த பழங்குடியினர் கலாசாரப் பண்புகளை வளர்த்து வந்துள்ளனர்.  இரண்டு மாடி வீடுகள், போர் ஆயுதங்கள், மட்பாண்டங்கள், வண்ணமயமான ஆடைகள் என்பவற்றை இவர்கள் பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு டிகுவாவில் உள்ள கலாசார மையம் சான்றாகும். அங்கு நாம் கண்ட கூடைகள், உரல் மற்றும் அரைக்கும் கற்கள் என்பன, எமது கிராமத்து வீடுகளை கண்முன் கொண்டுவந்தது.  பண்டைய காலம் தொட்டு அவர்கள் விருந்தோம்பல் பண்பினை பேணி வந்துள்ளதோடு, கம்பீரமான பெருமித உணர்வோடு தங்கள் வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பேணி வருகின்றனர். நவீன அமெரிக்க சமுதாயத்தின் அனுகூலங்களை அவர்கள் அனுபவித்தாலும், தமது கலாசார அடையாளங்களை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். 

அமெரிக்க அரசாங்கமானது, இந்த இனக் குழுக்களுக்கு ஒவ்வொரு வருடமும் சில ஏற்பாடுகளை வழங்குகின்றது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்குள் ஒரு சுதந்திரமான சிறிய மாநிலமாக டிகுவா செயற்படுகின்றது. அமெரிக்க சட்டங்களை கடைப்பிடிக்கும் அதே சந்தர்ப்பத்தில், தமது சுயாட்சியை பேணுவதோடு, சுயமாக நிறுவப்பட்ட நிர்வாக அமைப்பின் அனுகூலங்களை அனுபவிக்கின்றனர். இந்த அமைப்பானது, Ysleta del Sur Pueblo பழங்குடி கவுன்சில் என அழைக்கப்படுகின்றது. 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே பெயரிலான சட்டத்தின் பிரிவுகள் 101 மற்றும் 104 இல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உள்ளார்ந்த அரசாங்க அதிகாரம், நிதி அதிகாரம் மற்றும் பழங்குடி இறையாண்மை ஆகியவற்றைச் செயற்படுத்தும் முறையாக நிறுவப்பட்ட பாரம்பரிய ஆளும் குழுவை அவர்கள் கொண்டுள்ளனர். ஆளுநர், லெப்டிணென்ட் ஆளுநர், ஷெரிப் மற்றும் நான்கு கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளடங்கலான பழங்குடி அதிகாரிகள் வருடந்தோறும் தெரிவுசெய்யப்படுவர். பழங்குடியின அரசாங்க செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான நிர்வாக மேற்பார்வையையும் ஆளுநர்கள் வழங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக, பழங்குடியின நீதிமன்றம் மற்றும் பொலிஸ் பிரிவும் இந்தக் கிராமத்தில் உள்ளது.  

டிகுவா சமூகத்தைப் பற்றிய ஆவணப் படமொன்றை தயாரிப்பதற்காக, 2007ஆம் ஆண்டு அவர்களது கிராமத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அங்கு கல்வி கற்ற இளம் பழங்குடி தலைவர்கள் இருவரைச் சந்தித்தேன். அவர்கள் தமது பதவிக்காலத்தில், ஒரு நினைவு நிகழ்வினை நடத்தி தமது மக்களை கௌரவிக்க வேண்டுமென தமது விருப்பத்தை தெரிவித்தனர். 

சுற்றுலா மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் மூலமாக கவுன்சில் வருவாய் ஈட்டுவதோடு, இதனால் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கமுடிகின்றது. டிகுவா கிராமத்திலுள்ள பாடசாலைகளில், பாலர் கல்வி முதல் உயர்கல்வி வரை கற்க முடியும். இந்த பாடசாலைகளின் கல்வித் தரமானது, கொழும்பு றோயல் கல்லூரி போன்ற புகழ்பெற்ற பாடசாலைகளின் கல்வித் தரத்தை விஞ்சும் அளவிற்கு உள்ளது. இதற்கு மேலதிகமாக, ஏனைய மாநிலங்களிலும் உயர்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. El Paso என்ற பகுதிக்கருகில் உள்ள உயர்நிலை பாடசாலையானது, தொழிற்கல்வியையும் வழங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு நான் டிகுவா கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு ஆளுநராக கடமையாற்றும் கடல்சார் பொறியியலாளர் ஒருவரைச் சந்தித்தேன். உயர்கல்வியுடன் கூடிய நிபுணர்களை உருவாக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளமைக்கு இது ஒரு சிறந்த உதாரணம். மேலும், குழந்தைகளினதும் முதியோர்களினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு கவுன்சில் முன்னுரிமை வழங்குகின்றது. இக்கிராமத்தில் சுமார் 5000 பேர் வசிக்கின்றனர்.   

டிகுவான் மொழியை சிறுவயது முதல் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றனர். அத்தோடு, அவர்களது கலாசாரத்திற்கு தனித்துவமான நடனங்களும் இசையும் உள்ளன. இக்கிராமத்தில் காணப்படும் சிறந்த நூலகமும் கலாச்சார நிலையமும், பெருமைமிகு டிகுவான் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தளங்களாக உள்ளன. இளைஞர்களுக்கான ஆளுமை அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்கமைத்தல் உள்ளடங்கலாக, பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் குறித்த வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதில் மூத்த தலைவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். குறிப்பாக மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வழியில் இவர்கள் வாழும் பிரதேசம் இருப்பதால் போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தலுக்கு வாய்ப்புள்ள நிலையில், டிகுவானிய இளைஞர்களை பாதுகாப்பது தமது கடமையென அச்சமூகத்தின் சிரேஷ்ட பிரஜைகள் கருதுகின்றனர்.  

எமது நாட்டைப் பொறுத்தளவில் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் புவி வெப்பமடைவதை நிவர்த்திப்பற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும், பழங்குடியின மக்களுக்கு இன்னும் போதிய பாதுகாப்பில்லை. அவர்கள் தமக்கென காணப்பட்ட நிலங்களை இழந்துள்ளனர் . காலங்காலமாக இயற்கையோடு இயைந்து வாழும் இவர்கள் அதிலிருந்து ஒதுங்கியிருப்பதானது, இயற்கையுடனான அவர்களின் நீண்டகால இணக்கத்தை சீர்குலைக்கிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கு அவர்களின் உரிமைகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இந்த ஆதிவாசிகளுக்குள் குணவர்தன ஒருவரும் முதலி ஒருவரும் உள்ளடங்கியுள்ளனர் என்பதற்காக அவர்கள் சமூகத்துடன் முழுமையாக இணைந்துவிட்டனர் என கூறமுடியாது. பழங்குடியின மக்களுக்கான பரிந்துரை செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு ஓர் அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவமான அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதா அல்லது மாற்று நிறுவன புரட்சிகளை ஆராய்வதா என்பது பற்றி கலந்துரையாடுவதற்கான நேரம் இதுவாகும். அவர்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியிருப்பதை தடுப்பதும், சமூகத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெற்றுக்கொள்வதும் இன்றியமையாததாகும். இவ்விடயத்தில், டிகுவான் சமூகத்திடமிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம்.    

————————————————————

ஆவணக்கதை

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts