சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சீன மற்றும் தமிழ் மொழி குழப்பமும் புதிய நெருக்கடியும்

சி.ஜே.அமரதுங்க

சீனாவால் நிதியளிக்கப்பட்ட சில திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி சீன மொழியின் மூலமாக மாற்றீடு செய்யப்படுகின்ற பல சம்பவங்கள் சமீபத்தில் அறிக்கையிடப்பட்டன.

அத்தகைய ஒரு சம்பவம் கொழும்பு துறைமுக நகர திட்டத்திலும் அறிக்கையிடப்பட்டது. அதன் மத்திய பூந்தோட்டப் பகுதியில் உள்ள பெயர் பலகை ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகளில் காணப்பட்டது. பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களால் பேசப்படுவதுடன் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தமிழ் மொழி அதில் இருக்கவில்லை.

அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து, சீன நிறுவனம் பெயர்ப்பலகை தனது ஊழியர்களுக்கானது மட்டுமே என்று கூறியது. பின்னர் சிலர் தமிழர்கள் யாரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லையா அல்லது ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினர். செய்த குற்றத்தை விட வழங்கப்பட்ட பதில் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

சில நாட்களில், மற்றொரு சம்பவம் இந்த நிலைமையை மேலும் தீவிரமாக்கியது. இந்தத் தடவை இது நாட்டின் முன்னணி சட்ட அமுலாக்க நிறுவனங்களில் ஒன்றான சட்டமா அதிபர் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன் சீன நிதியுதவி திட்டங்களில் ஒன்று ஆரம்பிக்கப்பட்டபோது, ​​அதன் பிரதான பெயர்ப்பலகை ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகளில் மட்டுமே அமைக்கப்பட்டது தெரிந்தது. நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பு எந்தவொரு பொறுப்பான நபரும் அதனைப் பார்க்காதது கூட ஒரு பிரச்சினையாகும். இருப்பினும், பெயர் பலகை உடனடியாக அகற்றப்பட்டது.

இதற்கிடையில், இது போன்ற பல சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்று மேல் மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டமாகும்.

இது சீனாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களின் வெளிப்பாடு என்று சிலர் நினைக்கலாம்.

வேறுவிதமாக நினைக்கும் சிலர் இவை வெறும் தற்செயல் நிகழ்வுகள் என்றும் நினைக்கலாம்.

எவ்வாறாயினும், மொழி என்பது அரசியலாகவுள்ள எங்களைப் போன்ற ஒரு சமூகத்தில் இத்தகைய தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதுடன் இதனை குறைத்து மதிப்பிடப் படக்கூடாது. இது நமது அரசியல் வரலாற்றில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விடயம் என்பதுடன் இரத்தக்களரிக்கு கூட வழிவகுத்த விடயமாகும்.

இங்கே, அதிகளவான கவனம் சீன மொழியின் பயன்பாட்டில் செலுத்தப்பட்டது. இருப்பினும், உண்மையான பிரச்சினை தமிழ் மொழியை புறக்கணிப்பதாகும். இது இப்போது ஓரளவிற்கு குறைந்துள்ள இனப் பதட்டங்களுக்கு வழிவகுக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தாங்கள், அனைத்து ஆவணங்களையும் சிங்களத்தில் மட்டுமே பெறுகிறார்கள் என்று முறைப்பாடளித்தார். அதன் மூலம் நாட்டின் மொழி கொள்கை எவ்வாறு அரசாங்கத்தின் ஒரு உயர்ந்த சபையில் வினைத்திறனற்றதாகிறது என்பது தெரியவந்தது. இவை எளிதில் சரிசெய்யக்கூடிய பிரச்சினைகளாகும். இது போன்ற சம்பவங்கள் வேறு இடங்களில் நடைபெறுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

காலனித்துவ ஆட்சியுடன் மொழி ஒரு அரசியல் பிரச்சினையாக உருவெடுத்ததாக தெரிகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் சகாப்தத்தில், கல்வி அவர்களின் மொழியுடன் மதத்தையும் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்களின் கல்வியின் ஒரு நன்மை என்னவென்றால், மன்னர்கள், பிரபுக்கள் மற்றும் மத சார்பான உயரடுக்கினருக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட கல்வி பொது மக்களுக்கும் கிடைத்தமையாகும். ஆயினும்கூட, அது அவர்களின் காலனித்துவ மனநிலையின் பிரச்சாரமாகும்.

அந்த காலனித்துவ கல்விக்கு எதிரான முதல் கிளர்ச்சியாக உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நிறுவினர். அதன் விளைவாக கொழும்பின் ஆனந்தா கல்லூரி நிறுவப்பட்டது.

பாடசாலைகளை நிறுவும் போது சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தனர் என்பதையும் நினைவில் கொள்வது அவசியமாகும். பின்னர், அவர்கள் இந்து கல்லூரி மற்றும் ஷாஹிரா கல்லூரி என பிரிந்தனர். உள்ளூர் சமய மற்றும் கலாச்சார சூழலில் உள்ளூர் சமூகத்தின் குழந்தைகளுக்கு ஆங்கில மொழி கல்வியை வழங்குவதற்காக இவை அனைத்தும் செய்யப்பட்டன என்பதை கவனத்தில் கொள்வது மேலும் முக்கியமானதாக இருக்கின்றது.

இந்த ஆங்கில ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக உள்ளூர் சமூகங்கள் தங்கள் மொழிகளையும் வளர்க்க விரும்பினர். அதுவும் கூட ஒரு அரசியல் தேவைதான். குமாரதுங்க முனிதாசா போன்ற கல்வியாளர்கள் அந்த அரசியல் வகிபாகத்தை வகித்தனர்.

இந்த உண்மைகள் மொழியின் கேள்விகள் அரசியலின் கேள்விகளாக, விசேடமாக அரசியல் மேலாதிக்கத்தின் கேள்விகள் என்பதைக் காட்டுகின்றன.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிறகு, ஆங்கில மொழி மூலம் வெளிப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எவ்வாறு மாற்றுவது என்ற கேள்வி எழுந்தது. அங்கு, 1954 வரை சிங்கள மற்றும் தமிழ் இரண்டும் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்க வேண்டும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், அரசியல் சந்தர்ப்பவாதத்தால் சிங்களம் மட்டும் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து தனியாக விவாதிக்க வேண்டும்.

இருப்பினும், குற்றத்தை அறிந்த திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, தமிழ் மொழி விசேட ஏற்பாட்டு சட்டத்தின் மூலம் அதை ஓரளவிற்கு சரிசெய்ய முயன்றார், ஆனால் அவர் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் எதிர்கொண்ட அதே நிலைமையை இப்போது தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தமிழர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களும் அவர்களுக்குத் தெரியாத ஒரு மொழியான ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட போது அரசாங்க சேவைகளை மீண்டும் அணுக முடியவில்லை. சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக மாறியபோது, ​​தமிழ் மக்களின் நிலைமை மாறவில்லை. பின்னர், அரசாங்கம் அவர்களுக்குப் புரியாத ஆங்கிலத்தில் பணியாற்றியது. இப்போது, ​​அரசாங்கம் சிங்கள மொழியில் செயற்படுகிறதுடன், அவர்களுக்கு அந்த மொழியும் புரியவில்லை.

தமிழை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரித்தமை பல மோதல்களுக்குப் பிறகுதான் வந்தது. முழுமையாக செயற்படவில்லை என்றாலும், இது குறைந்தபட்சம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது நடக்க வேண்டியது அதனை மாற்றியமைப்பது அல்ல, ஆனால் அதனுடன் முன்னேறுவதுதான்.

தற்போது, ​​எங்கள் குழந்தைகள் பாடசாலைகளில் இரண்டாம் மொழியைக் கற்கிறார்கள். சிங்கள குழந்தைகள் தமிழ் கற்கின்றதுடன் தமிழ் குழந்தைகள் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு சிறந்த வளர்ச்சியாகும், ஆனால் நாம் இன்னமும் காணும் பிரச்சினை என்னவென்றால், மொழியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையாகும்.

இருப்பினும், பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இந்த இரு சமூகங்களுக்கிடையில் இன்னும் பெரிய இடைவெளி உள்ளது என்பது அடிக்கடி வெளிப்படுகிறது. சிங்களமயமான தெற்கில் என்ன நடக்கிறது என்பது பெரும்பாலும் சிங்களத்திலேயே அறிக்கையிடப்படுகின்றது. அவை தமிழ் ஊடகங்களில் வெளியிடப்படுவது கூட இல்லை. எனவே, தெற்கில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அவர்களின் சமுதாயத்தைப் பற்றி தமிழ் மக்களுக்கு போதுமான அறிவு இல்லை. அதேபோல், சிங்களவர்களுக்கு வடக்கின் வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாது. இந்த இரண்டு சமூகங்களும் இன்னமும் இரண்டு வெவ்வேறு உலகங்களில் வாழ்கின்றன. அதுதான் யதார்த்தம்.

எனவே இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், இதுவரை நாம் வெற்றியடைந்த முன்னேற்றங்களை பாதுகாத்து வளர்ப்பதுதான். இது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும், ஏனென்றால் சிறிய தவறுகள் கூட தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

அதனால்தான் நமது தேசிய மொழியைப் பாதுகாப்பது நாட்டையும் சமூகத்தின் ஒற்றுமையையும் பாதுகாக்கிறது.

Chinese And Tamil Language Confusion And The New Crisis

නව අර්බුධයකට මග තනන චීන,දෙමළ භාෂා පෙරළිය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts