சுற்றுச் சூழலுக்கு சவாலாகும் ‘மருத்துவக் கழிவுகள்’
ஹயா அர்வா
2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் நகரங்களையும் கிராமங்களையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பேராதரவும் கிடைத்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்ததால் இவ்வாறான நகரங்கள், கிராமங்களை அழகுபடுத்தல், சுத்தமாக வைத்திருத்தல், சுற்றுச் சூழலை பாதுகாத்தல் போன்ற முயற்சிகள் தலைகீழாக மாறியதுடன் மக்களின் உயிர்வாழ்தலுக்கு உலை வைக்கக்கூடிய, சுற்றுச் சூழலை சீரழிக்கும் எமனாக இலங்கையை மருத்துவக் கழிவுகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவத்தில் கடந்த 2018ஆம் ஆண்டுவரை பிரச்சினைகள் காணப்பட்ட போதும், தற்போது அவை யாவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளதென மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியன இணைந்து நடத்திய மதிப்பீட்டு ஆய்வின் மூலமும் இக் கூற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் மேல் மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களில் இக்கூற்று ஏற்புடையதாகாது என்பதே உண்மை.
இதற்கு உதாரணமாக வெளிநாடுகளிலிருந்து பாரிய கொள்கலன்களில் மருத்துவக்கழிவுகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டபோது அவை கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட நிலையில் இச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன் இலங்கையை உலகின் குப்பைத்தொட்டியாக்கும் முயற்சி எனவும் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது.
அதுமட்டுமல்ல, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா காலத்தில் உபயோகிப்பட்ட பல ஆயிரக்கணக்கான தொன் மருத்துவக் கழிவுகள் குவிந்து மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அதிகப்படியாக உபயோகிக்கப்பட்ட சிரிஞ்சுகள், தொற்றைக் கண்டறியும் சோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசி போத்தல்கள் போன்றவை தற்போது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், கொரோனா வைரஸானது, மருத்துவக் கழிவுகளின் மீது உயிர்ப்புடன் இருக்கும்போது கழிவுகளை எரித்துச் சுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கு, எளிதாக நோய்த் தொற்றும் அபாயம் உள்ளது. மேலும், கழிவுகள் எரிக்கப்படும்போது நிலப்பரப்புகள், நீரின் தரம் போன்றவையும் பாதிக்கப்படலாம். காற்றின் மூலம் நோய் கிருமிகள் பரவும் அபாயமும் உள்ளது என உலக சுகாதார நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கழிவுகளை பொறுத்தவரையில், நவம்பர் 2021 இல் ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமே கிட்டதட்ட 87,000 தொன் எனவும், இது பல நூறு திமிங்கிலங்களின் எடைக்கு சமமானவை எனவும், இதில் பெரும்பாலானவை தற்போது கழிவுகளாக மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உபயோகிக்கப்பட்ட சுமார் 140 மில்லியன் பரிசோதனைக் கருவிகள், 2,600 தொன் பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்கும் திறன் கொண்டவை. தற்போது இவையும் மருத்துவ கழிவுகளாக எஞ்சி உள்ளன. இது மட்டும் இல்லாமல் உலக அளவில் செலுத்தப்பட்ட சுமார் 8 பில்லியன் தடுப்பூசிகள், கண்ணாடிக் குப்பிகள், ஊசிகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டிகள் கிட்டத்தட்ட 144,000 தொன் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளதாகவும் இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள மருத்துவக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு கழிவுகளையே இன்னும் சுத்திகரிக்க முடியாத நிலையில், தற்போது அதிகரித்துள்ள கொரோனா கால மருத்துவக் கழிவுகள் மனித ஆரோக்கியத்துக்கும் சூழலுக்கும் ஊறுவிளைவிப்பதாக உள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 7 இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டதுடன் 17000 பேர் வரையில் உயிரிழக்குமளவுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உக்கிரம் பெற்றிருந்தது. இதனை தடுப்பதற்காக முதல் டோஸிலிருந்து 4 ஆம் டோஸ் வரை 4 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு ஏற்றப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள கொரோனா காலத்தில் உபயோகிப்பட்ட பல ஆயிரக்கணக்கான தொன் மருத்துவக் கழிவுகளில் இலங்கையில் எத்தனை ஆயிரம் தொன் மருத்துவக்கழிவுகள் உருவாகியிருக்கும் என்பதனை ஊகித்தறிய முடியும். இந்த மருத்துவக்கழிவுகளை உரிய முறைப்படி அகற்ற நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிகளும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகளும் இடம்கொடுக்க வில்லை. அதனால் தான் மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் 2018ஆம் ஆண்டுவரை பிரச்சினைகள் காணப்பட்ட போதும், தற்போது அவை யாவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளதென மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை கூறும் கூற்றை ஏற்க முடியாத நிலை காணப்படுகின்றது.
மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அகற்றப்படும் விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளும் நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகளும் காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் இந்த மருத்துவ கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற மருத்துவக் கழிவாகிறது.
இவ்வாறான மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துதல் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் அதன் மூலம் கடுமையான நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. அத்துடன் இந்த மருத்துவக்கழிவுகள் உயிரிழப்புக்களை ஏற்படுத்திவிடக்கூடியவை. எனவே தான் அரசாங்கம் இதற்கென பல்வேறு விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தாலும் அவை சரியாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. தேவையான வெப்பநிலைக்கு கீழாக இயங்கும் எரியூட்டிகள் ,போதிய சேமிப்பு வசதிகள் இன்மை, உரிய நேரத்தில் கழிவுகள் அகற்றப்படாமை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இன்மை ஆகியவற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான மருத்துவமனைகளினால் முறையாக அகற்றப்படாமல் அப்படியே பொது இடங்களில் குப்பையில், நீர் நிலைகளில், வெளிகளில், கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. உரிய முறைப்படி இந்த மருத்துவக்கழிவுகளை அழிக்காமல் இவ்வாறான பொது இடங்களிலும் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகிலும் கொட்டுவதனால் மருத்துவக்கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கியதன் காரணமாக வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் புதிதாக பத்து நோயாளிகள் உருவாகவும் உயிரிழக்கவும் காரணமாகின்றன. நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கும் அரச மருத்துவமனைகளை விடவும் நோயாளிகளிடம் பணம் பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளே இவ்வாறு மருத்துவக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டி இன்னும் பல நோயாளிகளை உருவாக்குகின்றன.
தனியார் மருத்துவமனைகள் உரிய முறைகளைக் கையாளாது எப்படியாவது தமது மருத்துவமனைகளிலிருந்து கழிவுகளை அகற்றிவிட்டால்போதுமென நினைத்து சில தனியாருக்கு குறைந்த பணத்தைக் கொடுத்து அவர்களின் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவிடுகின்றனர். இந்த மருத்துவக்கழிவுகளை ஏற்றிச் செல்வோரும் வாகனத்துடன் அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஆட்கள் இல்லாத இடமாகப்பார்த்து இரவோடு இரவாக கொட்டி விட்டுச் சென்று விடுகின்றனர். இதுதான் நாடு முழுவதும் நடைபெறுகின்றது. இதனால்தான் மருத்துவக் கழிவுகள் தற்போது மனித குலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
இலங்கையில் வைத்தியசாலைகள், சுகாதார சிகிச்சை நிலையங்கள், ஆய்வுகூடங்கள் போன்றவற்றில் தினமும் சுமார் 40 தொன் மருத்துவக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. இவை தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது. மனித உடற்கூறு கழிவுகள், நுண்ணுயிர் கழிவுகள், கூர்முனை கழிவுகள் (ஊசி) என 10 வகையான கழிவுகளை மருத்துவமனை ஊழியர்களே பிரித்து விடுவார்கள். இந்த கழிவுகள் ஒவ்வொரு நிற கவரில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அவை அவற்றுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களில் எரித்தும், புதைத்தும் அழிக்கப்படும். ஒரு மருத்துவமனையில் சராசரியாக ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேரும் எனத்தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் இவ்வாறு மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளில், பாதிக்கும் மேற்பட்டவை முறையாக அகற்றப்படுவதில்லை, அழிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் விடுவது ஒரு குற்றச்செயல் என்று இலங்கை மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்கு விதிகள் வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், நடைமுறையில் இது பெரும்பாலான மருத்துவமனைகளினால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. கடைப்பிடிக்காத மருத்துவமனைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் இல்லை.
இலங்கையிலுள்ள குப்பை மேடுகளை கிளறினால் அதற்குள்ளிருந்து மருத்துவக்கழிவுவுகளை மட்டுமல்ல உடல் பாகங்களைக்கூட எடுக்கக்கூடியதாக இருக்கும் .இதற்கு உதாரணமாக மீதொட்டமுல்ல குப்பை மேட்டிலிருந்து மருத்துவக் கழிவுகளும் மனித குடல்களும் கண்டெடுக்கப்பட்டதைப்பற்றி ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டிருந்ததை குறிப்பிடமுடியும்.
இலங்கையில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவது , புதைக்கப்படுவது அல்லது அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுவதே பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனாலும், இந்த முறைகள் மூலமாக மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் காணப்படும் ஆபத்துக்கள் பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஸ்டொக்ஹோம் மாநாடு ஆகியன அறிவுறுத்தியுள்ளன.
மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படுவதனால் காபனீரொட்சைட், நோய்க் கிருமிகள் மற்றும் நச்சு இரசாயனங்களான டையோக்சின் போன்றன எரிக்கும் புகையில் காணப்படுவதுடன், சூழலுக்கும், பொது மக்களுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே நச்சு வாயுக்களை வெளிவிடாமல், எரியூட்டலுக்கு பதிலான மாற்று தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டுமென இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவக் கழிவுகளை, பொது குப்பைமேடுகள், பொது இடங்கள், நீர் நிலைகள் உள்ள இடங்களில் கொட்டுவது வேகமாக நோய்க் கிருமிகள் பரவக் காரணமாகிறது. திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதன் மூலமும், எரியூட்டு முறையில் வெளியேறும் புகையைச் சுவாசிப்பதன் மூலமும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதோடு புற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எண்ணிக்கையில் பெருகிவரும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடுகளிலிருந்தே சிகிச்சை பெறுபவர்கள் மூலம் உருவாகும் மருத்துவக் கழிவுகள் நேரிடையாக மற்ற குப்பைகளுடன் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலையாகும். மருத்துவக் கழிவுகளினால் பறவைகளும் மிருகங்களும் பெருமளவில் பாதிப்படைகின்றன. குப்பைகளிலுள்ள பொலித்தீன் ,பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் விலங்குகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. மரணம் சம்பவிக்கின்றது. கூரிய முனையுடைய, மருத்துவக் கழிவுகளை பொதுக் குப்பையோடு சேர்ப்பதால் இக்குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு அதனூடு நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம்.
எனவே நாமும், நமது சமுதாயமும், நமது எதிர்கால சந்ததியும் நமது சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்பட மருத்துவக் கழிவு மேலாண்மைக்கு செயல்வடிவம் கொடுப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் அவசியம் என்பதனை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக தனியார் வைத்தியசாலைகள், கிளினிக்குகள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால் மருத்துவக்கழிவுகள் ஆபத்திலிருந்து எம்மையும் எமது சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.