கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

செய்தி அறிக்கையிடலுக்கு பதிலாக கதைகளை உருவாக்கும் ஊடகங்கள்

கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இலங்கையை தாக்குகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளைப் போல இலங்கையும் தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளில் நாம் வாழும்போது சமூக வாழ்க்கையை இழக்கின்றோம். நாம் ஒரு சமூகத்தில் வாழும்போது ஏனையோர் வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும். (‘ஏனையோர்’ என்ற கருத்தை ஆட்சிமுறை வரை குறிப்பிட முடியும்). ஒரு நாட்டின் பிரஜையை பொறுத்தவரையில் ஆட்சிமுறையை கேள்விக்குட்படுத்துவதற்கான அடிப்படை விடயமாக தகவல் காணப்படுகின்றது. எனினும், தொற்றுநோய் காலத்தில் அதிகாரபூர்வமான தகவல்களை எமக்கு அணுக முடியாமல் உள்ளது. இதன் விளைவாக, நாட்டின் புதிய விடயங்களை உருவாக்கும் முறையை சவாலுக்கு உட்படுத்துவதற்கான சமூகத்தின் திறன் பலவீனமடைகின்றது.

சாதாரண சூழ்நிலைகளின் போது, தகவல்மயமாக்கப்பட்ட சமூகத்தின் செய்திகளை உருவாக்கும் சக்தியானது பிரஜைகள் ஊடகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆனால் தொற்றுநோய் பரவும் காலத்தில் இந்த சக்தி அரசாங்கத்திற்கு மாற்றப்படுகின்றது. அந்தவகையில், தற்போதைய சூழலில் பல்வகை சமூக விடயங்களை உருவாக்குபவராகவும் விளக்கங்களை வழங்குபவராகவும் நியாயப்படுத்தலையும் அரசாங்கமே மேற்கொள்கின்றது. பிரான்ஸ் மார்க்ஸிசவாதியான லூயிஸ் அல்துசாரின் கணிப்பின்படி, ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் சமூக ஒழுங்கை பாதுகாக்க அரசிற்கு உதவுவதே முதலாளித்துவ ஊடகங்களின் பணியாகும். ஆனால், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கருத்துக்களையே அரசு சார்பு ஊடகங்கள் பரப்புகின்றன. அவை தகவல்களின் உட்பொருளை வெளிப்படுத்தி, மிகைப்படுத்தி, உணர்திறனாக்குகின்றன.

தமது பிரஜைகளை திறன்மிக்க சமூக ஆர்வலராக உருவாக்குவதே பொதுவாக ஊடகங்களின் செயற்பாடாகும். மறுபுறத்தில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் கூடிய ஊடகங்களின் சிக்கலான நிலை காரணமாக, அதன் செயற்பாடுகளை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

இந்த கட்டுரையானது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதலாவது தாக்கத்தின்போது இலங்கையின் பிரபல அச்சு ஊடகங்களில் வெளியான விடயங்களை ஆராய்கின்றது. ஊடகங்கள் உருவாக்கிய கதைகள் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை பகுப்பாய்வு செய்ய இக்கட்டுரை உதவும்.

கொவிட்-19 தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு அறிமுகப்படுத்திய ஒழுக்க விதிமுறைகளை படம்-1இல் காணலாம்.

eeeeeeeeeee

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதிமுதல் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வெளியான சில சிங்கள மொழி பத்திரிகைகளை தெரிவுசெய்து, அவற்றில் ஒழுக்க விதிமுறைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதை ‘எத்திக்ஸ் ஐ’ என்ற ஊடக கண்காணிப்பு சேவை பகுப்பாய்வு செய்துள்ளது.

wwwwwwwww

பகுப்பாய்வின் அடிப்படையில் பார்த்தால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஊடகங்களும் தொற்றுநோய் காலத்தில் ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. குறித்த ஊடகங்கள் பக்கச்சார்பற்ற அறிக்கையிடலில் இருந்து விலகிச்சென்று கதைகளை உருவாக்கும் போக்கை காணலாம்.

ஊடகங்கள் முன்னிலைப்படுத்திய நிகழ்வுகளும் ஆளுமைகளும் பொதுவாக ஒன்றுக்கொன்று இரட்டை நிலைப்பாட்டில் காணப்பட்டன. குறிப்பாக நாட்டுப்பற்று – துரோகம், அரச சார்ப்பு மற்றும் எதிர்ப்பு, ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் என்ற இரட்டை நிலைப்பாடு காணப்பட்டது. கதாநாயகன் எதிர் வில்லன் என்ற இரட்டை நிலைப்பாடு ஊடகங்களில் அன்றி இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. பக்கச்சார்பற்ற அறிக்கையிடலுக்;கு அப்பாற்பட்ட கதைகளின் உருவாக்கத்தை ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஆனால்; அரசியல் செயற்பாடுகளுக்காக கதைகளை உருவாக்கும் செயற்பாட்டில் ஊடகங்கள் ஈடுபடுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் உள்நாட்டு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பல, நோயை எதிர்கொண்ட வெற்றிகரமான நாடாக இலங்கையை சித்தரிக்க முயற்சித்தன. அதே சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை இதில் தோல்விகண்ட நாடுகளாக காட்ட முனைந்தன.

2020 மார்ச் மாதம் 31ஆம் திகதிமுதல் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிவரை பிரதான அச்சு ஊடகங்கள் சிலவற்றில் வெளியான தலைப்புச் செய்திகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்ட விடயத்தை, இந்த தலைப்புச் செய்திகள் தெளிவாக சித்தரிக்கின்றன.

 

 

 

இலங்கை

கொரோனா அச்சுறுத்தல் நீங்கியது (லங்காதீப 2020.04.18)

நாம் செய்தது சரியென உலகம் புரிந்துகொண்டது (தினமின 2020.03.31)

கொரோனாவை தோற்கடிக்கும் அதேவேளை மக்களுக்கும் நிவாரணங்கள் (சிலுமின 2020.03.29)

அச்சுறுத்தலை நாம் கட்டுப்படுத்திவிட்டோம்; இதனை முடிவுக்கு கொண்டுவர பொதுமக்களின் ஆதரவு தேவை (மவ்பிம 2020.04.21)

இந்து சமுத்திரத்தின் முத்தின் கொவிட்-19இற்கு எதிரான போராட்டம் மிகச்சிறந்தது (அருண 2020.03.30)

 

ஏனைய நாடுகள்

பிரித்தானியா முடக்கப்பட்டது  (அருண 2020.04.04)

கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜேர்மனி நிதியமைச்சர் தற்கொலை செய்துகொண்டார் (மவ்பிம 2020.04.10)

தன்னால் வைரஸ் பரவுகின்றது என்ற அச்சத்தில் இத்தாலிய தாதியொருவர் தற்கொலை செய்துகொண்டார் (அருண 2020.04.02)

உலக சுகாதார அமைப்பின் விசித்திரமான கருத்துக்கள் மற்றும் முகக்கவசம் தொடர்பில் தீர்மானமின்மை (அருண 2020.04.02)

கொரோனாவை யார் பரப்பியது, சீனாவா அல்லது அமெரிக்காவா?  (திவயின 2020.03.01)

சுவிஸ் போதகர் சாத்தான் (மவ்பிம 2020.04.05)

 

இலங்கை ஏனைய நாடுகள்

 

வலுவான தலைமைத்துவம் பலவீனமான தலைமைத்துவம்

 

சரியான தீர்மானங்களை எடுத்தல் பிழையான தீர்மானங்களை எடுத்தல்

 

பிரஜைகளுடன் நட்பானது

 

பிரஜைகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டது

 

சவாலை கடக்க முடிந்தது சவாலால் தோற்கடிக்கப்பட்டது

 

வெற்றிபெற்றது தோல்வியடைந்தது

 

 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்தித் தலைப்புகளின் மூலம் உருவாக்க முயன்ற கதைகளின் இரட்டை நிலைப்பாடு பின்வருமாறு:

 

இரட்டைநிலைப்பாடுகளே கதைகளின் முதன்மை அம்சமாக அமைகின்றதென பிரெஞ்சு மானுடவியலாளரும் இனப்பண்பாட்டியல் நிபுணருமான கிளோட் லெவி ஸ்ட்ராஸ் சுட்டிக்காட்டுகின்றார். இரட்டை நிலைப்பாட்டின் மூலம் மனிதன் யதார்த்தத்தை புரிந்துகொள்ள கதையம்சம் உதவுகின்றது. நல்லது-கெட்டது, முற்போக்கானது-பின்தங்கியது மற்றும்; வெற்றி-தோல்வி என்ற அடிப்படையிலேயே மனிதனின் புரிதல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகச் செயற்பாட்டை நோக்கினால், இலங்கையின் பக்கம் எப்போதும் நேர்மறையான அம்சங்கள் நிறைந்திருக்கும் அதேசந்தர்ப்பத்தில் ஏனைய நாடுகளை எப்போதும் எதிர்மறை அம்சங்களைக் குறிப்பிட்டே காட்டுகின்றது. இந்த இரட்டை நிலைப்பாட்டு உருவாக்கமானது இறுதியில் நல்ல நாடு மற்றும் மோசமான நாடு என்ற முடிவை ஏற்படுத்துகின்றது.

கொவிட்-19இற்கு எதிரான உலக நாடுகளின் போராட்டம் தொடர்பாக இலங்கை ஊடகங்கள் உருவாக்கிய கதைகள், ஏனைய நாடுகளை மோசமான நாடுகளாக காட்டின. கொவிட்-19 குறித்த இலங்கையின் வெற்றிக்கதைகளை, மறுபக்கத்தில் இந்த நிலையை எதிர்கொண்டுள்ள நாடுகளின் சூழலை முழுமையாக அறிந்துகொண்டு ஒப்பிட வேண்டும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிடுகையில் குறித்த பொருளின் உண்மைத்தன்மையை அன்றி அதன் எதிர்நிலையையே புரிந்துகொள்கின்றோம். இந்த நிலைப்பாட்டை கொவிட்-19 சூழலில் பார்க்கும்போது இலங்கையின் வெற்றியென ஒருவர் கருதுவது, அமெரிக்கா போன்ற இன்னொரு நாட்டின் தோல்வி தொடர்பான ஒப்பீட்டு பார்வையில் ஆகும். ஏனைய நாடுகள் எதிர்நோக்கும் சனத்தொகை அடர்த்தி, தலைமைத்துவத்தின் பலவீனங்கள் மற்றும் அந்நாடுகளின் சுகாதார கட்டமைப்பின் தன்மை (இலவச மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சுகாதார வசதிகள்) போன்ற சிக்கல்களை புறந்தள்ளி இலங்கை தொடர்பான வெற்றிக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. அத்தோடு, இலங்கையை ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடாக சித்தரிக்கின்றன.

இந்த செய்தித் தலைப்புகளுடன் தொடர்புடைய செய்தியை நாம் மேலும் ஆராய்ந்தால் கதைகள் மிகவும் மோசமாக புனையப்பட்டுள்ளதை புரிந்துகொள்ளலாம். ‘கொரோனா அச்சுறுத்தல் நீங்கியது’ (லங்காதீப 2020.04.18) என்ற தலைப்பிடப்பட்ட செய்தியை சுகாதார பணிப்பாளர் நாயகம் இரண்டு நாட்களின் பின்னர் திருத்தி குறிப்பிட்டார். காரணம் அந்த செய்தியில் அவரது கருத்தும் தவறாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான அறிக்கையிடல்கள் ஊடகவியல் கொள்கைக்கு ஏற்புடையதல்ல. இவை செய்தி அறிக்கையிடல் என்பதை விட இலக்கிய கதைகள் என்ற வகைக்குள் அடங்கும். கதாநாயகன் மற்றும் வில்லன் பற்றிய வழக்கமான கதைகளே இவை. இதன் விளைவாக, தொற்றுநோயின் தீவிரம் குறித்து மக்கள் அறியாமல் இருக்கின்றனர். அத்தோடு, அரசாங்கம் அவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும் என்ற தவறான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர். இந்நிலையானது சாதாரண மக்களை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலிருந்து விலகிச்செல்ல ஊக்குவிக்கின்றது. உண்மையான விடயங்களை கையாள்வதில், இவ்வாறான கதைகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. இந்நிலைமையானது, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மோசமாக பாதிக்கும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts