முக்கியமானது

சேதன விவசாயம்: அச்சம் தரும் அறிவிப்பா?அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்!

யு.எல்.மப்றூக்

சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  இரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத நிலையில் பசளையை தேடி அலைகின்றனர். இந்த நிலை ஏன் வந்தது?

சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் – இரசாயனப் பசளை, பீடை கொல்லிகள் மற்றும் களை கொல்லிகள்  ஆகியவற்றின் இறக்குமதியை தடை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி அமைச்சரவையில் முடிவுகாணப்பட்டது. அத்துடன் எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து சேதன விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமென்ற அறிவிப்பும் விடப்பட்டது. அதே நேரம் தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பயிர்களுக்கு வழங்குவதற்குப் போதுமான இரசாயன உர வகைகள் – கையிருப்பில் உள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஆனால் நிலைமை அவ்வாறில்லை என்கின்றனர் விவசாயிகள். 

”உரத் தடை காரணமாக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக நெல் விவசாயிகள் மிகவும் உதவியற்றவர்களாக மாறியுள்ளனர். விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தைக் கோரி, விவசாய திணைக்களங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். இதற்கு மேலதிகமாக, உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் பிற தோட்டச் செய்கை விவசாயிகளும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுக்கு பலியாகியுள்ளனர்” என எதிர்க்கட்சித் தலைவரும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சேதன விவசாயம் பற்றிய போதுமான அறிவு இல்லாத தங்களை, உடனடியாக சேதன விவசாயத்தில் ஈடுபடுமாறு அரசாங்கம் நிர்ப்பந்திப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் எம்.ஐ. இல்முதீன். இவர் அம்பாறை மாவட்டத்திலுள்ள நெற்செய்கை விவசாயிகள் குழுவொன்றின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.    

சேதன விவசாயத்துக்கு மாறினாலும், அதனால் குறைவான விளைச்சலே கிடைக்கும் எனவும் அவர் கூறுகின்றார். விளைச்சல் குறைவாக கிடைக்கும் போது விவசாய நிலங்களுக்கான குத்தகை வருமானமும் வீழ்ச்சியடையும் என்றும் அவர் கவலைப்படுகின்றார். 

இதேவேளை தற்போது நெற்பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை சேதன முறையிலான பீடை நாசினிகளால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது என்றும் சேதன உள்ளீடுகளைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் நபரொருவர் தனது வயலில் ஏற்பட்ட பூச்சித் தாக்கத்தைக் கட்டுப்படுத்த 04 தடவைக்கு மேல், சேதன முறையில் தயாரிக்கப்பட்ட பீடை நாசினிகளைப் பயன்படுத்திய போதும், அந்த முயற்சி பயனளிக்கவில்லை என கூறுகிறார் நெற் காணி உரிமையாளரான எஸ்.ஏ. றமீஸ்.

இவ்வாறான சிக்கல்கள் உள்ள நிலைமையை “எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் அவசரமாகவும் தன்னிச்சையாகவும் கையாண்டு, இரசாயன உரங்களை அரசாங்கம் தடைசெய்வதால், நாட்டில் உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்படும்” என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

சேதனப் பயிர்ச்செய்கை அனுபவம்

இவ்வாறான சூழ்நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு சில விவசாயிகள் தமது சொந்த ஆர்வத்தின் பேரில் – சேதன முறையிலான நெற்செய்கையில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றமையையும் காண முடிகிறது. அவ்வாறு சேதன நெற்செய்கையில் ஈடுபடுகின்றவர்களில் ஒருவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.ஆர். பர்ஸான். தனியார் மருத்துவ நிறுவனமொன்றில் வெளிக்கள முகாமையாளராகப் பணியாற்றும் இவர், பாரம்பரிய இயற்கை விவசாயம் மீது கொண்ட ஈர்ப்பினால், தனது 02 ஏக்கர் காணியில் சேதன முறையிலான நெற் செய்கையில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றார். 

பாரம்பரிய நெல்லினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தின் அடிப்படையிலும் சேதன வழி நெல்செய்கையில் ஈடுபட்டு வரும் பர்ஸான், தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

“இரசாயன உரங்களையோ, இரசாயன நாசினிகளையோ தவிர்த்து விவசாயம் மேற்கொள்ள முடியாது என்கிற மனப்பதிவு இந்தப் பகுதியில் இருந்து வந்த நிலையில்தான், சேதன முறையிலான இயற்கை வழி நெற்செய்கையை நான் தொடங்கினேன். தற்போது நமது அரசாங்கமும் இயற்கை முறையிலான விவசாயத்தை மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு வந்துள்ளது. இதனை நாம் வரவேற்றுக் கொண்டாட வேண்டும்.” எனக்கூறும் பர்ஸான்; சேதன விவசாயத்துக்கு ஏன் மாற வேண்டும் என்பதை அரசாங்கம், அறிவியல் ரீதியாக மக்களிடம் போதுமானளவுக்கு இன்னும் எடுத்துச் சொல்லவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். 

தனது நெல்வயலுக்குத் தேவையான பசளைகளையும், நாசினிகளையும் இயற்கை முறையில் தனது வீட்டிலேயே தயார் செய்வதாக பர்ஸான் கூறுகின்றார். மேலும் ‘இயற்கையான முறையில் கூட பூச்சி கொல்லிகளை நாம் பயன்படுத்துவதில்லை, பூச்சி விரட்டிகளையே பயன்படுத்துகிறோம்” என்கிறார் அவர். அத்துடன் இயற்கை விவசாயம் சூழலுக்கும் மனிதர்களுக்கும் மிக உகந்தது என்பதையும் உறுதிபடக் கூறுகிறார். அதேவேளை பொருளாதாரரீதியாக விளைச்சலை குறைக்கும் நிலையை பின்வருமாறு விளக்கினார். 

‘இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நெற்செய்கையில் சாதாரணமாக ஏக்கருக்கு 40 மூடைகள் விளைச்சலாகக் கிடைக்கும். ஆனால் சேதன நெற் செய்கையின் போது 20 அல்லது 25 மூடைகள்தான் விளைச்சலாகக் கிடைக்கின்றது. ஆனாலும், காலம் செல்லச் செல்ல சேதன நெற்செய்கையில் விளைச்சலை அதிகளவு பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம், சேதனவழி விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பாரம்பரிய நெல் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசி ஆகியவற்றுக்கு, இரசாயன விவசாயத்தில் கிடைக்கும் நெல் மற்றும் அரிசியை விடவும் சந்தையில் அதிக விலை உள்ளது” என்கிறார்  பர்ஸான். அத்துடன் எமது மரபார்ந்த விவசாய விதையினங்களையும் பாதுகாக்கமுடியும் என்றும், ஒவ்வொரு முறையும் விதைகளுக்காக வேறொருவரிடம் கையேந்த தேவையில்லை என்றும் கூறுகிறார். 

‘இலங்கையில் சுமார் 3 ஆயிரம் வகையான நெல்லினங்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால், மரபணு மாற்றப்பட்ட நெல்லினங்களின் வருகை, இரசாயன பசளை மற்றும் நாசினிகளின் பயன்பாடுகள் காரணமாக பாரம்பரிய நெல்லினங்களில் ஏராளமானவை அழிவடைந்து விட்டன. இலங்கைக்கே உரிய பாரம்பரிய நெல்லினங்கள் 8 அல்லது 9 வகையானவை மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன. அவற்றையேனும் பாதுகாக்க வேண்டும்” என்றும் பர்ஸான் வலியுறுத்தினார். 

பட்டபொலல்ல (Batapolalla) எனும் பாரம்பரிய நெல்லினங்களில் ஒன்றை இம்முறை பயிரிட்டுள்ள பர்ஸான்;  ‘இந்த நெல்லினம் குளுகோஸ் குறிகாட்டியின் அடிப்படையில் 49 வீதத்துக்கு கீழே உள்ளது. ஆனால் தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை நெல் அரிசி 80 தொடக்கம் 85 வீதமான குளுகோசையும், சிவப்பு அரிசி 70 – 75 வீதமான குளுகோசையும் இரத்தத்தில் சேர்க்கும்” என அவர் தெரிவிக்கின்றார். அதனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ‘பட்டபொலல்ல’ அரிசி மிகவும் சிறந்தது என்றும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு பர்ஸான் தனது அனுபவத்தினூடாக இயற்கை விவசாயம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் கூறினாலும், பரந்த நிலப்பரப்பில் பெருமளவான பயிர்ச்செய்கைகளில் இவை உடனடிச் சாத்தியமா என்ற கேள்விகள் எழுகின்றன.

‘அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையானது  சுமார் 88 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்படும். அதேபோன்று மேட்டுநிலப் பயிர் 17 ஆயிரம் ஹெக்டயரில் செய்கை பண்ணப்படும். மரக்கறி போன்ற பயிர்கள் 1500 ஹெக்டயரில் மேற்கொள்ளப்படும். அதன்படி 01 லட்சத்து 6500 ஹெக்டரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். இதற்காக பெரும்போகத்தில் மட்டும் மொத்தம் 05 லட்சத்து 32 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் சேதனப் பசளை தேவைப்படும்” என்கிறார் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ். 

இந்த நிலையில் இந்த பசளையினை உள்ளுரில் பெற்றுக் கொள்வது சாத்தியமா என்கிற கேள்விகளும் உள்ளன. 

இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு சில தீர்வுகளை அரசு அறிவித்துள்ளதாக தெரிகிறது. அவற்றை மாவட்ட விவசாய திணைக்களங்களினூடாக செயற்படுத்தவுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகளாக, சேதன விவசாய முறைமை குறித்து பிரதேச மட்டங்களில் விழிப்புணர்வு வழங்குதல், சேதன பசளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பற்றியும், பசளை தயாரிக்கக்கூடியவர்கள் பற்றியும் தகவல்கள் திரட்டல் போன்றவை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தயார்படுத்தல்களே தற்போதைய சூழலில் இன்னும் ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. 

ஜனாதிபதியின் உத்தரவாதம்

இந்த நிலையில், சேதன உரங்களைப் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு விளைச்சல் குறைந்து வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டால், உத்தரவாத விலையை விட அதிக பணத் தொகைக்கு அவர்களது நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது எனவும், நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளார். இது சேதன விவசாயத்துக்கு மாறும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் நட்டங்களுக்கு நிவாரணம் வழங்கும் ஏற்பாடாக உள்ளது.

அதேபோன்று ‘இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், சேதன உரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு தயாராக இருக்கின்றது” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 05 லட்சம் ஹெக்டயர்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை, சர்வதேச விலைமனுக் கோரலுக்கு இணங்க, அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்து, கமநல சேவைகள் திணைக்களத்தின் மூலம் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 06 லட்சம் ஹெக்டயர் விவசாய காணிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனவே அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய, இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் சேதன விவசாயத்துக்கு மாறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சேதன விவசாயம் என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்புகின்றவர்களின் முதற் தெரிவாக உள்ளது என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை. ஆனாலும், ‘சுடுகிறது மடியைப் பிடி’ என்பது போல், முன் ஆயத்தங்கள் எவையும் இன்றி சேதன விவசாய முறைமைக்குள் விவசாயிகளின் ‘கழுத்தை”ப் பிடித்து பலவந்தமாக அரசாங்கம் தள்ளி விட முயற்சிக்கின்றது என்கிற விமர்சனங்களைத்தான் பரவலாக அவதானிக்க முடிகிறது.

Organic Farming: Is It A Bad Omen? Few Lessons Learned Through Experience

කාබනික ගොවිතැන: භයානක පෙරනිමිත්තක්ද ? අත්දැකීම් මඟින් උගත් පාඩම් කිහිපයක් !

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts