சுற்றுச்சூழல்

சுற்றாடல் அறிக்கையிடலில் ஊடகங்களின் வகிபாகம் திருப்தியானதா?

எம்.எஸ்.எம். ஐயூப்

‘சுற்றாடலுக்கு எற்படும் எதிர்மறை தாக்கங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கான மாநாடொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இலங்கை சுற்றாடல் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகவே நான் அதில் கலந்து கொண்டேன்.

சுற்றாடல் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக கருத்து தெரிவிக்கும் போது எந்த மொழியில் கடமையாற்றிய போதிலும், சகல நாடுகளிலும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏறத்தாழ ஒரே விதமானவை என்பது அம் மாநாட்டின் போது நான் உணர்ந்த முக்கிய விடயமொன்றாகும். 

சகல நாடுகளிலும் மனித நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை கருத்திற் கொள்ளும் போது ஊடகங்கள் சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை அறிக்கையிடுவதற்காக இடத்தையும் காலத்தையும் ஒதுக்குவதில் வெகுவாக தயக்கம் காட்டுகின்றன என்பது மாநாட்டில் கலந்து கொண்ட ஏறத்தாழ சகல ஊடகவியலாளர்களும் முன்வைத்த முறைப்பாடாகும். இது எவ்வித மொழி வேறுபாடுமின்றி சகல நாடுகளிலும் பிரதான நீரோட்டத்திலுள்ள சகல ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருந்த நிலைமையாகும்.

அரசியல் மற்றும் குற்றச் செயல்கள் போன்ற விடயங்களைப் பற்றி அறிக்கையிடுவதற்காக அச்சு ஊடகங்களில் ஒதுக்கப்படும் இடத்தோடும் இலத்திரனியல் ஊடகங்களில் ஒதுக்கப்படும் நேரத்தோடும் சுற்றாடல் பிரச்சினைகளைப் பற்றி பொது மக்களை அறிவூட்டுவதற்காக அதே ஊடகங்கள் ஒதுக்கும் இடத்தையும் நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாரியதொரு வேறுபாட்டைக் காண முடிகிறது. இந்த வேறுபாட்டுக்கான காரணத்தை விளக்குவதில் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களிடையே ஒருமித்த கருத்து இருக்கவில்லை. 

அம்மாநாடு நடைபெற்றதிலிருந்து இன்று வரை இரண்டு தசாப்தங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன. ஆனால் தெற்காசிய பிராந்தியத்தில் மட்டுமன்றி உலகில் எந்தவொரு பிராந்தியத்திலும் ஊடகங்களின் இந்த நிலைமை மாறிவிட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. இது சுற்றாடல் பிரச்சினைகள் விடயத்தில் பொதுவாக ஊடகங்களின் அல்லது குறிப்பாக ஊடகவியலாளர்களின் கண்ணோட்டம் பற்றியதான பிரச்சினையொன்றல்ல. மாறாக, இது பலமான நிதி அடித்தளமொன்றில் மட்டுமே ஊடகங்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையின் காரணமாக ஏற்பட்ட நிலைமை என்பதே நான் அம் மாநாட்டில் எடுத்துரைத்த வாதமாகும்.  

அரசியல், சமயம், கலாசாரம் மற்றும் சுற்றாடல் போன்ற குறிப்பிட்ட துறைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சமூகக் குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றால் நடத்தப்படும் பத்திரிகைகள், வானொலிச் சேவைகள் மற்றும் தொலைக்காட்சிச் சேவைகள் தவிர்ந்த ஏனைய சகல ஊடகங்களும் வர்த்தக நோக்கிலேயே இயங்கி வருகின்றன. அவை அடிப்படையில் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு இயக்கப்படுவதோடு அவற்றின் உற்பத்திகளாக கருதப்படும் வெளியீடுகள் அந்நிறுவனங்களின் இருப்பை உறுதி செய்யக்கூடிய வர்த்தகப் பண்டங்களாக அமைவது கட்டாய நிபந்தனையாகும். அவ்வாறில்லையெனில் அந்நிறுவனங்கள் தோல்வியடைந்து அவ்வெளியீடுகளும் மறைந்துவிடுவது தவிர்க்க முடியாததொன்றாகும். 

இந்நிலைமை குறிப்பாக பிரதான நீரோட்டத்திலுள்ள ஊடகங்கள் விடயத்திலேயே பொருந்துகிறது. ஒரு விடயம் சமூகத்தினதோ அல்லது உலகத்தினதோ இருப்பிற்கு எவ்வளவு தான் முக்கியமானதாக கருதப்பட்டாலும் அது ஒரு பத்திரிகையின் விற்பனையை அதிகரிப்பதற்காகவோ அல்லது இலத்திரனியல் ஊடகமொன்றின் பாவனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவோ உதவியாக அமையாவிட்டால் அது அந்த ஊடகத்தில் முன்னுரிமை பெற்ற விடயமாகப் போவதில்லை. அதன்படி அதற்கு அந்த ஊடகத்தில் இடம் ஒதுக்கப்படமாட்டாது. அல்லது பெயரளவில் மட்டுமே இடம் ஒதுக்கப்படும். 

சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போர் தமக்குத் தேவையான அனைத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்து வருகின்ற போதிலும் இந்த நியதியே அக் கருத்துக்களையும் பெரும்பாலும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பிட்ட தலைப்புக்களில் நடத்தப்பட்டு வரும் யூ டியூப் சனல்களைத் தவிர்ந்த ஏனைய சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்போர் பெரும்பாலும் சுய திருப்தி, சுய மேம்பாடு, தொடர்புகளை வளர்த்தல் அல்லது இன, மத மற்றும் ஏனைய சித்தாந்தங்களை பரப்புதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றனர். யூ டியூப் சனல்கள் இவற்றுக்குப் புறம்பாக பணம் சம்பாதிப்பதையும் நோக்கமாகக் கொள்கின்றன. ஆயினும் இவ்வனைவரும் மிகக் கூடுதலானோரிடம் தமது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று கருதுவதால் சுற்றாடல் போன்ற ஜனரஞ்சகமற்ற அல்லது குறைந்த ஜனரஞ்சகத் தன்மையைக் கொண்ட தலைப்புக்களை கையாளத் தயங்குகின்றனர். 

எனினும் ஊடகவியலாளர்களோ அல்லது ஊடகங்களோ சுற்றாடலின் எதிரிகள் என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, மக்கள் முக்கியமானதாக கருதாத ஒரு விடயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், மக்கள் தம்மையும் முக்கியமற்றதாக கருதி ஒதுக்கித் தள்ளிவிடக்கூடும் என ஊடக நிறுவனங்கள் அச்சப்படுகின்றன. அவ்வாறான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்தலானது தொழில்துறை என்ற ரீதியில் ஊடகங்களினதும் தொழிலாளர்கள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களினதும் இருப்பை பாதிக்கலாம்.     

சுற்றாடல் தொடர்பான விடயங்கள் உலகின் இருப்பிற்கு மிகவும் முக்கியமானவை என்பது உண்மையாயினும் மக்கள் அந்த முக்கியத்துவத்தை உடனடியாக உணர்வதில்லை. எனவே தமது வாழ்க்கையில் உடனடியாகவோ அல்லது நேரடியாகவோ தாக்கத்தை ஏற்படுத்தாத சுற்றாடல் போன்ற விடயங்கள் பால் புத்திஜீவிகளும் மிகக் குறைவான கவனத்தையே செலுத்துகின்றனர். 

இலங்கையில் பல பிரதேசங்களில் வீதி ஓரங்களில் துர்நாற்றத்தை பரப்பிய வண்ணம் பல வாரங்களாக இருக்கும் அருவருக்கத்தக்க குப்பை குவியல்கள், குப்பைகளைக் கையாள்தலைப்; பற்றிய மக்களிடம் உள்ள மன்னிக்க முடியாத கண்ணோட்டத்திற்கு சிறந்த உதாரணமாகும். டெங்கு போன்ற பயங்கர நோய் பரவுதல்; பற்றி நன்கு உணர்ந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். 

நாடளாவிய ரீதயில் தீரக்கப்படாதிருக்கும் குப்பைப் பிரச்சினையைப் பற்றியோ அல்லது நாளாந்தம் குறைந்து வரும் காடுகளைப் பற்றியோ அல்லது உயிரின பன்மைத்தன்மைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப் பற்றியோ பொதுமக்களின் ஆர்வத்தைப் பற்றி கருத்துக் கணிப்பொன்றை நடத்தினால் அதன் பெறுபேறுகள் நிச்சயமாக மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கும். இந்த நிலையில் எந்தவொரு வெளியீட்டாளரும் அல்லது பத்திரிகை ஆசிரியரும் அல்லது ஊடகவியலாளரும் அவ்வாறான பிரச்சினைகளால் தமது பத்திரிகையின் பக்கங்களை நிரப்பி வாசகர்களை அந்நியப்படுத்திவிட விரும்புவதில்லை. 

சுற்றாடலை பாதுகாப்பதில் மக்கள் அளிக்கும் பங்களிப்பானது இன்றியமையாததும் முக்கியமானதுமாகும். அவர்கள் சுற்றாடலை மாசுபடுத்துவதிலும் அழிப்பதிலும் பெருமளவில் பங்களிப்பது மட்டும் அதற்குக் காரணமல்ல. செல்வாக்குள்ளவர்கள், குறிப்பாக அரசியல் பின்னணியைக் கொண்ட அல்லது அரசியலாளர்களால் வழிநடத்தப்படும் செல்வாக்குப் பெற்ற நபர்கள் சுற்றாடல் விடயத்தில் மேற்கொள்ளும் தீய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடியவர்கள் சாதாரண மக்களாவர். 

எனினும் முறையாக அறிவூட்டப்படாத அல்லது போதியளவில் அறிவூட்டப்படாத மக்களிடம் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக பெரிதாக எதனையும் எதிர்;பார்க்க முடியாது. அவர்கள் அவற்றை எதிர்த்து குரல் எழுப்பப் போவதில்லை. எனவே தான் மக்களை அறிவூட்டுவதில் பெரும் பங்கினை ஆற்றுவதற்காக ஊடகங்கள் முன்வர வேண்டும். அபிவிருத்திக்கும் சுற்றாடல் பாதுகாப்பிற்கும் இடையிலான ஒரு நடுநிலை கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் உருவாக்க ஊடகங்களால் மட்டுமே முடியும். 

பெரும்பாலான நாடுகளில் அடுத்த தலைமுறையைப் பற்றியல்லாது அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும் அரசியல்வாதிகளே அதிகமாக இருக்கின்றனர். அவ்வாறான நாடுகளில் சுற்றாடல் விடயத்தில் மக்களை அறிவூட்டுதல் மிகவும் அவசியமான விடயமாகும். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் அரசியல்வாதிகள் சுற்றாடலை பாதுகாப்பதில் எந்தளவு அக்கறையோடு செயற்படுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. சதுப்பு நிலக் காட்டுப் பகுதியொன்றை அழித்து விளையாட்டு மைதானம் ஒன்றை நிர்மாணிக்க ஒரு அரசியல்வாதி எடுத்த முயற்சியை மாவட்ட வன இலாகா அதிகாரி ஒருவர் எதிர்த்த போது பெரும் சர்ச்சை வெடித்தமை அவற்றில் ஒரு சம்பவமாகும். 

இவ்விடயம் தொர்பாக அவ்வரசியல்வாதியும் அப் பெண் அதிகாரியும் கலந்து கொண்ட கூட்டமொன்றில் இக்காட்டுப் பிரதேசங்கள் வளிமண்டலத்தில் ஒட்சிசன் செறிவை பாதுகாக்க அத்தியாவசியமானவை என்று அவ்வதிகாரி கூறிய போது, ஒட்சிசனில் மக்களுக்கு என்ன பலன் இருக்கிறது என்று அவ்வரசியல்வாதியின் ஆதரவாளர் ஒருவர் கிண்டலாக வினவுவதை தெலைக்காட்சி மூலம் நாடே கேட்டுக் கொண்டு இருந்தது. அவ்வரசியல்வாதியும் இறுதி வரை அக்காட்டுப் பகுதியை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். சுற்றாடலைப் பற்றி அரசியல்வாதிகளின் பொதுவான கண்ணோட்டம் இதுவாகும். இறுதியில் ஊடகங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கிய தெளிவே அக் காட்டுப் பகுதியையும் அப் பெண் அதிகாரியையும் பாதுகாத்தது. 

ஆயினும் இந்த விடயத்தில் ஊடகங்கள் அரசியல்மயமாகியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதனை மறுக்கவும் முடியாது. பொதுவாக அரசாங்கத்தை ஆதரிக்கும் ஊடகங்கள் அந்த அரசியல்வாதியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயன்றதோடு பொரும்பாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் ஊடக நிறுவனங்களே சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இவ்விடயத்தை அறிக்கையிட்டன.

சுற்றாடல் தொடர்பான விடயங்கள் அரசியல்மயமாவது முற்றிலும் மோசமானது என்று முடிவுக்கு வர முடியாது. மேலே குறிப்பிட்ட சம்பவம் அதற்கு ஒரு உதாரணமாகும். சுற்றாடல் தொடர்பான விடயங்கள் அரசியல்மயமாவதில் தீமைகளைப் போலவே நன்மைகளும் இருக்கின்றன. இவ்வாறு சுற்றாடல் அரசியல்மயமாவதால் ஊடக நிறுவனங்கள் அரசியல் ரீதியாக பிரிந்து செயற்படும் நிலை ஏற்படுவதே இங்குள்ள தீமையாகும். ஆயினும் இதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினைகள் வெளிக் கொணரப்பட்டு மென்மேலும் பொது மக்களின கவனத்தை ஈர்க்க வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன. அதன் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் மீதும் அதிகாரிகள் மீதும் நெருக்குதல்கள் ஏற்படுகின்றன. 

உலக பாரம்பரிய வனங்களில் ஒன்றான சிங்கராஜ வனத்தின் ஒரு நுழைவாயிலாக கருதப்படும் லங்காகமவிற்குச் செல்லும் பாதையை அபிவிருத்தி செய்யும் பணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும் இது விடயத்தில் ஊடகங்கள் அரசியல்மயமாகி பிரிந்து செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. அப்போது ஒரு சாரார் அபிவிருத்தியை வலியுறுத்தியதோடு மற்றொரு சாரார் சுற்றாடல் பாதுகாப்பை மட்டுமே வலியுறுத்தினர். 

ஒரு சாரார் வீதி அபிவிருத்தி செய்யப்படுவதால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கத்தை முற்றாக புறக்கணித்து கருத்து வெளியிட்டு வந்ததோடு மற்றைய சாரார் கல்வி, மருத்துவ தேவைகள் போன்ற தமது தேவைகளுக்காக லங்காகமவில் வாழும் மக்கள் தமக்கு மிகவும் நெருங்கிய நகரமான நெலுவ நகருக்கு சுமார் 15 கிலோ மீட்டர் மிகவும் கடினமாக பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டும் என்ற மனிதாபிமான பிரச்சினையை முற்றாகவே மறந்து கருத்து தெரிவித்து வந்தனர். வீதி அபிவிருத்தி பணிகளால் அரிய தாவரங்கள் அழியும் அபாயத்தை மட்டுமே அவர்கள் வலியுறுத்தினர். 

எனினும் இந்த ஊடக துருவமயமாதல் காரணமாக சுற்றாடல் தொடர்பான மிகவும் உயிர்ப்புள்ள கலந்துரையாடல் ஒன்று அப்போதும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் ஏனைய அரசியல் விடயங்களின் பால் மக்களின் கவனம் விரைவில் திரும்பியதால் அந்த கலந்துரையாடல் முழுமையடையாது இடைநடுவிலேயே நின்றுவிட்டது. 

மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளின் போது இலங்கையில் மட்டும் காணப்படும் குறூடியா செய்லனிகா என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட மரமொன்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டு முயற்சிகள் மேற்கொண்ட போதும் அதே போன்றதோர் கலந்துரையாடல் ஆரம்பமாகியது. ஆயினும் அபிவிருத்தியையும் சுற்றாடல் பாதுகாப்பையும் நடுநிலையான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான முறையான கலந்துரையாடல் ஒன்று இதுவரை ஊடகவியலாளர்களிடையே நடைபெறவில்லை.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts